வானவில் மாயங்கள்
வானவில் மாயங்கள்
மழைக்காலம் என்றதும் அவனுக்கு நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி பாய்ந்தன. எப்போதுமே மழை வரும் சீசன் அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி தரும். வீட்டிலேயே அப்பா இருப்பார் அல்லது குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும் உன்னதமான நேரம் .அவன் அப்போதுதான் இன்ஜினியரிங் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. வீட்டிலிருந்து காலேஜ் 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தினசரி பேருந்தில் சென்று வர ஏற்பாடு. மழைக்காலம் துவங்கிவிட்டால் இவனுக்கு கொண்டாட்டாட்டம் துவங்கிவிடும். பெரிய லைப்ரரிக்கு போய் நாவல்கள் சிலவற்றை படிப்பதற்கு வாங்கி வருவான்.
அதே மழைகாலமொன்றில் தான் ஸ்ரீயின் அறிமுகமும் கிடைத்தது. ஸ்ரீ என்பது ஸ்ரீதேவியின் சுருக்கம். இவனுடைய வகுப்பில் படித்தாலும் அதிகம் பேசியதில்லை. மின்னலும் , இடியும் ஒருங்கே சேர்ந்த அந்த நாளில் தான் தஞ்சாவூரில் அவளை யதார்த்தமாக பார்த்தான். என்ன இந்த பக்கம் சுப்பு என்றாள். சுப்ரமணியன் சுருக்கம் சுப்பு. சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன் என்றான். மழை லேசாக தூறல் போட துவங்கியது . மழை வரும் போல இருக்கு நாம அப்புறம் பாக்கலாம் ஸ்ரீ . சரி என்று சொல்லிவிட்டு அவள் மாயமானாள்.இவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அவளை பற்றியும் மழை வரப்போகும் அறிகுறி பற்றியும் ஒரு கவிதையொன்றையும் எழுதினான். அவள் அந்த கல்லூரியின் ஸ்டார் பாடகி என்று பின்னாளில் தெரிந்து கொண்டான். மேடையேறி பாடக்கூடியவள் என தெரிந்ததும் இவனுடைய கவிதைக்கு பல இறக்கைகள் முளைத்தன.
அன்றைக்கு மட்டும் மழை பெய்யாதிருந்தால் ஒரு கப் காபி கிடைத்திருக்கும் அவளுடைய வீட்டுக்கும் போயிருக்கலாம் .. இவனுடைய ஊர் தஞ்சாவூரை ஒப்பிடும் போது சிறிய சிற்றூர் தான். அந்தி மழை ஒரு வித மயக்கத்தை தரவல்லது, அந்த மாதிரி ஒரு மயக்கத்தைத்தான் ஸ்ரீ இவனுக்குள் ஏற்படுத்திவிட்டிருந்தாள்.என்னப்பா இன்னும் கனவு கண்டு கொண்டு இருக்கிறாயா என கேட்டான் சுப்புவின் 5 வயது மகன் ராம். இல்லேப்பா மழை வருதான்னு பார்த்தேன் . நீ எப்போவுமே அதுக்காக மட்டும்தான் வானத்தை பார்த்துகிட்டே இருக்குறே என்றான் சிரித்துக்கொண்டே. ம்ம் மழை பெஞ்சா உனக்கும் லீவு எனக்கும் லீவு அதன் பார்க்குறேன் என்றான். அப்போ அம்மாவுக்கு? அம்மா ... அவனுடைய மனைவியும் எழுதுவதில் ஆர்வமுடையவள்தான் ஆனால் இசையில் ஆர்வம் போதாது . ஸ்ரீயை இவளோடு ஒப்பிட முடியாது ஆனால் ஸ்ரீயை போல கோவம் இவளுக்கு வந்ததில்லை. ஒரு காதலர் தின நாளில் யாரோ ஒருவர் ஸ்ரீயை ப்ரொபோஸ் செய்ய அந்த வாழ்த்து அட்டையை கிழித்து அவன் முகத்திலேயே விட்டெறிந்திருந்தாள்.
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே பாடலில் இருந்த குறியீடுகள் சுப்புவுக்கு ரொம்பவும் பிடித்தமானது. சாரல், லேசான தூறல், பிறகு மண் வாசம், பெருமழை, காற்று , புயல் என சொல்லலாம் . அத்தனையையும் ஸ்ரீயுடைய குணங்களை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ந்தான். ஸ்ரீ ஒரு மதிய இடைவெளியில் நூலகத்தில் இவனை பார்த்தாள். என்ன எப்போ பார்த்தாலும் இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க ? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கொஞ்சம் நாவல் விரும்பி படிப்பேன் காதல் நாவலா சே சே... அப்போ இல்லையா ? கணக்கு நோட்ஸ் எடுக்க வந்தீங்களா ? சரியான போர்டி இவரு என்று கூட இருந்த பெண்ணிடம் சொன்னாள். சரி வாங்க கேன்டீன்ல டீயும் , வடையும் செமையா இருக்காம் போலாம் என்றாள்.அப்பா ஸ்டாப்?என்னடா அப்பா யோசனை பண்ணிட்டு இருக்கேன்ல ..அம்மா கூப்பிடறாங்க ..நீங்க மழை வருமான்னு ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு கொஞ்சம் மொட்டை மாடியிலே காய போட்ட துணியை எடுத்துட்டு வாங்க என்றாள். மொட்டை மாடியில் சிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.காய போட்ட துணியெடுத்து வந்ததும் சூடா ஒரு டீ என்றான். ஆரம்பிச்சுட்டாருயா கவிஞர் சுப்பு என்று செல்லமாக கடிந்து கொண்டாள். சுப்பு படித்தது பொறியியல் என்றாலும் எழுத்துதான் அவனுக்கு விருப்பமாய் இருந்தது. கடைசியில் பார்ட் டைம் எழுத்தாளராகவும் பகுதி நேர எஞ்சினீராகவும் மனதை செலுத்தி வந்தான். அவனுடைய நண்பன் குமரேஷ் போன் பண்ணியிருந்தான் . என்னடா மழைகாதலா எப்படியிருக்க ? பையன் எப்படி இருக்கான் எல்லாரும் நல்லா இருக்காங்க. நேத்து ஸ்ரீயை பார்த்தேண்டா எங்கடா? சென்னைல தான் ஏதோ கச்சேரின்னு வந்திருந்தா.. ஆளே மாறிட்டா மத்தத நாளைக்கு நேர்ல நானே சொல்றேன் என போனை வைத்து விட்டான்.சுப்பு இன்ஜினியரிங் படித்த காலத்தில் அவனுடைய அப்பா அவனுக்கு ஒரு சைக்கிள் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார். பச்சை வண்ணம் கொண்டது . சிவப்பு வண்ண சீட்டும் . மஞ்சள் நிற கைப்பிடியும் கொண்டது. சுப்புவுடைய ஊரில் தேர் திருவிழா.தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்தது.ஸ்ரீ அப்பா அம்மாவோடு தேர் பார்க்க வந்திருந்தாள்.இவனை பார்த்ததும் உங்க வீடு எங்க இருக்கு என கேட்டாள். கீழ வீதியில . வாங்க சார் வீட்டுக்கு போகலாம் என்றான். இல்லேப்பா இன்னொரு தடவை வரோம் . நாங்க இப்போ இவ தோழி சுபா வீட்டுக்கு போறோம் . மழை மறுபடி வர மாதிரி இருக்கு நீ கொஞ்சம் இவளை சுபா வீட்ல சைக்கிள்ல கொண்டு போய் விட்டுடறியா என்றார். அய்யயோ அதெல்லாம் வேணாம்பா என்றாள். சும்மா போம்மா .. சரிங்க என்றான். அந்த நேரம் பார்த்து அந்த பக்கம் வந்த சுபாவின் அண்ணன் என்னமா இங்கே நிக்கறீங்க ? வா வந்து வண்டியிலே ஏறு என்று டூ வீலரை முறுக்கினான். தயக்கத்துடனே இவனை பார்த்தவாறு வண்டியில் ஏறி போனாள்.ஸ்ரீ வெளிர் நிற சுடிதார் அணிந்திருந்தாள் .
மழை லேசாக தூறல் போட துவங்கியது .போய் ரெண்டு மேட்ச் பாக்ஸ்,பிரெட் , ஒரு டஜன் வாழைப்பழம் எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுப்புவின் மனைவி கிருத்திகா.மழையில் நனைவது அவனுடைய விருப்பம் என்றாலும் அவனுடைய மகனும் அதே போல நனைவான் என்பதால் அந்த எண்ணத்தை அவனளவில் சுருக்கி கொண்டான். வா ராம் கடைக்கு போகலாம் என அழைத்தான். அவனும் சிறிய குடையை எடுத்துக்கொண்டு அப்பாவோடு சூப்பர் மார்க்கெட் போனான். சூப்பர் மார்க்கெட் அங்கிள் இருவரையும் வரவேற்றார். சுப்புவின் மனம் கரு மேகம் சூழ்ந்தது போல இருந்தது எந்நேரமும் மழை வரலாம் என்பது போல. சுப்பு ஷாப்பிங்கை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் நல்ல மழை பிடித்து விட்டது. ஒரு வழியாக நனைந்தும் , நனையாமல் வீடு வந்து சேர்ந்தார்கள்.
மின்சாரம் போய்விட்டது, இது வெறும் தொடக்கம்தான் இன்னும் நன்றாக மழை பெய்தால் எல்லோருக்கும் பயன் தருமே எனவும் நினைத்தான். வீடெங்கும் ஈர காற்று வீசியது. ஸ்ரீயை எப்படி அவனாலே மறக்க முடியாதோ அப்படித்தானே சுபாவும். சுபா வீட்டில் சுபாவுக்கு பிறந்த நாள் கொண்டாடினார்கள். அதில் கலந்து கொள்ள ஸ்ரீ வந்திருந்தாள். இவன் வீடு தேடி வந்து அவசியம் வரணும் என்று சொல்லியிருந்தாள் சுபா. ஸ்ரீ மஞ்ச நிற புடவை அணிந்து வந்திருந்தாள் . அவள் வர கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. கேக் வெட்டிய பிறகே அவள் வந்தாள். எங்கே நீங்க வரமாடீங்களோ என நெனச்சேன் என்றான். அதெப்படி சுபா பிறந்த நாளை மிஸ் பண்ணுவேன் என்றாள். இந்த முறை அவளுடைய அண்ணன் தடுக்க வில்லை. ஸ்ரீயை சைக்கிளில் சுப்பு அழைத்து சென்றான். அது அவனுடைய மறக்க முடியாத நாளாயிற்று . சுப்பு அந்த மெழுகுவர்த்தி கொஞ்சம் ஏத்தறீங்களா . இதோ ஏத்துறேன் . மெழுவர்த்தி வெளிச்சம் இன்னும் எவ்வளவோ நினைவுகள் வந்து போயின. தெளிவில்லாத நினைவுகள் ,ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கபடாத நினைவுகள். ராம் ஓடி வந்து சுப்புவை கட்டிக்கொண்டான், கதை சொல்லுப்பா என்றான். அப்பா எழுதுற நேரம் இல்லையா இது நீ தூங்கபோகும் போது கதை சொல்றேன்.. மஞ்சள் புடவையில் ஸ்ரீயுடன் எடுத்த புகைப்படத்தை தேடினான். என்ன தேடுறீங்க இருட்டிலே ? என்னோட டைரியை காணொம் என்றான். எல்லாம் கரண்ட் வந்தவுடனே பார்த்துக்கலாம். இப்படி வந்து உக்காருங்க.ஏன் எப்போ பார்த்தாலும் எதையோ நெனைச்சி கவலை படுறீங்க . அந்த செமெஸ்டரில் அவன் 3 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தான். சுப்புவின் அப்பா அவனை திட்டி தீர்த்து விட்டார். எப்போ பார்த்தாலும் நூலகம்னு சுத்துறான் ஆனா படிப்புல ஒன்னும் இல்ல அந்த செமஸ்டர் ரிசல்ட்டுக்கு பிறகு ஸ்ரீ ஏனோ இவனிடத்தில் இருந்து விலகி சென்றாள். சுபா எப்பவும் போல பழகி வந்தாள்.
மறுநாள் சாயங்காலம் குமரேஷ் வந்திருந்தான். சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் என்றான் . அன்றும் சுப்புவுக்கு பிறந்தநாள் என்பதையே சுப்பு மறந்து போயிருந்தான். சுபாவும் வந்திருந்தாள் . வாழ்த்துக்கள் சுப்பு என்றாள். இன்னொருத்தரும் வந்திருக்காங்க .. வெல்கம் ஸ்ரீ என்றான் குமரேஷ். சுப்பு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த பார்வையில் ஸ்ரீ வந்த திசையையே பார்த்துக்கொண்டிருந்தான். வாங்க ஸ்ரீ என்று தடுமாறினான். அது நேத்து நல்ல மழை அதனாலே வர முடியலே .ராமையும், கிருத்திகாவையும் அறிமுகப்படுத்தி வைத்தான். மஞ்சள் நிற புடவை கட்டி வந்திருந்தாள் ஸ்ரீ. எல்லோரும் மொட்டை மாடிக்கு போகலாம் என சொன்னார்கள் . இவன் அந்த போட்டோவை ஸ்ரீயிடம் காண்பித்தான். வாவ் என விழிகள் விரிந்தாள். கணவர் லண்டன்ல தான் இருக்கார் . இங்க நானும் என் பொண்ணும் இருக்கோம் என்றாள். மொட்டை மாடியில் சுபா கிருத்திகாவோடு பேசிக்கொண்டிருந்தாள்.ராமோடு குமரேஷ் விளையாடிக்கொண்டிருந்தான். ஸ்ரீயும் சுப்புவும் எதுவும் சொல்லாமல் வானத்தையே பார்த்த படி நின்றனர். இன்னைக்கும் மழை வருமா சுப்பு நீங்க வந்து இருக்குறதால நிச்சயமா
வரும் என்றான். என்னை மன்னிப்பீங்களா ? என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க .. மழை தூறல் போட துவங்கியது . நாம ஒரு ரவுண்டு போகலாமா ? இப்பவும் உங்ககிட்டே அந்த சைக்கிள் இருக்கா சுப்பு? ம்ம் சைக்கிளும் இல்லை அப்பாவும் இல்லை வெறும் அதோட நினைவுகள் மட்டும் இருக்கு.
வா சுப்பு என்னை பைக்கிலேயாவது கூட்டிட்டு போ என்றாள். சரி வா போகலாம் என்றான். சுப்புவின் தோளை இறுக்கமாக பிடித்து கொண்டாள். வண்டி வேகத்தை மிதப்படுத்தினான். மழை இன்னும் வேகமாக பெய்ய தொடங்கியது . இருவர் உள்ளங்களிலும் தான்.

