உறை பனி
உறை பனி


மழலை தனம் மாறாதா பேதை
மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டால்
தாய் தந்தை பாசத்தை பள்ளியில் தேடிய அவளுக்கு
பரிசாக கிடைத்தது பசுமரத்தாணி போல் பதிந்த பாசம்
பள்ளி பருவ நட்பு
தயக்கம் இல்லாத பகிர்வுகள் - நட்பு எடைபோடுவதன்று என்பதை உணர முடிந்ததால்
வஞ்சம் இல்லாத சண்டைகள் -கருத்தை கலங்காது கூறமுடிந்ததால்
அச்சம் இல்லாத கோவங்கள் -அன்பின் அரவணைப்பை அறியமுடிந்ததால்
மழலை மாற இளமை மீற நடந்தது பள்ளி மாற்றம்
மனம் முழுவதும் பிரிவின் பாரம்
புதிய பள்ளியின் ஆர்வத்தை ஆணையிட்டு அடக்கியது
பிரிவை நினைக்கையில் கண்ணில் கசிந்த ஈரம்
புதிய நட்பை சுவாசிக்க மனதில் இடமில்லாமல்
நிரம்பி வழிந்தது முதல் நட்பின் வாசம்
நாட்கள் நகர
அருகில் வரும்
அனைத்து புதிய முகங்களிலும்
மனம் தேடியது என்னவோ முதல் நட்பின் அரவணைப்பையே
மாதங்கள் மேகம் போல் மறைந்த பின்தான் கருத்தில் தரித்தது
நினைவில் நின்றவர்களின் உருவை வெளியே தேடுவது வேடிக்கையென்று
தேடவில்லை .....மாற்று உருவத்தில் அதே அன்பை காண மனம் ஒப்பவில்லை
வருடங்கள் வளர ...கங்காரு கன்று போல் நினைவுகள் எட்டிப்பார்த்து
வாழ்க்கையின் வசந்தத்தை வருடிக்கொண்டிருக்க
இருண்ட காட்டிற்குள்
வழிதேடும் பாதையில்
காற்றிருந்தும் சுவாசிக்க இயலாத புதராய் இருந்த வாழ்க்கை பயணத்தில்
மழைமேகமாய் குளிர்ந்த காற்றுடன் வீசியது அதே நட்பின் நேசம்
இதை எதிர்பார்க்கவில்லை என்று கூட சொல்லமுடியாத புரிதலுடன்
விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது
அதே பள்ளி பருவ பாசம்