சித்ரகுப்தன்
சித்ரகுப்தன்


நம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன்! சித்ரா பெளர்ணமியில் அன்னதானம் செய்தால் சொர்க்கம்!
சித்ரா பெளர்ணமியன்று (7.5.2020 வியாழக்கிழமை) சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள். அவரை வேண்டிக்கொண்டு தான தருமங்கள் செய்தால், சித்ரகுப்தனின் அருள் கிடைக்கப்பெறலாம். எம பயம் விலகி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்!
திருக்கயிலாயத்தில், பார்வதிதேவி, தோழியருடன் இருந்தாள். அப்போது பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்று ஆவலுடன் பேசிக்கொண்டார்கள். அதன்படி பார்வதிதேவி தான் வரைந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தாள்.
அந்தச் சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டான் ஒருவன். அதனால்தான் அவனுக்கு சித்ர குப்தன் எனப் பெயர் சூட்டினாள் தேவி. பின்னர், பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்றவள், நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னாள். சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து வாழ்த்தி அருள வேண்டும் என வேண்டினாள். சிவனாரும் அவ்வாறே அருளினார். இப்படி தோன்றிய நாள் சித்ரா பௌர்ணமி எனப் போற்றுகிறது புராணம்.
அதேசமயம் யமதருமராஜன், ‘தனியொரு நபராக கோடானுகோடி மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பராமரித்து மேற்கொள்ளும் பணி கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவிக்கு ஒரு ஆள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று இந்திரனிடம் முறையிட்டான். இருவரும் இறைவனிடம் வந்தனர். சிவனாரும் அவர்களின் கோரிக்கையை ஏற்றார். சித்ரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் பிறக்கச் செய்தருளினார். காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்ர குப்தனை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள்.