வாழ்வின் பிறப்புரிமை... யோகா
வாழ்வின் பிறப்புரிமை... யோகா
யோகத்தை விரும்பாதவரும் யோகாவை நெருங்காதவரும் யாரும் இருக்க முடியாது காரணம் யோகா என்பது ஒரு சடங்கோ வழிமுறையோ மதமோ அல்லது அறிவிற்கு அப்பாற்பட்டதோ அல்ல.அது மனிதனின் பிறப்புரிமை.
அதிலும் நம் இந்திய தேசம் கண்ட அக வாழ்க்கை தத்துவங்களும் அதற்கு அது அளித்த மதிப்பும் நம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததாக இருப்பது நமக்கே உரித்தான சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.
யோகாவை பலரும் அறிந்து கொண்ட முறை யாதெனின் அது ஒரு உடம்பை வளைக்கும் பயிற்சி அவ்வளவே. அதன் ஒரு தொடக்கமாகத்தான் இன்றைய காலகட்டத்தில் உலக யோகா தினத்திலும் இந்த உடம்பை வளைக்கும் பயிற்சிகளுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எல்லா உலக நாடுகளிலும்... இந்தியாவையும் சேர்த்து.
இது ஒரு வகையில் போற்றத்தக்க முயற்சி ஆயினும் யோகாவின் ஒரு அங்கம் தான் நாம் யோகா என நினைத்திருக்கும் ஆசன வகைகள்.
பதஞ்சலியார் யோகாவை எட்டு அங்கங்களாக வகைப்படுத்துகிறார் அவை : இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி என்பவை ஆகும்.
நாம் பெரும்பாலும் கருதிக் கொண்டிருக்கும் மூச்சுப் பயிற்சியும் ஆசனங்களும் யோகாவின் அங்கங்களே என்பது இப்போது புரிந்திருக்கும்.
வள்ளுவர் குறிப்பிடுவதைப் போல "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"
"மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்பவையே இயமத்தின் அடிப்படை தத்துவம்.
செயல் புரிவதற்கான வழிமுறைகள், நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய சரீர, உள சுத்திகளுக்கான நெறிமுறைகளே நியமத்தின் அடிப்படை.
இதைத்தொடர்ந்து பின் வரும் ஆசனம், பிராணாயாமம் - உடலையும் மனத்தையும் வளப்படுத்துவதற்கான முறைகளையும்,
மனத்தினை மனதினைக் கொண்டே அறிய முற்படும் கலைக்கான நுழைவு வாயிலாக தாரணையும்,
தன்னை அறியும் உணரும் பயிற்சியில் நிலைத்து நிற்கும் பேற்றுக்கு தியானம் என்றும்,
தன்னை உணர்ந்த நிலையில் சம ஆதி= சமாதி என்றும் அது நிறைவு பெறுகிறது.
இந்த ஒவ்வொரு அங்கங்களையும் நாம் இப்பொழுது விரிவாக பார்க்கப் போவதில்லை. அப்படியாயின் நாம் மேற்கொண்டு சிந்திக்கவிருப்பது... தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்...
யோகாவை ஏன் பலரும் விரும்புவதில்லை?!
1. முழுமுதற் காரணம் யோகா என்பது மனிதனின் பிறப்புரிமை என்பதை நாம் உணராததே.
2. யோகா என்பது மதம் சார்ந்த ஒன்றாக பார்க்கப்படும் கண்ணோட்டம்
3. யோகா என்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்படுவது
4. யோகா என்பது இதுதான் என்கின்ற உண்மை பலருக்கும் தெரியாதது. அதன் காரணமாகவே நாம் ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சிகளையும் யோகா எனும் பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
5. யோகா நடைமுறைக்கு சாத்தியமில்லாத இயலாத ஒன்றாக பார்க்கப்படும் நிலை.
6. யோகா தேசம் சார்ந்த ஒன்று எனும் கருத்து
7. யோகா புரியாத புதிராக சித்தரிக்கப்பட்டுள்ள நிலை
8. யோகாவும் வியாபார வளையத்துக்குள் தள்ளப்பட்டுள்ள அவலம்.
9. யோகாவின் பெயரால் நடைபெறும் சமூக குற்றங்கள்.
யோகா மனிதனின் பிறப்புரிமை... எவ்வாறு?!
"அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது" எனும் நாம் அவ்வைப் பாட்டியின் சொல்லின் ஆழத்தை ஆராய்ந்தால் இதற்கான விளக்கத்தை நாம் பெற முடியும் என நம்புகிறேன்.
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் பிறந்து வளர்ந்து பின் சந்ததிகளை விருத்தி செய்து இன்ப துன்ப உணர்ச்சிகளை அனுபவித்து இறுதியில் மரணத்தை தழுவுகிறது விதி விலக்கின்றி.
மனித இனமும் அப்படித்தான்... அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்வின் லட்சியம் இல்லை என்று கருதுவோமேயானால் யோகாவின் அவசியம் கூட சந்தேகம்தான் மனித வாழ்வில்.
ஆனால் பிற உயிரினங்களைக் காட்டிலும் அறிவிலும் தனது ஆற்றலிலும் மிஞ்சி நிற்கும் மனித சமூகத்தின் லட்சியம் "தன்னை உணர்தல்" எனும் தனிப்பெரும் பேறாகும்.
"மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே" என மனித பிறவியின் அவசியத்தை மாணிக்கவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு உயிரும் தனது புலன் அறிவிற்கு எட்டிய வகையிலேயே தனது இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. அதற்கு மேலாக உள்ள அனுபவங்களைப் பெறும் பகுத்தறிவும் மனதின் வளர்ச்சியும் மனிதனுக்கே உரித்தான சிறப்பு இயல்புகள் என்றால் அது மிகை அல்ல.
அதனால்தான் அவ்வைப் பாட்டி மானுடராய் பிறத்தல் அரிது எனப் பாடுகிறார்.
ஆனால் நடைமுறையில் நாம் காணும் மனிதனின் நிலையும் விலங்கின் நிலையும் என்ன என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை.
பரிணாம சரித்திரத்தை ஆய்ந்து பார்த்தாலும் நாம் காணப் பெறும் உண்மை "அறிவு தன்னை விரித்து செய்து கொண்டே" இருப்பதைக் காணலாம்.
யோகா என்றால் வளர்ச்சி... யோகா என்றால் எழுச்சி... யோகா என்றால் மலர்ச்சி... வளர்ச்சி அடைந்த மனித மனத்தாலும் அறிவாலும் தான் எழுச்சி கொண்டு மனித பிறப்பின் மகத்துவத்தை மலரச் செய்ய முடியும்.
அந்த ஒரு நிலை மட்டும் இல்லை என்றால் மனிதன் என்னதான் புறவுலகில் கொடி கட்டிப் பறந்தாலும் மாக்களுக்கும் மக்களுக்கும் வேறுபாடு என்பது இல்லாமல் போய்விடும். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும்
" கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் -நற்றாழ் தொழார் எனின் "
என்று பாடி நமக்கு நல்லறிவு புகட்டுகிறார்.
மனித வாழ்வின் மாபெரும் லட்சியம் "தன்னை உணர்தல்". தன்னை அறிய மயக்கத்தால் தான் இன்று மனித சமுதாயம் எதன் பின் ஓடுகிறோம் என்ற நிலை கூடத் தெரியாமல் வாழ்க்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் பெருக்கிக் கொண்டே தள்ளாட்டம் போடுகிறது.
எந்த மனிதனுக்கும் இவற்றில் இருந்து விடுதலை வேண்டும் எனும் வேட்கை இருப்பதில்லை.
எந்த மனிதனும் இந்த நிலையற்ற இன்ப துன்பங்களைக் கடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை...
எந்த மனிதனும் தனது மனதில் நீடித்த நிலையான மாறாத அமைதியையும் ஆனந்தத்தையும் பெற விரும்புவதில்லை.
ஆனால் இது ஏதோ ஓர் இரவில் நடைபெறக்கூடிய நிகழ்வு அல்ல. இந்த ஓட்டம் தொடங்கி வெகு நாட்களாகி விட்டது. நீங்களும் நானும் நமது பங்களிப்பை இப்பொழுது தொடங்கினால் தான் நாம் அடைய வேண்டிய இலக்கை அடையும் அறிவும் மன வளர்ச்சியும் படிப்படியாக வளர்ந்து நாம் நம் இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்கும் பக்குவத்தை நமக்குப் பெற்றுத் தரும்.
அதாவது முதலில் நம்மை மிருக வாழ்வில் இருந்து மனித வாழ்க்கைக்கும், பின் மனித வாழ்வில் இருந்து தெய்வீக வாழ்க்கைக்கும் செல்வதற்கான அடிப்படை அஸ்திவாரம் நன்கு அமையப்பெறும். பின் அதன் மேல் அமையவிருக்கும் கட்டிடம் எனும் வருங்கால சமுதாயமும் வளம் பெறும்.
இப்பொழுது புரிகிறதா... யோகா நமது பிறப்புரிமை என்று.
யோகா மதம் சார்ந்த ஒன்றா?!
உலகில் உள்ள அத்தனை மனித மதங்களுக்கும் யோகா பொதுவானது. எந்த ஒரு மதமாவது தனது மக்களின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் காட்டும் பாதையை தவறு என்று சொல்லி இருக்கிறதா?!
பொங்க பல சமயமெனும் நதிகளெல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் என தாயுமானவர் உலகில் உள்ள சமயங்களின் சங்கமங்களும் மேலான ஞானத்தையே சரணடைவதை உள்ளக்களிப்போடு பாடிப் பரவசமடைகிறார்.
இஸ்லாத்திலும் கிறித்துவத்திலும் புத்த ஜென மற்றும் சனாதர தர்மத்திலும் அவைகளின் அடிப்படை நோக்கம் மனித சமுதாயத்தை அந்த ஞானம் எனும் கடலினை நோக்கி அடியெடுத்து வைக்கக்கூடிய முயற்சியை முன்னெடுத்துச் செல்வதே என்றால் அது மிகையல்ல.
அவர்கள் திசையைத் தொழுதாலும், சிலுவையைச் சுமந்தாலும், சிலையைப் பணிந்தாலும் உள்முக வெட்டவெளியை நினைந்துருகினாலும் எல்லா சமர்ப்பணங்களும் எல்லாம் வல்ல அந்த சுத்த அறிவிற்கு அர்ப்பணம் ஆகின்றபோது மதங்களுக்கு இடையே என்ன வேறுபாட்டினை யார் காண முடியும்? பின் யோகா என்பது மதம் சம்பந்தப்பட்டதாக எப்படிக் கருத முடியும்?!
மேலும் ஒவ்வொரு மதமும் தெரிந்தோ தெரியாமலோ பதஞ்சலியாரின் சூத்திரத்திற்கு இணங்க எண் வகை அங்கங்களையோ அல்லது அவற்றில் சிலவற்றையோ பயன்படுத்துகின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாது. இது பதஞ்சலியார் தொகுத்து வழங்கினாரே தவிர அதன் காரணமாக இது சனாதன தர்மத்தின் கீழ் வருகிறது என யாரும் நினைத்து விட வேண்டாம். காரணம் யோகா என்பது மனித இனம் எப்போது வந்துதுதித்ததோ அப்பொழுதே அதற்கான விதையும் நடப்பட்டு விட்டது என்பதே உண்மை. இதை சொந்தம் கொண்டாடும் உரிமை மனித இனத்திற்கு ஒன்றே தவிர சில குறிப்பிட்ட மனிதர்களுக்கோ மதங்களுக்கோ இல்லை.
காலப் பெருவெளியில் வாழ்ந்த முனிவர்களும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் மகான்களும் இறைத்தூதர்களும் குருமார்களும் தாங்கள் கண்ட, அறிந்த, உணர்ந்த உண்மைகளை பல்வேறாகப் பகுத்து மனித குல மேன்மையின் பொருட்டு கொடையாக நமக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். அவர்களின் அந்தக் கருணையை, அன்பை, ஈகையை நாம் என்றும் நினைவு கூர்தலும், அவர்களைப் போற்றுதலும், நம் வாழ்வு வளம் பெறவும், நம் சந்ததிகள் நலம் பெறவும் உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
யோகா புரிந்து கொள்ள முடியாததா?!
ஆம். உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது போனால் யோகாவும் அப்படியே.
அறத்தின் வழி வாழ்.
ஒழுக்கம் பழகு.
தீவினை தவிர்.
உயிரைக் கட்டு உடலை கட்டலாம்.
பேச்சை குறை - மூச்சை கவனி.
மனத்துக்கண் மாசிலனாய் இரு.
உள்ளொளி பெருக்கு... உண்டி சுருக்கு.
தூங்காமல் தூங்கு... தூங்கிக் கழிக்காதே.
பருவத்தே பயிர் செய்.
காற்றுள்ள போதே (மூச்சு) உனைத் தூற்றிக் கொள்.
நீதான் அது- அதுவே நீ !
என விரியும் விளக்கங்கள் உங்களுக்கு புரியாமல் போக வாய்ப்பில்லை.
யோகா நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத இயலாத ஒன்றா?!
அது நடைமுறைக்கு வராததன் பொருட்டுத் தான் சமூக சிக்கல்களும் தனிமனித வாழ்வில் துயரங்களும் பெருகி வருகின்றன.
உள்ளத்தனைய உயர்வு - என்பதின் விளக்கமும் அதுவே. மனிதன் பொருள் துறையில் முன்னேறிக் கொண்டே சென்றாலும் அவனது அக வாழ்க்கைத் தரம், தரம் உயர்த்தப்படாத வரை மனித வாழ்க்கை தரம் என்பது தரமற்றதாகவே இயங்கிக் கொண்டிருக்கும்.
நம்மில் இருந்து விடியல் வெளியே வரட்டும். ஒரு நாள் அது ஒட்டுமொத்த விடியலாக மாறி இருக்கும் என்பதுதான் நிதர்சனம்."சிறு துளி பெருவெள்ளம்" என்பார்களே அதுபோல.
ஒழுக்க பழக்க வழக்கங்கள், நல் உணவு, நன்னடத்தை, நற்செயல்கள் பழகிப் பாருங்கள். அது தரும் அமைதியை அனுபவித்து மகிழுங்கள்.
தினம் ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ உங்களுக்கென்று ஒதுக்குங்கள். அது பிரார்த்தனையாகவோ, ஜெபமாகவோ, மன ஒருமைப்பாட்டிற்கான பயிற்சியாகவோ , மனமுருகிப் பாடும் பக்தி பாடல்களாகவோ, நல்ல நூல்களை ஓதுவதற்காகவோ, மூச்சுப் பயிற்சியாகவோ, புருவத்திடை நோக்கும் தியானமாகவோ அல்லது உங்களை தற்போது இருக்கும் நிலையிலிருந்து மற்றொரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லும் மனப்பயிற்சியாகவோ அது இருக்கட்டும்.
உங்களுக்கென்று ஒதுக்கிய இந்த சொற்ப நேரங்கள் உங்களின் மற்ற நேரங்களின் தரத்தை உயர்த்தும் அற்புதத்தை வெகுவிரைவில் கண்டு அதன் மகத்துவத்தை உணர்வீர்கள்.
அந்த பொன்னான நேரங்கள் ஆபத்துக் காலங்களில் உங்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் ஒரு சிறந்த அறிவுரையாகவோ,
உதவியாகவோ, நட்பாகவோ, உண்மையை உணரும் வல்லமையாகவோ, வாழ்வின் நுட்பத்தை புரிய வைக்கும் விழிப்புணர்வாகவோ, காப்பாகவோ, தைரியமாகவோ, சாமர்த்தியமாகவோ வெளிப்பட்டு வழிகாட்டும் ஆச்சரியத்தை உணரத் தொடங்குவீர்கள்.
ஆக இது சாத்தியப்பட கூடியதா, இல்லையா என்பதை நீங்களே இப்பொழுது முடிவு எடுங்கள்.
யோகா புரியாத புதிரா?!
யோகா புரியாத புதிர் அல்ல. மனித மனம் தான் புரியாத புதிர். வாழ்க்கையில் மனிதருக்கு ஏற்படும் சங்கடங்களும் கவலைகளும் எதிர்காலத்தை குறித்த அச்சங்களும் மனித வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றன.
என்றோ செய்த தீவினைகளும் அவற்றின் பதிவுகளும் மனதை நிலை தடுமாறச்செய்து மனித மனத்தை மேலும் மேலும் குப்பைகளை சேர்த்து வைக்கும் குப்பைக்கூளமாக மாற்றி நம் உடலையும் உள்ளத்தையும் துர்நாற்றம் அடையச் செய்கின்றன.
இவற்றின் வாசனைகள் நிச்சயமாக தியான பயிற்சிகளின் போதும் அடர்ந்த மௌனங்களின் போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவற்றை சாட்சி பாவத்துடன் அதாவது நம்மை அவற்றுடன் சம்பந்தமில்லாதவர்களாக பார்க்கும் மன வல்லமையை வளர்த்துக் கொண்டால் அவைகளும் ஓர் நாள் அடங்கி மனமானது நிச்சலமாகும்(அசைவற்ற நிலை). அதுவரை ஓயாத பயிற்சியும் முயற்சியும் அவசியம். இதில் எத்தனை முறை விழுந்தோம் என்பதில் அல்ல வாழ்க்கை... நாம் எத்தனை முறை எழுந்தோம் என்பதில்தான் அதன் வெற்றி கணிக்கப்படுகிறது.
மேலும் மனதை மூடி இருக்கும் திரைகள் ஒவ்வொன்றாக அவிழ அவிழ மனதின் அடித்தளம் தெள்ளிய நீராக களங்கம் இல்லாத குளமாக ஞானத்தினை பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறிக்கொண்டு வரும். அதன் உச்சமாக குளமும் மறைந்து அந்தப் பிரதி பிம்பமும் மறைந்து அந்த ஞானமே நான் எனும் இரண்டற்ற நிலை கைகூடும்.
எதனை உணர்ந்தால் எல்லாம் உணர்ந்ததாக உணரப்படுமோ எதனை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாக அறியப்படுமோ அந்த மேலான ஞானம் கைவரப்பெறும். இதனையே "தன்னை உணர்தல்" என்று பெரியோர் நவிழுகின்றனர்.
இதற்கும் மேலாக மனித உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் சுத்த ஒளி அணுக்களாக மாற்றி ஒளி உடம்பு பெறும் மனிதனின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியும் யோகாவின் இலக்காகும். அப்பொழுது மனித இனம்"அதி மனித இனமாக" மாறி இருக்கும்.
யோகா வியாபாரமாக்கப்பட்டுள்ளதா?!
தன்னை உணர்ந்த ஞானியின் தாள் பணிய யோகத்தின் பாதை புலனாகிறது.
அவரின் வழிகாட்டுதல் திக்குத் தெரியாமல் பயணிக்கும் பயணிக்கு வழி தெரிந்த வழிகாட்டியின் சிறந்த தேர்ந்த அனுபவம் பயன் சேர்க்கிறது. இதன் மூலம் சென்று சேர வேண்டிய இலக்கை அடையும் நேரம் துரிதமாகிறது. அத்துடன் பயமின்றி பயணம் செய்யும் தைரியமும் துணிவும் ஏற்படுகிறது.
ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு இதில் என்னவென்றால் அவர் அவர்களின் இலக்கை அவரவரே அடைய வேண்டும் என்பதே அது. அதாவது குருவானவர் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நம்மை கொண்டு சென்றாலும் சாதகனின் தளராத முயற்சி வைராக்கியம் இவைகளே அவனின் இலக்கை அடைய பெரிதும் துணை புரியும்.
நாம் முன்னம் கூறியது போல் அவர்களை (குருமார்களை) நம் வாழ்நாள் முழுவதும் நன்றி கூறுதல் நம் கடமையும் அறமும் ஆகும். ஆனால் அவர்களே கதி என்று நினைத்து குறுக்கு வழியில் மோட்சம் கிடைக்காதா ? முக்தி அடைவோமா என்றால் "குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தனரே" எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க படுகுழியில் விழ வேண்டியதுதான்.
இதனை அறியா மக்களை தங்களின் வள நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் புல்லுருவிகள் பல தேசமெங்கும் விரிந்து கிடப்பது நாம் நம் முன்னோர்களை அவர்களின் வார்த்தைகளை மதிக்கத் தவறியது தானோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
எங்கே ஞானம் விற்கப்படுகிறதோ அங்கே விழித்திருங்கள்.
எங்கே சொர்க்கம் காண்பிக்கப்படும் எனும் அரைகூவல் விடுக்கப்படுகிறதோ அங்கே ஜாக்கிரதையாக இருங்கள்.
எங்கே இறைவனின் பெயரால் மனித குலத்தின் அமைதி சூறையாடப்படுகிறதோ அங்கே கூடு வதை தவிருங்கள்.
எங்கே ராசலீலை எனும் பெயரில் யோக விளையாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறதோ கட்டுப்பாட்டை கைக்கொள்ளுங்கள்.
எங்கே வசதி படைத்தோருக்கு சலுகைகளும், வசதியற்றவருக்கு ஒன்றும் இல்லையோ அங்கே போவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
எங்கே ஒவ்வொரு நிலைக்கும் இத்தனை கட்டணம் என்று கூசாமல் வணிகம் செய்கின்றனரோ அங்கே போவதைத் தவிருங்கள்.
வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் குறைந்தபட்சம் அந்தத் தகவல்களை நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதுவே கதி என்று மூழ்கி விடாதீர்கள். முடிந்தால் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள்.
உங்களுக்கென்று யாருமே கிடைக்கவில்லை என்றால் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை. அமைதியாக முறையாக உங்களின் கடமைகளை ஆற்றிக் கொண்டே வாருங்கள். உங்களுக்கான குரு உங்களைத் தேடி வருவார்.
"ஐயப் படாது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்"
எனும் வள்ளுவர் வாழ்க்கை பொன்வாக்காகக் கொண்டு யோகத்தின் சாரமும் அதுவே எனும் உண்மையைத் தேர்கிறோம்.
யோகா பயிற்சி அல்ல... மதம் சார்ந்ததல்ல... அது நம் அன்றாட வாழ்வின் நடைமுறை... மற்றும் அதுவே நமது வாழ்வின் பிறப்புரிமை .
நன்றியுடன்,
மனோஹரன் கேசவன் (MK)
