கடவுளின் பரிசு
கடவுளின் பரிசு


என் தம்பியிடம் எவ்வளவு சண்டையிட்டாலும் அவனிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது. என் முகம் லேசாக வாடியிருந்தாலும் உடனே கண்டுபிடித்து என்னிடம் என்னவென்று விசாரிப்பான்.
ஒவ்வொரு முறை சண்டையிடும் போதும் அவன் மீது கடுமையான கோபம் வரும், ஒரு வருடம் ஆனாலும் பேசக்கூடாது என்று நினைப்பேன். ஆனால் அந்த கோபம் ஒரு மணி நேரம்கூட நிலைத்ததில்லை. அரை மணி நேரத்திலேயே என்னிடம் ஓடி வருவான், நானும் மறந்து அவனுடன் விளையாட ஆரம்பித்து விடுவேன். அவனுக்கு இப்போது 13 வயதுதான். அவனை விட பெரியவளாகிய நான்தான் அவனை கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவனுக்கோ நான்தான் சிறு குழந்தை. ஒவ்வொரு முறையும் என் பயத்தை போக்கி, தந்தை போல் பாதுகாத்து தாயைப் போல் அரவணைத்து அன்பு செலுத்துகிறான். பதிலுக்குக் கூட நான் எதுவும் செய்யவில்லை.
ஒரு முறை அவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது என் தோழி கனடா சென்று அங்கே கல்வியைத் தொடரவிருப்பதாகவும், நானும் அங்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தேன். பிடிவாதமாக சாப்பிடாமல் இருந்தேன். வீட்டில் அனைவரும் கடிந்து கொண்டார்கள். ஆனால் அவனோ அப்போவே ,"நீ கவலைப்படாதே இன்னும் சில வருடம் பொருத்துக்கோ நான் பெரியவனாகி உனக்காக அங்கே வேலைக்குப் போய் உன்னை கூட்டிட்டு போறேன்"என்று அவன் கூறியது இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
அப்பொழுதிருந்து இப்போதுவரை அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு பிடித்திருந்தால் எதையும் செய்வான். உலகிலுள்ள அனைவரும் என்னை எதிர்த்தாலும், எனக்கு பக்கபலமாய் ஒருவன் இருப்பான் என்று என் தம்பியை, கண்ணை மூடிக்கொண்டு தைரியமாக சொல்வேன்.என்னுடைய சந்தோஷமான நேரம் எல்லாவற்றையும் அவனிடம் கொடுத்துவிட்டு அவனுடைய துன்பமான நேரத்தையும் நான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் தோன்றும்.
மேலும் எழுத வார்த்தைகள் வரவில்லை அவை அனைத்தும் கண்ணீராய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சகோதர- சகோதரியின் பந்தம் வலுவான, இன்பமான, முடிவில்லா பந்தம்.
எவ்வளவு சோகமான நேரங்களிலும் அவர்களின் சிரிக்கும் முகத்தை பார்த்தால் வெறுப்பு ,கோபம் கூட பறந்து போய்விடும்.
என் குழந்தைப் பருவம் இனிமையாக சுவாரசியமாக அமைந்ததற்கு அவன் தான் காரணம். எவ்வளவு சண்டையிட்டாலும் எங்கள் அன்பு ஒரு நாளும் குறைந்ததில்லை.
கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எனக்கு அன்பான ஈடு இணையில்லா சகோதரனை கொடுத்ததற்கு.
காலையில் எழுந்ததும் தேடுவது மட்டுமல்லாமல் நான் எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது என் தம்பியை தான்.
பிறவியின் பயனை அடைந்து விட்டதாக உணர்கிறேன் அவனுக்கு சகோதரியாக பிறந்ததில்.