ரெஸ்பான்ஸும் இல்லை
ரெஸ்பான்ஸும் இல்லை


வண்டிபிடித்து ஊர் வர லட்ச ரூபாய் கேட்கிறாங்க!'- மகாராஷ்டிராவில் தவிக்கும் தி.மலை மக்கள்
ஒரு பாஸுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கேட்கிறார்கள். அப்படி அப்ளே செய்தாலும் பாஸ் கிடைப்பதும் இல்லை' என வேதனை தெரிவிக்கின்றனர் மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தண்டராம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்ட புளியம்பட்டி, கருங்காலிப்பட்டி, மேல்புழுதியூர், மணிக்கல் கிராமங்களைச் சேர்ந்த 212 பேர் தினக் கூலிக்காக சிலமாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா சென்றவர்கள், கொரோனா ஊரடங்கால் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டு தவித்துவருகின்றனர்
இதையடுத்து, நாம் போனில் தொடர்புகொண்டு பேசியபோது, “ நாங்கள் மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் வசாய் தாலுக்கா வசாய்ரோடு பகுதியில் இருக்கிறோம். கூலி வேலைக்காக வந்தோம். கொரோனா ஊரடங்கில் வேலையில்லாமல் அவதிப்படுகிறோம். உணவுக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரவது உணவு அளித்தால் வங்கி சாப்பிட்டுக்கொண்டு அறைகுறை வயித்தோடு சாலை ஓரங்களில் டென்ட் அமைத்துக்கொண்டு இருக்கிறோம்.
சொந்த ஊருக்கு வருவதற்கு இங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டால், ‘உங்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு எங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதோடு, உங்களை அனுப்புவதற்கு எங்களிடம் பணம் இல்லை. உங்கள் மாவட்ட நிர்வாகம் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கலெக்டர் மூலம் லெட்டர் அனுப்பினால், உங்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்கிறோம். அப்படி இல்லையெனில் நடந்தே செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்.
இ-பாஸ் மூலம் செல்வதற்கு விண்ணப்பிக்க இங்குள்ள நெட் சென்டர்களில் ஒரு பாஸுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கேட்கிறார்கள். அப்படியே செய்தாலும் பாஸ் கிடைப்பதும் இல்லை. வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக, தமிழக அரசு அறிவித்த இணையத்தளத்தில் பதிவு செய்தோம். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருக்கும் தமிழர்களை அழைத்துவருவதற்கான தமிழக அரசின் பொறுப்பு அதிகாரியான பூஜா குல்கர்னிக்கு மெயில் மூலமும் போனிலும் தொடர்புகொண்டோம். ஆனால் அவர், ஏதாவது வாகனத்தை பிடித்துக்கொண்டு வாருங்கள், அந்த வாகனத்திற்கு அனுமதி பாஸ் வழங்குகிறோம் என்கிறார்.
இங்கிருந்து எந்த வாகனமும் வருவதற்கு முன்வரவில்லை. அப்படி வரும் வாகனங்கள் பல லட்சம் கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே போவது. மீண்டும் பூஜா குல்கர்னிக்கு மெயில் அனுப்பினால், எந்த ரெஸ்பான்ஸும் இல்லை” என்றார்கள்.
மேலும் அவர்கள், “உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநில மக்களை அந்த மாநில அரசு, ரயில் அனுப்பி அவர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால், தமிழகத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. தற்போது, மகாராஷ்டிராவில் பருவ மழை தொடங்க இருக்கிறது. அதற்குள் நாங்கள் தமிழகம் வந்தால் உண்டு. இல்லையெனில் நாங்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும். நாங்கள் தாழ்வான பகுதியில் டென்ட் அமைத்து இருப்பதால், வெள்ளம் வந்தால் எல்லாம் அடித்துச் சென்றுவிடும்” என்று வேதனையோடு கூறுகிறார்கள்.
இந்த நிலையில், செங்கம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கிரி, தொழிலாளர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், “அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது” என்றார்.