வாலறிவன்
வாலறிவன்


வாலறிவன்
உலகம் தோன்றி சுழலத் தொடங்கியதிலிருந்து, காலம் என்கின்ற நான் எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருந்திருக்கிறேன். உலகத்தின் சுழற்சியால் உருவான நான் அதன் எல்லா மாறுதல்களுக்கும் மௌன சாட்சியாய் இருந்துகொண்டிருக்கிறேன். சிறப்பானவர்களுக்கு என்று என்னை அதிகமாகவும், சிறப்பில்லாதவர்கள் என்று சிலருக்கு குறைவாகவும் என்னை நான் வழங்கியதில்லை. நான் வேகமாகச் செல்வதாகத் தெரிவதும், நகர மாட்டாமல் நின்று கொண்டிருப்பது போல உணர்வதும் என்னைப் பயன்படுத்துபவரின் மனநிலையைச் சார்ந்ததே. இதோ இன்று இந்த இளைஞனின் வாழ்விலும் நானே சாட்சியாய் நிற்கிறேன்.
எந்திரம் போல் பரபரப்பாகச் சுழலும் நகர வாழ்க்கையில் அதன் பற்சக்கரங்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் பல்லாயிரம் இளைஞர்களில் அவனும் ஒருவன். அவன் பெயர் கௌதம், திருமணத்திற்கு ஏற்ற வயது, வயதுக்கு வாகான உடலமைப்பு, வசீகரத்தோற்றம், எல்லோரையும் ஈர்க்கும் பேச்சு, மாற்றாரையும் மதிக்கும் பண்பு.
கௌதம் என்ற பெயர்க் காரணத்தினாலோ என்னவோ, கௌதம புத்தரின் மீது ஒரு தனி ஈர்ப்பு அவனுக்கு, வீட்டு அலமாரியில் சிறியதும் பெரியதுமாக புத்தர் சிலைகள், அலுவலக மேசையின் மேல் அழகான ஒரு புத்தர் சிலை, அவ்வளவு ஏன் அவன் கணினியின், தொலைபேசியின் திரைப் படங்களாகக் கூட புத்தர் தான்.
"'கௌதம்' ஒரு சிறு குறிப்பு வரைக." என்று யாராவது வினா எழுப்பினால், மேற்கண்டவைகள்தான் அதற்கான விடை! :-)
மற்றெல்லா நாட்களையும்போல அந்த மே மாதத்தின் முதல்நாளான அந்த வியாழனும் பரபரப்பாகத்தான் விடிந்தது கௌதமுக்கு, ஏனினில் அனிருத்தின் பரபரப்பான ஒரு பாடல்தான் அவனது "அலாரம் டோன்". முந்தைய நாளின் பணிச்சுமை நீண்ட பின்னிரவின் அசதி 5 நிமிடம் அனுமதி கேட்டது அவனிடம், அதை அவன் அலாரத்துக்கு மொழிபெயர்த்து "snooze"இல் போட்டு பின் அதையும் அணைத்துவிட்டுத் தூங்கலானான். அலாரம் வைப்பதே அதை அனைத்துவிட்டுத் தூங்கத்தான் என்னும் பொது விதி அவனுக்கு மட்டும் பொருந்தாதா என்ன.?
வழக்கமாக வியாழக்கிழமைகளில் காலை 9.30க்கு அவன் அலுவலகத்தில் இருந்தே ஆகவேண்டும், ஏனெனில் முந்தைய நாட்களில் முடித்த பணிகளின் நிலையறிக்கையை வாடிக்கையாளரின் வாராந்திர தொலைபேசி குழுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும், அதைப் பொருத்துதான் அடுத்த வாரத்திற்கான வேலையை அவனுடைய குழுவுக்கும் மற்ற குழுக்களுக்கும் திட்டமிட முடியும்.
ஆனால் இன்று அவன் அலாரத்தை அணைத்துவிட்டுத் தூங்க ஒரு காரணம் இருந்தது, இன்று உழைப்பாளர்கள் நாள் என்பதால் அவனுக்கு விடுமுறை நாள் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமென்று தலையணையை இழுத்தணைத்து தூங்கலானான். அவனுடைய அம்மா கதவைத் திறந்து தேநீர் நிரப்பிவைக்கப்பட்ட "ஃபிளாஸ்க்"கை மேசை மீது வைத்துச் சென்றார். வெளியே தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
அம்மா கதைவைத் திறந்து, தேநீர் வைத்து அறையைச் சுத்தம் செய்து மீண்டும் கதவைத் தாழிடும் வரையில் அவன் காதில் விழுந்த செய்திகளில் "ஒரு நகைக் கடை கொள்ளை", "நான்கு கொலைகள்", "அரசியல்வாதியின் பொய்த் தகவல்", "மது அருந்தி வானம் ஓட்டி எதிரே வந்த வண்டியின் மீது மோதியதால் இருவர் பலி", "இரண்டு பாலியல் வன்கொடுமை செய்திகள்".
பொய், களவு, கொலை, கொள்ளை, காமம் என்ற வரிசையில் அமைந்த இந்தச் செய்திகள் அவனுக்கு புத்தரின் போதனைகளை நினைவூட்டின, லேசாகக் கண்விழித்து மேசை மீதிருந்த புத்தர் சிலையைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு கண்மூடினான். அறையின் நிசப்தம் மீண்டும் அவனை உறக்கத்தில் ஆழ்த்தியது.
கண்கள் உறக்கம் கொண்டது, ஆனால் அகம் விழிப்புற்றது. கௌதம் தனது அகக் கண்களால் எதையோ காண்கிறான். ஏதோ ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது, அழகான, ஆழமான மற்றும் அகலமான அந்த ஆறு சலனமற்று அதன் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வாற்றின் கரைகளுள் அமைந்திருந்த தூய்மையான ஒரு துறையில் இருந்து அதனினும் தூயவராய் ஒரு மனிதர் வெளிப்படுகிறார். அப்போதுதான் குளித்து முடித்து தூய்மையான உலர்ந்த துவராடை அணிந்து, தனது வலது கையில் தானப் பாத்திரத்தையும், இடது கையின் மீது ஈரத்துணிகளையும் கொண்டு மேலேறி வருகிறார்.
அந்தத் தூய மனிதரின் வரவுக்காக கரை மீது ஒருவன் காத்திருக்கிறான். நவ நாகரீக ஆடையலங்காரம் உடல்மொழி என்று அந்த நிகழ்விடத்திற்கு சற்றும் பொருந்தாதவனாய் நிற்கிறான். கௌதமின் அகக் கண்கள் "லாங் ஷாட்"டில் இந்தக் காட்சிகளை பதிவு செய்துகொண்டிருப்பதால் அவர்கள் யாராக இருக்குமென்று சரியாக யூகிக்க இயலவில்லை ஆதலால் அகக்கண்களைச் சற்று "ஜூம்" செய்து ஒரு "மிட் ரேஞ்சில்" பொருத்தி அவர்களைத் தொடர்கிறான்.
இப்போதுதான் எல்லாம் தெளிவாக விளங்குதிறது, சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆறு நிரஞ்சனா ஆறு, அதில் குளித்து முடித்து துவராடை உடுத்தி தானப் பாத்திரம் ஏந்தி வந்த அந்தத் தூயவர், போற்றுதலுக்குரிய மாமனிதர் புத்தர். கரையின் மீது காத்து நிற்பவன் வேறு யாருமல்ல நம் கௌதமன் தான். புத்தர் சூழ் உலகில் வாழும் கௌதமனுடைய கனவில் புத்தர் வராமல் புது நடிகையா வருவார்.?
இப்போது ஆர்வம் அதிகமாகி அகக்கண்கள் இன்னும் நெருக்கமாக அவர்களை பின்தொடர்கிறது. கௌதமர் தன் தானப் பாத்திரத்தை கௌதமனிடம் கொடுத்துவிட்டு தனது ஈரத்துணிகளை உலர்த்துகிறார், பின்னர் கரையில் அமைந்துள்ள அழகான சால மரத்தின் அடியில் இருக்கும் சமமான தூய பாறையின் மீது அமர்ந்து கௌதமனை அழைத்து அருகில் அமர்த்துகிறார்.
"நீ என்னைக் காண வந்ததன் நோக்கம் என்ன?"
"அய்யா நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகன், உங்களை பற்றி நிறைய படித்தறிந்திருக்கிறேன். உங்கள் போதனைகளையும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் உங்கள் காலத்தில் நீங்கள் தேவைப் பட்டதை விட இப்போது தான் நீங்கள் அதிகமாகத் தேவைப் படுகிறீர்கள். எனவே உங்களை அழைத்துச் செல்வதற்காகவே நான் வந்துள்ளேன். எனவே அருள்கூர்ந்து என்னுடன் வாருங்கள்"
"ஏன் உங்களிடத்தில் உங்களை சீர்திருத்தி நல்வழியில் நடத்திட ஒருவருமே இல்லையா?"
"உங்களைப் போன்று எல்லோராலும் விரும்பப் படக்கூடியவர்கள் யாருமில்லை என்றே தோன்றுகிறது, எனவே தான் உங்களையே அழைக்க வந்தேன்."
"என்னை வெறுக்க மாட்டார்கள் என்று உனக்கு நிச்சசயமாகத் தெரியுமா?"
"ஆம் அய்யா, கண்டிப்பாக உங்களை எவரும் வெறுக்க மாட்டார்கள். நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்"
"இல்லை. பரபரப்பான உங்கள் வாழ்க்கை முறையில் கொஞ்சம் விரிவாக நான் பேசினாலே 'என்ன இவன், இப்படி அறுவை போடுகிறான்' என்று நீயே வெறுக்க ஆரம்பித்துவிடுவாய். எல்லோரும் என்னை விரும்புகிறார்கள் என்று உனக்கு எவ்வாறு தெரிகிறது?"
"திரும்பும் திசையெங்கும் சிறியதும் பெரியதுமான உங்கள் சிலைகளை ஆர்வமுடன் வாங்குகின்றனர். தங்கள் தொலைபேசி, கணினி ஆகியற்றில் உங்கள் படங்களையும், போதனைகளையும் வெகுவாக "ஷேர்"செய்கின்றனர். உடைகளில் கூட உங்கள் உருவத்தை பதித்து அதனை அணிந்து மகிழ்கின்றனர். ஏன் நானே கூட அவ்வாறு செய்கிறேனே.."
புத்தர் ஆழ்ந்து யோசித்துவிட்டு, ஒரு முடிவுடன் கௌதமனை நோக்கிக் கேட்கிறார்.
"சரி 'புத்தர்' என்ற என் பெயருக்கான காரணம் தெரியுமா..? தமிழில் அதற்கு என்ன பொருள்."
"சித்தார்த்தர் என்ற மனிதராய் இருந்து, மானுடத் துன்பம் நீக்க அரும்பாடு பட்டு பெற்ற புத்தறிவின் காரணமாக நீங்கள் 'புத்தர்' ஆனீர்கள். தமிழில் "அறிவன்" என்பதுதான் அதற்கான பொருள்" என்று விரைந்து பதிலிறுத்தான் கௌதம்.
புத்தர் பேசத்தொடங்கினார்.
"உண்மை, நானே எல்லாவற்றையும் பரிசோதித்து மக்களுக்கு நன்மையானவைகள் எவையோ அவற்றையே என் அறிவாகப் பெற்றேன். அதையே போதிக்கவும் செய்தேன். அந்த போதனைகள் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் அறிவு பெற்று அதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவருமே "அறிவனாக" ஆகவேண்டுமென்பதுதான் என் விருப்பம்.
பொய், களவு, கொலை, கொள்ளை, மிகுகாமம் இவற்றை தவிர்த்து "அறிவின் பாதையில் செல்லுங்கள்", "அறத்தின் பாதையில் செல்லுங்கள்", ஒருவரோடு ஒருவர் இணக்கமாக "குழுக்களாக செயல்படுங்கள்" என்று அறிவித்தேன். அவைகள் தான் முறையே "புத்தம்", "தம்மம்", "சங்கம்" என்பதாகும். ஆனால் என் பெயரை சொல்லியே மக்களிடையே பகையுணர்ச்சியும், கொலைகளும் அரங்கேறுகின்றன என்பது எனக்கு இழைக்கும் அநீதியாகவே கருதுகிறேன்.
புத்தன் என்பது வெறும் உருவத்தில் அடங்கி விடுவதல்ல, அறத்தின்பாற்பட்ட அறிவே புத்தனாகும். ஏடறிந்த வரலாற்றில் "அங்குலிமாலா" போன்ற கொடும் கொலையாளி, மனிதர்களின் அங்கங்களை வெட்டி மாலையாய் அணிந்தவன், அவனையே என்னால் ஒரு பிக்குவாக மாற்ற முடிந்தது என்றால், அவற்றை அவன் தனது அறியாமையினால் செய்தான். நன்மை, தீமைகளைப் பகுத்தறியாத காலமது. அறத்தின் வழி நின்ற அறிவை அவனுக்கு போதித்ததால் அவன் அறிவு பெற்று அவனும் "அறிவன்" ஆனான்.
ஆனால் இன்று உங்கள் காலத்தில் பல "அங்குலிமாலா"க்கள் இருக்கின்றீர்கள், நீங்கள் நவீனமானவர்கள், உடலின் பாகத்தை மாலையாய் அணிவதில்லையே தவிர, சக மனிதர்கள் மீதான வெறுப்பு, வஞ்சகம், பொறாமை, அளவில்லாத கோபம், பேராசை போன்றவைகளை எப்போதும் மாலை போல் தங்களது மனதிலேயே சுமந்து கொண்டுள்ளீர்கள்.
இவற்றை நீங்கள் அறியாமையில் செய்வதாக எனக்குத் தோன்றவில்லை ஏனெனில் என் காலத்திலும் எனக்கு பின்னரும் பல்வேறு "அறிவர்"கள் தோன்றி பல்வேறு அறக்கருத்துக்களை போதித்துள்ளனர். அவைகள் எளிதில் உங்கள் உள்ளங்கைகளில் தவழும் காலம் உங்களுடையது. ஆனாலும் இத்தகைய செயல்கள் நடைபெறுவது உங்களுக்கு அறத்தின் மீதான நம்பிக்கையின்மையையே காட்டுகிறது. அறத்தின் மீது நம்பிக்கைகொண்டு அறிவின் பாதையில் செல்வீர்களேயானால் நீங்கள் ஒவ்வொருவரும் புத்தரே, நான் உங்கள் காலத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை. இவற்றையெல்லாம் விடுத்து என் உருவத்தை மட்டும் நீங்கள் போற்றுவதால் ஒரு நன்மையையும் வராது. " என்று கூறி முடித்தார்.
கௌதமனுக்கு என்ன சொல்வதென்று பிடிபடவில்லை, வாயடைத்து சிரம் தாழ்ந்து அமர்ந்திருந்தான்.
"வெகு நேரமாயிற்று போல, என்னைத் தேடி ஆனந்தரும் உபாலியும் வருகிறார்கள். நான் செல்கிறேன், நீயும் அவர்களை சந்தித்துவிட்டு உன் காலத்திற்கு திரும்பிச் செல்" என்றார் புத்தர்.
இயல்பு நிலைக்குத் திரும்பிய கௌதமன், ஆனந்தருக்கும் உபாலிக்கும் தனது மரியாதையை செலுத்திவிட்டு புத்தரிடம் கேட்டான்..
"ஐயா ஒரு செல்ஃபி!!!"
என்று சொல்லி தனது திறன்பேசியை எடுக்க முயலும் வேளையில், வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது..
"டேய் அண்ணா.. இன்னைக்கு காலைல கடைக்கு போகணும்னு நேத்தே சொல்லி இருந்தேன் இல்ல, எந்திரிச்சு கிளம்பறயா இல்ல தண்ணி புடிச்சி மேல ஊத்தவா" என்று தங்கை கோபத்தோடு கத்திக்கொண்டிருந்தாள்.
புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!