anuradha nazeer

Abstract

5.0  

anuradha nazeer

Abstract

செய்ந்நன்றி

செய்ந்நன்றி

2 mins
1.2K


செய்ந்நன்றி அறிதலின் விளக்கமாக ராமாயணத்தில் ஒரு பாத்திரமும் மகாபாரதத்தில் ஒரு பாத்திரமும் இடம்பெற்றுள்ளன. கும்பகர்ணனும் கர்ணனுமே அவர்கள். விபீஷணன் போல் கும்பகர்ணன் ராமன் அணியில் போய்ச் சேரவில்லை. ஆனால் ராமன் தரப்பில்தான் அறம் இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். தன் அண்ணனான ராவணனுக்குப் பலவகைகளில் புத்திமதி சொல்லிப் பார்த்தான்.


தான் துயிலெழுப்பப் பட்டபோதுதான் உண்மையிலேயே விழித்துக் கொள்கிறான் கும்பகர்ணன். ராவணனிடம் அவன் கேட்கும் கேள்விகள் ராவணனை திகைக்கச் செய்கின்றன. ‘‘போர் வந்துவிட்டதா? கற்பின் கனலியான சீதையின் துயரம் இன்னுமா தீரவில்லை? மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பரவிய உன்புகழ் போய்விட்டதா? இறக்கும் காலம் வந்துவிட்டதா?’’ என்றெல்லாம் அவன் தொடுத்த வினாக்கள் ராவணன் எடுத்த முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.


 இவ்வளவு தூரம் ராவணனைக் கடிந்து புத்திமதிகள் சொன்னாலும் தன்னை அதுவரை ஆதரித்துப் பாதுகாத்தவன் தன் அண்ணன் ராவணனே என்பதைக் கும்பகர்ணனின் உள்மனம் உணர்கிறது. எனவே ராவணன் விரும்பியபடி நடந்துகொள்வதே சரி என அவன் முடிவுசெய்கிறான். உயிர் போகும் என்று தெரிந்தே செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் எண்ணத்தில் போருக்குப் புறப்படுகிறான் கும்பகர்ணன்.


 போர்க்களத்தில் விபீஷணன் வந்து கும்பகர்ணனை ராமன் அணியில் சேருமாறு அழைத்தபோது கும்பகர்ணன் சொல்லும் பதில் அவனது உள்ளத்தை நமக்குப்

புலப்படுத்துகிறது. ‘‘நீர்க்குமிழி போல் என்றேனும் ஒருநாள் எப்படியும் அழியப் போகிற இந்த வாழ்க்கையை விரும்பி நான் உன் அணிக்கு வரமாட்டேன். இத்தனை நாள் என்னை வளர்த்து இன்று எனக்குப் போர்க்கோலம் புனைந்து போருக்கு அனுப்பியவருக்கு உயிர்கொடுப்பதே என் அறம்.’’ என்று தெளிவாக அறிவிக்கிறான் கும்பகர்ணன். திருக்குறள் கூறும் செய்ந்நன்றி அறிதலுக்கு விளக்கமாகவே கம்பன் படைத்த பாத்திரம் என்று கும்பகர்ணனைச் சொல்ல வேண்டும்.


கும்பகர்ணன் ராவணனின் உடன் பிறந்த தம்பி. எனவே ராவணன் கும்பகர்ணனை ஆதரித்ததில் வியப்பில்லை. அது ரத்த பாசம். அதற்கு நன்றியாக உயிரை விட்டான்

கும்பகர்ணன். ஆனால் மகாபாரதப் பாத்திரமான கர்ணன் துரியோதனனின் சகோதரன் அல்ல. அவன் பாண்டவர்களின் சகோதரன். இந்த உண்மையும் இறுதியில்தான் அனைவருக்கும் வெளிப்படுகிறது. ஆனால் போர் நடக்கும் முன்பாகவே, அனைவருக்கும் இந்த உண்மை வெளிப்படுவதற்கும் முன்னால் கர்ணனுக்கு அது சொல்லப்பட்டு விடுகிறது. சொல்பவள் அவன் தாயான குந்தி.


 ‘‘கெட்டவனான துரியோதனனை விட்டுவிட்டு பாண்டவர்களுடன் வந்து சேர்’’ என அழைக்கிறாள் அவள். கர்ணனே அவளின் மூத்த மகன் என்பதால் போரில் வெற்றி பெற்ற பிறகு அவனுக்கு மகுடம் உறுதி என்று கூட ஆசை காட்டுகிறாள். ஆனால் எந்த ஆசை வார்த்தைக்கும் கர்ணன் இணங்கவில்லை. தான் அவமானப்பட்டு நின்ற காலத்தில் தன்னை ஆதரித்து அங்க தேசத்தின் மன்னனாகவும் ஆக்கிய துரியோதனன் அணியில் இருந்து உயிரை விடுவதும் தனக்கு மகிழ்ச்சியானதே என முடிவெடுக்கிறான் கர்ணன். கர்ணனின் செய்ந்நன்றி அறிதல் பண்பு கும்பகர்ணனை விடவும் கூட ஒருபடி மேலானது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract