கொரோனா வைரஸ் தடுப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு


திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை, ஐந்து தவணைகளில் பிடிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. ஊரடங்கால், மாநிலத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்வதற்கான நிதியை திரட்டுவதில், மாநில அரசு ஈடுபட்டுள்ளது.திருப்பி கொடுக்கலாம்
இந்நிலையில், மாநில நிதித்துறை அளித்துள்ள பரிந்துரையில், 'மாநில அரசு துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை, கொரோனா நிதிக்காக பிடித்தம் செய்ய வேண்டும். 'இதை, ஐந்து தவணைகளில் பிடிக்கலாம். மாநிலத்தில், நிதி நிலைமை சீரான பின், பிடித்தம் செய்த தொகையை, திருப்பி கொடுத்து விடலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால், மாநிலம் பாதிக்கப்பட்ட போதும், ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க, கேரள அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, அரசு ஊழியர் சங்கங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஊழியர்கள் சம்பளத்தைப் பிடிக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
வரவேற்பு
இதனால் தான், இப்போது பிடித்தம் செய்யப்படும் தொகை, திருப்பி கொடுக்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கங்கள் வரவேற்று உள்ளன. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசு அதிர்ச்சி
நாட்டில், கேரளாவில் தான், கொரோனா முதன் முதலில் பரவியது. அதன்பின், மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இம்மாதம், 1ம் தேதி, 24 பேரும், 2ம் தேதி, 21 பேரும் பாதிக்கப்பட்டனர். அதன்பின், கொரோனா பரவல் குறையத் துவங்கியது. குறிப்பாக, 12ம் தேதி முதல், 20ம் தேதி வரை, தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஆறுக்கும் குறைவாகவே இருந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை, அதைவிட அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும், வைரஸ் தொற்றால், 19 பேர் பாதிக்கப்பட்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை, 16 ஆக இருந்தது. இது, மாநில அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.