`கொரோனா' கொடூரம்
`கொரோனா' கொடூரம்


அதிகரிக்கும் பாதிப்பு; மாடி ஜன்னல் வழியே குதிக்கும் மருத்துவர்கள்..’ - ரஷ்யாவில் `கொரோனா' கொடூரம்
ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மூத்த மருத்துவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
மனிதகுலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அனைத்துப் பெரிய நாடுகளையும் பதம் பார்த்து கடும் சிக்கலில் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் நிலைமை இப்படி இருக்க ரஷ்யாவில் மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்வதும், தற்கொலை முயற்சி மேற்கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கடந்த மார்ச் மாதம் வரை ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. அதுவே கடந்த 4 வாரங்களாக அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு சுமார் 1,55,370 பேர் பாதிக்கப்பட்டு 1,451 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில்தான் மருத்துவர்களின் தற்கொலைச் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அவர்கள் மர்மமான முறையில் மருத்துவமனையின் ஜன்னல் வழியாக விழுந்து உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இதுவரை 3 பேர் ஒரே மாதிரியாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரிழக்க ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷ்யாவில் நடக்கும் இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் மற்ற மருத்துவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவுக்கு 320 மைல் தொலைவில் உள்ளது வெரோனெஸ் (Voronezh) என்ற நகரம். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த அலெக்சாண்டர் சுலேபோவ் என்ற மருத்துவர் கடந்த சனிக்கிழமை தான் பணிபுரியும் மருத்துவமனையின் 2-வது மாடியின் ஜன்னலிலிருந்து கீழே குதித்துள்ளார். அவர்தான் ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.நான் ஏப்ரல் 30-ம் தேதி இறுதியாக அவரைச் சந்தித்தேன், உடல்நலம் தேறி வீட்டுக்குச் செல்லத் தயாரானார் அதற்குள் இந்தச் சம்பவம் நடந்துவிட்டது. திடீரென அவருக்கு என்ன நடந்தது, அவர் ஏன் இவ்வாறு செய்தார் எனத் தெளிவாகத் தெரியவில்லை. எனக்குள் இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன அதற்குப் பதில் கிடைக்கவில்லை” என சோகமாகப் பேசியுள்ளார்.
ரஷ்யாவில் மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் அரிதான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது தொடர்ச்சியான சம்பவங்கள் நடப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மருத்துவமனையின் தலைமைச் செயல் மருத்துவர், கொரோனாவுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடும் 2 மருத்துவர்கள் என உயர்பதவியில் இருப்பவர்களே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு மன அழுத்தம், அதிக நோயாளிகள் வருகை, கடுமையான வேலை ஆகியவையே காரணமாகக் கூறப்படுகிறது. இருந்தும் இதைப் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.