joseph aasir

Drama Children

5  

joseph aasir

Drama Children

சிந்தா நதி..

சிந்தா நதி..

7 mins
454


அங்கே எல்லோர் முகத்திலும் கவலை ரேகைகள் ..

சாமி கண்ணு , செல்வா , பாண்டி மூவருக்கும் நடுவே அந்த டாக்டர் நின்று கொண்டிருந்தான் ..

போலியாய் வரவழைத்த  சோகத்தை முகத்தில் பூசிக்கொண்டே சொன்னான்..

'' பெரியவரு இன்னைக்கு மதியம் தாண்டுறதே கஷ்டம்.. சொந்த காரங்களுக்கு சொல்லி விடுறது நல்லது..''

'' பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனா ..?'' செல்வா ஆர்வமாய் கேக்க ..

'' பய யாரு..? '' என்ற டாக்டர் கண்ணாடிக்குள் குறைப்பது புரிந்தது..

'' நம்ம பையன் தான் '' என்ற பாண்டி அவன் தோளில் கை போட்டு கொண்டான்..

'' தம்பி பெரியவர் வயசு தொன்னுத்தி ரெண்டோ மூணோ சரியா தெரியல ..அவரு கண்ணுல மட்டும் தான் உயிரு இருக்கு.. அதுவும் அவரோட பேரனை பாக்க தான் ..மத்தபடி அவர் கொஞ்சம் கொஞ்சமா சுய நினைவை இழந்துட்டு வாராரு..அது என்ன சொன்ன ..? பெரிய ஆஸ்பத்திரியா..? கூட்டிட்டு போயேன் .. ரெண்டு மூணு நாளு ஒங்களை பாக்க விட மாட்டானுங்க ..ஆனா  பேசுறாரு , சாப்பிடுறாரு னு சொல்லி கடைசில செத்துட்டாருன்னும் சொல்லுவாங்க .. கடைசில பில்லு ஒன்னு தருவாங்க பாரு..அத கட்ட உங்க சொத்தை வித்தா கூட காணாது..சொன்னதை செய்ங்க சொந்த காரங்களுக்கு சொல்லி விடுங்க போங்க .. '' என்ற டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்..

'' அவனை நம்பாதீங்கல  அவன் நல்ல டாக்டரு இல்ல நெறய பொய் சொல்லுவான் புளூவுனி பய .. எனக்கா சுயநினைவு இல்ல..? நீங்க பேசுறது எல்லாம் என் காதுல விழுது ..பேசத்தான் முடியல .. 

செல்லம்மா.. ஏ செல்லம்மா என்னை பெத்த அம்மா ..செத்த நேரம் பக்கத்துல வந்து உக்காரு டீ..'' அய்யா  பேச நினைத்தார் ஆனால் முடியவில்லை.. அவளை நோக்கி விரல் அசைக்கலாம் என நினைத்து அதுவும் முடியவில்லை ..கண்களுக்குள் கருவிழி மட்டும் உருண்டு கொண்டிருந்தது.. செல்லம்மா கொஞ்சம் நேரம்டீ.. என் பக்கத்துல வந்து உக்காரு ஆசையா இருக்குடீ..

மனம் கெஞ்சியது உதட்டை கூட அசைக்க முடியவில்லை என்ன செய்யுது எனக்கு..?

கண்கள் சிரமப்படுத்தி விட்டத்தை பார்த்தேன்..மேலே சுற்றி கொண்டிருந்த காத்தடியும் என்னை போலவே செயலிழந்து கொண்டிருந்தது.. என்னை பார்க்க வந்து விட்டு யாரும் என்னை பார்க்க மாட்டேன்கிறார்கள் .. எல்லோரும் கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள்..

கண்கள் வாசலுக்கு போனது யாரோ வருகிறார்கள் ..

மலர் வருகிறாள் ..ஏ மலர் வா வா எப்படி இருக்க ..? எப்போ பாரு என் அய்யா அய்யான்னு என் கன்னத்தை பிச்சி உன் வாயில் போட்டுபியே மலரு..           இப்போ அய்யா மேல பாசம் இல்லையா ..? கொஞ்ச நேரம் என் பக்கத்துல வந்து உக்காரு தாயி.. அட மலரு.. நீ புள்ள உண்டாயிருக்கியா..?  அய்யாகிட்ட சொல்லணும்னு ஏம்மா தோணல ஒனக்கு ம் ..? சின்ன வயிறா இருக்கு..? இப்போ எத்தினாவது மாசம் வயிர பாத்தா ஆம்பள புள்ளன்னு தான் நெனைக்கேன் .. மலர்  சில நிமிடம் அய்யாவை பார்த்தாள் நான் கெஞ்சிறேன் அவள் என்னை பரிதாபமாய் பார்த்தாள் .. போய்விட்டாள் 

எம் மக திலகா அவள் மகள் காதில் ஏதோ சொல்கிறாள் .. மலரும் வெட்க படுகிறாள் .. கையின் விரலை காட்டினாள் நான் கவனிக்கவில்லை  கவனித்திருந்தால் அவள் இப்பொது எதனை மாசம் என்று தெரிந்திருக்கும்..

ஏ திலகா நீயாச்சி என் பக்கத்துல வந்து செத்த நேரம் உக்காரும்மா ஏ திலகா ..

தெருவில் ஏதோ மோட்டார் சைக்கிள் போகிறது.. இல்லை இல்லை நின்றது.. யாராக இருக்கும்.. யோசித்த நொடியில் வாசலில் நிழலாடியது..

முகம் மங்கலாய் தெரிகிறது 

''என்ன நாடார...

நான் பக்கத்துக்கு ஊரு பிரசிடெண்ட் வந்திருக்கேன் என்னை தெரியுதா...?"

காதில் விழுந்தது கருவிழி படபடத்தது தலையை திருப்ப முடியவில்லை...

என்னை ரொம்ப வருஷமா தெரியும்.. மரியாதையோடு நடந்துவார்...

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும்..என்னை வந்து பார்ப்பார்..

உங்க ஆளுகளை என்னை கை காட்டி சொல்லுங்க நாடார.

நானும் ஊருக்கு நல்லது பண்ண நினைக்கிறேன்.

1நேரம் ஜெயித்தும் காட்டினார்.

"ஒரு அசைவும் இல்லப்பா..இப்படியே தான் இருக்கார்.

பேசுறது லேசா கேட்க்கும்ன்னு நினைக்கிறேன்...." செல்லம்மா கவலையோடு சொல்ல...

"நல்ல மனுஷன்ம்மா ..எல்லோருக்கும் சொல்லியாச்சா..? எங்க ஒங்க பேரன் ..?"

''அவனை பாக்க தான் இந்த இருதயம் துடிச்சிட்டுருக்கு ..மெட்ராசுக்கு போனான் சொல்லிட்டு தான் போனான் வர மூணு நாளு ஆவும்ன்னு .. ''

'' எதாவது போனு நம்பர் இருக்காம்மா ..?''

'' இல்லையப்பா ..'' 

'' ஐயோ கடவுளே சாவ போற மனுசன்  பேரனை  பாக்காம எப்படி..'' அவர் அதற்கு மேல் பேச முடியாமல் வெளியேறி விட்டார் ..

 செல்லம்மா .. அப்போ கதிரு வர மாட்டானா ..? எனக்கு காது கேக்குதுடீ ? மூணு நாளு ஆவுமா ..? ஆமா சரிதான் முந்தாநேத்து தானே போனான் இன்னைக்கு ராத்திரி தான் வருவான் ஆனா நா மதியம் தாண்ட மாட்டேனா..? அவன் யார் என் சாவை முடிவு பண்றது..? நா என் கதிருக்காக காத்திருப்பேன் .. செல்லம்மா  திலகா , மலரின் அருகே அமர்ந்து அவர்கள் பேச்சில் கலந்து கொண்டாள் ..

அந்த நிமிடம் கடந்திருக்கும் அவர்கள் மூவருமே வாசலை நோக்கி புன்னைக்க .. நானும் வாசலை பார்த்தேன் ..

அட அமுதாவா ..? அமுதா நீ நல்லாருக்கியா ..? உனக்கு எத்தன கொழந்தைங்க ..நாலா .? ஒரு பொட்ட பிள்ளயா..? பாக்க அப்டியே உன்ன சின்னதுல பாத்த மாதியே இருக்கு ...     நீ என்ன மன்னிச்சிரு தாயி.. கதிரும் நீயும் காதலிச்சியன்னு சத்தியமா  எனக்கு தெரியாது ..உம் புருஷன் உன்ன நல்லா பாத்துகிறானா..? அமுதாவும் சிறுது நேரம் என்னை பார்த்து விட்டு அவர்கள் கூட கலந்து கொண்டாள் ..

கதிரு நீ எங்கல இருக்க ..எப்போ வருவ .. சுருக்கா வா மக்கா .. மதியம் தாண்ட மாட்டேன்னு அந்த தடி மாட்டு பய சொல்லிட்டு போறான் .. போன தடவ ஊசி குத்துறேன்னு  எலும்புல குத்திப்புட்டான்...பெரண்டு படுக்க முடியல.. ஒரே வலி.. அன்னைக்கே சொன்னேன்.. உன் வைத்தியன் சரி இல்லன்னு ..இன்னைக்கி அவன் தான் சொல்லிட்டு போறான்.. நான் செத்து போவேனாம் ..தெனமும் சொல்லிட்டு போவியே.. நேத்து ஏன் சொல்லிட்டு போவல ..? நா ஒன்ன போவ விட்ருக்க மாட்டேனேப்பா ..

செல்லம்மா  இந்த மாட்டு ஈ தொல்ல தாங்க முடியல செல்லம்மா மூஞ்சிகிட்ட பறக்குது ..எனக்கு எரிச்சலா இருக்கு .. வந்து இத வெரட்டு என்னால முடியல .. யாரவது வாங்க .. இந்த ஈய வெரட்டிடுங்க மூக்குல உக்காருது..

ஏ செல்லம்மா யாருக்குமே இது சாவு வீடு மாதி இல்லையே ..ஏன் இன்னும் கொஞ்ச நேரத்துல நா செத்து போன பெறவு தான் இது சாவு வீடா .. ஏதோ பத்தி வாசன வருத யாரு வாங்கிட்டு வந்தா .. எப்படியும் இன்னைக்கி செத்து போவேன்னு நினைச்சியாளா ..?அதுவும் சரி தான் அந்த நேரம் கடைக்கி ஓடிட்டு அலையணுமே .. ஆனா எனக்கு பத்தி வாசனை பிடிக்காதுன்னு சொல்லிரு செல்லம்மா .. வேண்டாம் சொல்ல வேண்டாம்  பத்தி கொளுத்தட்டும்..நா செத்து போன பெறவு எனக்கு என்ன தெரிய போவுது.. 

செல்லம்மா .. நா படுத்திருக்க கட்டில அறுத்து போட்டுறாதீங்க..  அஞ்சி மாசம் தான் ஆச்சி  ஐநூறு  ரூபா குடுத்து கட்டின  கட்டுலு ..வெந்நி கொதிக்க வச்சி ஊத்திட்டு படு நல்லா தூக்கம் வரும்..

நா இல்லன்னு சோறு பொங்காம இருக்காத என்ன..? தெனமும் சோறு பொங்கி சுடு சோறு தின்னு.. ஒனக்கு கஞ்சி ஒத்துக்காது ..என்ன..ம் .? 

ஏன் செல்லம்மா நீ மட்டும் சோகமா இருக்கா..  திரும்பி பாரு.. கொஞ்சம் திரும்பி தான் பாரேன் எல்லாரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க .. நீயும் அப்டி இரு .. உங்கப்பன் கிட்ட சத்தியம் பண்ணிட்டு தானே ஒன்ன கட்டிட்டு வந்தேன்..  கடைசி வரை சந்தோசமா வச்சிப்பேன்னு .. இப்டி இருக்காத செல்லம்மா உன் மொகர கட்டைய பாக்க சகிக்கல.. செத்ததுக்கு பெறவு ஒப்பாரி வச்சா போதும்..

'' எம்மா கொஞ்சம் காப்பி போடு மலருக்கு ..'' திலகா சொல்ல செல்லம்மா எழுந்து சென்றாள் சமையலறைக்குள் ..

போவாத செல்லம்மா இன்னும் எத்தனை காலத்துக்கு இவியளுக்கு பணிவிடை செய்யணும்.. அவா போவ மாட்டாளாமா ..? நாளைக்கே மலரு கொழந்த பெத்து போட்டாலும் நீ தான் பாக்கணுமா..என் பேச்சை கேளு செல்லம்மா .. கரு விழிகள் கண்ணுக்குள் நகர்ந்தது செல்லம்மா காபி  போட்டு மலரிடம் நீட்டி விட்டு  தரையில் அமர நினைத்தவள் ..என்ன நினைத்தாளோ தெரியவில்லை அருகில் வந்தாள் ..     வா செல்லம்மா வா இங்க உக்காரு என்னை லேசா ஒரசிட்டு உக்காரு ..நா மனசுக்குள்ள நெனைச்சது உனக்கு கேக்குதா .. கேட்டாலும் கேட்டிருக்கும்  அறுபது எழுவது வருஷம் ஒண்ணா வாழ்ந்துருக்கோமே இது கூட புரியலன்னா எப்படி சீக்கிரம் உக்காரு ..

செல்லம்மா  கன்னத்தில் உட்கார்ந்திருந்த அந்த ஈயை விரட்டினாள் .. அது கொல்லையை நோக்கி ஓடியது.. 

செல்லம்மா எங்க போற .. ஏய் பக்கத்துல உக்கார போறான்னு ஆசையா காத்திருக்கேன் நீ ஈய வெரட்ட தான் வந்தியா ஏ போகாதே ..

செல்லம்மா தரையில் அமர்ந்து பின்னல் திரும்பி மலரிடம் காபியில் சீனி இருக்குதான்னு கேட்டாள் ..

 செல்லம்மா ரொம்ப பாவம் நா செத்த பெறவு யார் பாத்துப்பா கதிர் இருக்கிற தைரியத்தில் தான் நான் நிம்மதியா போறேன் .. அந்த டாக்டரு  சொல்லிட்டு போன அந்த நிமிஷத்திலுருந்து என்னை ஒரு ஜடம் போல் பார்த்து விட்டு

செல்லம்மாவிடம் ஒரு அனுதாபதை தெரிவித்து விட்டு கண்களால் வீட்டை முழுவதும் அளந்து விட்டு போனார்கள் அக்கம் பக்கத்தினர்.

என்னால எல்லாமே உணர முடிகிறது ...

செல்லம்மா யாரிடமும் சொல்ல வில்லை

இந்த டாக்டர் தான் போகிற போக்கில் சொல்லிட்டு போயிருப்பான் ...

"பெருசு அவ்ளோ தான் ....

இன்னைக்கு தாங்குறதே கஷ்டம் " ன்னு....

"சொல்றவங்க ஈஸியா சொல்லுவாங்க.....!

"கிழம் அவ்ளோ தான்!

"பெருசு இன்னைக்கு தாங்காதுன்னு !

இந்த மாதிரி சொல் கேட்டு என் செல்லம்மாவுக்கு மனநிலை எவ்வளவு வேதனை படும்..

தாங்கிக்கவே மாட்டாள்.. எனக்கு தெரியும் அவள் எப்படி என்று ....

இளகிய மனம் அவளுக்கு...

இந்த சாவு யாருக்கு முதலில் என்று தான் எங்களுக்குள் அடிக்கடி விவாதம் நடக்கும்...

என்னை இந்த படுக்கையில் அவள் என்னை ரசிக்க வில்லை....

அனால் என் உபாதையெல்லாம் அவள் தான் கவனித்துக்கொண்டாள் ...

அவளுக்கும் முடியவில்லை ....

கடைசி காலம் இவ்ளோ கொடுமையானதா ..?

என் இயலாமையை அவளும் அவள் இயலாமையை நானும் பார்க்க முடியல..

அதிலும் பிள்ளைகள் பெற்று என்ன ப்ரோஜனம்..

கொல்லை புரத்தில் மாடு கத்தியது...

அதுக்கு தண்ணி வைக்கணும்....

செல்லம்மா நீ எங்க போய்ட்டே....?

இந்நேரம் மாட்டுக்கு பருத்தி கொட்ட வைக்கணும் இல்லன்னா 

புண்ணாக்கு வைக்கணும்...

செல்லம்மா கொஞ்ச நேரம் என் பக்கத்தில் இருக்க கூடாதா..?...

என் மேல் கேட்ட வாசனை வருது...

அது என் நாசிக்கு தெரியுது அதான் 

என் பக்கத்தில் யாருமே வர்றதில்லை...

சிறிது நேரத்தில் வந்தாள்..

மாட்டுக்கு தண்ணீர் காட்டி விட்டு வந்தாள் போல ஈர கையை  சேலை முனையில் துடைத்துக்கொண்டாள் 

 

“இப்போ ஏன் அழுற .... ?”

செல்லம்மா சேலை தலைப்பை எடுத்து கண்களில் துடைத்தாள்...

அழறேனா..?

எப்போ... ?

சிறுநீர் தான் என் கட்டுப்பாட்டில் இல்லை...

இப்போ கண்ணீர் கூட என்னை கேட்காமல் வருதா..?

நா கைக்குழந்தை போல ஆகிட்டேனே செல்லம்மா..?

"உங்க வயசுல உள்ளவங்க யாரும் இப்போ இல்ல ..."

"சொல்ல போனா நா தான் இருக்கேன்"!

" நீங்க போனதும் நா எவ்ளோ நாளோ தெரியல ...?

"நானும் போயி சேர வேண்டியது தான்... !

"அழ கூடாது.... !"

"ஏன் அழனும்....?

இவ்ளோ வருஷத்தில் நீங்க வாழ்ந்த வாழ்க்கை எவனுமே வாழ்ந்திருக்க மாட்டான்...''

எனக்கு காது கேட்கவில்லை என்று கத்தி பேசினாள் .....

ஆனால் அவள் முகத்தில் நிறைய கவலைகள்...

ஏதோ பேச நினைத்து ...

அது முடியாமல் போக அவள் மீண்டும் சேலை நுனியால் வாயை துடைத்தாள்

என் வாயில் நீர் வழிக்கிறதா...."?

"நீங்க என்ன வாழ்க்கை வாழ்ந்தீங்கன்னு ...!?

இந்த ஊரெல்லாம் உங்களை எவ்ளோ பெருமையா பேசுறாங்க...ம்ம்ம்

அழ கூடாது

காலம் முடியும் போது போயி சேர வேண்டியது தான் ...!

"என் முன்ன அழ கூடாது...”

என்று போய் விட்டாள்

கொல்லை புறம்..என்னை அழ கூடாதுன்னு சொல்லிட்டு அந்த பக்கம் போய் அழுகிற எனக்கு தெரியும் செல்லம்மா அழாதே எப்போவும் நான் இருக்கேன் அழாதே ன்னு சொல்லுவேன் இந்த தடவை எப்படி சொல்றதுன்னு தெரியல ஆனாலும் அழாதே ..

நான் யார் ....

23 வயதில் பக்கத்துக்கு ஊருக்கு பிழைக்க வந்தேன்... தொழில் தெரியாத காரணத்தால் ...

அந்த ஊர் ஒரு பெரிய புள்ளி வீட்டில் ஆடு மேய்க்க ஆள் தேவை பட்டது கூடவே சாப்பாடு .சேர்ந்தேன்..

5வருஷம் வேலை பார்த்தேன்.

முதலாளி விசுவாசி நான்.. 

தேவருக்கு நான் தான் அடியாள் ..தேவரை தொடணும்னா மொதல்ல என் கத்திக்கு பதில் சொல்லணும் .. 

வேலை சுத்தம் பார்த்து அந்த வீட்டு 3வது பெண்னோடு கல்யாணம் அவள் பெயர் செல்லம்மா ..

என் வாழ்க்கையை 2 பேர் மாற்றினார்கள்....

ஒன்னு செல்லம்மா .

இன்னொன்று கதிர் .

செல்லம்மாவை கல்யாணம் பண்ணியது யாருக்கும்..அதாவது நான் கல்யாணம் பண்ணியது யாருக்கும் பிடிக்கவில்லை...

அது வரை அந்த வீட்டுக்கு வேலை காரன்... இனிமே மருமகன். .

செல்லம்மாவுக்கு என்னை பிடிக்க என்ன காரணம் ... இப்போ வரை தெரியாது.... கேட்டா சொல்லவும் மாட்டாள்.....

அன்று ஒரு நாள்..

வீட்ல ஒரு விஷேசம்.... யாரோ ..ஏதோ வேலைக்கு என்னை கூப்பிட... செல்லம்மா என் கையை பிடித்து.. போக வேண்டாம் நீங்க இந்த வீட்டில் வேலை காரன் இல்ல... என்று கத்த.. அவள் அண்ணன் வார்த்தையை விட... நா அவமானத்தில் நிற்க...... பெரிய சண்டையாய் மாறியது...

அது வரை ஒரே குடும்பமாக இருந்த வீட்டில் இருந்து.. செல்லம்மா பிரித்து கூட்டிட்டு வந்தாள் .அவள் பாகம்... 9 ஆட்டுக்குட்டி

அதோடு தனி குடித்தனம்...

நான் ,செல்லம்மா ,என் மூத்த பையன்..

ஆடு மேய்ப்பு .. குடும்பத்திற்கு போதவில்லை.. அப்போ தான் செல்லம்மா அந்த யோசனையை சொன்னாள்...எங்க குல தொழில்... பனை மரம் ஏறுதல் ... பதநீர், கருப்பட்டி... இது தான்

மரம் ஏற தெரியாது ஏறியதும் இல்லை...

என் ஜாதி ஆளிடம் வேலைக்கு சேர்ந்தேன். கூலி இல்லை. பதிலாக..மரம் ஏற சொல்லி தரணும் தொழில் படிச்சியும் தரணும். 4 வருஷம்.

3பேரும்... பல நாள் பட்டினி...

ஒவ்வொரு முறையும் செல்லம்மா தான் ஆறுதல் சொல்வாள். 

ஒரு நாள் அவளே கூலிக்கு மரம் ஏற எல்லா ஏற்பாட்டை செய்தது....

ஒரு நேரம்...

 லிங்கம் வீட்டு கருப்பட்டின்னு ஒரு பெயரே உண்டு..

வசதிகள் பெருகின...

தோட்டம்...வீடு.. திலகான்னு சந்தோசமா போச்சி .. 

காலம் வேகமாக ஓடியது...

மூத்த பையன் கல்யாணம் முடிந்தது...

அவன் நேரமோ என்னவோ..என் பேரன் கதிர் வயிற்றில் இருக்கும் போதே...ஏதோ ஒரு நோய்..செத்து போனான்..

என் மருமகளுக்கு... அவள் நல்ல குணத்துக்கு கடவுள் அந்த நோய் வந்திருக்க கூடாது..... பையன் பிறந்தான்... அவன் அம்மா போல அவ்ளோ அழகு.. கதிரேசன் கதிர்ன்னு தான் கூப்பிடுவோம்..

கதிருக்கு தாய்ப்பால் தர கூடாதுன்னு சொல்ல தாய் அழுத அழுகை.. பசிக்கு கதிர் அழுத அழுகை இன்னும் என் நெஞ்சி கூட்டுக்குள் அப்டியே இருக்கு... அப்போ தான் ஒரு பனை பாளை விட்டது...

அதிலிருந்து எடுத்த முதல் பதநீரை விரலில் தொட்டு அந்த சுண்டு உதட்டில் வைத்து போது அவன் என் விரலை பிடித்து சுவைத்த அழகு..இப்போவும் இருக்கு...அன்று முதல் அவன் அந்த ஒரு பனையின் பதநீர் குடித்து வந்தான்... செல்லம்மா திட்டினாள்... என் மருமகள் திட்டினாள்... ஊரே திட்டியது...

நான் மாறவில்லை... கதிரும் மாறவில்லை...5 வயசு இருக்கும் போது... என் மருமகள் உயிரோடு இல்லை...

கதிர் என்னோடு நான் ஆசை பட்டது  போல்...

5 வயசுல.... நான் பனையில் இருக்கும் போது ...அடித்த காற்றில்... பயந்து அழுது ஊரையே கூட்டியது...இன்றும் ஊரே சொல்லும் அவன் பாசத்தை...

ஏதோ சாவை பார்த்துவிட்டு... எனக்கு மட்டும் சாவே வர கூடாது ன்னு சாமிக்கிட்ட சத்தமா வேண்டிப்பான் அப்போ தான் சாமிக்கு காது கேட்க்கும்ன்னு சொல்லிப்பான்.... இப்டி ஒரு பிள்ளை செல்லம்மா வயிற்றில் பிறக்கலயே...

நான் பெறாத பையன்.. என் கதிர் .. ஏ கதிரு  எப்போப்பா வருவா ..?

செல்லம்மா தான் பாவம் .. நான் செத்த பின் இவள் நிலைமை என்ன..? நடந்துகொண்டிருந்தாள்... ஏதாவது வேலை சொல்லிக்

கொண்டிருக்கிறார்கள் இவளும் சலிக்காமல் செய்வாள்..

கொஞ்ச நேரம் ஒரு இடத்தில் உட்காரு செல்லம்மா ...

சொல்ல நினைத்தேன்... சொல்ல முடியாது ...

கண்ணில் மட்டும் தான் உயிர் இருக்கு போல...பார்க்க மட்டும் முடியுது..

கதிரு ...

நீ வரும் போது.. நான் உயிரோடு இருப்பேனா தெரியாது...

நீ என்னை இந்த நிலைமையில் பார்த்தால் உன்னால் தாங்கிக்க முடியாது... கண்கள் சொருகி கொண்டே போகுது..

என் நாக்கு உள்வாங்கி கொள்ளுது.. எனக்கு பால் ஊத்துராங்க....

எனக்கு பால் பிடிக்காது உனக்கு தெரியுமே சொல்லு காத்திரு.. அவ்ளோ தானா..?

உன்னை பார்க்க கண்கள் ஏங்குது கதிரு .. !

உயிரை கண்கள் பிடிச்சிவச்சிருக்கு ஆனால்

நீ அழுதால் என்னால் தாங்கிக்க முடியாது கண்ணா.....

நான் போறேன்.. கடைசி நேரம் எப்படி இருக்கும்ன்னு எனக்கு புரிஞ்சிடிச்சில ....

எந்த நிலைமையிலும் சொந்தங்களை நம்பிடாதே...

என் மேல் உனக்கு கோபம் வரும்..

இப்போவும் உன்னை ஏமாற்றுறேன்...

என்னை மன்னிச்சிரு கதிரு.. 

நீ என்னை காணத்தான் அவ்ளோ தொலைவில் இருந்து வருகிறாய் என்று தெரியும்...

நான் இப்போ சொல்றேன்...

நீ பெரிய ஆளா வருவ..

வரணும்..

என் ஆசி எப்போவும் உனக்கு உண்டு..

உன் வாழ்க்கை இனிமேல் தான் நல்லா இருக்கும்...

நீதான்டா  என் வாரிசு..

ஒரே ஒரு ஆசை தாம்ல கதிரு எனக்கு....

உன் மடியில்

உன் குழந்தையாய் தவுழணும்....

நான் மீண்டும் பிறப்பேன் கதிரு ...

நம்பு..

கதிரு சாகவே பிடிக்கலடா...


அய்யாவின் கண்கள் இன்னும் வாசலை நோக்கியே இருந்தது... ஆனால்... அதில் உயிர் இல்லை...

செல்லம்மா அலற ..

மீதம் உள்ளவர்களும் கதறி அழ ஆரம்பித்தார்கள்..


      










                         அன்புடன்..

                                   ஷ்யாம்..


இந்த சிறுகதையின் முழு தொகுப்பை வாசிக்க மாடனின் காதலி வாசிக்கவும்..



Rate this content
Log in

Similar tamil story from Drama