கிராமத்து கிழவி
கிராமத்து கிழவி


பச்சை வானமே இந்த
பிரபஞ்சத்தின் அநேக விழுக்காடு!
ஆர்ப்பரிக்கும் புல்வெளிகள்..
வேதியல் தாக்கத்தில்
வேடனின் வேகத்தில்
வீழ்ந்துவிடா பறவைகள்!
வாட்டமாய் பெருசுகள்
திண்ணையில் இளைப்பார,
ஓட்டமாய் இருக்கு நடுத்தர வயசு,
சிறியவர் சிரித்து பள்ளி செல்ல,
ஏழாம் எண் பஸ்சுக்கு
கல்லூரி கூட்டம் காத்துக்கிடக்கு!
இத்தன்னைக்கும் இடையில்
ரோட்டோர கிழவி ஒருத்தி
அத்தனையும் அவளது போல்
குலுங்கி சிரிக்கிறாள்...
என்ன ஆயா வியாபாரம் அமோகமோ
நான் சிலவரி உதிர்க்க..
அவள் அனாவசியமாக சொன்னாள்,
பாதிக்கு காசு பாத்தேன்..
மீதிய பிரிச்சி கொடுத்தேன்..
யாருக்கோ என்று கேட்க..!
அவள் முகரேகையும் பாதை காட்டியது.
பாதையில் பண்பாய் பிச்சைக்காரர்கள்
கிழவியின் மறுவாழ்வு மையம்
சீரிய முறையில்!
இதுக்கா இவளோ பெரிய குபேர சிரிப்பு
திரும்ப கேட்டேன் கரும்பு பெண்ணிடம்,
அது இல்ல பேராண்டி,
எனக்குன்னு ஒரு இட்லி வெச்சிருந்தேன..
கை கழுவி நா வாரேன்,
எடுத்துக்கிட்டு போயிடுச்சு அண்டங்காக்க.
அவள் காட்டிய திசையில் நானும் பார்க்க..
கூட்டமாய் பசியாறிக்கொண்டிருந்தன காக கூட்டங்கள்..
அங்க பாரேன் அங்க பாரேன்
சிருசுக்கு எப்படி ஊட்டி விடுது
மீண்டும் சிரித்தாள்
தனகென்பது பறிபோனது உணராத
தன்னலமற்ற கிழவி!