Rajeshwari Karuppaiya

Drama Others

5  

Rajeshwari Karuppaiya

Drama Others

அப்பா வந்தாச்சு

அப்பா வந்தாச்சு

7 mins
283


     


"அம்மா பசிக்குது.... "

 "இன்னும் கொஞ்ச நேரந்தான்... அப்பா வந்துருவாங்க... புறவு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.... "

  "போம்மா... வார வாரம் இதான் சொல்லுற.. அப்பா வந்தா சாப்பிட விட மாட்டாங்க... "

  "இல்ல கண்ணா... இன்னைக்கு அப்பா அப்படிலாம் பண்ண மாட்டாங்க.. "


  வசந்தியின் கணவன் சேகர் அருகில் இருக்கும் மில் ஒன்றில் கூலி வேலை செய்கிறான்... இவர்களுக்கு இரண்டு பசங்க... பெரியவன் கண்ணன் ஐந்தாவது படிக்கிறான்.. சின்னவன் மாதவன் இரண்டாவது படிக்கிறான்...

இவர்கள் வீடு மில்லில் வேலை செய்பவர்களுக்கென கட்டப்பட்டிருந்த குடியிருப்பில் இருந்தது... ஒரு சமையல் அறை ஒரு கூடம் கொண்ட ஓட்டு வீடு... வெளியே பொது கழிப்பறையும் குளியல் அறையும் இருந்தன…


இன்று சனிக்கிழமை... சம்பள நாள்... இன்று மட்டும் தான் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வருவான்.. மற்ற நாட்களில் பிள்ளைகள் எழும் முன் வேலைக்கு செல்பவன் தூங்கிய பிறகு தான் வீட்டிற்கு வருவான்...

இன்று தான் எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு பேசி மகிழ்ந்து சந்தோசமாக இருப்பார்கள்... கடந்த இரு வருடமாக இந்த நாளை எதிர் பார்ப்பதை பிள்ளைகள் மறந்தனர்... இன்னும் சொல்லப் போனால் வெறுத்தனர் என்று கூட சொல்லலாம்...


வசந்தி மட்டும் தான் அவனை மாற்றி விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தாள்.....

"ம்மா... அப்பா வந்துட்டாங்க... "என்று மாதவன் ஓடி வந்து சொல்ல... வெளியே எட்டி பார்த்தவள் சிவந்த கண்களும் தள்ளாடிய நடையுமாய் வந்தவனை பார்த்ததும் வசந்தியின் உள்ளம் குமுறியது... இன்று குடிக்கவே மாட்டேன் என்று பிள்ளையின் தலையில் சத்தியம் செய்து விட்டு சென்றவன் இப்பொழுது மீண்டும் குடித்து விட்டு வந்ததை பார்க்க பார்க்க பற்றி எரிந்தது.....


வீட்டின் உள்ளே வந்தவள் வேக வேகமாக தட்டில் சோற்றை போட்டு பிசைந்து பிள்ளைகள் இருவருக்கும் ஊட்ட தொடங்கினான்... அவளுக்கு தெரியும் அவன் வந்தால் சாப்பிட விடமாட்டான் என்று...

பிள்ளைகள் இருவருக்கும் என்ன புரிந்ததோ என்னவோ... அவர்களும் எதுவும் பேசாமல் அவசரமாய் சாப்பிட்டு முடித்தனர்.....


அப்போது தள்ளாடியபடி உள்ளே வந்த சேகர் பிள்ளைகளை கண்டதும் கோணலாய் சிரித்து அவர்கள் அருகில் வந்து கட்டியனைக்க முயல அவர்களோ அவனை கண்டு பயந்து வசந்தியின் பின்னே ஒளிந்தனர்

"பார்ரா.... இந்த அப்பன பார்த்து பயிந்து ஒளியற....."இன்று வசந்தியின் பின்னே இருந்த மாதவனை பிடித்து இழுக்க அவனோ பயத்தில் அழ ஆரம்பித்தான்...


"இப்ப என்னத்துக்கு அவன புடிச்சு இழுக்கிற.... காலைல இந்த புள்ள மேல தான சாத்தியம் பண்ணிட்டு போன... இப்ப குடிச்சிட்டு வந்து நிக்கறயே... நீயெல்லாம் ஒரு மனுசனா.... "


"என்னடி ஓவரா பேசற... எம்புள்ள....நான் சத்தியம் பண்ணுவே என்ன வேணா பண்ணுவேன்... இப்ப என்ன அவன் செத்தா போய்ட்டான் "என்று மாதவனை பிடித்து தரதரவென இழுக்க.... வசந்தியின் கையை பிடித்துக் கொண்டு வர மாட்டேன் என்று கத்த ஆரம்பித்தான்..


"அப்பா.... விடுங்கப்பா... தம்பி பயப்படுறான் "என்று கண்ணனுக்கு தன் பங்கிற்கு மாதவனை சேகரிடம் இருந்து விலக்க"ஹிஹிஹி... நீல்லாம் ஓ ஆளு.... என்ன தட்க்கற...."என்று கெட்ட வார்த்தை சொல்லி அவனை திட்டிக் கொண்டே தள்ளி விட அவன் அம்மா என்ற அலறலுடன் கீழே விழுந்தான்...


ஆத்திரத்துடன் சேகரை கீழே தள்ளிய வசந்தி "நீயெல்லாம் ஒரு அப்பனா.. பெத்த புள்ளைனு கூட பாக்காம இப்படி தள்ளி விடற... "என்று அவனை திட்டியவள் பிள்ளைகள் இருவரையும் வெளியே கூட்டி வந்து கதவை சாத்தினாள்...


"கண்ணா.... தம்பியும் நீயும் மல்லிக்கா வீட்டுல போய் இருங்க.... நான் காலைல வந்து கூப்பிட்டுக்கறேன்... "

"அங்க வேண்டாம்மா... அங்க அந்த ரவி இருக்கான்ல அவன் 'உங்கப்பா இன்னைக்கும் குடிச்சுட்டு வந்துட்டாரான்னு கேவலமா பாக்கறான்மா.... ஸ்கூல்ல எல்லார் கிட்டயும் இவங்கப்பா இன்னைக்கு குடிச்சுட்டு வந்தனால எங்க வீட்ல தான் இருந்தாங்கனு போய் சொல்றான்... அவமானமா இருக்கும்மா.... நாங்க வேணும்னா இங்கயே வெளிய உக்காந்துக்கறோம் "என்று சொல்லி அழுக

வசந்தி துடித்துப் போனாள்....


கண்களில் கண்ணீர் முட்ட "இன்னைக்கு ஒன்னு மட்டும் சாமி.... அம்மா இனிமேல் அங்கவெல்லாம் அனுப்ப மாட்டேன்.....என்று ஒரு வழியாய் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்...

ஆனாலும் பெற்ற மனது துடித்து போனது....அந்த நேரம் மூடிய கதவை உள்ளிருந்து அவன் தட்டிக் கொண்டே இருக்க... அவள் வேதனையெல்லாம் அவன் மீது கோவமாய் மாறியது...


அந்த வேகத்தில் கதவை திறக்க சேகர் போதையில் தள்ளாடி விழுந்தான்....

கதவை அறைந்து சாத்தியவள் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்......

தள்ளாடி எழுந்தவன் "ஏய் சோறு கொண்டா.... "


அவள் அசையவில்லை... "என்னடி திமிரு பண்ணிட்டு தெரியற... "என்று அவளை கெட்ட வார்த்தையில் திட்டியவன் அவள் முடியை கொத்தாய் பிடித்து தூக்கினான்... வழியில் அவள் உயிரே போனது..... சிறிது நேரம் பல்லைக் கடித்து வலியை பொறுத்தவள் அதற்கு மேல் முடியாமல் கெஞ்ச ஆரம்பித்தாள்...

"மாமா வலிக்குது.... முடிய விடுங்க " என்று கெஞ்ச கெஞ்ச அவள் கெஞ்சலில் இன்னும் போதை எறியதோ என்னவோ இன்னும் முடியை இறுக்கினான்.....


அவள் வலி பொருக்க முடியாமல் அவன் காலை பிடித்து கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள்......

அவளை பார்த்து விகாரமாய் சிரித்தான் "போய் ஒழுங்கா சோறு போட்டுட்டு வா "என்று அவளை அடுக்களையில் தள்ளினான்... கீழே விழுந்தவள் நெற்றியில் காயம் ஆனது... அதையும் பொருட்படுத்தாமல் தப்பித்தால் போதும் என்றே அவள் மனம் எண்ணியது...


சோற்றை போட்டு அவன் முன்னே வைத்தவள் சமையல் அறையில் வந்து நின்று கொண்டாள்...

அவன் பிசைந்து குழைத்து ஒரு வழியாய் சாப்பிட்டு முடித்தான்....

"ஏய் இங்க வா... ". "என்ன போய் பம்மிக்கிட்டு நிக்கிற... கைய எப்படி கழுவறது... "என்று அவளை இழுத்து அவள் சீலையிலேயே எச்சில் கையை துடைத்தான்....


தட்டை எடுக்க போனவளை தடுத்து அதை எட்டி உதைத்தான்... அது ஓரத்தில் போய் விழுந்தது...

அதை எடுக்க போன வசந்தியை இழுத்து அவள் மீது படர.... அவளோ அருவெறுப்பாய் பார்த்து அவனை தள்ளிவிட அதில் அவன் கோவம் கொண்டு மூர்க்கமாய் கசக்க ஆரம்பித்தான்....


அவன் அருகில் மதுபான நெடி குடலை புரட்ட அதற்கு மேல அவனின் செயல் மிருகத்தை விடவும் கேவலமாய் இருக்க... தன் செயலை முடித்தவன் ஆடையை கூட சரி செய்யாமல் தூங்கி விட.... வசந்தியோ முகம் தெரியாத மூன்றாம் நபர் ஒருவரால் கற்பழிக்க பட்டதை போல் உணர்ந்தாள்...


இதுவும் புதிதல்லவே... அவன் குடிக்க ஆரம்பித்த நாள் முதல் கொண்டு இந்த கற்பழிப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது.. பெற்றோர்கள் ஆசையாய் அருமையாய் ஏழை வீட்டு இளவரசியாய் அவளை வளர்த்தனர்... தூரத்து சொந்தம் என்று சேகரை மணம் முடித்தனர்...


அவனும் மோசமானவன் ஒன்றும் இல்லை... இவளை தங்கமென தாங்கியவன் தான்.... என்று இந்த குடியை தொட்டானோ அன்று ஆரம்பித்தது இவர்கள் நரக வாழ்க்கை...

ஆம் அது நரகம் தான்... நரகத்தை விட கொடுமையானது பெற்ற தந்தையும் கட்டிய கணவனும் குடிகாரனாய் இருப்பது...


பெற்ற பிள்ளைகளை அடித்து விரட்டுவது.... அவர்கள் கண் முன்னே இழைவது... கட்டி பிடிக்க வருவது இவை எல்லாம் தாங்க முடியாமல் தான் அவர்களை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு வருவது....

முதலில் எப்பயாவது என்று ஆரம்பித்த பழக்கம் நாளாக நாளாக அதிகரித்ததே தவிர குறையவில்லை....

வசந்தியும் எவ்வளவோ போராடி பார்த்து விட்டாள்.... அவன் எத்தனையோ வாக்குறுதி கொடுத்தும் அதை துளி கூட காப்பாற்றவில்லை...


இன்று கண்ணனின் பேச்சில் விரக்தியின் விளிம்பில் தான் இருக்கிறாள்.... அழுது அழுது கண்ணீரும் வற்றி விட்டது......இருந்த இடத்திலேயே சுருண்டு படுத்துக் கொண்டாள்....


காலை எழக் கூட முடிய வில்லை.... அடிபட்ட இடம் வேறு வீங்கி விண் விண் என்று வலித்தது....

அப்போது அவளை வளைத்து அவளோடு ஒண்றி படுத்த சேகரை தன் வலுக் கொண்ட மட்டும் பிடித்து தள்ளியவள் விலகி அமர்ந்து கொண்டாள்...


அவள் தள்ளியதில் நன்றாய் விழித்தவனுக்கு அப்போது தான் நேற்று நடந்தது எல்லாம் நியாபகம் வர வசந்தியை சமாதானம் செய்ய அவள் அருகில் சென்றான்...


"என்னைய மன்னிச்சுடு புள்ள... நான் மாட்டேன்னு தான் சொன்னேன்... இந்த வேலு தான் வம்படியா கூட்டிட்டு போய்ட்டான்... நான் கொஞ்சம் தான்டி குடிச்சேன்.... இனி உன் மேல சாத்தியமா குடிக்க மாட்டேன்... "என்று அவள் தலையில் கை வைக்க போக.. அவன் கையை தட்டி விட்டவள்


"இந்தாரு... இனி உன் கை எம்மேல பட்டுச்சு என் பொணத்த தான் பாப்ப....எங்கயாச்சும் போய்த்தொலை.... உன்ன பாக்கறப்ப எல்லாம் செத்து போகலாம் போல இருக்கு... போய்த் தொலை...... "என்று கத்த சேகர் தலையை குனிந்து கொண்டே வெளியே சென்றான்....


அவர்கள் குடியிருப்புக்கு சற்று அருகில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தான்...

அப்பொழுது சாலையில் இருவர் "அண்ணே மில் குவாட்டர்ஸ்ல ஒரு புள்ள வெசத்த குடிச்சு செத்து போச்சாம்.... புருஷன் சதா குடிச்சுட்டு வந்து கொடும படுதுனனால தற்கொலை பண்ணிக்குச்சுன்னு சொல்ராங்க... "

என்றதும் சேகர் மனதிற்கு திக்கென்றது..


"அண்ணே... அந்த புள்ள பேரென்ன?.." என்று கேட்க..

"ஏதோ வசந்தியோ சாந்தியோ.... "என்று சொன்னதும் தான் தாமதம் குடியிருப்பை நோக்கி விரைந்தான்......

"அண்ணா பசிக்குது... அம்மா வேற இன்னும் எழும்பல... ஏ இப்படி படுத்துருக்கு... "


"அம்மாவுக்கு ஒடம்பு முடில மாது... நீ வா எங்கிட்ட அம்மா நேத்து குடுத்த ரெண்டு ரூபா இருக்கு.... கடைல ஏதாச்சும் வாங்கி தரேன்.... "என்று அழைத்து கண்ணன் மாதவனை கடைக்கு அழைத்து செல்ல..

"அண்ணா நேத்து ஏன் அந்த மல்லித்த

நம்ம அப்பாவ குடிகாரன்னு சொல்லிட்டே இருந்துச்சு... குடிகாரன்னா என்ன..அப்பா ஏன் இப்படி அடிக்கடி பன்றாங்க... எனக்கு அப்பாவை அப்பிடி பாக்கும் போது பயமா இருக்குன்னே... "


"அப்பா இனிமே அப்பிடி பண்ணா நீ நான் அம்மா எல்லாம் எங்கயாச்சும் போயிரலாம் சரியா...பயப்பட கூடாது... நாம பெருசா வளந்தா அப்பா மாதிரி பேட் பாய்யா இல்லாம குட் பாய்யா இருக்கலாம் சரியா....."

"ஐ நாம குட் பாய்... குட் பாய்... "என்று குதித்து கொண்டே சென்றான்... எதிரில் சேகரை கண்டவன்

"அண்ணா அப்பா.. "என்று பயத்துடன் கண்ணன் பின் ஒளிந்தான்...


அவர்கள் அருகில் வந்த சேகர் "மாது கண்ணா அம்மா என்னாச்சு.. "

"அம்மா செத்து போச்சி..... நீ போய் குடிச்சுட்டு சந்தோசமா இரு... "என்று சொல்லிவிட்டு மாதுவை அழைத்து கொண்டு கடைக்கு சென்றான் கண்ணன்...


அவன் பேச்சை கேட்டு அழுது கொண்டே குடியிருப்பில் நுழைய அங்கு கூட்டமாய் குடியிருப்பு வாசிகள் இருந்தனர்.... யாரையும் நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாமல் தன் வீட்டினுள் நுழைந்தான்...

உள்ளே வசந்தி சுருண்டு படுத்திருந்தாள்.. அவள் காலை பிடித்து கொண்டு "வசந்தி என்ன மன்னிச்சுரு.... நானே உன்ன கொன்னுட்டேன்... என்ன மன்னிச்சிரு... நீ எவ்வளவோ சொல்லியும் என்னால அந்த பழக்கத்தை விட முடில... இப்ப நீ இல்லாம நான் எப்பிடி இருப்பேன்.. இப்படி எங்கள அனாதையா விட்டுட்டு போய்ட்டயே... நான் இனிமே குடிக்க மாட்டேன்.. எந்திரிடி... என்ன இனி மாமான்னு கூப்பிட அக்கறையா பாத்துக்க யாருடி இருக்கா... பிள்ளைங்களுக்காவது பொறுமையா இருந்திருக்கலாமே... "என்று அழுது கொண்டிருக்க


"அடச்சீ... காலவுடு... நான் ஏன்யா செத்து போறேன்... உன் கூட இருக்க முடிலனா எங்கயாச்சும் போய் பிச்சை எடுத்தாச்சும் எம்புள்ளைங்கள பத்துக்குவேனோ தவிர உன்ன மாதிரி குடிகாரன நம்பி வுட்டுட்டு போவ மாட்டேன்... அப்பிடி சாவற மாதிரி இருந்தா எப்பயோ செத்து போயிருப்பேன்...


ஆமா ஏன் இப்படி பேய் முழி முழிக்கற... அதான் நான் சாவலன்னு தெரிஞ்சிடுசே.. அப்புறம் ஏன் இன்னும் அழுவற... "என்று சொல்ல அவனோ அவளை கட்டிப்பிடித்துகொண்டு அழ ஆரம்பித்தான்...

"ஆட விடு... ப்ச்... மாமா... எனக்கு ஒன்னும் இல்ல வுடு... அழுவாத.....ஐயோ இப்ப வுடப்போறியா இல்லையா... "

"என்னால முடில புள்ள... நீ வெசம் குடிச்சுட்டன்னு தெரிஞ்ச உடனே என் உசுறு என்கிட்டயே இல்லபுள்ள... இனிமே சாமி சாத்தியமா குடிக்க மாட்டேன்... "


"இதோட இது எத்தனாவது சத்தியம் மாமா... உன் சத்தியத்தை தண்ணில தான் எழுதி வைக்கணும்...... "

"இல்ல புள்ள.. இனிமே கண்டிப்பா குடிக்க மாட்டேன்... "

"என்னவோ மாமா... இப்படி தான் ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாந்து போறேன்.... "

"இந்த முற ஏமாற மாட்டடி... "என்று அணைத்து முத்த மிட


"விடு மாமா... இதெல்லாம் கூட இப்பெல்லாம் எரிச்சலா இருக்கு... நீ குடிச்சுட்டு நடந்துக்குற முறைல இதெல்லாம் எனக்கு வெறுத்து போச்சு... "

"மன்னிச்சுடு வசந்தி... "என்று தலை குனிந்து கொண்டே சொல்ல..

"கவல படாத வுடு மாமா... போற போக்குல எல்லாம் சரியா போய்டும்... சரி புள்ளைங்களுக்கு பசிக்கும்.. நான் ஏதாச்சும் சமைக்கறேன்... "


"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.... நாம வெளிய போய் சாப்பிட்டு அப்டியே படத்துக்கு போய்ட்டு வரலாம்... "என்று சொல்ல அவளும் கிளம்பினாள்... பிள்ளைகள் வர அவர்களையும் கிளப்பி கொண்டு வெளியே கிளம்பினார்கள்..


வெளியே அவர்கள் குடியிருப்பில் வசித்த சாந்தி என்ற பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றினார்கள்... அவளின் குழந்தைகள் பின்னேயே அழுது கொண்டு ஓட... ஊரே அவள் கணவனை திட்டிக் கொண்டு இருந்தனர்... ஆனால் அவனோ பொண்டாட்டி இறந்த துக்கத்தில் குடித்து ஓரத்தில் விழுந்துகிடந்தான்....

இதை கண்ட சேகர் கண்முன் தன் குடும்பம் வந்து போக"எந்த சூழ்நிலையிலும் என் குடும்பத்தை இந்த நிலையில் நிறுத்த கூடாது என்ற உறுதி கொண்டான்...


"ஏன் மாமா இந்த ஆம்பிளைக எதுக்கு ஆ..வூன்னா குடிக்க போறீங்க.. கல்யாணம்னா குடி.. கருமாதின்னா குடி.. சந்தோசம்னா குடி... துக்கம்ன்னா குடி..

இந்த மாதிரி ஏதாச்சும் கஷ்டம் வந்தா குடிக்கலாம்ன்னு எல்லா பொம்பளைகளும் நினச்சா நாடு தாங்காது மாமா... "


"உண்ம தான் வசந்தி.... "

அடுத்து வந்த சனிக்கிழமை.....

"ஐ... அம்மா அப்பா வந்தாச்சு....."என்று குதித்து கொண்டு மாதவன் வர... எட்டி பார்த்தாள் வசந்தி...

சைக்கிளின் இரு பக்கமும் பைகள் தொங்க முகம் பூரா புன்னகையுமாய் தூரத்தில் இருந்தே வசந்தியை பார்த்து புன்னகைத்தான்...... கண்ணனும் தன் அப்பாவை பார்த்த சந்தோஷத்தில் சேகரிடம் சென்றான்...

இனி தொடரும் சனிக்கிழமைகளிலும் இதே புன்னகையும் குழந்தைகளின் சந்தோசமான அப்பா வந்தாச்சும் அவர்கள் வாழ்வில் நிறைந்திருக்கும்...



Rate this content
Log in

Similar tamil story from Drama