அடிக்கடி சண்டை
அடிக்கடி சண்டை
மூன்றே மாத திருமண வாழ்க்கை; சண்டை போட்ட மனைவி' - வேலூரில் விபரீத முடிவெடுத்த ராணுவ வீரர்
ஊரடங்கில் ஏற்பட்ட குடும்ப வன்முறையால், ராணுவ வீரர் ஒருவரே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த பரதராமி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மகன் சுரேந்தர்நாத் (30), கடந்த ஏழு ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். சுரேந்தர்நாத்துக்கும் லத்தேரியை அடுத்துள்ள பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா (25) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.திருமணதந்துக்குப் பிறகு பணிக்குச் சென்ற சுரேந்தர்நாத் விடுமுறையில் மீண்டும் ஊருக்கு வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தொடர்ந்து விடுமுறையில் இருந்தார். இந்தநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்தர்நாத்தும் ராதிகாவும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். கணவருடன் கோபித்துக்கொண்டு பள்ளத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு ராதிகா சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேந்தர்நாத் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்த நிலையில், தன் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்கச் செல்வதாகத் தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. மாடி அறைக்குச் சென்று பார்த்தார் தாய். கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் சுரேந்தர்நாத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த தாய் அருகில் உள்ள உறவினர்களை வரவழைத்து கதவை உடைத்துப் பார்த்தார்.அப்போது, சுரேந்தர்நாத் தூக்கில் சடலமாகத் தொங்கியதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தாய் கதறி துடித்தார். பரதராமி போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கில் அதிகரித்துள்ள குடும்ப வன்முறையில், ராணுவ வீரர் ஒருவரே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், குடியாத்தம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.