STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

4  

Manoharan Kesavan

Inspirational

கரையும் அணுக்களும் – கரையாத அணுக்களும்

கரையும் அணுக்களும் – கரையாத அணுக்களும்

10 mins
36


ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,

 அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி,

மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,

 மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து,

 பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்

 பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,

 நீதிநெறி உணர் மாந்தராகி, வாழும்

 நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம் - வேதாத்திரி மகரிஷி

மனித குலத் தோன்றலுக்கு முன்னமாக ஐந்தறிவு நான்கறிவு மூவறிவு ஈரறிவு ஓரறிவு என பரிணாம வளர்ச்சியில் பல உயிர்கள் பரிணமித்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இதனையே தொல்காப்பியம்

ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே,

 

 இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே,

 

 மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே,

 

 நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே,

 

 ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே,

ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே,

 

 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.' … என எடுத்துரைக்கிறது .

ஓரறிவுக்கும் முன்னம் ஆங்கே பஞ்ச பூதங்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் அல்லவா ?! அதாவது நிலம் நீர் நெருப்பு காற்று விண் என்று சொல்லப்படுபவை .

இந்த பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் பஞ்சீகரணம் எனும் செயல்பாட்டால் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிறப்பெடுக்கச் செய்தது என்கின்ற குறிப்பை வித்யாரண்யர் எழுதிய பஞ்சதசீ எனும் வேதாந்த சாத்திர நூலில் (1. 27) காணப்பெறுகிறது. அதாவது ,

· ஆகாயம் எனும் சட பூதத்தில் ஒலியின் தன்மை (சப்தம்) கொண்டுள்ளது.

· ஆகாயம் எனும் பூதத்திலிருந்து தோன்றிய காற்று எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான ஊறு (தொடு உணர்வு) என்ற தன்மையுடன் ஆகாயத்தின் சுய தன்மையான ஒலி எனும் தன்மையுடன் இரண்டு தன்மைகளை கொண்டிருக்கிறது.

· காற்று எனும் பூதத்திலிருந்து தோன்றிய நெருப்பு எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான ஒளியுடன், ஆகாயத்தின் தன்மையான ஒலி மற்றும் காற்றின் தன்மையான ஊறு (தொடு உணர்வு) மூன்று தன்மைகள் கொண்டுள்ளது.

· நெருப்பு எனும் பூதத்திலிருந்து தோன்றிய நீர் எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான சுவையுடன், ஆகாய பூதத்தின் ஒலி, காற்று எனும் பூதத்தின் ஊறு, நெருப்பு எனும் பூதத்தின் வடிவம் எனும் நான்கு தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

· நீர் எனும் பூதத்திலிருந்து தோன்றிய பூமி எனும் சட பூதத்தில், தன் சுய தன்மையான மணமும், நீரின் சுவையும், நெருப்பின் வடிவத்தையும், காற்றின் தொடு உணர்வு (ஸ்பர்சம்), ஆகாயத்தின் ஒலி ஆகிய ஐந்து தன்மைகளை கொண்டுள்ளது.

ஆக தோற்றங்களுக்கு எல்லாம் மூல வாயிலாக ஆகாயத் தத்துவம் உள்ளதை அறியமுடிகிறது .அந்த ஆகாயத்திற்கும் தோற்றுவாயாக அணு என்கின்ற தத்துவம் இருப்பதை இன்றைய அறிவியல் நமக்கு உணர்த்துகிறது.

இப்பொழுது அணு என்கின்ற தத்துவமே அனைத்துக்கும் காரண கர்த்தாவா என ஆராய முற்படும் போது அறிவியலானது கடவுள் துகள் (GOD PARTICLE) என்பதை அணுவுக்கும் முந்தைய நிலையாக கொண்டு இன்றைய கால கட்டத்தில் ஆய்ந்து வருகிறது .இதனையே formative dust particle அதாவது பரமாணு என வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுவார் .

பரமாணு எனும் சொல்லானது ஹயக்கிரீவர் அகத்தியருக்கு பிரம்மாண்ட புராணத்தில் உபதேசித்த லலிதா சகஸ்ரநாமத்தில் காணப் பெறுகிறது எனும் செய்தி நம்மில் எத்தனை பேர் அறிவர் ?! அத்தகு விசாலமான அறிவை கொண்டது தான் நம் சனாதன தர்மம் .

இந்த பரமாணுவே அணுவாகி,பஞ்ச பூதங்களாகி, பின் அவற்றின் சேர்க்கை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அண்ட சராசரங்களாகி , அவற்றுள் ஒன்றான பூமியாகி ஆங்கே உயிர் தோன்றலாகி இப்பொழுது நீயுமாகி நானுமாகி நிற்கிறோம் .

அணுக்கள் சேர்ந்தியங்கும் எல்லையற்ற கூட்டின் வெளிப்பாடு தான் நீயும் நானும் இந்த பிரபஞ்சமும் .

The different composition of atoms in infinite ways is what we are observing as Cosmos or the Universe.

சரி அப்படியானால் அதற்க்கும் (பரமாணுவுக்கும் அணுவுக்கும் ) முந்தைய நிலை யாதோ ?!அதனையே , சுத்தவெளி ,சக்திகளம் , சிவகளம் , வெட்டவெளி, ஆற்றல் களம் , பைரவம் என பலவாறு எடுத்துரைத்துள்ளனர்.

பின் ஏன் அது பரமாணுவாக மாறியது ? இதற்க்கு விடையாக வருகிறது பின்வரும் பாடல் ,

அழுத்தமெனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே,

அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி

 வழுத்துமோர் அறிவுமுதல் ஐந்தும் ஆறும்

 வகைவகையாம் உயிரினங்கள் தோற்று வித்து,

 முழுத்திறனுடன் காத்து, முடிக்கும் மேலாம்

 பழுத்தநிலை வரும்வரையில் "நீ, நான்" என்போம்

 முழுமுதற் பொருளே நம்மறிவாய் ஆற்றும்

 பதமடைந்தோம்; ஒன்றானோம்; பரமானந்தம். ...வேதாத்திரி மகரிஷி

அந்த சுத்தவெளி அல்லது பரம் பொருள் எனும் தன்மை தன்னில் தன்னை வெளிக்கொணர தன்னையே சூழ்ந்தழுத்த தாயானவள் எப்படி பிரசவிப்பாளோ அதுபோல ஒரு நிகழ்வு தான் பரமாணுவின் தோற்றம்(God Particle) .இதனையே பிரஹ்மன் என்றும் தோற்றங்களை எல்லாம் தோற்றுவிப்பவன் என்றும் கூறினர் நம் முன்னோர்கள் .

அதாவது அதை இப்படி வரிசைப்படுத்தி பார்க்கலாம் ,

1) ஆற்றல் களம் அல்லது பெருவெளி (State of Supreme Energy) .அது உள்ளடக்கிய வற்றாயிருப்பு , பேராற்றல், பேரறிவு , காலம் .

2) பரமாணு (God Particle or formative dust particle)

3) அணு (Atom)

4) ஆகாயம் முதலான பஞ்ச பூதங்கள் (Formation of Five Elements)

5) ஒரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினத் தோற்றம் மற்றும் இந்த விரிந்து வரும் பிரபஞ்சம் (The Universe and its living Kingdom)

அந்த பரம்பொருள் தன்னை அறிய தன்னையே வெளிக்கொணர்ந்து ஆடுகின்ற ஆட்டம் தான் நட-ராஜ நர்த்தனம் ...அந்த ராஜனின் பரம்பொருளின் நடனமே அதாவது எண்ணிலடங்கா அதன் கூட்டியக்கமே இந்த பிரபஞ்சம் , அந்த ஆட்டத்தின் ஆகச்சிறந்த வெளிப்பாடு தான் மனித இனம் ...தன்னையே உணர தன்னையே அறிய தான் எடுத்த அவதாரம் .எப்பொழுது மனிதன் தனது அகங்காரத்தை அதன் காலடியில் சமர்ப்பிக்கின்றானோ அப்பொழுது தான் இறை அவனை ஆட்கொள்ளும் என்பது தான் நடராஜர் உருவம் நமக்குணர்த்தும் உண்மைச் செய்தி.

The Cosmic Dance in the formation of God particle and then the subsequent manifestations in infinite forms is a continuous journey and in which the form of human being is the ultimate to know about the SELF.

திருமூலர் இதனையே ,

தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை

 தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்

 தன்னை யறியும் அறிவை அறிந்தபின்

 தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே எனப் பாடுகின்றார்.

தன்னை அறிதல் என்பது ஏன் அவ்வளவு எளிதாக இல்லை ? புத்தரும் ,மகாவீரரும்,ஆதிசங்கரரும், வள்ளலாரும்,மாணிக்கவாசகரும் , ஆண்டாளும், ரமணரும், அரவிந்தர் , அன்னையும், மகா அவதார் பாபாஜியும் தேடிக் கண்டார்கள் அதனை , ஆனால் நமக்கு மட்டும் ஏன் அது எட்டாக் கனியாக ?!

காரணம், தான் சேகரித்துள்ள வினைவிளைவு பெட்டகமும், தான் தனது எனும் அகங்கார மமகாரமும் மேலும் இந்த உலகியல் சார்ந்த விருப்பங்களுமே என்றால் அது மிகை அல்ல.

வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானொழிந்தால்

தினைப்போ தளவும்நில் லாதுகண் டாய்சிவன் பாதம்நினை

நினைப்போரை மேவு நினையாரை நீங்கிஇந் நெறியினின்றால்

உனைப்போல் ஒருவருண் டோமன மேயெனக் குற்றவரே – பட்டினத்தார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே – மாணிக்கவாசகர்

சரி , இந்த வினை விளைவுப் பெட்டகம் எங்கே உள்ளது ? அதனையே கருமையம் எனக் குறிப்பிடுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள் .

மனித உடலை ஸ்தூல தேகம் , சூக்கும தேகம் , காரண தேகம் என்றும் , அன்னமய,பிராணமய,மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்கள் என்றும் வகைப்படுத்தலாம் .

நாம் அனைவரும் அணுவின் கூட்டமைப்பு என்பதில் எந்த சந்தேககமில்லை அல்லவா. இந்த கூட்டமைப்பை ஒரு கட்டிடமாகக்(Building) கொண்டால் (அதாவது கை கால் முகம் தேகம் இந்திரியங்கள் முதலானவை) அந்த கட்டிடத்தின் அஸ்திவாரமான பரமாணு (Basement) புலன்களுக்கு தெரியாத வகையில் (Intangible) மறைந்துள்ளது சூக்குமமாய் (formless).

(The projection of body is situated on the grounds of God particle that become the basement of the building)

இந்த பரமாணுவின் மையத்தில் தான் அந்த கருமையம் அமைந்துள்ளது .அங்கு தான் சித்திர குப்தன் (Unknown form) நமது நல்-தீ-வினைகளை யாருக்கும் அறியா வண்ணம் அலை வடிவில் சுருக்கி பதியவைக்கிறான்.இந்த வடிவமைப்பு மூலாதாரம் , ஸ்வாதிஷ்டானம் , மணிபூரகம் , அநாகதம் , விசுக்தி, ஆக்கினை, துரியம் எனும் ஆற்றல் மையங்களின் துணையோடு அதாவது ஏழு சக்கரங்களின் மூலமாக தனது இருப்பில் (memory) பதியவைத்துக் கொள்கிறது .

ஒருவர் நிலத்தாலும் , நீரினாலும், நெருப்பினாலும், காற்றாலும், ஆகாய தத்துவத்தாலும்,எண்ணத்தாலும், நுண்மாண் நுழைபுலன் அறிவினாலும் எதை எண்ணினாலும் சொன்னாலும் செய்தாலும் அவை யாவும் பரமாணுவின் மையப் பகுதியில் சேகரமாகிவிடும்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்;

கண்காணி இல்லா இடமுமில்லை, காணுங்கால்;

கண்காணியாக கலந்தெங்கு நின்றானை;

கண்காணி கண்டார் கலவொழிந்தாரே. - திருமூலர்

ஒருவர் எந்த ஆற்றல் மையத்தில் அழுத்தமாக செயல்புரிகிறாரோ அதன் தன்மைகள் தான் அவரிடம் விஞ்சி காணப் பெறும். தான் தனது எனும் அகங்காரம் நிலத்தின் மையமான மூலாதாரத்தை குறிப்பிடும் .இவர்கள் மிகவும் பொருள் பற்று நிறைந்தவர்களாக வலம் வருவார்கள் அதைப்போலே பிற மையங்களும் அதன் தன்மைகளும் .

எந்த ஒன்று தடையாக இருக்கின்றதோ அந்த ஒன்றே ஏணிப்படியாகவும் உள்ளது நம் உடலில்.

நிலம் கடந்து

நீரில் நீந்தி

நெருப்பில் கரைசேர்ந்து

காற்றில் தவழ்ந்து

விண்ணில் நிறைந்து

அறிவில் உயர்ந்து

ஆனந்தம் உணரவும்

அதே ஆற்றல் மையங்கள் தான் உதவி புரிகின்றன .உச்சியில் உள்ள சக்கரத்தின் வாயிலாக பிரபஞ்சத்தோடு ஒன்றிக் கலக்கும்போது தன்னை உணரும் பேறு சாத்தியமாகிறது .அந்த பிரபஞ்ச இறைசக்தி பரமாணுவின் மையமான கருமையத்தில் ஊடுருவும் போது எப்படி பூதக் கண்ணாடியின் வழியே வரும் சூரியஒளி பஞ்சினை பொசுக்குகிறதோ அதைப் போல அங்கே சேகரமாயிருக்கும் வினைப்பதிவுகளும் பொசிங்கிப் போகிறது .

இதைத் தான் திருப்பாவையில் ,

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

 போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

 தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். – ஸ்ரீ ஆண்டாள்

தீயினில் தூசானது எப்படி பொசிங்கிப் போகிறதோ அதைப் போல முன்செய்த வினைகளும் (சஞ்சிதம்) பிறப்பெடுத்த பின் செய்த வினைகளும்(பிராரப்தம் ) அதன் விளைவாக வரும் வினைவுகளும் (ஆகாம்யம்) தன்னை உணரும் பேற்றினால் நசுங்கிவிடுகிறது என்பது இதன் பொருளாம் .

இதற்கு உதாரணம் ,எப்படி மிகவும் சின்னஞ் சிறிய மெமரி (memory card) கார்டில் டெரா பைட்(tera byte) அளவு விஷயங்கள் சேகரமாகிறதோ அதைப் போல .

அதை ரீஃபார்மட் (Reformat) செய்கின்றபோது எப்படி எல்லாம் அழிந்து போகின்றதோ அது போலத்தான் தன்னை உணர்கின்ற பேறும்.

ஆக நம்முடைய நல்தீவினைகளின் பதிவுகள் இருக்கின்றவரை நாமும் பல்வேறு பிறப்பெடுத்து தன்னை உணரும் பேற்றை அடைகின்றவரை பிறப்பு இறப்பு எனும் சாகரம் தொடர்ந்து நடைபெறுகின்றது .

இதற்கு காரணம் அந்த பதிவுகள் பரமாணுவின் மையத்தில் இருப்பாக உள்ளது .அதன் காரணமாக நாம் நம்முடைய மூல உருவமான அருவத்தை (ஆற்றல் வடிவம் எனக் கொள்ளலாம் ) பரம்பொருள் வடிவத்தை அடைய முடியாமல் மீண்டு மீண்டும் பிறப்பெடுக்கிறோம் .இந்த தன்மை உடைய பரமாணுக்களைத் தான் கரையாத அணுக்கள் என்று அழைக்கிறோம் .

Insoluble Atoms are nothing but the combination of God particle with Karmas which is stored within.

மறுபிறப்புக்கு உதாரணமாக எத்தனையோ நிகழ்வுகளை காண்கிறோம் . பூர்வ ஜென்ம தாய் தந்தையரை, குடும்ப உறவுகளை அடையாளம் காணுதல் ,அளப்பரிய நினைவாற்றல் திறன் , சிறு வயதிலேயே உள்ள அளப்பரிய ஆக்கச் சக்தி முதலானவை இதற்கு அடையாளங்களே .

எந்த மனிதன் தன்னை உணரும் பேறு பெறுகின்றானோ அவன் அந்த கருமையப் பதிவுகளை ரீஃபார்மட் (Reformat) செய்வதன் மூலம் மீண்டு மீண்டும் பிறப்பெடுக்க காரணமாயிருந்த ஒன்றை அழித்ததன் மூலம் அவன் தன்னுடைய மூலமான பரம்பொருளில் (அரூப ரூபத்தில் ) கரைந்து விடுகிறான் , இதனையே முக்தி என்றும் மோக்ஷம் என்றும் சமாதி என்றும் கரையும் அணுக்கள் என்றும் அழைக்கிறோம் .

Soluble Atoms are nothing but the Atoms which are freed from Karmas.

இதற்க்கும் ஒரு படி மேலே, ரீஃபார்மட் (Reformat) செய்ததின் பின்னர் அந்த பரமாணுவின் மையத்தில் அதன் ஆற்றலையே உட்புகுத்தி என்றும் அழியாத அணுக்களாக மாறுகின்ற வித்தையும் நம் சனாதன தர்மத்தில் உண்டு . இதைத்தான் சிரஞ்சீவிகள், அமிர்தம் பருகியவர்கள் – அழிவற்றவர்கள் (தேவர்கள்) எனக் குறிக்கிறோம் . இவர்கள் தாங்கள் நினைக்கும் போது தங்களை அந்த பரம்பொருளோடு ஐக்கியப் படுத்திக் கொள்வார்கள் அதே சமயம் வேண்டுமென்ற உருவத்தை, உருவங்களை உருவாக்கவும் அழித்துக்கொள்ளவும் முடியும் .அவதாரங்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு .

Regenerative Atoms are the one which stores the Supreme Energy within.

The empty chip is nothing but the Paramaanu (God Particle or Formative Dust Particle) empowered with Life within and the imprints stored makes the Paramaanu to take many births so called as Karaiyaatha Anukkal (InSoluble Atoms) until it realizes the Self (Soluble Atoms) it becomes one with the Supreme Energy, and the Self realized Paramaanu empowered with Supreme Energy within is so called as Azhiyaatha Anukkal (Regenerative Atoms).

எப்படி ஒரு பலூனானது தனது கட்டப்பட்ட கயிற்றிலிருந்து விடுபட்டவுடன் மேல் எழும்பிப் பறக்கிறதோ சுதந்திரமாக , அதைப் போலத்தான் தன்னை உணர்ந்த பரமாணுவும் தனது உடம்பு எனும் சிறையிலிருந்து மரணம் நேரும்போது கட்டிலிருந்து விடுபட்டு தனது சுயத்தோடு ஒன்றுகிறது . வைகுண்டப் பதவி , சிவலோகப் பிராப்தி என்பது இதுவே.

இதற்கு மாறாக இப்போது பலூனுக்கு கீழே ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட பொருள் கட்டப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம் . இப்போது என்ன

நடக்கும் ?! பலூனுக்கு கீழே கட்டப்பட்டுள்ள எடையின் அளவைப் பொறுத்து பலூனானது பூமியின் தரைப் பகுதியிலிருந்து ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்தில் சென்று நிலைபெறும் அல்லவா ?! அவ்வாறே பரமாணு எனும் பலூனோடு தொடர்புடைய கருமையப் பதிவுகளின் அளவினுக்கு ஒப்ப அது உடம்பு உதிர்த்தவுடன் வெவ்வேறு லோகங்களை சென்று சேர்கிறது .தன்னுடைய கருமையத்திற்கு ஒப்ப காலம் வரும் வரை காத்திருந்து மீண்டும் அது பிறப்பு எடுக்கிறது என்பதை நமது கட உபநிஷதம் எனும் நூல் நமக்கு எடுத்துரைக்கிறது .நமது முன்னோர் இதனையே ஈரெழு பதினான்கு லோகங்கள் என குறிப்பால் உணர்த்தினர். அவையாவன :

7. சத்யலோகம்

  6. தபோலோகம்

  5. ஜனோலோகம்

  4. மஹர்லோகம்

  3. சுவர்லோகம்

  2. புவர்லோகம்

 ↑ மேல் உலகங்கள் ஏழு

1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகு

கீழ் உலகங்கள் ஏழு

1. அதலலோகம்

2. விதலலோகம்

3. சுதலலோகம்

4. தலாதலலோகம்

5. மகாதலலோகம்

6. ரஸாதலலோகம்

7. பாதாளலோகம்

ஆத்மா,மறுபிறவி, பிறப்பு-இறப்பு, சரீரம், பூதம் ஆவி பற்றி ஓஷோ அவர்கள் கூறுவதை கவனியுங்கள் ....

_________________________________________

உலகில் பலவகைப்பட்ட ஜனங்கள் உள்ளனர் சாதாரண ஜனங்கள் நல்ல குணமும் கெட்ட குணமும் கலந்தவர்களாக உள்ளனர்.

அசாதாரண ஜனங்கள், ஒன்று மிக கெட்டவர்களாக உள்ளனர் அல்லது மிகவும் நல்லவர்களாக உள்ளனர்.

நல்லவர்களும் அல்லர். கெட்டவர்களும் அல்லர் இரண்டும் அற்றவர் மூன்றாவது ஒரு பிரிவு, இவர்களுக்கு பெயர் கொடுப்பது சிரமம்.

நான்காவதாக நல்லது கெட்டது இரண்டையும் சரிசமமாகப் பாவிப்பவர்கள்.

இந்த மூன்றாவது நான்காவது பிரிவு ஜனங்களுடைய ஜன்ம யாத்திரை முடிவடைந்து விடும். அவர்களைப் பற்றிப் பிறகு பேசலாம்.

முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் ஜன்ம யாத்திரை தீவிரமாக நடக்கும்.

முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள், நல்லது கெட்டது இரண்டும் சேர்ந்து உள்ளவர்கள். ஒரு சமயம் நல்லவர்களாக, ஒரு சமயம் கெட்டவர்களாக நல்ல குணத்திலும் சில கெட்டவை. கெட்டதிலும் சில நல்லவை. எல்லாம் கலந்த நிலை. நிர்ணய சுபாவம் அல்ல. நிச்சயமற்ற தன்மை. இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருப் பவர்கள். இவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு உடனே பிறவி கிடைத்து விடுகிறது. இவர்களுக்காகத் தயாராகக் கர்ப்பங்கள் உலக முழுவதும் தயாராகிக் கொண்டேயிருக்கின்றன.

எல்லா இடத்திலும் உள்ளது. இவர்களது தேவை அசாதாரணமானதல்ல. அவர்கள் வேண்டுவது சர்வ சாதாரணமாக தனித்தன்மை, எங்கே வேண்டுமா னாலும் கிடைக்கும். இப்படிப்பட்டவர்கள் ஆவியாவதில்லை. இவர்கள் உடனே புதிய சரீரம் எடுத்து விடுவார்கள். மிகவும் நல்லவர்களும், மிகவும் கெட்டவர்களும் அதிக காலம் தங்க நேருகிறது. மரணத்திற்குப் பின்! அவர்களுக்குத் தேவையான கர்ப்பம் கிடைப்பது சிரமமாக உள்ளது.

நான் முன்பே கூறியபடி ஆல்பெர்ட் ஷ்வெய்ஜர், காந்தி அல்லது ஹிட்லர், செங்கிஸ்கான், ஸ்டாலின் போன்றவர்களுக்கு மரணத்திற்குப் பின் புதிய பிறவி எடுக்க அதிக நாளாகிறது. தகுந்த கர்ப்பம் கிடைப்பது அரிதாக இருக்கிறது.

மிக நல்ல அல்லது மிகக் கெட்ட ஆத்மாக்கள், மிகச் சிறந்து விளங்கும் எண்ணத்தையே வாழ்க்கையில் பின்பற்றி வந்தவர்கள், கர்ப்பத்திற்காகக் காத்திருக்க நேருகிறது.

இதில் கெட்ட ஆத்மாக்களையே நாம் பூதம், ஆவி என்கிறோம். நல்ல ஆத்மாக்களைத் தேவதைகள் என்கிறோம். இவை பல காலம் காத்திருக்கின்றன. பல முறைகள் இவ்வாறு நேருகிறது. நமது பூமியில் ஆயிரக் கணக்கான வருஷங்கள் ஆன பின்னும் சில ஆத்மாக்கள் நின்று விடுகின்றன.

இவை பிற சரீரங்களில் புக முடியுமா என்று கேட்டால், முடியும்.

ஒவ்வொரு சரீரத்திலும் எவ்வளவு சங்கல்பங்களாலான ஆத்மா இருக்கிறதோ, அவ்வளவு காலி இடம் இருப்பதில்லை. எவ்வளவு ‘வில் பவர்' மனோசக்தி நிறைந்த ஆத்மா இருக்கிறதோ, அதே அளவில் அவன் உடலில் வெற்றிடம் இருப்பதில்லை. மற்றொரு ஆத்மா பிரவேசித்து இருக்க.

எவ்வளவு குறைவான சங்கல்பங்கள் உள்ளனவோ, அவ்வளவு அதிகமான வெற்றிடம் உள்ளது, சரீரங்களில். நாம் நிச்சயமான விருப்பங்களால் நிறையும் போது விரிவடைகிறோம். விருப்பங்கள் பரவுகின்றன. நிச்சயமான விருப்பங்கள் அற்று இருக்கும் போது நாம் சுருங்கி விடுகிறோம். முற்றிலும் சுருங்குவதும், விரிவதுமான இந்தச் சம்பவம் உள்ளுக் குள்ளேயே நிகழ்கிறது

நாம் பலவீனமாகும் போது, பீதியடையும் போது, பயப்படும்போது, சுய நிந்தனைக்குள்ளாகும் போது, தன்னம்பிக்கையற்றுப் போகும்போது, தன்னைப் பற்றிய சிந்தனை யற்றுப் போகும் போது, தன்னைப் பற்றி ஏமாற்ற மடையும்போது, நமக்குள்ளே இருக்கும் சூட்சும சரீரம் சுருங்குகிறது.

அப்போது நமது சரீரத்தில் மற்றொரு ஆத்மா பிரவேசிக்கும் அளவுக்கு அதில் இடம் ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் இடம் கொடுக்காதீர்கள்.

அனேகமாக நல்ல ஆத்மாக்கள் மற்ற சரீரத்தில் பிரவேசிப்பதில்லை. அதற்குக் காரணம் உண்டு. நல்ல ஆத்மாக்கள், வாழ்நாளில் இந்திரிய சுகங்களிலிருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவை. நல்ல ஆத்மாக்கள் சரீரத்திலிருந்தே விடுபடும்.

ஆத்மாக்களுடைய வாழ்நாளின் எல்லா அனுபவங்களும் சரீர சுக முயற்சியில் இருந்தன என்று கூடச் சொல்லலாம்.

ஆனால் கெட்ட அனுபவங்களாகவே இருக்கும். கெட்ட ஆத்மாக்கள் சரீரத்தை விட்டு வெளியேறிய பின், புதிய சரீரம் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றன. சஞ்சலம் அதிகமாக இருக்கிறது. தனக்கான சரீரம் கிடைக்கவில்லை. தகுந்த கர்ப்பம் நிர்மாணம் ஆகவில்லை. இந்திரிய சுகங்களைக் கிரகிக்க முயற்சிக்கின்றன. எங்காவது, ஆனால் அவை யாருடைய சரீரத்திலாவது ஏறிக் கொண்டு, பலவீனமான சங்கல்பங்கள் கொண்ட மனிதன் கிடைத்தால், அவனிடம் ஆவிகள் பிரவேசிக்க முடியும்.

இதனால்தான் ஆண்களை விடப் பெண்களின் மேல் ஆவிகள் பிரவேசிப்பது அதிக அளவில் உள்ளது.

பெண்களை இதுவரை நாம் நிச்சய புத்தியுள்ளவர்களாக ஆக்க முடியவில்லை. இதற்குப் பொறுப்பு ஆண்கள்தான். ஏனெனில் பெண்களுடைய புத்தியை அழிக்கும் முயற்சியிலேயே ஆண்கள் நிரந்தரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

ஏனென்றால் யாரை அடிமையாக வைத்திருக்க வேண்டுமோ, அவர்களது விருப்பங்களை முடமாக்க நேருகிறது. அதனால் பெண்களது விருப்பங்களை ஆயிரக்கணக் கான வருஷங்களாக ஒடுக்கியே வந்திருக்கிறோம். மதச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பெண்ணின் மன விருத்தியில் பயங்கரமாகத் தடை முறைகள் செய்து, அவர்களைப் பயப்படுத்தும் முயற்சி, பீதி கொள்ளச் செய்யும் முயற்சியில் தீவிரமாக இருந்து வருகின்றன. ஏனெனில்,

ஆண்களின் கௌரவம், பெண்களின் பயந்து நடுங்குவதையே சார்ந்திருக்கிறது!

பெண்களிடம் ஆவிகள் பிரவேசிக்கச் சாத்தியம் அதிகம். பத்து சதவிகிதம் ஆண்கள் பீடிக்கப்பட்டால் தொண்ணூறு சதவீதம் பெண்கள் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். சங்கல்பங்கள் இல்லை. இடம் இருக்கிறது. பிரவேசம் சுலபம்.

__ஓஷோ.

[பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 சாங்கிய யோகம்.]

இப்படியாக மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கரையாத அணுக்களாகவும், கரையும் அணுக்களாகவும், அழிவற்ற அணுக்களாகவும் நாம் வாழும் பிரபஞ்ச வீதியில் வாழ்ந்து வருகிறோம் .

கருமையத்தின் எடை கூடக் கூட தன்னுணர்வு அல்லது தன்னை அறிதல் என்பது விலகி ஓடுவதும் அதன் காரணமாக மீண்டும் மீண்டும் பிறப்பிறப்பு எனும் சாகரத்தில் அடைபடுவதும் , அதன் எடை குறையக் குறைய பரம்பொருளோடு ஒன்றுகின்ற பேற்றை அடைவதும் சாத்தியமே என்பதனை புரிந்துகொண்டால் கருமைய களங்கம் தருகின்ற செயல்கள் சிந்தனைகளிலிருந்து மனித இனம் விடுபட்டு கருமைய தூய்மை தரும் பக்தி கர்ம ஞான யோக மார்க்கங்களில் ஈடுபட்டு கரையாத அணுக்கள் நிலையிலிருந்து கரையும் அணுக்களாகி மானுடப் பேறு பெறும் நுட்பம் உணர்ந்தால் உலக அமைதி எனும் சொல் சத்தியமாகும் , சாத்தியமாகும் பின் அதுவே சாஸ்வதமாகும்.

உலக யோகா தினத்தில் இந்த சிந்தனையைக் கைக்கொள்வோம் ...ஒப்புயர்வற்ற மானுட வாழ்வை நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்து உலக அமைதி காப்போம் !

வாழ்க மானுடம் ! வாழ்க யோகக் கலை !

நன்றியுடன் ,

மனோஹரன் கேசவன் (MK)



Rate this content
Log in

Similar tamil story from Inspirational