ஏக்கத்தையும் மீறிய பெருமை
ஏக்கத்தையும் மீறிய பெருமை


அம்மாவும், ஏற்றுக்கொண்ட வேலையின் பொறுப்புக் காரணமாக பிள்ளைகளைக்கூட பிரிந்திருப்பவர்தான். அவரின் குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?!
'நீங்க ஏன் நர்ஸ் வேலைக்குப் போனீங்க?' - கொரோனா நோய் பரவி வரும் சூழலில் வேலைக்குப் புறப்பட்ட அம்மாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு அழுதார் 12 வயதான மகள் தான்யஸ்ரீ. அவரின் அம்மா காளியம்மாள் தேனி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுகிறார். கொரோனா வார்டில் பணிசெய்யத் தன் முறை வரக் காத்திருக்கிறார். தான்யஸ்ரீயின் அப்பாவும் அரசு மருத்துவமனையில் செவிலியராகக் கொரோனா வார்டில் பணியாற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.
காளியம்மாள் கொரோனா வார்டுக்குப் பணிக்குச் செல்வதற்கு முன்பே வீட்டில் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்திவிட்டார். காரணம், தான் மருத்துவமனையில் பணியாற்றுவதால் நோய்ப் பரவலுக்கான வாய்ப்பு அதிகம். அதனால் அவரின் இரண்டு குழந்தைகளும் அம்மாவின் ஸ்பரிசத்தை இழந்து தவித்திருக்கின்றன.
தான்யஸ்ரீயிடம் பேசினோம். "கொரோனா தமிழ்நாட்ல பரவத் தொடங்கினதுமே அம்மா எனக்கும் தம்பிக்கும் அதைப் பத்திச் சொல்லிக்கொடுத்தாங்க. அது ஒரு வைரஸ், அது எப்படிப் பரவும், பரவினா என்ன நடக்கும்னு எல்லாம் சொன்னாங்க. வீட்ல நாங்க எப்படி இருக்கணும்னு கண்டிஷன்ஸும் போட்டாங்க.
முன
்னாடியெல்லாம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் அம்மா என்கூடவும் தம்பிகூடவும் இருப்பாங்க, பேசுவாங்க, விளையாடுவாங்க, ஹோம்வொர்க் சொல்லிக் கொடுப்பாங்க. இப்போ எங்க பக்கத்துலயே வர்றதில்ல. அவங்க வேற ரூம்ல தனியா இருக்காங்க. முன்னயெல்லாம் வீட்டுல எல்லாரும் சேர்ந்து கேரம்போர்டு, செஸ் எல்லாம் விளையாடுவோம். இப்போ அதெல்லாம் விளையாடுறதே இல்ல. ஒருநாள், 'எங்ககூட விளையாடியே ஆகணும்'னு நான் அழுதப்போ, தூரமா உட்கார்ந்து ஒரே ஒருமுறை விளையாடுனாங்க.
''அம்மாவுக்கு மதர்ஸ் டே வாழ்த்துகள் என்ன?"
''இந்த வருஷம் மதர்ஸ் டேவுக்கு எங்க அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கப் போறேன்!" என்றவரிடம், ''என்ன கிஃப்ட்னு எங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்ல முடியுமா?!" என்றோம். "அம்மாவுக்கு சாக்லேட் கேக் பண்ணிக்கொடுக்கப் போறேன்" என்றார்.
தான்யஸ்ரீயின் தம்பி கபிலேஷிடம் பேசினோம். "பௌர்ணமி வரும்போதுலாம் பக்கத்துல ரெண்டு, மூணு வீடுகள்ல இருக்கிறவங்க சேர்ந்து மொட்டை மாடிக்குப் போய் நிலாச்சோறு சாப்பிடுவோம். இப்போ அம்மா இல்லாததால நாங்க அங்க போறதில்ல. ஆனா, எங்கம்மாவுக்காக அந்த எத்தனை நோயாளிகள் காத்திருப்பாங்க இல்ல... அவங்களை எல்லாம் எங்கம்மாதானே பார்த்துக்கணும்...'' எனும்போது குழந்தையின் குரலில் ஏக்கத்தையும் மீறிய பெருமை.