வைரத்தோடு
வைரத்தோடு


என் அம்மா தன் வாழ்நாளில் வைரத்தோடு போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. என்னம்மா சிறுவயதிலேயே பால்ய விவாகம் செய்யப்பட்டு தன் புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
ஒன்றுமே தெரியாத சிறு பெண். வடக்கே ஹிந்தி மொழி பேசும் மாநிலத்தில் என் தந்தை வேலை பார்த்ததால், என் அம்மாவிற்கு மொழியும் தெரியாது. இவ்வாறு இருந்த பொழுது என் அம்மாவைப் பெற்ற பாட்டியின் சொந்தக்காரர்கள் அம்மாவிடம் வந்து என் அம்மாவின் வைரத் தோட்டை வாங்கி சென்றுள்ளார்கள்.
மிகவும் இனிமையாக பேசி தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் சற்று நாட்களில் மீட்டுத் தருவதாகவும் சொல்லி வாங்கிச் சென்றார்கள். என் அம்மாவும் ஒன்றும் தெரியாதவள். தன் புருஷனை கூட கேட்காமல் அதாவது என் தந்தையை கூட கேட்காமல் தன் காதில் போட்டுக் கொண்டிருந்த வைரத் தோட்டை கழற்றிக் கொடுத்து விட்டார்கள்.
ஆனால் என்ன ஆயிற்று தெரியுமா வாங்கி சென்ற பெண் சொந்தக்காரி திருப்பித் தரவே இல்லை. இதை என் பாட்டியிடம் என் அம்மா கூறி ருக்கிறார்கள். பாட்டியும் சரி போகட்டும் பிறகு நான் வாங்கித்தருகிறேன் என்று ஆறுதல் கூறி யிருக்கிறார்கள். என் தந்தையோ செம திட்டு திட்டி தீர்க்கிறார்கள் எப்படி என்னைக் கேட்காமல் வைரத்தோடு தூக்கிக் கொடுப்பது.
இந்த சிறுவயது பாதிப்பினால் என் தாய்க்கு வேறு ஒரு தோடு போட்டு கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை. ஆனால் என்ன செய்வது நான் வைரத்தோடு வாங்கித் தருவதற்கு என் தாய் காலமாகிவிட்டார்கள்.