STORYMIRROR

Vedava rajan

Romance

4  

Vedava rajan

Romance

முதலிரவு

முதலிரவு

15 mins
2.2K

அன்புடையீர் வணக்கம்.

இதுவொரு காதல் குடும்ப கதை.எத்தனையோ கனவுகளோடு திருமணம் செய்த வசதியான ஒரு இளம்பெண் முதலிரவில் கணவனின் அன்பு வார்த்தைகளோ ஆசை தீண்டல்களோ இல்லாமல் ஏமாற்றம் அடைந்து பிறகு அதற்கான காரணத்தை அறிந்து பொறுமையாகவும் திறமையாகவும் பிரச்சினையை கையாண்டு வாழ்வில் வெற்றி பெற்ற கதை.


முதலிரவு


அறையில் தனியாக இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது துளசிக்கு. நேரம் ஆக ஆக படபடப்பு அதிகமானது.

அறையில் இருந்த கலைநயமான அலங்காரம் பால் பழம் இனிப்பு வாசனை எதையுமே ரசிக்க முடியவில்லை.இத்தனை நாள் பெற்றவர்கள் வீட்டில் புள்ளிமான்போல் இருந்துவிட்டு இப்போது திருமணம் முடிந்து யாரென்றே தெரியாத ஒரு வீட்டில் வாழ வந்து இருக்கிறாள் துளசி.


படுக்கையில் படுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள்.பிறந்து வளர்ந்தது முதல் தான் விரும்பிய உணவு உடை வீடு கார் தோட்டம் கல்லூரி வேலைக்காரி. இவ்வளவு ஏன் ,அப்பா போடும் உடைகூட இவளின் விருப்பப்படித்தான் இருந்தது.

நினைத்ததை உடனே செய்ய வசதியும் இருந்தது.தன்னுடைய விருப்பம் இல்லாமல் வீட்டில் சிறு துரும்பும் அசையாது ஆனால் இங்கு எப்படி இருக்குமோ.

கணவனும் மற்றவர்களும் எப்படிப்பட்டவர்களோ என்று தோன்றியது.இதையே மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டு இருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.


சிறிது நேரம் கழித்து கதவு தட்டப்பட்ட ஓசை கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தவள் கதவைத் திறந்தாள்.

உள்ளே நுழைந்த கற்பகம்(மாமியார்) இவளைப் பார்த்து புன்னகையுடன் ""என்னடி அம்மா தூங்கிட்டியா ""என்று கேட்க,பதிலுக்கு இவள் தயக்கமாக அவளைப் பார்த்து""இல்ல அத்தை, கொஞ்சம் அசதியா இருந்தது அதான் ""என்றாள்.அதைக்கேட்டு

கிண்டலாக "எல்லாம் எங்களுக்குத் தெரியும் அண்ணி.

பஸ்ட் நைட்ல தூங்கக் கூடாதுன்னு ,இப்போதே தூங்கிடறீங்க சரியா " என்றாள் கற்பகத்தின் மகளான கல்லூரி மாணவி ரோசி .அதைக்கேட்டு இவள் வெட்கத்துடன் தலையை குனிந்து கொள்ள"ஏய் சும்மா இரு "என்று மகளை அதட்டிவிட்டு துளசியைப் பார்த்து "சரி நேரம் ஆயிடுச்சி ;முகத்தை கழுவிட்டு வாம்மா.மொதல்ல குத்து வெளக்கை ஏத்திட்டு ,அப்புறம் முதலிரவு அறைக்குப் போகனும் " என்றாள் கற்பகம்.இவளும் சரி என்று அவள் சொன்னது போல் செய்தாள்.பிறகு தாயும் மகளும் சேர்ந்து இவளை கண்ணன்(மாப்பிள்ளை) இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.


அறை வாசலில் கற்பகம் சிரித்துக் கொண்டே இவளைப் பார்த்து"கல்யாணமே வேண்டாம்னு இருந்த இவனை ,எப்படியோ உன் கையில கொடுத்தாச்சு.கூடிய சீக்கிரம் இந்த வீட்ல ஒரு கொழந்த சத்தம் கேக்கனும் சரியா" என்றாள்.பதிலுக்கு இவள் வெட்கத்தோடு தலையை குனிந்து கொண்டு நெளிந்தாள்.இப்போது அருகில் இருந்த ரோசி "அம்மா அதெல்லாம் அவங்களுக்குத் தெரியும். நீ முதல்ல கெளம்பு "என்று கூறினாள்.பிறகு இருவரும் கிளம்பி விட்டார்கள்.

பத்து நொடி அங்கேயே தயங்கி நின்று இருந்த துளசி இப்போது கதவைத் தட்டினாள்.


"கம் இன் "என்று அறையின் உள்ளே இருந்து, கண்ணன் குரல் கொடுத்தான்.அறையில் நுழைந்த துளசி கண்ணனை கவனித்தாள். அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, லேப்டாப்பின் (laptop) கீபோர்ட்டில் ஆர்வமாக தட்டிக்கொண்டு இருந்தான்.இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒரு மகிழ்ச்சியான புன்னகையோடு "ஐயம் சாரி ,ஐ ஆம் ஆல்சோ பிஸி.ப்ளீஸ் கேரி ஆன் "என்று சொல்லிவிட்டு மீண்டும் கணினியில் மூழ்கினான்.அதைக்கேட்டு இவளுக்கு சப்பென்று ஆகிவிட்டது.


கல்லூரியில் இவளுடைய தோழிகள் காதலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் கதை கதையாக பேசுவார்கள்.கணவன் முதலிரவில் எப்படி நடப்பான். படுக்கை அறையில் எப்படி நடப்பான்.சமையல் அறையில் எப்படி நடப்பான் என்று விலாவாரியாக வர்ணித்து இருந்தார்கள்.அதையெல்லாம் கேட்டு கேட்டு இவள் தனக்கு கணவனாக வருபவன் எப்படி எல்லாம் தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் பெரிய கற்பனை செய்து வைத்து இருந்தாள். ஆனால் அந்த கற்பனை எல்லாம் இப்போது ஒரு நொடியில் தூள் தூளாக சிதறியது.அதனால் ஏமாற்றத்தில் இவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது.


கட்டிலின் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டு ,கலங்கிய கண்களோடு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.ஆனால்

அவனோ கணினியில் இருந்து கண்ணைத் திருப்பாமல் இருந்தான்.ஏமாற்றம் ப்ளஸ் சோகத்தோடு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் ,அப்படியே சோர்வில் உறங்கி விட்டாள்.பிறகு துளசி என்று யாரோ இவளை அழைப்பதைக் கேட்டு ,கண் விழித்துப் பார்க்க கண்ணன் புன்னகையோடு எதிரில் நின்று கொண்டு இருந்தான்.அதைப் பார்த்து இவள் திடுக்கிட்டு எழுந்து நின்று கொண்டாள்.


பதிலுக்கு அவன் புன்னகையுடன் இவளைப் பார்த்து "எனக்குத் தூக்கம் வருது. நீ சாப்டியா "என்று கேட்டான்.இவள் "ஆம் "என்று தலை ஆட்டினாள்.மீண்டும்

புன்னகையுடன்"சரி குட்நைட் "என்று சொல்லிவிட்டு கட்டிலில் கால்களை நீட்டி படுத்துக் கொண்டான்.இவள் கீழே படுக்கப் போனாள்.அதைப் பார்த்து "ஏன் கீழே படுக்கிறே ,மேலேயே படுத்துக்கோ"என்று கூறினான் கண்ணன்.அதைக்கேட்டு

இவள் வெட்கப்பட்டாள்.அதைப் பார்த்து கேலியாக சிரித்தவன்

பிறகு" சரி உன் இஷ்டம் "என்று கூறிவிட்டு இவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டான்.அதைப் பார்த்து இவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.


தரைப் படுக்கையில் அழுகையை அடக்கிக்கொண்டு படுத்துக்கொண்டு இருந்தாள்.

இருபது நிமிடம் கழிந்தது.மெல்ல

எழுந்து நின்று அவனைப் பார்த்தாள்.கண்ணனோ குழந்தை மாதிரி நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து மனதுக்குளேயே யோசித்தவள் போன மாதம் நிச்சயம் ஆனதில் இருந்து, இதுவரை அவன் தன்னிடம் போனில்கூட அவ்வளவாக பேசியதில்லை. இப்போது மட்டும் கொஞ்சிப் பேசவேண்டும் என்று நினைத்தது ,தன்னுடைய தவறுதான் என்று தனக்குள் புகைந்தாள் .பிறகு கழிவறை சென்றுவிட்டு திரும்பி வந்து படுத்ததுதான்.இரவெல்லாம் தூங்கவில்லை. கவலையில் கண்ணீரில் தலையணை நனைந்து போனது.பிறகு எப்போது தூங்கினாளோ தெரியவில்லை.


காலையில் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வாசலில் மாமியார் நின்று கொண்டு இருந்தார்.இவளைப் பார்த்து அக்கறையாக "என்னம்மா நைட்டு அழுதியா "என்று கேட்டாள். அதைக்கேட்டு இவள் திடுக்கிட்டு "அதெல்லாம் இல்லை அத்தை "என்று கூறினாள்.பிறகு எதையோ யோசித்தவள் "சரி டீ ரெடியா இருக்குது. நீ முகத்தை கழுவிக்கிட்டு வா "என்றாள்.முகத்தை கழுவிக்கொண்டு வந்தவள் கடிகாரத்தில் ஒன்பது மணியைப் பார்த்ததும் திடுக்கிட்டு பிறகு சமையல் அறைக்குச் சென்றாள்.இவளை வரவேற்ற மாமியார் காஃபி கொடுத்தாள்.வாங்கிக்கொண்டு "அத்தை நான் சமையல் செய்யட்டுமா "என்று கேட்டாள்.

பதிலுக்கு அவள் கோபமாக "நீ இப்போதான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கே. அதனால கொஞ்ச நாள் போட்டும். பிறகு பாத்துக்கலாம் "என்று கூறினார்.இவளுக்கு மாமியார் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாகவும் மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது.அதேசமயம்

முதலில் இப்படித்தான் சொல்வார்கள். பிறகு வீட்டின் மொத்த வேலைகளையும் நம் தலையில் கட்டி விடுவார்கள் என்று தோழிகள் சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டாள்.


பதிலுக்கு தயக்கமாக மாமியாரைப் பார்த்து"அத்தை அவருக்கு காஃபி "என்று இழுத்தாள்.பதிலுக்கு அவள் கேலிப் புன்னகையோடு"அவன் ஆபிசுக்கு கிளம்பிட்டான்.

நீபோய் குளிச்சிட்டு வா ,சாப்பிடலாம்" என்று சொன்னார்கள்.இவளும் பிரஷ்ஷாகி வந்தாள். இப்போது இவளை உட்கார வைத்து, மாமியாரே பரிமாறினாள்.

இவள் மாமியாரை வியப்பாக பார்த்தாள்.பதிலுக்கு அவள் புன்னகையோடு "என்ன அப்படி பாக்கிறே. ,மத்த மாமியார் போல நானில்லை. உனக்கு இந்த வீட்டில எந்த வேலையும் இல்லை.உனக்கு எது வேணும்னாலும் கேட்டவுடனே செய்றதுற்கு நான் இருக்கேன். வேலைக்காரங்க இருக்காங்க.எது வேணும்னாலும் தயங்காமக் கேளு"என்றாள்.

அதைக்கேட்டு இவள் மகிழ்ச்சியாக சரியென்று தலையாட்டினாள்.மீண்டும்

புன்னகை மாறாமல்"ஆனா "என்று மீண்டும் ஆரம்பித்த மாமியாரை புரியாமல் பார்த்தாள்.


பதிலுக்கு மாமியார் சிரித்துக் கொண்டே "நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது.அடுத்த பத்து மாசத்தில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்துத் தர்றது மட்டும்தான் உன் வேலை "என்று சொல்ல அதைக்கேட்டு இவளுக்கு மனதில் இருந்த மொத்த மகிழ்ச்சியும் சொய்யென்று வடிந்து விட்டது.மனதிற்குள் நேற்று இரவு நடந்தது ஞாபகம் வந்து மனம் சோர்ந்து போனாலும் வெளியே எதையும் மாமியாரிடம் காட்டிக் கொள்ளவில்லை.பிறகு இருவரும் சேர்ந்து கொண்டு வீட்டைச் சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள்.இவள் ஆர்வமாக எல்லாவற்றையும் பார்த்து கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள்.

கற்பகம் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்கினாள்.


மாலை மீண்டும் கண்ணன் வந்தான். அம்மா தங்கையிடம் பேசினான். ஆனால் இவளிடம் ஆர்வமாக பேசவில்லை.

ஏதோ ஓரிரு கேள்விகள் கேட்டுவிட்டு ,அவனுடைய அறைக்குப் போய் விட்டான்.பிறகு இரவு வந்தது.படுக்கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு இருந்தவன் இவள் உள்ளே வந்ததும் மகிழ்ச்சியாக ஒரு புன்னகை செய்தான். பிறகு இவளிடம் "இந்த வீட்ல உனக்கு எது வேண்டும்னாலும் ,தயங்காம அம்மாகிட்ட கேளு" நாளைக்கு எனக்கு ஆபிஸ்ல ஒரு மீட்டிங் இருக்கு. சீக்கிரம் எந்திரிக்கனும்" என்று சொல்லிவிட்டு தூங்குவதற்கு தயாரானான்.

இவள் வழக்கம்போல கீழேயே படுத்துக்கொண்டாள்.இப்படியே ஒரு வாரம் கழிய இவளுக்கு வெறுத்துப்போய் விட்டது.


இவளுடைய வீட்டில் இவளோடு பேசுவதற்கு நிறைய ஆட்கள் இருந்தார்கள்.இங்கே மாமியார், நாத்தனார் ,வேலைக்காரர்கள், எல்லோரும் நல்லபடியாக பேசினாலும், கணவன் மட்டும் மூன்றாவது மனிதன்போல் மரியாதையுடன் நடந்து கொண்டான்.கணவன் நல்லவனாகத் தெரிகிறான்.

ஆனால் தன்னிடம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான், என்று அறிந்து கொள்ளத் துடித்தாள்.ஆனால் யாரிடம் கேட்பது என்றுதான் தெரியவில்லை.பிறகு இன்னும் சில நாட்கள் கழிந்தது.


இவளாகப் போய் அவனிடம் பேசினாலும், அவன் சுருக்கமாக முடித்தான். அவனுக்கு பணிவிடைகள் செய்து, அவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று பார்த்தால் ,அவன் இவளிடம் "தேங்க்ஸ் ,சாரி "என்று மூன்றாம் மனிதர்கள் போல் நடந்து வந்தான்.இன்னும் சில நாட்கள் போனது. ஆனால் இருவருக்கும் இடைவெளி குறையவில்லை. இவளுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. தாய் வீட்டுக்கு செல்லலாமா என்று கூட மனதுக்குள் நினைத்தாள்.

ஆனால் இவனால் மற்றவர்கள் நம் மீது காட்டும் அன்பை அவசரப்பட்டு கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்று அமைதியாக காத்து இருந்தாள்.


ஒருநாள் வேலை எதுவும் இல்லாமல் போரடிக்கிறது என்று மாமியாரிடம் சொல்ல பதிலுக்கு மாமியார் "அவன் ரூம்ல கம்ப்யூட்டர் இருக்கு..அதில ஏதாவது பாட்டு கேளு என்று சொன்னாள்.இவளும் போய் கணினியை ஓபன் செய்து பார்க்க அதில் ஒரு போல்டர் (folder) வினிதா என்று இருந்தது.


அதைப் பார்த்து ஆர்வமாக என்ன என்று ஓபன் செய்து பார்க்க இருநூறு கடிதங்கள் தேதி வாரியாக சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் மூன்று நான்கு கடிதங்களைப் படிக்க இவளுக்கு அதிர்ச்சி ஆனது.காரணம் அந்த கடிதங்கள் இவளுடைய கணவனை காதலன் என்று வர்ணித்து எழுதப்பட்டு இருந்தது.


இரண்டாவது மெயில் பாக்ஸை ஓபன் செய்து பார்க்க அதில் வினிதா என்ற பெயரில் வரிசையாக மெயில் இருந்தது. நேற்று இரவுகூட மெயில் வந்து இருந்தது.இவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. இவ்வளவு நாள் தன் கணவன் ஏன் தன்னிடம் விலகுகிறான் என்று .அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அதனால் தன்னிடம் விலகுகிறான் என்று தோன்றியது.அதேசமயம் மனதுக்குள் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இவர்கள் இருவரும் காதலிக்க பிறகு என்னை ஏன் இவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.சரி அவன் வரட்டும்.நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கோபத்தோடு காத்திருந்தாள்.

ஆனால் அவன் அன்று தாமதமாக வந்ததால் எதுவும் கேட்கவில்லை.


பிறகு மறுநாள் முதலில் மாமியாருக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்ற மாமியாரிடம் பேச்சுக் கொடுத்து நைசாக இதைப்பற்றி கேட்டாள். அதற்கு அவள் கலகலவென்று சிரித்துக்கொண்டே "இவனாவது எந்த பொண்ணையாவது லவ் பண்றதாவது.பொண்ணுங்கனாலே இவனுக்கு கூச்சம். நிச்சயம் முடிஞ்சி உன்கிட்ட பேசச் சொல்லி நாங்க வற்புறுத்தினாக்கூட வெக்கத்தோட போய்டுவான் "என்றாள்.அப்படி என்றால் இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

மாமியார் இவளிடம் "இப்போ எதுக்கு இந்த கேள்வி "என்று கேட்டதற்கு, "இல்லை கம்ப்யூட்டரில் ஒரே காதல் சோகப் பாடலா இருந்தது, அதான் அத்தை கேட்டேன் "என்று சொல்லி சமாளித்தாள்.


இரவு படுக்கையறைக்கு வந்ததும் வழக்கம் போல ஓரிரு வார்த்தை இவளிடம் பேசியவன் படுக்க ஆரம்பித்தான்.இவள் அவனிடம் "உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் "என்று சொல்ல,அவன் புரியாமல் இவளுடைய முகத்தைப் பார்த்து "என்ன" என்று கேட்டான்.


பதிலுக்கு இவள் இந்த வீட்ல நான் யார் என்று கேட்க இவளுடைய கேள்வியில் முதலில் அவன் திடுக்கிட்டு பிறகு "என்னோட மனைவி "என்றான்.பதிலுக்கு இவள்

அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாள்.சிலநொடி யோசித்து

என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவள் என்று அர்த்தம் என சொன்னான்.

பதிலுக்கு இவள் அப்படின்னா உங்களுக்கு ஒரு மகிழ்ச்சின்னா அது எனக்கும் மகிழ்ச்சி அப்படித்தானே என்று கேட்க பதிலுக்கு அவன் ஆமாம் என்றான்.இவள் கேலிப் புன்னகையோடு அப்படின்னா துன்பத்துல என்று கேட்டாள். பதிலுக்கு அவன் சந்தேகம் என்ன அதிலும்தான் என்று சொல்லி விட்டு எரிச்சலாக இப்போ எதுக்கு இதை எல்லாம் கேட்டுட்டு இருக்கே "என்றான்.

அதைக்கேட்டு கேலிப் புன்னகையோடு அவனைப் பார்த்து காரணம் இருக்குதுங்க.

வினிதா யார் ? என்று கேட்டாள்.இவள் கேட்டதும் அவனுடைய அதிர்ச்சி அவன் கண்களில் தெரிந்தது.முகம் கலவரமாக இவளைப் பார்த்தவன் கேலிப் புன்னகையோடு இருக்கும் இவளுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் குற்றவுணர்வில் தலையை குனிந்து கொண்டான்.

அவனுடைய தலைக்குனிவு இவளுக்கு கோபத்தை வரவழைக்க கோபமாக சொல்லுங்க யார் என்று மீண்டும் கேட்டாள்.


இவளுடைய அதிகார வார்த்தையைக் கேட்ட அவன் பதிலுக்கு பட்டென்று கோபமாக "அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று சொல்ல அதைக்கேட்டு பதிலுக்கு கேலியாக சிரித்துக்கொண்டே இவனைப் பார்த்து இப்போதானே மனைவின்னா கணவனில் பாதின்னு சொன்னீங்க..என்று கேட்க இவளுடைய கேள்வி சிரிப்பு இரண்டாலும் எரிச்சல் அடைந்து எரிச்சலாக இவளைப் பாத்து "சரிதான் அதுக்காக நான் இல்லாத நேரத்தில என்னோட பர்சனல் விஷயங்கள ஏன் பாத்தே" என்று கேட்டான்.இவள் பதிலுக்கு நான் வேணும்னே பாக்கல என்று ஆரம்பித்து காலையில் நடந்தது அனைத்தையும் வரிசையாக சொல்லி முடித்தாள்.

அதைக்கேட்டு அவன் கோபமாக இவளைப் பார்த்து "அவங்க சொன்னா ,உனக்கு அறிவு எங்கே போச்சு.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ..எனக்கு கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை.அம்மா கால்ல விழாத குறையா கெஞ்சினதால அவங்க சந்தோஷத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.மத்தபடி வேற எதுவும் இல்லை" என்றான்.

அதைக்கேட்டு இவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.


திருமண ஆசை இல்லாமல் அப்புறம் ஏண்டா கல்யாணம் பண்ணி என்ன மாதிரி பொண்ணுங்கள கடுப்பேத்துறீங்க என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வெளியே இவள் கோபமாக அவனைப் பார்த்து "அப்படின்னா உங்க அம்மாவுக்காக என்ன கல்யாணம் செஞ்சிட்டீங்க. என்மேல உங்களுக்கு துளியும் இஷ்டம் இல்ல அப்டிதானே" என்று கேட்டாள்.பதிலுக்கு அவன் கோபமாக "ஆமா அப்படித்தான்.விருப்பம் இருந்தா எங்கூட இரு.இல்லன்னா உன் இஷ்டம் "என்று சொல்ல அதைக்கேட்டு இதுவரை கோபத்தோடு இருந்தவளுக்கு இப்போது அழுகை வந்து விட்டது.


கண்களில் கண்ணீர் வழிய அழுதுகொண்டே அவனைப் பார்த்து "அப்படின்னா என்ன எங்க வீட்டுக்கு போச் சொல்றீங்களா.."என்று கேட்டாள்.

இவளுடைய அழுகையை கண்டதும் அவனுடைய கோபம் மெல்ல மறைந்தது.பதிலுக்கு

அவன் சாந்தமாக இவளைப் பார்த்து நான் அப்படிச் சொல்லல. என்னோட தனிப்பட்ட விஷயத்தில தலையிடாதே அது மேனர்ஸ் இல்லைன்னுதான் சொன்னேன்...என்று சொல்ல பதிலுக்கு இவள் கண்ணீர் வழிய ஆனால் கோபமாக அவனைப் பார்த்து நாகரீகத்தைப் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்குது.கல்யாணம் ஆகிட்ட பிறகும் கட்டின பொண்டாட்டி உணர்வுகளை மதிக்காம யாரோ ஒரு காதலியோட ஞாபகத்திலேயே வாழ்ந்துட்டு இருக்கீங்க. இதுதான் ஒரு நாகரீகமான ஆணுக்கு அழகா என்று கேட்டாள்.பதிலுக்கு

அவன் கோபமாக போதும் நிறுத்து துளசி.நான் ஆம்பிளைன்னு உன்கிட்ட நீருபிக்க வேண்டிய அவசியம் இல்ல என்று சொல்ல. அதைக்கேட்டு இவள் கோபமாக "அப்படியா.இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க என்னோட உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் பரிசுத்தமா உங்ககிட்ட ஒப்படைச்சேன்.ஆனா இப்போ அதுக்கு உங்களுக்கு தகுதி இல்லைன்னு தெரிஞ்சிடுச்சி.

இத்தனை நாள் உங்க கை என்மேல படாதான்னு மனசுக்குள்ள ஏங்கிட்டு இருந்தேன்.ஆனா இப்போ சொல்றேன். என்னோட விருப்பம் இல்லாம இனிமே வாழ்க்கை முழுக்க உங்க கை என்மேல படவேபடாது அவ்ளோதான் என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திராமல் படுக்கையில் போய் விழுந்து தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க அதைப் பார்த்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலே தன்னுடைய படுக்கையில் விழுந்தான் அவன்.


இது நடந்து ஒரு வாரம் ஆனபோதிலும் அன்றிலிருந்து இருவரும் சுத்தமாக பேசிக்கொள்ளவில்லை.ஆனால் மாமியாருக்கு எதுவும் தெரியாத வண்ணம் சமாளித்து வந்தாள்.

அதுபோக மனதுக்குள் கவலையோடு இருந்ததால் இவள் சரியாக சாப்பிடவில்லை. வேளைக்கு வேளை காபி டீ என்று காலம் கடத்தி வந்தாள்.அதனால் பித்தம் அதிகம் ஆனது.


ஒருநாள் காலையில் செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தாள்.அப்போது திடீரென்று இவளுக்கு வாந்தி வந்தது.அது பித்த வாந்திதான்.இவளுடைய சத்தத்தைக் கேட்டு வெளியே ஓடிவந்த கற்பகம் இவளுக்கு தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளிக்கச் சொன்னாள்.


மகிழ்ச்சியாக இவளைக் கட்டி அணைத்துக்கொண்டு சமையலறைக்கு ஓடினாள்.வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பாயசம் தயார் செய்து கொடுக்கச் சொன்னாள்.பிறகு போனை எடுத்து கண்ணனுக்கு தெரிவித்தாள். அவன் அதிர்ச்சி அடைந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பேசி விட்டு போனை வைத்தான்.மாலை வழக்கத்தை விட சீக்கிரம் வீட்டுக்கு வந்தவன் இவளிடம் பேசாததால் அம்மாவிடம் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான்.அவள் இவனிடம் உடனே குடும்ப மருத்துவரை வீட்டுக்கு அழைத்து வந்து விஷயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினாள்.அதைக்கேட்டு


இவனுக்கு மனதுக்குள் பக்கென்றது.மருத்துவர் வந்து துளசி வயிற்றில் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டால் பிறகு என்ன செய்வது என்று யோசித்தான்.அதனால் அம்மாவைப் பார்த்து எதுக்குமா அவர் வரனும். நான் இவளை அழைச்சிட்டு போய் காட்டிட்டு வர்றேன்னே என்றான்.அதைக் கேட்டு அவள் எரிச்சலாக..இந்த மாதிரி நேரத்தில பயணம் எல்லாம் செய்யக்கூடாதுடா" என்றாள்.அதைக்கேட்டு இவன் பதிலுக்கு இல்ல இவ வீட்லயே அடஞ்சி கெடக்குறா. அதான் கோயில் குளம்னு போய்ட்டு பிறகு ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போலாம்னு இருக்கேன் என்று சொல்ல அதைக்கேட்டு யோசித்துப் பார்த்த கற்பகத்திற்கு இவன் சொல்வதே சரியென்று பட்டது. "சரி அப்டியே செய்.ஆனா பைக்ல வேணாம். கார்ல கூட்டிட்டு போ.மெதுவா போய் வா என்றாள்.

அதைக்கேட்டு இவனுக்கு மனதுக்குள் அப்பாடா என்று இருந்தது.


துளசி வந்து பின் சீட்டில் ஏறிக்கொள்ள இவர்கள் இருவரும் காரில் கிளம்பினார்கள். ஆனால் கார் ஆஸ்பத்திரிக்குப் போகாமல் ஒரு பார்க்கில் போய் நின்றது.

இருபது நிமிடம் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.


பிறகு இவன்தான் முதலில்

இந்த விஷயத்தில அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை "என்று பேச்சை ஆரம்பிக்க,

ஏற்கனவே இவன் மீது கோபமாக இருந்த துளசி பதிலுக்கு இவனைப் பார்த்து கோபமாக லவ்வர் இருக்கிறத பொண்டாட்டிகிட்ட மறச்ச உங்களுக்கு இத எப்டி சமாளிப்பதுன்னு தெரியாதா என்று கேட்டாள்.இவளுடைய கேள்வியைக் கேட்டு அவன் தலையை குனிந்து கொண்டு

அமைதியாக இருக்க மீண்டும் இவள் கேலியாக சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்து இந்த விஷயத்தில எனக்கு எந்த கவலையும் இல்ல. நீங்கதான் சமாளிச்சிக்கனும்.

என்ன அத்தைய நெனைச்சாத்தான் பாவமா இருக்குது ,என்று சொல்ல, இவளுடைய கேலி கோபம் தற்போதைய பிரச்சினை எல்லாம் சேர்ந்து அவனுடைய மனதுக்குள் சோகத்தை ஏற்படுத்த பதிலுக்கு

இவன் சோகமாக "எல்லாம் என்தப்புத்தான். உன்மேல எந்த தப்பும் இல்லை "என்று சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டு இருந்தான்.

பத்து நிமிடம் அமைதியாக கழிந்தது.


இப்போது இவள் அவனைப் பார்த்து மனதுக்குள் நிறைய கோபத்துடன் வெளியே கேலியாக இப்போ இவ்ளோ யோசிக்கும் நீங்க விருப்பம் இல்லாம ஏன் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க "என்று கேட்டாள்.இவளுடைய கேள்வியைக் கேட்டு அவன் எரிச்சலாக "எல்லாம் என்னோட போதாத காலம். வினிதா போனபோதே நானும் போய்ச் சேந்து இருந்தா யாருக்கும் எந்த தொல்லையும் வந்து இருக்காது "என்று சொல்ல அதைக்கேட்டு

இவள் திடுக்கிட்டு விட்டாள்.இதுவரை மனதுக்குள் இருந்த கோபம் போய் அந்த இடத்தில் குழப்பம் வந்து உட்கார்ந்து கொள்ள ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்து

வினிதா போய் சேந்துட்டாளா.

யார் வினிதா எப்போ என்று கேட்க பதிலுக்கு அவன் சோகமாக ஒரு வருஷம் ஆவுது.. என்று சொல்ல அதைக்கேட்டு இவள் நம்பாமல் அவனைப் பார்த்து கேலியாக "ஒரு வருஷம் ஆயிடுச்சா.யாருகிட்ட கத விட்றீங்க.பத்து நாளைக்கி முன்னாடிகூட அவகிட்ட இருந்து உங்களுக்கு மெயில் வந்து இருந்ததே நான்தான் பாத்தேனே "என்று சொல்ல அதைக்கேட்டு

காரின் கேபினில் இருந்து ஒரு சிறிய போனை எடுத்தவன் இவளிடம் நீட்ட ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு இவள் வாங்கிப் பார்க்க அதுவொரு பழைய மாடல் போன்.அதுபோக நொறுங்கிய திரையிலும் ,வால் பேப்பரில் ஒரு பெண் அழகாக சிரித்துக்கொண்டு இருந்தாள்.

அதைப் பார்த்து விட்டு

இவள் ஆர்வமாக அவனிடம் "இதுதான் வினிதாவா "என்று கேட்க,பதிலுக்கு சோகத்தோடு இவளைப் பார்த்தவன் கண்கள் கலங்க ஆமாம் என்று தலையசைக்க அதைப் பார்த்து இவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.


இப்போது சாந்தம் ப்ளஸ் ஆர்வமாக அவனைப் பாத்து இவளுக்கு என்ன ஆச்சு என்று கேட்டாள்.பதிலுக்கு அவன் மெலிதான குரலில் "ரோட் ஆக்ஸிடென்ட்ல..."என்று நிறுத்தினான்.இவளுக்கு புரிந்து விட்டது. இவனுடைய காதலி வினிதா விபத்தில் இறந்து போய்விட அது தெரியாத மாமியார் இவனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த தாயின் சந்தோஷத்திற்காக திருமணம் செய்து கொண்டு மனதுக்குள் காதலியை மறக்க முடியாமலும் தலைவர் நம்மிடமும் நெருங்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்துக்கொண்டு இருக்கிறார் என்று தோன்றியது.


இப்போது ஆர்வமாக அவனைப் பார்த்து "எப்படி உங்களுக்கு இவளைத் தெரியும் ...என்று கேட்டாள்.பதிலுக்கு அவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னே எனக்கு ஆபிஸ்ல மானேஜரா ப்ரமோஷன் கெடைச்சது. அப்போ எனக்கு அசிஸ்டெண்ட்டா வந்தவ இவ.மொதல்ல ஆபிஸ் மூலமா ஆரம்பிச்ச எங்க நட்பு பின்ன காதலா மலர்ந்தது. அவளுக்கு அழகு அறிவு படிப்பு எல்லாம் இருந்தாலும் மத்தவங்களுக்கு உதவி செய்யிற குணம் இருந்தது. ஒருநாள் வழக்கம் போல அவ ஆபிசுக்கு ஸ்கூட்டரில் வந்து இருக்கா .வழியில ஒரு இளைஞன் அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருக்கிறான். இவ பக்கத்தில இருந்தவங்க உதவியோட அவனை ஆஸ்பத்திரியில சேத்துவிட்டு ,ஆபிசுக்கு வந்து விட்டா.நடந்தது எல்லாத்தையும் என்கிட்ட சொல்லி முடிச்சா...நான் அவளைப் பாராட்டிட்டு வேலையில மூழ்கிட்டேன் .


மறுநாள் அவ தோழிகிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. விஷயத்தை கேட்டு நான் பதறிப்போய் ஓடினேன்.ஆனா எல்லாம் முடிஞ்சி போச்சு அவளை பிணமாத்தான் பாக்க முடிஞ்சது..என்று சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.அதைப் பார்த்து இவளுக்கு மனது பிசைந்தது.


இவள் பதட்டத்துடன் "அவளுக்கு என்ன ஆச்சு "என்று கேட்டாள்.பதிலுக்கு அவனோ மீண்டும் "அவள் ஒருத்தன ஆஸ்பத்திரியில சேத்தா இல்லையா..அவன் ஒரு ரவுடி பையன்.அவனோட அப்பாவுடைய எதிரிங்கதான் அவனை அடிச்சி ரோட்டில போட்டுட்டு போய்ட்டாங்க.அவன் கடைசி நேரத்தில காப்பாத்திய இவளோட வண்டி நம்பரை எழுதிக் காட்டிட்டு செத்துட்டான்.மகன் இறந்த ஆத்திரத்தில என்ன ஏதுன்னு உண்மையை விசாரிக்காம தவறுதலா இவ வரும்போது, வண்டியோடு அடிச்சி தூக்கிட்டாங்க.அவ போய்ட்டா "என்று சொல்லிவிட்டு மீண்டும் அழுதான்.அதைப் பார்த்து

இவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.


ஏனெனில் ஆண்களின் கண்ணீர் புனிதமானது. அது மற்றவர்களுக்காக மட்டுமே அவர்களின் கண்களில் இருந்து வெளியே வரும் என்று மனதுக்குள் நினைத்தவள்

அவன் அமைதியான பிறகு

குழப்பத்தோடு அவனைப் பார்த்து அப்படின்னா பத்து நாளைக்கு முன்னாடி அந்த மெயிலை உங்களுக்கு யார் அனுப்பியது என்று கேட்டாள்.பதிலுக்கு கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டே இவளைப் பார்த்து நான்தான் என்று அவன் சொன்னதும் அதைக்கேட்டு இவள் புரியாமல் விழிக்க அதைப் பார்த்து அவன்

அவ உயிரோட இருக்கும்போது தெனமும் எனக்கு மெயில் அனுப்புறதுதான் வழக்கம். அவ போனபிறகு அவளோட போன்ல இருந்து நானே அவ அனுப்பன மாதிரி என்னோட போனுக்கு மெயில் அனுப்பிப்பேன்.

அப்புறம் என்னுடைய கம்ப்யூட்டர்ல அதை படிச்சிட்டு பதில் அனுப்புவேன் "என்று சொல்ல இப்போது அவனைப் பார்க்க பாவமாக இருந்தது இவளுக்கு.இதுவரை மனதுக்குள் அவன் மீது இருந்த கோபம் எல்லாம் காணாமல் போய் இப்போது அவன் மீது ஒருவித பரிதாபம் சுரந்தது.காதலி இறந்துவிட்டாள் என்று தெரிந்தும் அவளை மறந்து விடாமல் மறக்க முயற்சி செய்யாமல் அவளோடு வாழ்ந்து வருகிறான் .அப்படி என்றால் இவன் அவள்மீது வைத்திருக்கும் அன்பு எத்தனை ஆழமானது என்று புரிய ஆரம்பித்தது என்றால் அவன் மீது நிறைய மதிப்பு வந்தது முதன்முறையாக.


இப்போது காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள் ,முன் பக்க சீட்டில் போய் அமர்ந்து கொண்டு அவனிடம் சாந்தமான குரலில் "இப்போ அத்தகிட்ட என்ன சொல்றது" என்று கேட்டாள்.ஏனெனில் அவன் மீது இத்தனை நாள் முழுவதும் மனதில் இருந்த கோபம் எல்லாம் மறைந்து ஒரு கனிவு ஏற்பட்டது.காரணம் இவளும் ஒரு பெண்தானே.பதிலுக்கு

அவன் யோசித்துக்கொண்டே "அதுதான் தெரியல "என்று சொல்ல பதிலுக்கு அவனைப் பார்த்து கம்பீரமாக நேரா வீட்டுக்குப் போங்க.மத்தத எல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று இவள் சொன்னதும் அதைக்கேட்டு திடுக்கிட்டவன் அதிர்ச்சியாகி ஒருவேளை நம்மள பழி வாங்க நினைக்கிறாளோ என்று மனதுக்குள் யோசித்துக்கொண்டே இவளைப் பார்த்தான்.ஆனால் இவளோ மகிழ்ச்சியான புன்னகையுடன் தலை அசைக்க அதைப் பார்த்து மனதுக்குள் கொஞ்சம் நம்பிக்கை வர காரைக் கிளப்பிக்கொண்டு போய் மீண்டும் வீட்டில் நிறுத்தினான்.


வாசலுக்கு வந்த கற்பகம் இவனிடம் மகிழ்ச்சியாக "டாக்டர் என்ன சொன்னார் "என்று கேட்டாள்.பதிலுக்கு இவன் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழிக்க இப்போது துளசி குறுக்கிட்டு தலையை குனிந்து கொண்டே"கூடிய சீக்கிரம் நீங்க பாட்டி ஆகப் போறீங்க..அத்தை" என்று சொன்னாள்.

அதைக்கேட்டு கற்பகம் மகிழ்ச்சியாக "அப்படியாடா "என்று இவனைப் பார்க்க, இவன் மனதுக்குள் இதெல்லாம் எங்கே போய் முடியப்போதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு கலவரத்துடன் துளசியைப் பார்க்க அவள் பதிலுக்கு உஷ் என்று விரலை வாயில் வைத்து சைகை செய்தாள்.அடுத்து


கற்பகம் மகிழ்ச்சியாக பூஜை அறையை நோக்கி ஓடினாள்.மூவரும் உள்ளே சென்றனர்.கற்பகம் மகிழ்ச்சியில் வீட்டை ரெண்டாக்கினாள்.

வேலைக்காரர்கள் எல்லோருக்கும் பிரியாணி பறந்தது.பிறகு இரவு படுக்கையில் இருந்த கண்ணன் துளசியைப் பார்த்து

ரொம்ப தேங்க்ஸ் துளசி இப்போதைக்கு அம்மாகிட்ட இருந்து என்னை காப்பாத்திட்ட என்று சொன்னான்.பதிலுக்கு இவள் அவனுடைய முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக புன்னகை பூத்தாள்.


மறுநாள் ஆபிசில் நுழைந்ததும் கணினியை ஆன் செய்தான்.

இவனுடைய ஐடிக்கு இரண்டு மெயில் வந்து இருந்தது.

ஓபன் செய்து பார்த்தால் வினிதாவிடம் இருந்து வந்து இருந்தது. அதைப் பாத்து மகிழ்ச்சி ப்ளஸ் ஆச்சரியமாக 'எப்படி 'என்று மனதுக்குள் யோசித்தவன் பிறகு நேற்று துளசியிடம், வினிதாவின் போனை கொடுத்துவிட்டு, வாங்க மறந்து விட்டதை மனதுக்குள் நினைவு கூர்ந்தான்.ஆர்வமாக


மெயிலை ஓபன் செய்து பார்க்க முதலில் "குட்மார்னிங் "என்று இருந்தது.இரண்டாவது "காலை உணவை தவறாமல் உண்ணவும் "என்று இருந்தது.இவனும் பதிலுக்கு "குட்மார்னிங் "என்று அனுப்ப உடனே பதில் வந்தது.இப்போது இவனுக்கு மனதில் ஒரு உற்சாகம் வந்தது. காரணம் வினிதா உயிரோடு இருக்கும்போது இவன் மெயில் அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருக்க திரையில் அவளுடைய பெயரில் இருந்து மெயில் வந்துவிட்டது என்று பார்க்க ஒரு மகிழ்ச்சி ஏற்படுமே அதேபோல் இப்போது இவனுக்கு ஏற்பட்டது.இப்படியே மாறி மாறி அனுப்பிய பிறகு ,ஆபிஸ் வேலைகளில் மூழ்கினான்.


ஆனால் அதற்கு பிறகு டீடைம் லஞ்ச் ஈவினிங் என்று மெயில் வந்து கொண்டே இருந்தது. இவனும் பதில் அனுப்பிக்கொண்டே இருந்தான். மறுநாள் அடுத்த நாள் ,அதற்கு அடுத்த நாள் என்று தொடர்ந்தது. ஒருவாரம் கழிந்தது.


இப்போது அந்த மெயில் மூலமாகவே துளசியைப் பற்றி இவனும், இவனைப் பற்றி துளசியும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.அதற்கு பிறகு துளசி மெல்ல மெல்ல பக்குவமாக இவனுடைய முழு கவனத்தையும் தன்மீது இருக்கும்படி மாற்றினாள்.ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது.நாளடைவில் இருவரும், ஒருவர் இல்லாமல் ஒருவர் எதையும் செய்யாத அளவுக்கு நண்பர்களாக நெருங்கினார்கள்.அதற்கு பிறகு , இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கி விட்டனர்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க் பீச் என்று சுத்தினார்கள்.மனம் விட்டு பேசினார்கள். வாய் விட்டு சிரித்தார்கள்.அதுபோக வீட்டில் அடுத்த அடுத்த அறையில் இருந்தாலும்கூட போன் செய்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டார்கள்.ஆனால் படுக்கையில் மட்டும் தனித்தனிதான்.சில வாரங்கள் கழித்து பிறகு பிப்ரவரி மாதம் வந்தது.இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் பரிசைத் தயார் செய்தார்கள்.


படுக்கை அறையில் முதலில் கண்ணன்தான் இவளிடம் பரிசைக் கொடுத்தான். அதை மகிழ்ச்சியான புன்னகையுடன் வாங்கி வைத்துவிட்டு இவள் அவனுடைய கைகளை பிடித்துக் கொண்டாள்.இவன் புன்னகையுடன் "பிரிச்சு பாரு "என்று சொல்ல பதிலுக்கு


இவள் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே தேவையில்லங்க என்று சொல்ல அதைக்கேட்டு இவன் திடுக்கிட்டு "ஏன் "என்று கேட்டான்.பதிலுக்கு


இவள் மகிழ்ச்சியான புன்னகையுடன் "அதப் பிரிச்சி பாத்துதான் நீங்க என்மேல வெச்சு இருக்கிற அன்பைத் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லங்க "என்று சொல்ல

இவளுடைய பதிலில் இவன் நெகிழ்ந்து போனான்.


கம்பீரமாக அவளுடைய முகத்தைப் பார்த்து "ஐ லவ் யூ சோமச் துளசி "என்று சொன்னான்.ஆனால் அதன் அர்த்தம் நீ எனக்கு ஒரு நெருக்கமான அன்பான தோழி என்று இவனுடைய மனதில் இருந்தது.ஆனாலும் கணவனின் வாயால் இப்படி ஒரு வார்த்தையைக் கேட்ட


இவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவள் பதிலுக்கு எதுவும் பேசாமல் ஒரு கிரீட்டிங் கார்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.அதை ஆர்வத்தோடு வாங்கி அவன் பிரித்துப் பார்க்க ""ஐ லவ் யூ சோ மச் கண்ணா.பை(by) வினிதா ""என்று இருந்தது.அதைப் பார்த்து ஆச்சரியம் ஆனவன் கொஞ்சம் குழப்பத்தோடு இவளுடைய முகத்தைப் பார்க்க இவனுடைய முகத்தில் இருந்தே இவனுடைய மனதுக்குள் இருப்பதை அறிந்து கொண்ட அவள் ஒரு மகிழ்ச்சியான புன்னகையுடன் அவனுடைய முகத்தைப் பார்த்து "மத்தவங்களுக்குத்தான் நான் துளசி. உங்களுக்கு எப்போதும் உங்க வினிதாதான் ""என்று

சொல்லி முடித்ததுதான் தாமதம்.


இவளுடைய வார்த்தைகளை கேட்டு மனம் நெகிழ்ந்து போனவன் பாய்ந்து வந்து இவளைக் கட்டிக்கொண்டு ஓவென்று சத்தமாக அழுது கண்ணீர் விட்டான்.கணவனுக்கு காதலி இருந்தது என்று தெரிந்து தன்னிடம் சண்டை போட்டவள் இப்போது நம்முடைய மகிழ்ச்சிக்காக இவளையே தன்னுடைய காதலியாக மாற்றிக்கொண்டாள் என்று அவனுடைய மனதில் தோன்றியது என்றால் திடீரென ஏற்பட்ட அணைப்பின் அழுத்தத்திலும் சுகத்திலும் இவள் கொஞ்சம் திக்குமுக்காடிப் போனாள்.அவனை விலக்கலாம் என்று நினைக்க முடியவில்லை.


அதனால் அவனைத் தடுக்கவில்லை.அழுத்தி நொறுக்கும் அவனுடைய அணைப்பை கொஞ்சம் வலியோடு பொறுத்துக்கொண்டு அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்தாள். கண்ணீர் வழியே அவனுடைய துக்கம் எல்லாம் வெளியே போகட்டும் என்று .


அவன் முடித்ததும் அவனை விலக்கி மகிழ்ச்சியான புன்னகையோடு அவனுடைய கண்களை துடைத்துவிட்டு மெல்லிய குரலில் அவனுடைய காதில்"இப்போ சொல்லுங்க. கூடிய சீக்கிரம் உங்க அம்மாண்ட இருந்து தப்பிக்க நாளைக்கு பஸ்ட் நைட் ஏற்பாடு செய்யட்டுமா "என்று.அவனைப் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்த பிறகு அவனுடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று இவளுடைய மனதில் தோன்றியது.


அதைக்கேட்டு பதிலுக்கு அவன் கேலியாக சிரித்துக்கொண்டே இவளுடைய முகத்தைப் பார்த்து ''தேவையில்ல. இன்னைக்கே ஆரம்பிச்சிடுச்சி""என்று சொல்லி விட்டு விளக்கை அணைத்தான்.

இவள் புரியாமல் அவனுடைய முகத்தைப் பார்க்க இவளைத் தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு ஐ லவ் யூ சோ மச் துளசி என்று சொல்லிக்கொண்டே நெற்றியில் முத்தமிட்டுவிட்டு பிறகு கன்னம் கழுத்து என்று முத்தங்களை கொட்டிக்கொண்டே இவன் கீழே இறங்க இதை சற்றும் எதிர்பாராத இவளுக்கு வெட்கம் ப்ளஸ் அளவில்லாத மகிழ்ச்சி வந்தது.திருமணம் ஆகி எத்தனையோ நாட்கள் கழிந்த பிறகு இன்றுதான் முதலிரவு களை கட்டியது.தன்னுடைய தோழிகள் காதல் காமம் பற்றி எதையெல்லாம் இதுவரை துளசியிடம் சொல்லி இருந்தார்களோ எல்லாமே ஒரே இரவில் இவளுக்கு கிடைத்தது..இவளுடைய கூச்சத்தையோ ,வெட்கத்தையோ ,அவன் பொருட்படுத்தவில்லை.

அதைப்பற்றி இவளும் கவலை கொள்ளவில்லை.காரணம் இவளை முழுதாக திருப்தி செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

தன்னை முழுவதும் அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று இவளுக்குத் தோன்றியது.



அதிகாலையில் துளசி விழித்து எழுந்து பார்க்க இருவரும் முக்கால்வாசி ஆடை இல்லாமல் போர்வைக்குள் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு இருந்தார்கள். துளசி வெட்கத்துடன் எழுந்து உடைகளை அணிந்து கொண்டு மீண்டும் மகிழ்ச்சியாக இவனுடைய நெஞ்சில் புதைந்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

இதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அவளுக்கு முதலிரவு தான். இருவரின் மனதுக்குள்ளும் மற்றவர் மீது புரிதல் மட்டும் இல்லாமல் இப்போது காதலும் வந்துவிட்டது அல்லவா.



(முடிந்தது)



நாம் ஒருவரை வெறுக்க காரணம்.அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பது.ஆக அவர்கள் மீது எந்த தவறும் இல்லை.இரண்டாவது

இந்த கதையில் மனைவி தான் தொடாமலே கர்ப்பம் என்று கேள்விப்பட்டு அதிர்ந்தாலும், இருவரும் பேசாமல் இருந்தாலும் ,அவள் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் பொறுமையாக இருந்தான் பாருங்கள். அதுதான் ஆண்மைத்தனம்.


மாமியார் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை யாருக்கும் தெரியப்படுத்தாமல் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குத் திரும்பி செல்லாமல் பிரிச்சினையை தன்னுடைய புத்திசாலி தனத்தினால் வெற்றி கொண்டாள் பாருங்கள் துளசி. அதுதான் பெண்மைத்தனம்.


நன்றி









Rate this content
Log in

Similar tamil story from Romance