STORYMIRROR

Manikandan U

Fantasy Others

3  

Manikandan U

Fantasy Others

வேகிவா

வேகிவா

2 mins
446


குளிர்ந்த குண்டும் குழியுமான வெட்ட வெளியில் குட்டையான உடலும் வால் போன்ற நீண்ட கைகளையும், ஒல்லியான கால்களையும், மொட்டு போன்ற முகமும் கொட்டைக்கண்ணும் சிறிய வாயும் கொண்ட நாற்பத்தி இரண்டே வயதான சினாகனும், முப்பத்தி ஏழே வயதான அவளது தங்கை சினாகியும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, விண்கல் மழைத் தூர ஆரம்பித்ததால் விறுவிறுவென்று போட்டி போட்டபடி புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்களின் குகையை நோக்கி விரைந்தார்கள்.

எப்போதும் தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் சினாகன் இப்போதும் விட்டுக் கொடுத்து தங்கையே முதலில் வர வேகத்தைக் குறைத்தான். குகைக்குள் உள்ள சிறிய ஸ்பேஸ் ஸ்டேசனுக்குள் முதலில் நுழைந்த சினாகி "நான் ஜெயித்துவிட்டேன். நான் ஜெயித்துவிட்டேன்..." என்று கத்த, ஒரு விநாடி தாமதமாக வந்த சினாகன் "இல்லை..இல்லை.. நான் தான்... நான் தான் முதலில் வந்தேன்" என பொய்க்கூச்சல் போட, “சத்தம் போடாதீர்கள்...” என்ற அப்பா பஜீகாவின் இடி முழக்க குரல் கேட்டு பிள்ளைகள் அடங்கி ஒடுங்கினார்கள். “இங்கே பாருங்கள்...” என்று ஹாலோகிராமில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைக் காட்டி "நம் கிரகத்தில் வந்த கொரோனா பூமியிலும் வந்துவிட்டது. பல வருடங்களாக பூமியை ஆக்கிரமிக்கலாம் என்று நம் வேகிவா இனத்தவர் போட்ட திட்டத்தில் விழுந்தது மண்.. இனி இந்த நிலவில் இருந்து பூமியைக் கண்காணிப்பது வீண். அநேகமாக நம் தலைவர் வேறு கிரகத்தை உளவு பார்க்க சொல்லப்போகிறார். ஒரு வருட ஹைபர்னேசனில் இருந்து விழித்த உடனே நமக்குக் கிடைத்த செய்தியைப் பார்...ஊ...” என்று வெறுத்தபடி அவர் சொன்ன போது, அவர் வாய் சிறிய வட்ட வடிவானது. அவர் தன் வாயை எப்போது அப்படி வைத்தாலும் சினாகிக்கு சிரிப்பு வந்துவிடும். அவளால் முடிந்தவரை அடக்கிப் பார்த்துவிட்டு முடியாமல் "அப்பா வாயைப்பாரேன்...” என்று சொல்லிவிட்டு கண்களில் கண்ணீர் பொங்க சிரித்தேவிட்டாள்.

மறுபடியும் ஹாலோகிராமில் ஒரு செய்தி. சாம்பல் நிறமும் நீண்ட மூக்கும் உள்ள இளம் வேகிவா அச்செய்தியைச் சொல்ல ஆரம்பித்தான்.

"மனிதர்கள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தும் கண்டுபிடித்துவிட்டார்களாம். தலைவர் மனிதர்களிடம் சுமூக உடன்படிக்கையில் இறங்கி அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஐம்பது செயற்கைக்கோள்களில் முப்பதை அவர்களிடமே விட்டு விட்டு அதற்கு பதிலாக கொரோனா தடுப்பு மருந்தை வாங்க முடிவு செய்திருக்கிறார். பஜீகா, நீவீர் உடனே செக்டார் 55 க்கு வரவேண்டும். அங்கு பூமிப் பயணம் குறித்து ஆலோசிக்கப்படும்." ஹாலோகிராம் மறைந்தது.

"அருமை அருமை.... கடைசியாக மருந்து கிடைக்கப்போகிறது. மனிதர்களிடம் அந்த இயற்கைத் தாய் இன்னும் கருணையுடன் தான் இருக்கிறாள். சரி, பிள்ளைகளே நான் செக்டார் பேஸ்க்கு செல்கிறேன். அநேகமாக என்னையும் பூமிக்கு கூடிய விரைவில் அனுப்புவார்கள் என்று நினைக்கிறேன்."

"எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்.. நீங்கள் மட்டும் பத்துப் பதினைந்து முறை சென்று வந்துவிட்டீர்கள்." என்றான் சினாகன் தன் கொட்டைக் கண்ணை பெரிதாக விழித்தபடி.

"சினாகா.. இது அவசர காரியம். அதுவும் அங்கு சென்றவுடன் திரும்ப வேண்டியதிருக்கும். சுற்றிப் பார்க்க நேரம் கிடைக்காது. அதனால் அடுத்த முழுப்பூமி நாள் அன்று உங்களை நிதானமாக அழைத்துச் செல்கிறேன். அப்போது தான் நாம் பூமியை நோக்கிப் போகும் போது அதன் அழகை ரசிக்க முடியும்."

"ஆ... நீல முத்து... நீல முத்து உற்றுப் பார்த்துக் கண்ணில் ஒத்து..." என்று அவள் அம்மா சொல்லிக் கொடுத்தப் பாடலைப் புன்னகையுடன் பாடினாள் சினாகி.

"ஆம் அதே தான்."

"அப்புறம்...." அவளுடைய சின்னஞ் சிறிய வாயில் உள்ள சிறிய பச்சை நிற நாக்கில் எச்சில் ஊற "அப்படியே எனக்கு பஞ்சுமிட்டாயும் வாங்கித் தரவேண்டும்" என்றாள்.

"கண்டிப்பாக... கண்டிப்பாக.. நான் வருகிறேன். சினாகா தங்கையைப் பார்த்துக்கொள்."

"சரிங்கப்பா."

அத்துடன் பஜீகா குகையின் ஒரு மூலையில் நிறுத்தி வைத்திருந்த முட்டையைப் போன்ற பறக்கும் கலத்தினுள் அமர்ந்து அதன் கண்ணாடி ஜன்னல் வழியே பிள்ளைகளுக்கு டாட்டா காட்டியபடி பறக்க ஆரம்பித்தார். அது ஜிங்ங்ங்ங்ங்ங் என்று செக்டார் 55ஐ நோக்கி விரைந்தது.



Rate this content
Log in

More tamil story from Manikandan U

Similar tamil story from Fantasy