இந்திரா சண்முகானந்தன்

Children Stories Fantasy Children

5  

இந்திரா சண்முகானந்தன்

Children Stories Fantasy Children

பாரசீக கம்பளம்

பாரசீக கம்பளம்

5 mins
1.9K


அது ஒரு பதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதி. அப்போது தமிழகத்தில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் சார்பாக ஆட்சிப் பொறுப்பிலிருந்தார் செவ்வப்ப நாயக்கர். இந்திய நாட்டின் வட பகுதியில் ஹுமாயூன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் பெரும்பாலும் தென் பகுதியிலும் இஸ்லாமிய மன்னர்களின் போர்தொடுப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போதிருந்து தலைநகரமாக கருதப்பட்ட தில்லி எப்போதும் பதற்றத்தின் பிடியில்தான் இருந்தது. செவ்வப்ப நாயக்கர் தஞ்சாவூரின் சுயாதீன ஆட்சியாளராக இருந்தமையாலும் விஜயநகர ஆட்சியின் உதவி இருந்ததாலும் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

  

1536 களிலும் வாணிகம் சிறப்பாகவே இருந்தது. வணிகர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு சென்று பல பொருட்களை இறக்குமதி செய்துக் கொண்டும் ,தமிழகத்திலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டும் வணிகத்தை சிறப்பாக நடத்தி வந்தனர். ஆலமர் வாணன், தஞ்சாவூரின் சிறந்த வணிகர். சாகச பிரியர் என அனைவராலும் அழைக்கப் படுபவர்.கடற்பயணம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். மற்ற வணிகர்கள் அனைவரும் செலவுகள் மற்றும் கடற்கோள்கள் காரணத்தினால் கடல் வாணிகத்தை பெரும்பாலும் தவிர்த்தனர்.


ஆனால், வாணனுக்கு சிறுவயதாக இருந்தபோது தனது தாத்தாவுடன் ஒருமுறை கடற்பயணம் மேற்கொண்டது ,கடல் வாணிகம் செய்ய ஆர்வத்தை தூண்டியது.அது அவரது மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அப்போது வாணனின் குடும்பம் செல்வ செழிப்பாக இருந்தது. இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அவர்களும் நடுத்தர வணிகராக மாறி விட்டனர். அவரது தாத்தா அவருடைய இளமை காலத்தின் போது அடிக்கடி கடற்பயணம் செய்வார். அது மட்டுமல்லாமல் பல அயல் நாடுகளுக்கு சென்று வாணிகம் செய்து உள்ளார்.அவர் பயணம் மேற்கொண்டப்போது மரக்கலங்களை செலுத்துவதற்கு அதிகமான காசு தேவைப்பட்டது.அதனால் கடற்பயணம் சவாலாக இருந்தது.


   போர்ச்சுகீசு, டச்சு நாட்டை சேர்ந்த மாலுமிகள் மற்றும் வணிகர்களுடன் அவர் நட்பு கொண்டிருந்தார். அவர்கள் பற்றியும் வாணனிடம் சொல்வார். அதில் அவருக்கு மிகவும் பிடித்தமான மாலுமி மார்க்கோபோலோ. இதை கேட்கும் போது ஒரு நாள் அவர் கப்பல் பயணம் மேற்கொள்ள வேண்டுமென ஆசை தோன்றியது. அது மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் தாத்தா சொன்ன கதை எல்லாம் நிஜம் என தோன்றியது.வளர்ந்து பெரியவனானதும் சொந்த மரக்கலத்தில் பல நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்னும் ஆசை தோன்றியது. கடற்பயணம் குறித்து பல பேரிடம் சொல்லி யாருமே உடன்வர முன்வரவில்லை. அதனால் தன் நண்பனான சேனாதிபதி பூபால நாயக்கரிடம் உதவி கேட்டு வாணன் சென்றார். இருவரும் சிறுவயது நண்பர்கள். பூபாலன் எப்போதும் வாணனுக்கு உதவியாகவும் ஊக்கப்படுத்திக் கொண்டும் இருப்பார்.


  விஜய நகரத்துக்கு போர்ச்சு நாட்டு மாலுமி பெர்னோ நுனீஸ் வந்திருக்கும் செய்தியை பூபால நாயக்கர் அறிந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் நாகை வழியாக பாரசீகம் சென்று விட்டு போர்ச்சுகீசம் திரும்ப போகிறார் என்னும் செய்தியை அறிந்து கொண்டார்.பூபாலன் நுனிஸிடம் வாணனை அறிமுகம் செய்து வைக்கிறேன் எனக் கூறினார். தஞ்சாவூரில் இருந்து நாகை வரைக்கும் நுனிசை பாதுகாப்பாக கூட்டி செல்லுமாறு பூபாலருக்கு அரசரின் கட்டளை வந்தது. வாணன் , நுனிஸ் பற்றி கேள்வி பட்டதுண்டு.அவரிடம் கடற்பயணம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.கடற்பயணம் குறித்தும் அயல் நாட்டில் உள்ள அதிசய பொருள்கள் பற்றி பேசி கொண்டனர் .


 அப்போது நுனீஸ் பாரசீக கம்பளம் பற்றி கூறினார். அதன் சிறப்புகள் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் தெரிந்து கொண்ட வாணனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. கம்பளத்தின் வரைபடத்தை காட்டினார். பிறகு ஒன்றாக செல்லலாம் என இருவரும் முடிவெடுத்தனர். இதுவரை பாரசீகத்திற்கு சென்றதில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது வட இந்தியாவை கடந்து கைபர் கணவாய் தாண்டினால் போய்விடலாம் என நுனிஸ் கூறினார்.


தற்போது அங்கு நிலைமை சரியில்லை, பீஜப்பூர் ஆட்கள் தாக்கக்கூடும் என வாணன் கருதினார் . நிலம் வழியாக சரிவராது என கடல் வாயிலாக செல்ல முடிவு செய்தனர் .பயணத்துக்கான செலவுகள் அனைத்தும் வாணனே பார்த்துக் கொள்ள முடிவு செய்தார். நாகையில் இருந்து புறப்பட்டு அரபிக் கடலை கடந்தனர்.தனது கடற் அனுபவத்தை கூறிக் கொண்டு வந்தார் நுனிஸ் .கடல் பயணம் போது அவர் சந்தித்த இடர்பாடுகள் மற்றும் கஷ்டங்கள் குறித்து விளக்கினார்.இவர்கள் புறப்பட்டு சென்ற மறு ஆண்டு தில்லியில் ஹுமாயுனுக்கு செர்சா சுரி நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார்.


 1537 -ல் நுனிஸ் மற்றும் வாணன் தங்களது கடல் பயணத்தை தொடங்கினர் .அரபிக் கடலிலிருந்து மேற்கு நோக்கி மரக்கலத்தை திருப்பினர். விஞ்ஞான முன்னேற்றம் இல்லாததால் பயணத்திற்கு அதிகமான காலம் எடுத்துக்கொண்டது. நாகையிலிருந்து அரபிக்கடல் வருவதற்கே அவர்களுக்கு ஒரு மாத காலம் ஆனது .பயணத்தின் போது வாணன் மனதில் பாரசீகக் கம்பளம் பற்றிய எண்ணங்கள் எழுந்து கொண்டிருந்தன. இந்தியாவில் பெரும்பாலும் இந்த கம்பளத்தை பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை என்றபோதும் உலக அளவில் அதன் மதிப்பு பல கோடி என யூகம் செய்தார்.


கம்பளத்தை வாங்கிக் கொண்டு இந்தியா வந்தால் பல அரசர்களுக்கு அதிகமான விலை வைத்து விற்று விட்டால் தங்களது குடும்பம், தன் தாத்தா காலத்தில் இருந்தது போலவே செழிப்பாக மாறிவிடும் என எண்ணினார்.அரபிக் கடலில் இருந்து மேற்கு நோக்கிய அவர்களது பயணம் இறுதியில் பாரசீக வளைகுடாவில் முடிந்தது.


அங்கு இருந்து இரண்டு நாள் பயணம் முடிந்த பிறகு பாரசீகத்தை அடைந்தனர் .அங்குள்ள துறைமுகத்தை அடைந்த பிறகு தங்களது மரக்கலத்தை அங்கு நிறுத்தி நங்கூரம் போட்டு கட்டினார் . அவர்கள் எதிர்பார்த்தது போல பாரசீகம் இல்லை.எங்கும் வறண்ட காற்று வீச, இந்தியாவை போல மிதமான கால நிலை அங்கு நிலவவில்லை. அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அதிகமான விலையில் விற்கப்பட்டன. பாரசீகத்தில் சபாவித் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.வாணிகம் சிறப்பாகவே இருந்தது .


அதற்கான காரணம் பாரசீக கம்பளத்தின் உற்பத்திக்கு அரசின் ஆதரவு .பாரசீக கம்பளம் வாங்குவதற்கு பல ஊருக்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் கூட்டமாக வணிகர்கள் வந்திருந்தனர். மரக்கலத்தின் நிலைமை மோசமாக இருந்தமையால் சீக்கிரம் கம்பளத்தை வாங்கிக் கொண்டு ஊர் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தனர்.பல வியாபாரிகளிடம் சென்று கம்பளத்தின் விலையை கேட்டனர். அவர்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு விலை உயர்வாக இருந்தது.தஞ்சாவூரில் இருந்து கொண்டு சென்ற பொற்காசுகள் போதவில்லை.கம்பளத்தை வாங்கிக் கொண்டு போனால் இந்தியாவில் கோடிக்கணக்கான காசை பார்த்துவிடலாம் என்று வாணன் நினைத்தார் .


அங்கிருக்கும் கடைகளில் வேலை பார்த்து பாரசீக மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.நுனிஸ்கும் இந்த யோசனை பிடித்தமையால் அங்கேயே வேலை பார்த்து கொண்டு நகரத்தை சுற்றி பார்த்து கொண்டும் கிடைத்த காசுகளை வைத்து மரக்கலத்தை சரி செய்தனர். இதற்கு ஒரு வருட காலம் ஓடிவிட்டது. இறுதியாக பத்திற்கும் மேற்பட்ட தரத்தில் பாரசீக கம்பளங்களை வாங்கி விட்டனர்.


  அதே சமயம் இந்தியாவில் செர்சா சுரியின் படையெடுப்பால் ஹுமாயுன் தோற்கடிக்கப்பட்டதனால் தில்லி செர்சா சுரியின் வசமானது . இந்த விடயத்தை அறியாமல் நுனிசும் வாணனும் இந்தியா திரும்பி கொண்டிருந்தனர். அரபிக் கடலை தொட்டவுடன் அங்கு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் மரக்கலம் சற்று ஆட்டம் கண்டது . இதனால் நாகையை அடைய வேண்டியவர்கள் மரகலத்தை திருப்பிக்கொண்டு தற்போது இருக்கும் மும்பையை அடைந்தனர் .அங்கு அவர்கள் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. தரைதட்டியவுடன் அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் இவர்களை நோக்கி வந்தனர்.அவர்கள் உற்றுப் பார்த்தபோது தான் தெரிந்தது அவர்கள் செர் சா சுரியின் படை வீரர்கள் என்று .


  கடல் மார்க்கமாக புதிதாக உள்ளே வந்ததால் இவர்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் பறித்துக்கொண்டு இவர்களை சிறை பிடிக்க ஆயத்தம் ஆனார்கள்.அந்த பிடிப்பட்ட பொருள்களில் கம்பளமும் ஒன்று.எப்படியாவது தமிழகத்துக்கு போய்விடவேண்டும் என்று மிகவும் போராடிக் கொண்டிருந்தார் வாணன் . அவர்களை தாக்கிவிட்டு ,மரக்கலத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டார்கள் .தன்னுடைய ஒரு வருட காலத்தை வீணாக்கியது மட்டுமல்லாமல் தனது பொருட்களையும் இழந்தது வாணனுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது . இவர்களை வரவேற்க பூபாலன் நின்றுகொண்டிருந்தார்.வாணனின் முக வாட்டத்தை பார்த்துவிட்டு என்ன நடந்தது என கேட்டார்.


நடந்ததை விளக்கினார் வாணன் .அப்போது மரக்கலத்தின் மேல் தளத்திலிருந்து கீழே இறங்கினார் நுனிஸ் .வாணனை நோக்கி நடந்து வந்து புன்முறுவல் செய்தார் .பிறகு கையில் எதையோ வைத்திருந்தார் .அதை பார்த்துவிட்டு வாணனின் கண்கள் விரிந்தன .அது ஒரு பாரசீக கம்பளம் அதுவும் மிகச் சிறந்த தரத்தை உடையது .


வாணனுக்கு தருவதற்காக ஒரு கம்பளத்தை தனது மரக்கலத்தின் அடிப்பாகத்தில் வைத்திருந்தார். இந்தியா வந்த பிறகு இந்த கம்பளத்தை பரிசாக தர வேண்டுமென எண்ணினார் .ஏனென்றால் அவருடன் கடற் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் பரிசு தருவது நுனிசின் வழக்கம், அப்படி ஒரு கம்பளம் எடுத்து வைத்திருந்தார் .அது ஒளித்து வைத்ததால் காவலர்களுக்கு தெரியாமல் போனது.


அந்த கம்பளத்தை பார்த்து மிகவும் சந்தோசப்பட்டதுடன் , என்ன செய்வதென்று தெரியாமல் வாணன் நுனிசை ஆரத்தழுவிக் கொண்டார். பிறகு சிறிது நாள் நாகையில் தங்கி விட்டு நுனிஸ் கிளம்பினார் .தனது கடற்பயணம் குறித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்,வாணன் . அடுத்து இன்னொரு கடற் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் அங்கு பட்ட கஷ்டங்கள் அவருக்கு நினைவு வந்ததால் சற்று தயங்கினார்.


நுனிஸ் கொடுத்த கம்பளத்தை யாருக்குமே விற்காமல் பத்திரமாக தன்னுடனே வைத்துக்கொண்டார். வியாபார நோக்கத்திற்காக சென்ற வாணனின் கடற்பயணம் அவரது மனதை சற்று மாற்றி விட்டது. அற்புதங்களையும் அதிசயங்களையும் தேடி செல்லலாம் என நினைத்திருந்தார். ஆனால், தற்போது கையில் போதிய வருமானம் இல்லை என நினைத்துக் கொண்டிருந்த போது துறைமுகத்திலிருந்து ஒரு குறிப்பு வந்திருக்கிறது என ஒரு போர் வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.அதில் மீண்டும் செல்வோமா என்று எழுதி இருந்ததை பார்த்து விட்டு உற்சாகத்துடன் கிளம்பினார் வாணன் .



Rate this content
Log in