கி(உ)ழவனின் குரல்
கி(உ)ழவனின் குரல்
கி(உ)ழவனின் குரல்
எங்க ஊரு சாமிக்கெல்லாம்
பெரிய அருவா கையிலதான்
எங்க வீட்டுச் சாமிக்குத்தான்
பெரிய குச்சி ஊண்டுகோலாய்
கலப்பை தூக்கி நின்னு
கதிரருவா தலையில் சொருகி
தலப்பா கட்டி நிக்கும்
கருப்பன்தான் எங்க தாத்தன்
மாட்டப் பூட்டிக் கிட்டு
மண்ண ஆழக் கீறயில
ட்ர்றே ஏய் வெள்ளைனு
கிழவன் குரல் கேட்கையில
வேகம் பிறப் பெடுக்கும்
விறுவிறுப்பா உழுது நிக்கும்
உழுத புழுதி எல்லாம்
உடனே நீர் பாய்ச்ச
கிணத்துத் தண்ணிச் சத்தம்
கிண்கிணிய இசைக்கும்
மாட்டுக் கழுத்தைச் சுத்தி
மணியோசை ஆமாங்கும்
கிழவன் காதில் இப்ப
கிடை ஆடு சத்தமுங்க
இடையன் குடில நோக்கி
எளந்தாரி நடை போட்டான்
ஆட்டுப் புழுக்கை அள்ளி
அடிஉரமா அமுக்கி வச்சான்
மாட்டுச் சாணம் கொட்டி
மனசார உழவு செஞ்சான்
கிழவன் போன பின்னே
குரலு மட்டும் ஒலிக்குமுங்க
உழவன் சத்தம் இப்போ
ஓய்வாக மயான பூமியில்.
ம.கண்ணன்
( கி(உ)ழவனின் பெயரன் )
