ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்


கிருஷ் அன்று பள்ளியில் இருந்து வீடு திரும்பும் நேரம் அவனின் அப்பாவும் அம்மாவும் எங்கோ புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் கேட்டபொழுது இந்த தடவை கோடை விடுமுறை கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டில் என்று கூறினர். கேட்டவுடன் அங்கேயா என்று சலித்து கொண்டான். ஒரு வழியாக புறப்பட்டு பாட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
நீண்ட வருடங்களுக்கு பின் அங்கே செல்கின்றனர். தூசியும் காய்ந்த சருகுகளே அவர்களை வரவேற்றது. கிருஷ் தன் அப்பாவிடம் சண்டையிட்டான். இங்கு விளையாட ஒண்ணுமே இருக்காது. மை வகேஷன் வில் பீ போரிங் அப்பா என்று சிணுங்கினான். அதெல்லாம் அவன் அப்பா காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை. கடுப்புடன் உள்ளே சென்றான். அப்பாவும் அம்மாவும் வீட்டை சுத்தம் படுத்த ஆரம்பித்தனர் உதவிக்கு வேலையாட்களையும் வைத்து கொண்டனர். கிருஷ் அங்கிருந்த ஒரு மரத்துக்கடியில் உட்கார்ந்துகொண்டான்.
அவன் காலுக்கு பக்கத்தில் எதோ ஒன்று மின்னியது எடுத்துப்பார்த்தான் அழகழகாய் சின்ன சின்ன சிப்பிகள். அதே தேடி சேகரிக்க ஆரம்பித்தான். இதில் அதிசயம் என்னவென்றால் ஒவ்வொரு சிப்பியும் ஒவ்வொரு விதமான ஒலியை எழுப்பியது. சேகரித்த அனைத்து சிப்பிகளையும் பத்திரப்படுத்தினான். மாடியில் உள்ள அறையில் நிறைய பொம்மைகள் விதவிதமான விளையாட்டு சாதனங்களை பார்த்தான். அவனை அந்த அறைக்குள் போக விடாமல் சிலந்தி வலை தடுத்தது. அவன் அதை கைகளால் தட்டி விட்டான். நொடிப்பொழுதில் அவன் மறைந்துபோனான்.
அவன் கண்களை திறந்த பொழுது அவன் வேற்று உலகத்தில் இருப்பது போல் உணர்ந்தான். அவனுக்கு பின்னால் ஒரு குரல் ஒலித்தது. வெல்கம் மை பாய் என்று. திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் சுமார் 8 அடி இருக்கும் அவன் உயரம் முகத்தில் சிவப்பு நிற மாஸ்க் அணிந்திருந்தான். அவனை பார்த்ததும் கிருஷ்ணா சிரிக்க ஆரம்பித்துவிட்டான். காஸ்ட்யும் சூப்பர் எந்த கடையில வாங்குன என்று கேட்டு வைத்தான். அதற்கு அந்த நெட்டை மனிதனோ இது எனக்கே எனக்கானது. நான் தான் ஸ்பைடர்மேன் என்று கூறினான். கிருஷ் சும்மா விடுவதாக இல்லை மேலும் அவனை சீண்டினான். இறுதியில் அவன் தான் ஸ்பைடர்மேன் என்றால் அதை நிருபித்து காட்டுமாறு கூறினான்.
ஸ்பைடர்மேன் தன் வலைகளை கொண்டு புது நகரம் அமைத்தான். வலைகளில் தொங்கி கொண்டு சாகசங்கள் செய்தான். கிரிஷையும் உடன் சேர்த்து கொண்டான். பின்னிய வலைகளுக்கு நடுவில் அவன் வீட்டையும் அவனுக்கு காண்பித்தான். கிருஷ் நம்பினான் இ
து ஸ்பைடர்மேன் தான் என்று. இருவரும் நண்பர்கள் ஆகிக்கொண்டனர். கிருஷ் அவனிடம் என்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்த என்று கேட்டான். அதற்கு ஸ்பைடர்மேன் நீ தானே பாட்டி வீட்ல இருந்தா போர் அடிக்கும்னு சொன்ன அதனால தான் என்றான். அதற்கு கிருஷ் ஸ்பைடர்மேனை ஒரு பார்வை பார்த்தான். அதில் அவ்வளவு நல்லவனா நீ என்ற செய்தி இருந்தது. அதை உணர்ந்துகொண்ட ஸ்பைடர்மேன் என்ன தேடி இப்போல்லாம் யாரும் வர்ரதில்ல அதான் நானா கூப்டுகிட்டேன்.
கிருஷ் அவனை புரியாத பார்வை பார்த்தான். அதற்கு ஸ்பைடர்மேன் பதில் கொடுக்க ஆரம்பித்தான். சிட்டில செட்டில் ஆனதுக்கப்றம் நீங்க யாருமே உங்க பாட்டிய பாக்க ஊருக்கு வரல அவங்க எவ்ளோ ஏங்குனாங்கன்னு தெரியுமா அவங்க கடைசி நாள் வர காத்திருந்தாங்க நீங்க வரவே இல்ல இறந்ததுக்கப்றம் வந்து நீங்க பாட்டிய பாத்தீங்க ஆனா அவங்களால பாக்க முடியாம போச்சு. அவங்க தனியா இருந்த ஒவ்வொரு நாளும் இந்த வீட்ல இருக்கிற எல்லா பொருள் கிட்டயும் பேசுவாங்க பூச்சிய கூட விட்டு வைக்கல. அவ்வளவு ஏன் சிலந்திவலை கிட்ட கூட அவங்க பேசுவாங்க. என்ன கேட்டா அந்த வீட்ல இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் இருக்கும் ன்னு சொல்லுவேன்.
இருக்கிற வர அருமை தெரியாதுன்னு கூட அடிக்கடி நீங்க பேசிக்குவீங்கள. அடுத்த நொடி நம்ம வாழ்க்கைல நிச்சயம் இல்லாதது. நமக்காக இருக்றவங்கள பாத்துக்கவேண்டியது நம்ம பொறுப்பு அத சரியா செய்யணும் தானே என்று முடித்துக்கொண்டான் ஸ்பைடர்மேன். க்ரிஷின் முகம் வருத்தத்தில் வாட ஆரம்பித்தது. அதை பொறுக்காமல் ஸ்பைடர்மேன் அவனிடம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு திரும்பி பார் என்றான். அங்கே க்ரிஷின் பாட்டி நின்று கொண்டிருந்தார். ஓடி சென்று அனைத்து கொண்டான். பாட்டி அவனின் உச்சியில் முத்தமிட்டு ஆசி வழங்கி மறைந்து போனார். க்ரிஷின் முகம் தெளிச்சல் அடைந்தது.
க்ரிஷ் ஸ்பைடர்மேனிடம் அவன் கூறிய வார்த்தைகளை என்றும் நினைவில் கொள்வேன் என்றும் உன்னை அடிக்கடி சந்திக்க வருவேன் என்று கூறினான். இருவரும் பாட்டி வீட்டிற்கு திரும்பினர். வெகு நேரம் ஆளை காணாததால் எங்கே சென்றாய் என்று அவன் அம்மா கேட்டபோது ஸ்பைடர்மேனோடு ஊர் சுத்த போனேன் என்றான். க்ரிஷின் அம்மா அவனிடம் வர வர நீ என்ன ரொம்ப ஓட்டுற நம்புற மாதிரியா நீ விஷயத்தை சொல்ற ஒரு நாள் சேத்து வச்சு வாங்குவபாரு என்றாள். அதையெல்லாம் காதில் வாங்கிகொண்டாள் அவன் தான் க்ரிஷ் இல்லையே. நம்புனா நம்பு நாம்பாட்டி போ மா என்றான் ஸ்பைடர்மேனை பார்த்து கண்ணடித்துக்கொண்டே.