புதிய சைக்கிள் வாங்க
புதிய சைக்கிள் வாங்க


`சைக்கிள் வாங்க சிறுகச் சிறுக சேர்த்த பணம்..!' -கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் மனிதாபிமானம்
தன்னுடைய பிறந்தநாள் அன்று, புத்தம் புதிய சைக்கிள் வாங்க வேண்டும் என ஆசைப்பட்ட சிறுவன், பெற்றோர் கொடுத்த காசைச் சேர்த்து வைத்துக்கொண்டுவந்தான். கொரோனா நிவாரண நிதியாக அந்தப் பணத்தை முதல்வரிடம் அளித்ததால் பாராட்டுகள் குவிகின்றன.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதன் காரணமாக மனிதர்களுக்கிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவரிடமும் பிறருக்கு உதவும் குணம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதை நிரூபிக்கும் வகையில், கேரளாவில் இரு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எட்டு வயது நிரம்பிய பள்ளிச் சிறுவனிடம் இருந்து பிறருக்கு உதவும் குணம் குறித்த தகவல் தெரியவந்ததும் அந்தச் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அதுகுறித்த விவரத்தைப் பார்ப்போம்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டகாயம் பகுதியைச் சேர்ந்த சனோஜ் - சனுஜா தம்பதியரின் மகன், சாய் கிருஷ்ணா. அங்குள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார்.
தன்னுடைய எட்டாவது பிறந்தநாளின்போது அழகான சைக்கிள் வாங்க வேண்டும் என்பது சிறுவன் சாய் கிருஷ்ணாவின் ஆசை. அதற்காக, பள்ளிக்குச் செல்லும்போது பெற்றோர் கொடுக்கும் காசுகளைச் சேர்த்துவைத்துவந்தார்.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கேரள மக்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று, பலரும் முதல்வரின் பேரிடர் கால நிவாரண நிதிக்குப் பணம் அளித்தார்கள்.
இதுகுறித்த செய்தியை பேப்பரில் படித்த சிறுவன் சாய் கிருஷ்ணாவுக்கு, தானும் முதல்வரின் பேரிடர் நிவாரணத்துக்கு நிதி கொடுக்க விரும்பினார். அதனால் சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்துவைத்திருந்த பணத்தை முதல்வர் நிதிக்கு அனுப்பி வைத்தார்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சாய் கிருஷ்ணாவின் இந்த நற்செயல் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகப் பரவியது. அதனால் சிறுவன் சாய் கிருஷ்ணாவுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் பாலக்காடு பகுதி செயலாளரான கே.ராஜேஷ் என்பவர், சிறுவன் சாய் கிருஷ்ணாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், சிறுவன் வாங்க விரும்பிய அதே மாடல் புதிய சைக்கிளை வாங்கி பரிசளித்தார்.
புதிய சைக்கிள் வாங்க வேண்டும் என்கிற தன்னுடைய கனவு நிறைவேறியதில் சிறுவன் சாய் கிருஷ்ணாவுக்கு மகிழ்ச்சி.