கொரானாவால்
கொரானாவால்
ராமநாதபுரம் அருகே, கொரானாவால் உயிரிழந்தவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 100பேரை தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜமால் என்பவர், உடல்நலக் குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 2ம் தேதி உயிரிழந்தார்.
பின்னர், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, கடந்த 3ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகே அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில், ஜமாலின் அடக்க நிகழ்ச்சியில், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் உள்ளிட்ட சுமார் 100 பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கீழக்கரையில் சுகாதாரப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இதை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜமாலின் குடும்பத்தினர் 11பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இறுதிச் சடங்கில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், இறுதிச் சடங்கில் பங்கேற்ற மற்றவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியத்தால் தற்போது பெரும் அச்சம் ஏற்பட்டிருப்பதாக, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி குற்றம்சாட்டியுள்ளார். இறந்த ஜமால் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பதை, மருத்துவமனை நிர்வாகம் தாமதமாக தெரிவித்ததாக அவர் விமர்சித்துள்ளார். கொரோனா பரிசோதனையில் இருக்கும் ஒருவர் இறந்த நிலையில், சோதனை முடிவு வருவதற்கு முன்பே, உடலை ஒப்படைத்தது, மருத்துவமனை நிர்வாகம் செய்த மிகப் பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா இருப்பதை முன்கூட்டியே அறிவித்திருந்தால், இறுதி அஞ்சலியில் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்து இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.