கூப்பிட மாட்டீங்களா
கூப்பிட மாட்டீங்களா


`70 நாளாச்சு... எங்களைத் தமிழ்நாட்டுக்கு கூப்பிட மாட்டீங்களா? தலைநகரிலிருந்து ஓர் ஏக்கக் குரல்!
சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்ப சுமார் 60,000 இந்தியர்கள் பதிவு செய்திருந்ததாக இந்த மாதத் தொடக்கத்தில் சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் செய்தி வெளியிட்டிருந்தது. இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக 'வந்தே பாரத்' என்கிற திட்டத்தையே உருவாக்கிச் செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. இதன்படி கடந்த மே 7-ம் தேதி முதல்கட்டமாகத் துபாய் மற்றும் அபுதாபியிலிருந்து 363 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் கேரளா அழைத்துவரப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான், டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்துக்காகச் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் 150 பேர் தங்களது ரமலான் நோன்பு இருத்தலை ஒருநாள் தவிர்த்துவிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ப்ளாஸ்மா கொடுத்தார்கள். ப்ளாஸ்மா கொடுத்தவர்களில் அதிகம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தை விட்டு டெல்லியில் தங்கியிருக்கும் இவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு வரும்நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.தமிழகத்தைச் சேர்ந்த 600 பேர் இங்கே கொரோனா முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கோம். 70 நாளா இங்கேதான் இருக்கோம். தப்லிக் ஜமாத் கூட்டத்துக்கு வந்தவர்களுக்குக் கொரோனா பாதிப்பு எனச் செய்தி கிடைத்ததும் முதற்கட்டமாக எங்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் பரிசோதனை மேற்கொண்டார்கள். முதல்கட்ட பரிசோதனையில் சிலருக்கு மட்டும் பாசிட்டிவ் வந்தது. மற்றவர்கள், நாரேலி உள்ளிட்ட பகுதிகளில் அப்பார்ட்மென்ட்களில் தங்க வைக்கப்பட்டோம். எங்களுக்கான உணவுத் தேவைகளை டெல்லி அரசே பார்த்துக்கொண்டது. 14 நாள்கள் கண்காணிப்புக்குப் பிறகு, சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தபோதுதான் லாக்டௌன் நீட்டிக்கப்பட்டது. எங்களால் டெல்லியைவிட்டு கிளம்ப முடியவில்லை.
ரமலான் காலத்து நோன்பு தேவைக்கான ஏற்பாடுகளைக்கூட இங்கே டெல்லி அரசு செய்துகொடுத்தது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு வந்து குணமான எங்களது சிலரின் ப்ளாஸ்மா அணுக்கள் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தத் தேவைப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் எங்களை அணுகினார்கள். `எதையும்விட மனித நேயம் முக்கியம்’ என எங்களது மார்க்கம் எங்களுக்கு போதிக்கிறது. அதனால் ப்ளாஸ்மா தருவது என அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுத்தோம். சிலர் ப்ளாஸ்மா தர வேண்டும் என்கிற காரணத்தால் அன்றொரு நாள் மட்டும் நோன்பு இருக்கவில்லை. சிலர் ப்ளாஸ்மாவும் கொடுத்தனர் நோன்பும் இருந்தனர்” என்கிறார், நாமக்கலைச் சொந்த ஊராகக் கொண்ட முகமது.
தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் டெல்லி சென்று 40 நாள்களாகிவிட்டன. டெல்லியிலிருந்து இவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாகச் சொல்லப்பட்டாலும் அது கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பதாக இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இவர்களின் குடும்பம் அனைத்தும் தமிழகத்தில்தான் இருக்கின்றன. இவர்கள் டெல்லியில் இருக்கும்போது குடும்பத்தினர் இத்தனை நாள்கள் பொருளாதாரச் சூழலை எப்படிச் சமாளித்தார்கள் எனக் கேட்டோம்.
"பொதுவாகவே நாங்கள் வெளியூருக்குக் கிளம்பினால் எங்கள் ஜமாத்தில் மூத்தவர்கள் அவ்வப்போது வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுச் செல்வார்கள். அவர்கள்தாம் தற்போது பொருளாதார ரீதியாகவும் எங்கள் குடும்பத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்” என்கிறார் அகமது.டெல்லி அரசு இவர்களுக்கு இருப்பிட வசதிகள் செய்துகொடுத்தாலும், ஏதோ ஓர் ஊரில் இத்தனை நாள்கள் அடைந்து கிடப்பது விவரிக்க முடியாத அளவுக்கு மன அழுத்தமாக இருக்கிறது என்று கூறும் இவர்கள், எப்படியேனும் தங்களை அழைத்துச் செல்லும்படி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களை அழைத்து வரச் சொல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
”இதுவரைக்கும் இங்கே டெல்லியில் நாங்கள் கொடுத்த ப்ளாஸ்மா ஒன்பது பேரைக் காப்பாற்றி இருப்பதாக எங்களுக்குச் சொன்னார்கள். நம் தமிழக மக்களுக்கும் எங்கள் ரத்தம் பயன்பட வேண்டும். அங்கே, தமிழக மக்களுக்கும் நாங்கள் ப்ளாஸ்மா தரத் தயாராக இருக்கிறோம். நமது மக்களையும் காப்பாற்ற வேண்டும். அதற்காகவேனும் எங்களை விரைந்து அழைத்துச் செல்லுங்கள்” என்கிறார் அகமது.