காதல் என்பது?
காதல் என்பது?
"நீ என்னைக் காதலிப்பதாகத் தெரிகிறது" --ரியா.
"ஆமாம். இதைத் தெரிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் ஆயிற்றா உனக்கு"--மோகன்.
" நீ என்னை 'impress' பண்ண நீண்ட நாட்களாக முயற்சி பண்ணுகிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீ என்னைக் கவரவில்லை."--ரியா.
" உன்னைக் கவர நான் என்ன செய்ய வேண்டும்?"--மோகன்
" என்ன செய்யக்கூடாது என்று கேள். காதலிக்க, காதல் வயப்பட விசேஷ குணங்கள் எதுவும் தேவையில்லை. நீ, நீயாக இருந்தால் போதும். ஆனால் நீ அப்படி இல்லை. என்னைக் கண்டதும் உன் கண்கள் அலை பாய்கின்றன. படபடப்பும், பரபரப்பும், அவற்றில் அத்துப்படி. என் கண்களைப் பார்த்துப் பேசுவதற்குப் பதில், அவை என் மார்பகங்களைத் தேடுகின்றன. இதற்குப் பெயர் காதல் இல்லை, காமம். ஒரு பெண்ணை, இல்லை அவள் உடலை, அப்படியே முழுமையாக அனுபவிக்க, காதலை ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கிறாய். சரியா?"--ரியா.
மோகன் மவுனமாக நின்றான். 'என்ன இவள்!. காதலைச் சொல்லி கவிழ்க்கலாம் என்றுப் பார்த்தால், என் நோக்கத்தைப் புரிந்துக்கொண்டு என்னையே கவிழ்க்கப்பார்க்கிறாளே!' உன்னை நீயே காட்டிக்கொடுக்காதே. சுதாரித்துக்கொள்.'
சுதாரித்த மோகன், "அப்படியெல்லாம் இல்லை ரியா! நான் உன்னை மனதாரக் காதலிக்கின்றேன். நான் உன்னைத் திருமணம் செய்துகொண்டு, " என்னைப் போல அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை" என்று உரக்கச் சொல்ல வேண்டும்.
சிரித்தாள் ரியா. " எல்லா காதலன்களின் பேத்தல் இது. முதலில் காதல், பிறகு எங்கேயாவது ஒரு அறையில், காமம். அவ்வளவுதான் முடிந்தது."
"சரி. காதல் வேண்டாம். நேரிடையாக திருமணம் செய்துகொள்ளலாம்"--மோகன்.
"உன்னைத் திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை"--ரியா.
ஒரு நிமிடம் யோசித்தான். " இதோ பார் ரியா! என்னைத் தொடர்ந்து நீ அலட்சியப்படுத்துகிறாய். நீ யாராவது ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்துதானே ஆகவேண்டும். அது நானாக ஏன் இருக்கக்கூடாது என்பதுதான் என் கேள்வி."---மோகன்.
"காதலாகட்டும், கல்யாணமாகட்டும், அது என் விருப்பத்தின் பேரிலேயே நடக்கவேண்டும். என்னை யாரும் வற்புறுத்த முடியாது. ஒவ்வொரு பெண்ணுக்கும், தன் மனதுக்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள நூறு சதவீத உரிமையுண்டு. அதனால் என்னைப் பின் தொடர்வதை விட்டுவிடு." கண்டிப்பாகச் சொன்னாள் ரியா.
"உன்னைக் கடத்திக்கொண்டுபோய், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், உன்னை மறைத்து வைத்து, மாதக்கணக்கில் உன்னை அனுபவிக்க என்னால் முடியும்"---மோகன்.
"ம்... இதுதான் உன் காதல். நீ யாரென்று உன்னை நீயே காட்டிக்கொள்கின்றாய். உன்னை மாதிரியான ஒரு மிருகத்தைக் காதலிக்க எந்தப் பெண்ணும் முன் வரமாட்டாள். குட் பை"
அவள் நடையில் கம்பீரம் தெரிந்தது.

