மனிதம் மரித்த மனிதர்கள்
மனிதம் மரித்த மனிதர்கள்


காட்டில் கம்பீரமாய்
பிரம்மாண்ட உருவாய்
பிரமிக்க வைக்கும் களிறே !
உன் வாழ்விடம் ஆக்கிரமித்தே
வாழும் மனித இனம் !
உன் வாழ்விடத்திற்கு உன் வரவை
தடை செய்யவே -
தந்திரங்கள் பல கையாள்கிறான் !
உணவெனவே உன்னை ஏமாற்றி
வெடி மருந்தினை புகட்டியே
அப்படியென்ன ஆனந்தம் கண்டானோ?
நீயும் மதம் பிடித்தே துரத்தி இருந்தால்
நொடியேனும் உன்னருகில் நின்றிருப்பானோ ?
எவ்வளவு வலியும் வேதனையும் அனுபவித்தாயோ ?
உன் வலியும் வேதனையும் உணர்ந்த உன் சிசுவும்
மண்ணைக் தொடுமுன்னே
வலியை அனுபவித்த கொடுமையென்ன ?
மண் மனிதனுக்கு மட்டுமல்ல என்பதை
உணரத் தான் மறந்து விட்டான் !
பல்லுயிருக்கான வாழ்விடம் இப்புவியெனவே
மனிதன் உணரும் நாளில்
மனிதம் மறந்த மனித இனம்
மண்ணோடு மண்ணாய் போயிருக்கும் !