வாய்ப்பு
வாய்ப்பு


தந்தையின் உடல்நிலை அறிந்து கத்தாரில் இருந்து திரும்பிய கேரள இளைஞர், கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதால், தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்துக்கொள்ள முடியாமல் தவித்துள்ளார். இறுதிச்சடங்கை மொபைல் வீடியோ காலில் கண்ட இளைஞர் கண்ணீருடன் உருக்கமாக 'பேஸ்புக்'கில் பதிவிட்டுள்ளார்.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே ஆலக்கோடு பகுதியில் வசித்த ஆபேல் அவுசேப் 70. மார்ச் 8ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையறிந்து கத்தாரில் போட்டோகிராபராக பணியாற்றும் இளைய மகன் லினோ, 24, தந்தையை காண விமானத்தில் வந்தார். மார்ச் 9ல் கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற அவர், தனக்கு 'கொரோனா' பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகித்தார்.
பரிசோதனைக்கு பிறகு சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். தந்தையை பார்க்க இயலவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவருக்கு, அன்று இரவு 8:30 மணிக்கு தந்தை இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். அவரை இறுதியாக காண அனுமதிக்குமாறு கெஞ்சியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரே மருத்துவமனையில் இருந்தாலும், தந்தையை பார்க்க முடியாமல் தவித்தார். பிறகு
அறையின் ஜன்னல் வழியாக தந்தையின் உடல் ஆம்புலன்சில் செல்வதை பார்த்து கண்ணீர் வடித்தார். தந்தையின் இறுதிச்சடங்கை மொபைல் வீடியோ கால் மூலம் பார்த்த லினோ, கண்ணீரில் கரைந்தார்.
இந்த சோகத்தை 'பேஸ்புக்'கில் அவர் உருக்கமாக பதிவிட்டார். அதில், ''என்னால் அழ மட்டும் தான் முடிந்தது. அருகில் இருந்தும் தந்தையை பார்க்க முடியாதது பெரும் கொடுமை. பிரேத பரிசோதனை முடிந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு ஆம்புலன்சில் அவர் உடல் கொண்டு சென்றபோது, ஜன்னல் வழியாக மட்டும் பார்க்க முடிந்தது. வீட்டிற்கு சென்ற பிறகு 'வீடியோ கால்' மூலம் தந்தை உடலை இறுதியாக பார்த்தேன். ஒருவேளை 'கொரோனா' சந்தேகம் குறித்து நான் கூறாமல் இருந்திருந்தால், தந்தையை பார்க்க வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனால், நான் அப்படி செய்திருந்தால், கொரோனா என்னை தாக்கி இருக்கும் பட்சத்தில் பலருக்கும் பரவிவிடும். அதனால் மருத்துவமனையில் தாமாகவே சேர்ந்தேன். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தயவுசெய்து அருகே உள்ள மருத்துவமனைகளில் பரிசோதிக்கவும். சில நாட்கள், அதற்காக ஒதுக்கினால் நீங்கள் குடும்பத்தினருடன் சுகமாக வாழலாம். தற்போது 'நெகட்டிவ்' என அறிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பில் சிறப்பு வார்டில் காத்திருக்கிறேன்'' என பதிவிட்டிருந்தார்.