தப்பித்தேன்
தப்பித்தேன்


சூரிய ஒளி சுளீரென்று முகத்தில் பட மெல்ல கண்களைத் திறந்த கதிரவன் அதிர்ச்சி அடைந்தான். மெல்ல கையை ஊன்றி எழுந்தவன் எப்படி ரோட்டுக்கு வந்தோம் என்று நினைத்துக் கொண்டே சுற்று முற்றும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
" மெதுவா கவனமா வண்டிய ஓட்டு.. ஹெல்மெட் போட்டுட்டு போடா.. போலீஸ் வேற பிடிக்கிறாங்க"
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்மா, இதோட 17 முறை போலீஸிடமிருந்து மாட்டாம தப்பிச்சிருக்கேன்"
"உன்னோட நல்லதுக்காக தான சொல்ரேன் போட்டுட்டு போடா"என்று அம்மா கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியது நினைவுக்கு வந்தது.
இந்த முறையும் அதே மாதிரி போலீஸ் பிடிக்கிறாங்க என்று வேற வழியைத் தேர்ந்தெடுத்து போனபோது திரும்பும் இடத்தில் லாரி மோதியது நினைவுக்கு வர, இந்த முறையும் போலீஸிடமிருந்து தப்பித்து விட்டோம் என்று வீட்டை நோக்கி குதூகலமாய் ஓடினான். தன் பைக் வீட்டில் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவன் உள்ளே சென்று மேலும் அதிர்ச்சி அடைந்தான் தன் உடலை சுற்றி உறவினர்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு.