புனித விழா
புனித விழா


குங்குமம் சிவக்க
மஞ்சளும் மணக்க
மங்கை ஆனாள்
பெண்மை சிறக்க
பருவம் எய்திய
செய்தியைக் கேட்டு
மாமனும் எடுத்தான்
புனித விழா ......
தட்டில் பழங்களும்
தட்டா சீதனமும்
கொட்டி முழக்கும்
கொட்டின் ஓசையும்
ஊரே வியக்கும்
ஒருபெருங் கூட்டமும்
சீரைச் செய்ய
சிறப்பாய் வந்திட ......
விரித்த பாயில்
அனைத்தும் அமர
மூத்த மாமன்
முறைமாலை போட
அத்தை பூசிய
அரைக்கைச் சந்தனம்
அப்பிக் கொண்டது
அவள் கன்னத்தில் .....
கைக்கு வளையல் காலுக்குக்கொலுசு
படர்ந்து சுற்ற
பட்டுச் சேலை
ஓலைக் குடிசையுள்
ஓரவிழிப் பார்வை
ஏழைப் பிறப்பிலும்
சேலையே சிறப்பாம் ....
ஓடி ஆடியவள்
உட்கார்ந்து விளையாட
பல்லாங்குழி பரமபதம்
தாயம் பல்லிளிக்க
எல்லாம் ஏற்று
இதழோரப் புன்னகையில் ஏரெடுத்துப் பார்க்கும்
எந்தன் கண்மணி .......
புதுநாணம் பூத்தது
பூவிழிப் பார்வையில்
பூவும் புனிதமானது
புதிய தினத்தில்
அப்பா அம்மா
அண்ணன் தம்பி
அனைவரும் இனி
அந்நியம் தானோ ?
இவள் கரம்
பிடித்துக் காப்பவன்
நுதல் பொட்டு
இட்டுச் சேர்ப்பவன்
மகளை ஈன்ற
மகத்தான பெற்றோரை
மணத்தால் பிரித்துச்
செல்வான் இனி
பிறந்த வீட்டை
அடியோடு விடுத்து
புகுந்த வீடே
கதியென வாழும்
பெருமை மிக்கப்
பெண்மை இனம்
வாழ்க வாழ்கவே
வளர்க வளர்கவே.