வானம் வியக்கும் பறவை
வானம் வியக்கும் பறவை
ரஞ்சன் காலையில் வேலைக்கு கிளம்பும்போதே மழை தூறல் போட துவங்கி இருந்தது. அதை பொருட்படுத்தாமல் அலுவலகத்துக்கு கிளம்பினான். இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை அறிக்கை சொல்லி இருந்தார்கள்.இவனுக்கு எப்போதும் இல்லாமல் அதிக பதட்டமாய் இருந்தது. கீர்த்தனா .. என்ன செய்தால் அவளுக்கு ஆறுதல் தர முடியும் என்பதிலேயே அவ்னது கவனம் இருந்தது.கீர்த்தனாவுக்கு புற்று நோய். கீர்த்தனா ரஞ்சனோடு நிச்சயமான திருமணத்தை நிறுத்திவிட்டு தான் விரும்பியவனை கை பிடிக்க வீட்டை விட்டு வெளியேறியவள் . போன வாரம் வர சொல்லி அவளுடைய கவனவன் ரஞ்சித் போன் பண்ணியிருந்தான். அவளுடைய அப்பா, அம்மா இப்பவும் வந்து பார்க்க மறுத்து விட்டார்கள்.நீங்களாவது அவசியம் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தான்.அதை நிராகரிக்காமல் இவனும் போய் பார்த்து வந்தான்.அவள் அதிகம் பேசுகிற நிலையில் இல்லை.லேசாக புன்முறுவல் பூத்தாள் . அடுத்த முறை வரும்போது மனைவியையும் அழைத்து வரும்படி சொல்லி இருந்தாள்.
எப்படியோ அலுவலகத்துக்கு வந்து விட்டான்.மழை இப்போது நன்கு பெய்ய துவங்கி விட்டது. இவன் அலுவலகம் விட்டு திரும்பி போகும் போது ஆட்டோவில்தான் போகும்படி இருக்கும். பிள்ளைகளுக்கு ஸ்கூல் லீவு விட்டு விட்டார்கள் என அவனுடைய மனைவி திவ்யா போன் பண்ணி சொல்லியிருந்தாள். என்ன இருந்தாலும் கீர்த்தனாவுடன் பழகிய கொஞ்ச நாட்களை இவனால் மறக்க முடியவில்லை. அவள் முன்பே சொல்லியிருக்கலாம். கல்யாணத்துக்கு முதல் நாள் இவனுக்கு போன் பண்ணிவிட்டு போய்விட்டாள்.
இப்போது கீர்த்தனாவை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் என்று மெசேஜ் வந்தது, கீர்த்தனாவின் கணவன் ரஞ்சித்திடம் இருந்து கால் வந்தது . என்னாச்சு என்றான் பதட்டமாக. நாளைக்கு ஆபரேஷன் பண்ணலாம்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க. நீங்க ஒரு தடவை வந்தீங்கன்னா ? நிச்சயமா வரேன் . வேலைகளில் மனம் செல்லவில்லை. திவ்யாவுக்கு போன் செய்தான். அவள் இன்று அலுவலகத்துக்கு லீவு போட்டிருந்தாள் . திவ்யா நீ பசங்கள பக்கத்து வீட்ல விட்டுட்டு தீபம் ஹாஸ்பிடலுக்கு வந்துடு. ஏன் என்ன ஆச்சு ? கீர்த்தனா ரொம்ப சீரியஸ் ஆஹ் இருக்காளாம் வா போய் பார்த்துட்டு வந்துடலாம். திவ்யா எதுவும் பேசாமல் இருந்தாள்.என்ன திவ்யா? என்றவுடன் சரி ரஞ்சன் நான் வந்துடறேன் இன்னும் ஒரு மணி நேரத்தில நான் அங்கிருப்பேன் என கூறினாள்.
அலுவலகத்தில் எப்படியோ லீவு கேட்டு வாங்கிக்கொண்டான். என்ன பேசுவது என்பதை பற்றியே அவன் மனம் சிந்தித்து கொண்டிருந்தது. அவளை புண்படுத்தும்படி எதுவும் செய்து விடக்கூடாது . அதிக துன்பம் இல்லாமல் அவள் இயல்பு நிலைக்கு திரும்பிட வேண்டும்.
மழை முட்டிக்காலுக்கும் மேலே தேங்கி ரஞ்சனால் அவனுடைய பைக்கை எடுக்க முடியவில்லை. ரஞ்சன் ஆட்டோ பிடித்த போதே மழை பெருசா வரும்போல இருக்கு பார்த்து போட்டு கொடு சார் என்றான் ஆட்டோகாரன்.சரிப்பா தரேன் . திவ்யாவுக்கு கீர்த்தனா பற்றி தெரிந்தாலும் பட்டென்று எதையும் பேசிவிடாமல் இருக்க வேண்டும். திவ்யா அவனுடைய முறைப்பெண். கல்யாணம் நின்ற போது அவள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள் .நான் கல்யாணம் பண்ணிக்குறேன் என்று இவனுடைய மானத்தை காப்பாற்றியவள். ஆட்டோ சுரங்க மேம்பாலம் அருகே நின்று விட்டது. என்னப்பா ஆச்சு இதுக்கு மேல வண்டி போகாது சார். சொன்னதை விட கூடுதலாகவே கொடுத்தான்.எங்கே இருக்கீங்க ரஞ்சன்? இதோ வந்துட்டேன்.. திவ்யா ஆட்டோ பாதியிலேயே நின்னுடுச்சு என்றான். அவங்க தவிக்கிறாங்க, என்னால பார்க்க முடியல.சீக்கிரம் வாங்க. திவ்யா கீர்த்தனாவின் குழந்தையை கேன்டீனுக்கு அழைத்து போய் சாக்லேட் வாங்கி கொடுத்தாள்.
ரஞ்சன் பேண்டை மடித்து விட்டுக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி நடந்தான். நிறைய பேர் அப்படித்தான் அந்த இடத்தை கடந்தார்கள். இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருந்தது. மழை தூறல் அதிகமாய் இருந்தது, நிற்பதாய் தெரியவில்லை.ஓடி அந்த தூரத்தை கடந்து விடலாமென தீர்மானித்தான். இன்னும் சில பேர் அவனுடன் ஓடினார்கள். ஹாஸ்பிடலுக்கு வந்து திவ்யாவுக்கு போன் பண்ணினான். இரண்டாவது தளம் 108 வது அறை.கீர்த்தனாவுக்கு இப்போதுதான் இன்ஜெக்ஷன் போடப்பட்டு அவள் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தாள். நிம்மதி பெருமூச்சு விட்டவனாக ஒன்னும் அவசரமில்லை நான் இங்கேயே இருக்கேன் என்றான். மணி மதியம் 12 ஆகியிருந்தது. திவ்யா வீட்டிலிருந்து கீர்த்தனாவுக்காக சமைத்து எடுத்து கொண்டு வந்திருந்தாள்.
மழையினை எப்போதும் நேசிப்பவன் இன்று அதன் வருகையை அறவே வெறுத்தான்.ஒரு அரைமணி நேரம் முன்னாடி வந்திருந்தால் கூட அவளுடன் ரெண்டு வார்த்தை பேசி இருக்கலாம் என நினைத்தான். சனியன் பிடித்த மழை என்று வாய்விட்டு புலம்பவும் செய்தான். திவ்யா நீ வேண்ணா வீட்டுக்கு போ நான் சாயங்காலம் வரேன் என்றான். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேன் என்றாள்.
ரஞ்சனும்,ரஞ்சித்தும் டாக்டரை பார்த்து பேசி விட்டு வந்தார்கள் 60 சதவீத வாய்ப்புகள் உயிர் பிழைக்க இருக்கு என்று சொன்னார்.திவ்யா போக மனசில்லாமல் கிளம்பினாள். ரஞ்சித்துடைய நண்பர்களும் கீர்த்தனாவுடைய நண்பர்களும் வந்து பார்த்தனர். மதியம் 3 மணி அளவில் கண்விழித்தாள். இவன் நாற்காலியில் அமர்ந்தபடி லேசாக கண் அயர்ந்து விட்டான்.ரஞ்சித் இவனை லேசாக தட்டி, அவ முழிச்சுட்டா என்றான். வாங்க, எங்க வராம போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன், இப்போதான் நிம்மதியா இருக்கு ..அருண் இங்கே வா அங்கிளுக்கு ஹாய் சொல்லு என்றாள்.அருண் விளையாடுவதில் மும்முரமாய் இருந்தான். மூச்சு வாங்கியது. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க . நான் இங்க தான் இருக்கேன் என்றான். எனக்கு பேசணும், எனக்கு உங்ககிட்டத்தான் பேசணும். ரஞ்சித் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
நீங்க மட்டும் சம்மதிக்கலேன்னா இந்த கொஞ்ச நாள் சந்தோசம் , அருண், ரஞ்சித் கூட வாழற வாய்ப்பு கூட எனக்கு கிடைச்சிருக்காது.உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க உங்க மாமா பொண்ணுன்னு சொன்னாங்க. மழை எப்படி பெய்யுது பார்த்தீங்களா ?ம்ம் என்னால அதை முழுமையா ரசிக்க கூட முடியல. தூக்கம் தூக்கமா வருது. இது ஒருவேளை சே சே அப்படியெல்லாம் இருக்காது. நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன் . போதும் கீர்த்தனா படுத்துக்கோ என்றான். சரி சரி பயப்படாதீங்க எனக்கு ஒன்னும் ஆகாது என்றாள்.
நேரம் கடந்து கொண்டிருந்தது . 9 மணிக்கு ஆபரேஷன்.ரஞ்சன் எப்படியாவது கீர்த்தனாவின் அம்மாவையாவது வரவழைத்து விடுவதென தீர்மானித்தான். அவர்கள் வீடு ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்தது. ரஞ்சித்திடம் சொல்லிவிட்டு கிளம்பினான். கீர்த்தனாவின் பெற்றோர்களை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து அழைத்து கொண்டு வந்துவிட்டான்.இப்போது மழை இல்லாதது அவனுக்கு மகிழ்ச்சியை இருந்தது. மணி சாயங்காலம் 6 .சீக்கிரமாகவே இருட்ட தொடங்கி விட்டது. ரஞ்சித்திடம் அவர்கள் எதுவும் பேசவில்லை. அவர்களுடைய பேரக்குழந்தையை கொஞ்சினார்கள். அவர்கள் அங்கேயே ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டனர்.
திவ்யாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான். நல்ல வேலை செஞ்சீங்க என்றாள் திவ்யா. ஆபரேஷன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கீர்த்தனா ரஞ்சித்தை உள்ளே அழைத்தாள். அவளுக்கு உள்ளே ஒரே புழுக்கமா இருக்காம்.சக்கர நாற்காலியில் ஜன்னலை ஒட்டி கொஞ்ச நேரம் நிறுத்த சொல்றா என்றான் . டாக்டர் கொஞ்ச நேரம் வேணும்னா இருக்கட்டும் என்றார்.சக்கர நாற்காலியில் கீர்த்தனாவை ஜன்னல் ஓரமாக நிறுத்தினான். ரஞ்சன் இங்க வாங்க காத்து எவ்ளோ வேகமா வீசுது பாத்தீங்களா?நீங்க மழையை பத்தி கவிதையெல்லாம் எழுதி இருக்கீங்களே எனக்கு ஒன்னு சொல்லுங்களேன் என்றாள்.இப்போவா?இப்பொவேதான் . மழையே நீ கொண்ட காதல் கடல் மீதா? மண் மீதா ? கடல் மீதுதான் உன் காதல் என்றால் எனை ஏன் கரைத்து சென்றாய். ? ம்ம் சூப்பர் அப்படியே என்னை பத்தியும் கவிதை சொல்லுங்களேன். இறகுகள் இல்லா பறவை நீ.நான் பறந்து திரியும் வானமே உன் மனம். எப்போதும் நீ பறக்கிறாய் .. நான் உன் இருத்தலையும், பறத்தலையும் எண்ணி வியக்கிறேன். அதை கேட்டு சிரித்தவள் அமைதியானாள்.ரஞ்சித் அவளுடைய கண்களை மெதுவாக மூடினான். மழை மறுபடி வேகமாக பெய்ய துவங்கியது .ரஞ்சன் தன் கண்ணீர் துளிகளை துடைத்துக்கொள்ள மனமில்லாமல் ஏங்கி நின்றான்.

