வாழ்க்கைப் புத்தகம்!!
வாழ்க்கைப் புத்தகம்!!
என் வாழ்க்கைப் புத்தகத்தைச் சற்று புரட்டிப் பார்க்கிறேன்..
மழலைப் பருவம் - நினைவிலில்லை..
ஆரம்பப்பள்ளிப் பருவம் - முதல் மதிப்பெண் வாங்கி ஆசிரியரிடம் பாராட்டு வாங்க, முட்டி முட்டிப் படித்தேன்..
உயர்பள்ளிப் பருவம் - சிறந்த கல்லூரியில் இடம் பெற்று உறவினர்களிடம் பெருமையடித்துக் கொள்ள, விழுந்து விழுந்து படித்தேன்..
கல்லூரிப் பருவம் - அயல்நாட்டுக் கண்ணாடிக் கட்டிடத்தில் வேலை வாங்கிச் சுற்றத்தாரிடம் கர்வமாக மார்தட்டிக்கொள்ள, அயராது படித்தேன்..
இளமைப் பருவம் - மேலதிகாரியிடம் நற்பெயர் வாங்கி முன்னேற, இரவு பகல் பாராது உழைத்தேன்..
நடுநிலைப் பருவம் - மேலதிகாரியானதும் மேலும் பணம் ஈட்டி ஊரார் மெச்சும்படி வீடு ஒன்றைக் கட்டிவிட, உறக்கமின்றி உழைத்தேன்..
இப்போது - தலை நரைத்தபின் தான் உறைத்தது, என் வாழ்க்கையை எனக்காக வாழ்ந்ததைவிட மற்றவர்களுக்காகவே வாழ்ந்திருப்பது!!
ஓய்வு பெற்ற பின் தான் தெரிந்தது, என் உணர்வுகளுக்கு என்றோ ஓய்வு கொடுத்துவிட்டு இயந்திரமாக வாழ்ந்திருப்பது!!
உடல் அலுத்ததும் தான் உண்மை வலுத்தது, பறிபோன பருவங்கள் திரும்பப் போவதில்லையென்று!!
இவ்வளவு பக்கங்களையும் புரட்டிப் பார்த்த பின் உள்மனம் உமிழ்ந்தது, இந்த வாழ்க்கைக்கெல்லாம் புத்தகம் ஒரு கேடா என்று..!!