STORYMIRROR

மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

தவிர் - நிமிர்

தவிர் - நிமிர்

9 mins
0

                                     “தவிர்- நிமிர்” - மதுரை முரளி

              “அற்புதம்” பெயர் தாங்கிய பங்களா பளபளப்பாய்  வெள்ளை நிறத்தில் தனியாய்  ஜொலித்தது.

               பத்தடி உயர தானியங்கிக் கதவுகள் மற்றும்  80 அடி காம்பவுண்டு சுவர்களால் பங்களாவின் முன்எல்லை வகுக்கப்பட, 

              உள்ளே நுழைந்ததும் ,பச்சைப்பசேல் புல்வெளிகள் காலை இதமாய் வருட, வலப்பக்கம் சுதந்திரமாய் அசைந்தாட எட்டடி  அகல ஊஞ்சல்.

             “ ரேவதி, வா.. வாசல் பக்கம் போகலாம். இன்னிக்கு வெளில, நல்ல ‘குளு,குளு’ ன்னு காலநிலை..” என மனைவியை அழைத்தார் கிருபாகரன்.

             “ இதோ வர்றேங்க..” சொல்லியவள், வேலைக்காரிக்குச் சில வீட்டு வேலைகளைப் பணித்துவிட்டு, ஊஞ்சலை அடைந்தாள்.

             “ என்னங்க, கொஞ்சம் வேகத்தைக் குறைங்க. நானும் உட்காரணும் .” என மனைவி சொல்லியதும்,

              பிரபாகரன் தன்னுடைய ஊஞ்சல் ஆட்டத்தைச் சில வினாடிகளில் கால் ஊன்றி நிறுத்த, அதில்  உந்தி ஏறினாள் ரேவதி.

             “  நம்ம பையன் வினயன் , மருமகள் ராஜியைப் பார்க்கிறதுக்காகக் காலையிலேயே போனான். இன்னிக்கு அதுக்குள்ளேயே இருட்டிப்போச்சு. எப்ப வருவானோ?..” கிருபாவின் குரலில் சற்று ஏக்கம்.

           “  அட விடுங்க. மாசமாயிருக்கிற மனைவி ராஜியைப் பார்க்கத்தானே போயிருக்கான். ஒருவேளை, இராத்திரி அங்கேயே தங்கிட்டு கூட வரலாம்..” ரேவதி மெல்லச் சிரிக்க,

         “ ம்., அம்மாகிட்ட குழந்தைகள் சொல்ற விவரங்களை, அப்பா கிட்ட எப்போதுமே சொல்றதே இல்லை. இதுதான் அப்பாவின் உறவு நிலை..”

கிருபா சோகமாய்க் கூறினார்.

         “ ஆமா, அப்பாக்கள் என்னிக்குப் பொறுமையா, குழந்தைகள் கிட்ட பேசுறீங்க?  எப்பப் பார்த்தாலும், ‘ அதைச் செய், இதைச் செய்’ னு உத்தரவு போட்டா எப்படி? உங்க அகராதியில, ‘அன்பு’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தேடணும்..” ரேவதி கணவனைக் கடிந்து கொண்டாள்.

     “ ம்., அதை விடு. பல அப்பாக்கள் தன்னுடைய படிப்பைப் பாதியிலேயே தொலைச்சு , சிறு வயசிலேயே வேலைக்குப் போய், பாடுபட்டு உழைச்சு பணம் சேர்ந்தாலும், அவங்களுக்குக் கிடைக்கிற மதிப்பு, மரியாதை கம்மி தான். என்னையவே ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்க.  நான் பெரிய பொறியாளரா வேலை செஞ்சேன். கோடிக்கணக்கில் சம்பாதிச்சு, இப்ப என் பையனைப் பெரிய கோடீஸ்வரனா உயர்த்தியிருக்கேன். உன்னையும் தான். இதுக்கு என்னோட தனிப்பட்டத் திறமை தானே காரணம். ஒத்துக்கிறியா?..” கிருபா தன் நீண்ட உரையை நிறுத்த,

      “ உண்மைதான். ஆனாலும், எனக்கு என்னமோ நீங்க லஞ்சமா சம்பாதிச்ச காசுல, நாம சுகமா இருக்குது பிடிக்கலை. என் மனசு எப்போதுமே உறுத்துது. அதே சமயம் , உங்களைத் தடுக்குற சக்தி எனக்கு அப்பவும் இல்ல, இப்பவும் இல்லை..” எனச் சற்று சோகமாய் கணவர் கிருபாவின் தோளில் ரேவதி சாய,

      “அட அசடே! ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ங்கிற   பழமொழியைப் படிச்சதோட, அதை என் வாழ்க்கையில் கடைபிடிச்சதினாலத்தான், நமக்கு இந்த பங்களா, ரெண்டு கார் , திசைக்கு ரெண்டு ஏக்கர் நிலம் அப்படின்னு, ஒய்வுக்குப் பின்னாடி  வாழ்க்கை நிம்மதியாப் போகுது. எதைச் செய்தாலும் சூதானமா, சூத்திரத்தோடச் செய்யணும். அதுதான் என்னுடைய பாலிசி. ஹா.. ஹா. என்ன? “  தன்  தவறை நியாயப்படுத்தினார் கிருபா.

      “ சரி, விடுங்க . எல்லாருமே அவங்க, அவங்க செயலை, நியாயப்படுத்த தான் முயற்சிப்பாங்க.  நம்ம மருமகள் ராஜிக்கு நல்லபடியா குழந்தை பிறந்து, நம்ம குடும்பத்துக்கு வாரிசு வரணும்..” 

     “ ஏண்டி இப்படி புலம்பற? வரப்போறது ராஜா வீட்டு கண்ணுக்குட்டி. ஞாபகம் வைச்சுக்கோ. அப்புறம், என் கூடவே பணியாற்றி, ஓய்வு பெற்ற என் நண்பன் சத்யன்  பக்கத்திலேயே வாசுகி நகருக்கு வந்திட்டதா தகவல்  சொன்னான். ஆனா, அவன் வேலை செய்யும் போது தன் பெயருக்கு ஏத்தமாதிரி பிழைக்கத் தெரியாம இருந்தான்..." மீண்டும் சிரித்தார் கிருபா.

      “ ரொம்ப தப்புங்க . உங்களுடைய இந்தப்பேச்சு எனக்குப் பிடிக்கலை.  நேர்மையா வாழ்ந்தா தப்பா என்ன? நீங்க அடிக்கடி அவரைப் பத்தி மட்டமா பேசாதீங்க. இப்ப எதுக்கு இதைச் சொல்றீங்க?..”

     “ ஹ., அது. அவனோட ஓய்வு தினத்தில் கூட,  ஒரு நல்ல வீட்டை ஒழுங்கா  கட்ட முயற்சிக்கலை. ஏன்னு கேட்டா., நாம இப்ப இருக்கிற உயர்ந்த நிலையில , தேவையில்லாம ஒப்பந்தக்காரங்க, நமக்கு உதவி பண்றேன்னு சொல்லி,  பல தொந்தரவுகளைத் தருவாங்க. அதுக்கு நாம இடம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி, கடைசி வரை வீடு கட்டவே மறுத்திட்டான் அவன் . ஆனா, நான் ஒப்பந்தக்காரங்க உதவியிலேயே, இந்தப் பெரிய வீட்டையே கட்டி முடிச்சேன். என் புத்திசாலித்தனம், சாமர்த்தியம் எப்படி?..” என மமதையாய்ச் சிரிக்க,

      “ போதும், போதும். உங்க சுயபுராணம், தம்பட்டத்தைக் கொஞ்சம் நிறுத்துங்க. என் மனசுக்குள்ள ஏதோ ஒரு கவலை மெல்லிசா ஓடிக்கிட்டே இருக்கு...” என ஊஞ்சலை நிறுத்தி இறங்கினாள் ரேவதி.

      அதே சமயம்,  கிருபாகரனின் அலைபேசி அலற , மறுமுனையில் மகன் வினயனின் குரல் பதட்டமாய்.

       “ அ.,அப்பா..”

       “ டேய் வினையா,  என்ன ஆச்சு?..” கிருபாகரன் குரலிலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

        “அ..அப்பா ரொம்ப காலதாமதமாயிடுச்சேன்னு என் வண்டியை விரட்டி வந்தேன்.  நம்ம வாசுகி நகருக்குப் பக்கத்தில, ஒரு சின்ன பையன் குறுக்கே வரப்போய் நான் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்த முயற்சி பண்ணினேன்.  அதில , அங்கேயிருந்த ஒரு வீட்டு வாசல்ல போய் மோதிட்டேன்..”  மூச்சு வாங்கியபடி பேசினான் வினயன்.

       “ அடடா,  உனக்கு வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே? வீட்டுக்கு ஏதாவது சேதம்னா  பணம் கொடுத்து சரி பண்ணிடலாம். அப்பா பார்த்துக்கிறேன். நீ ஒண்ணும்  கவலைப்படாதே.” என்ற கிருபாகரனை,     

       “ என்ன பேச்சு பேசுறீங்க? எப்பப் பார்த்தாலும் பணம், பணம்னு. இப்ப பையன் எங்கே, எப்படி  இருக்கான்னு  முதல்ல கேளுங்க.. “ என்றவளாய் கணவனிடமிருந்து செல்போனைப் பறித்த ரேவதி,

     “ டேய் வினையா, பதட்டப்படாதே.  எங்கே இருக்கே? அந்த ஏரியாக்காரங்க ஒரு மாதிரியான ஆட்களாச்சேடா. உன்கிட்ட பிரச்சனை பண்ணலையா?..”

    “ நல்லவேளைம்மா. அப்பாவுடைய நண்பர் சத்யன் சார் தான், வேகமாக வந்து என்னைக் காப்பாத்திட்டார். இப்ப, அவர் இந்தப் பகுதியிலதான் இருக்காராம். அவங்ககிட்ட சேதத்திற்குத் தகுந்த மாதிரி பணம் தர்றோம்னு சொல்லி சமாதானம் பண்ணிட்டாரு. அப்பாவை முதல்ல அவருக்கு போன் போட்டு நன்றி சொல்லச் சொல்லுங்க.  அவர் இல்லைன்னா, நிச்சயம்  எனக்கு தர்மஅடிதான் கிடைச்சிருக்கும்.”

     “  சரி, சரி. பத்திரமா வீட்டுக்கு வந்து சேரு..” என அழைப்பைத் துண்டித்த ரேவதி,

       “ உங்க நண்பர் சத்யனைப் போய் , பிழைக்கத் தெரியாதவர்னு  சொல்லுவீங்களே. அவர்தான் நம்ம பிள்ளையைக் காப்பாற்றி, பிழைக்க வச்சிருக்காரு. பையன் சொன்னபடி,  முதல்ல அவருக்குப் போன் போடுங்க. நீங்களும், உங்க பணமும்...ம்ஹும்..” சலிப்பாய் சொல்லியபடி உள்ளே நகர்ந்தாள் ரேவதி.

சத்யன் வீட்டில் -- 

        “ என்னங்க, எதுக்கு திடீர்ன்னு வெளியில ஓடிப்போனீங்க?..” மனைவி பூர்ணிமா வினவ,

        “ என் நண்பன் கிருபாவோட பையன் வினயன் வந்த பைக் மோதி ஒரு சின்ன சம்பவம் ஆயிடுச்சு. நல்லவேளை, நான் போனதால, அவனைக் காப்பாத்தி பிரச்சனையில்லாம, நம்ம இடத்தைவிட்டு  அனுப்பி வைச்சேன். “ என நடந்த விபரத்தைக் கூறி,  நிம்மதிப் பெருமூச்சொன்றை விட்டார் சத்யன்.

        “ நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே, கிருபாகரன் சார் பையனா அவன்?. இருந்தாலும், வாகனத்தில் போகும் போது கூடுதல் வேகம் கூடாதுங்க. ஆனா, அவங்கக்கிட்ட பணமான, பணம் இருக்கு . அதான், பையன் வளர்ப்பில கட்டுப்பாடு இல்லை.  இதில, உங்க நண்பர் அடிக்கடி உங்களை மட்டமா வேற பேசி, அலுவலகத்துல கேலியும் கிண்டலும்  செய்வார்னு சொல்லியிருக்கீங்களே..” மனைவி பூர்ணிமா.

       “ அ.. அது என்னமோ உண்மைதான் . அவரோட குணம் அப்படி.  என்ன செய்ய? நம்மளால முடிஞ்சா நாலு பேருக்கு  நல்லது செய்யணும். குறைந்தபட்சம் கெடுதல் நிச்சயமா செய்யக்கூடாது. இப்படி வாழ்றதுதான் நல்ல வாழ்கை.  என் கொள்கையும் கூட. அதே மாதிரி,  எப்படியும் சம்பாதிக்கலாம் அப்படிங்கறது அவருடைய வழி. நேர்வழியில் மட்டும்தான் சம்பாதிங்கிறது என்னோட வழி. என்ன சரியா?..”  வாய்விட்டுச் சிரித்தார் சத்யன்.

        “ இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும். 

          இவர்போல யாரென்று  ஊர் சொல்ல வேண்டும்..”

           என  அலைபேசி பாடி அழைக்க,

     நண்பன் கிருபாவின் பெயர் அலைபேசித் திரையில்.

   “ அடடே கிருபா, உனக்கு ஆயுசு நூறு. நானே உன்னையக் கூப்பிடலாம்னு நினச்சேன்..” சத்யன் கூற,

    “ ரொம்ப நன்றிப்பா என் பையன் தகவல் சொன்னான். அவனுக்கு பிரச்சினை வராம, நீதான் காப்பாத்திட்டியாம். எனக்கு ஆபீஸ்லேயும்  ரொம்ப உதவியாக இருந்தே. இப்ப என் பையனுக்கும் உதவியா இருக்கே...” என கிருபாகரன் சிரிக்க.,

     “ நன்றி எதுக்குப்பா? வீட்ல எல்லோரும் நலமா?  உன் பையனைக் கொஞ்சம் சூதானமா வண்டியை ஓட்டச் சொல்லு. என்ன?..” சத்யன்.

     “ நிச்சயமாச் சொல்றேன். ஆனா என்னைய மாதிரி அவனும் வேகமானவன். ஆமா சேதம் எவ்வளவு? பணம்  எவ்வளவு கொடுக்க வேண்டி வரும்? அதுக்கு  நான் தயார். எனக்குப் பணம் பெரிய விஷயமேயில்லை...”

     “ அது., சின்னச் செலவு தான். நல்லவேளை, உன் பையன் பைக்கை அவங்க வீட்டுக்குள்ள விடலை. நான் அவங்ககிட்ட பேசிட்டு, அவசியம்னா சொல்றேன். பொதுவா எங்க பகுதியில,  என்னுடைய வார்த்தைக்கு நல்ல மதிப்பிருக்கு. அதுக்கு நான் இங்கே செய்யற சில சமூக சேவையும் காரணம் . சரி, அதை விடு. ஆமா, மருமகளுக்கு எப்ப  பிரசவம்?..”

     “  இப்பதான் அஞ்சாம் மாசம் நடக்குது. குடும்பத்தில எனக்கு பிரமோஷன் கிடைத்ததும், உனக்குத் தான் முதல் விருந்து.”  சொல்லியவராய் அலைபேசி அழைப்பைத் துண்டித்தவர், மனைவியைப் பார்த்து சாமர்த்தியமாய் சிரித்தார் கிருபாகரன்.

      “ நம்ம பையன் உங்களை மாதிரி ரொம்ப அவசரக்காரன். எப்படியோ உங்க நண்பர் புண்ணியத்துல தப்பிச்சுட்டான்..” எனச் சொல்லும்போதே வினயன் வண்டி வேகமாய் போர்டிக்கோவில் நுழைந்தது.

      “ டே., டேய் வினையா, உனக்கு ஒன்னும் அடிபடலையே..” பதட்டமாய் ரேவதி.

      “ எனக்கு ஒன்னும் இல்லைம்மா. நம்ம வண்டியை மாத்தறது நல்லது. புது வண்டிக்கு நேரம் வந்துருச்சு போல..” எனப் பலமாகச் சிரித்தான் வினயன்.

      “ ஆமாடா. இனிமே , நமக்கு எல்லாமே புதுசு புதுசா வரப்போகுது. ஏதோ ஒரு விளம்பரத்துல வர்ற மாதிரி.. புது வண்டி, புது வீடு, புது வாரிசு  இப்படி..” என கிருபாகரனும் தன்னுடைய மகனின் சிரிப்பில் பலமாய்க் கூட்டணி அமைக்க,

     ரேவதியின் மனசுக்குள் மட்டும் இனம்புரியாக் கவலை வந்து அழுத்தியது.

     அடுத்த வாரம் அமைதியாய்க் கழிய,  புதிய நாள் புயலாய் விழித்தது கிரபாகரனுக்கு.

     ஏற்கனவே லஞ்ச வழக்கொன்றில், தன்னுடைய பணிக்காலத்தில் குற்றம் சாட்டப்பட்டிந்த கிருபாகரனுக்கு,  வழக்குத் தொடர்பான மேல் விசாரணைக்கான சம்மன் வந்து சேர்ந்தது.

     “ எ.,என்னங்க எல்லாம் சரியாயிடும். எல்லாத்தையும் சரி செஞ்சுட்டேன்னு  சொன்னீங்க. இனி, கவலைப்பட ஒன்னுமில்லைன்னு சொன்னீங்க..”  மனைவி ரேவதி கவலையாய்.

    “ அ.,அது நம்ம வக்கீல் மூலமாத்தான் சரி பண்ணினேன். கவலைப்படாதே. அரசாங்கத்தில இதெல்லாம் ஒரு சாதாரண நடைமுறை. எப்படியும் இந்தத் தடவை மட்டும்தான், நாம நீதிமன்றத்திற்குப் போக வேண்டியிருக்கும். அப்புறம் அவசியமே இருக்காது. “ என  மனைவி ரேவதியை மேலோட்டமாகச் சமாளித்தாலும், உள்ளுக்குள் உதறல் எடுத்தது கிருபாகரனுக்கு.

    “ என்னங்க, உங்ககிட்ட நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். நேர்மை வழியில் சம்பாதிக்கிற  பணமே  கையில தங்கமாட்டேங்குது. அடுத்தவங்களை ஏமாத்தி, அவங்க வயித்தில அடிச்சு நாம வாழ வேண்டாம்ன்னு பல முறை எச்சரிச்சேன்..” மனைவி ரேவதி.

   “  போடி பைத்தியக்காரி. இப்பப்பாரு,  நாம கண்ணை மூடினாலும், நாலு தலைமுறைக்கும் சேர்த்து, சொத்து சேர்த்து இருக்கேன்.  ஆனா,  என் நண்பன் சத்யன் மாதிரி நேர்மையாக வாழ்ந்து,  ஒரு வீடு கட்டவே  படாத பாடு பட்டான் தெரியுமா? அதுவும் மாசாமாசம் இ.எம்.ஐ கட்டவே திணறிப் போனான். அவன் ஒரு பிழைக்கத் தெரியாதவன்..” கிருபாவின் குரலில் அநியாயமும் அதர்மமும் அலட்சியமாய்த் தென்பட,

     “ இல்லைங்க.  நம்ம வாரிசு நல்லபடியா பிறந்து வளரணும். உங்களோட இந்தப் போக்கு எனக்குப் பிடிக்கலை. ‘அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”  எனப் புலம்பினாள் ரேவதி.

     “ சரி., சரி விடு . நாம நாளைக்கு  நீதிமன்றத்திற்கு 10 மணிக்கெல்லாம் போகணும். சீக்கிரமா வழக்கை முடிக்கச் சொல்லி, நம்ம தரப்பு வழக்கறிஞர் கிட்ட நான் பேசறேன் .. “ என மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி தன் தரப்பு வழக்கறிஞரிடம் பேசினார் கிருபாகரன்.

      அடுத்து வந்த மாதங்களில் வழக்கு விசாரணை சூடு பிடித்தது.     

      கிருபாகரனுக்கு எதிரான சாட்சியங்கள் வலுப்பெற்றன. கிருபாகரன் தரப்பு வாதங்கள் எல்லாம் எடுபடாமல் பொய்த்துப் போனது .

      அதே சமயம் , சத்யனின் வீட்டில்..

     “ என்னங்க, நம்ம பையன் வெளியூர்ல எல்லாம் வேலை பார்த்திட்டு , இப்ப  நம்ம ஊருக்கே மாற்றலாகி வந்திருக்கான். இன்னிக்கு அவனோட அலுவலகத்தில, ஒரு முக்கியமான நிகழ்வாம். அதுக்கு, நம்மள வரச் சொன்னானே,  நாம எப்போ போகணும்?..’ மனைவி பூர்ணிமா .

      “ஓ! அதுவா, மதியம் மூணு மணிக்கு மேல வரச்சொன்னான். உன்னையும் அவசியமா வரச்சொன்னானா? ஆனா, அவனோட வேலைக்கு நடுவில, நம்ம கூட நேர்ல பேச முடியாது. அவனோட பதவி அப்படி...” என சத்யன் கூற

      “ பையன் ரொம்ப ஆசைப்படறான். அவசியம் போவோங்க. நம்ம பையனை நாமளே  ஊக்குவிக்கலைன்னா, அப்புறம் எப்படி?..” மனைவி பூர்ணிமா.

      “ சரி, சரி போவோம்.அப்புறம்,  நாம கூடிய சீக்கிரமே பெரிய வீட்டுக்கு மாறணுமாம். அடுத்ததா பதவி உயர்வு வருதுன்னும் சொன்னான். அப்ப, இந்த வீட்டை வாடகைக்கு விட்டுடலாம். இனி நமக்கு நல்ல காலம்தான்..”

சொல்லும் போதே சத்யனின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

     மாவட்ட நீதிமன்றம் பரபரப்பான சூழ்நிலையில் மதிய உணவு இடைவேளையைக்  கடந்து, நீதியரசரின் வருகைக்காகக் காத்திருந்தது    

    அவரின் வருகையை, டபாலி அறிவிக்க, சில நிமிடங்களில் நீதிமன்ற அறை அமைதியாகிப் போனது.

    நிதானமாய் நடந்து  வந்து கூண்டில் ஏறிய நீதியரசர் அவர்கள், அவருடைய இருக்கையின் பின்புறம் சுவரில் தொங்கிய தேசத்தந்தைப் படத்தை சில வினாடிகள் வணங்கி, இருக்கையில் அமர்ந்து பேசத் தொடங்கினார்.

   அதே சமயம், குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற கிருபாவின் முகத்தில் சோகமும், பயமும் கலவையாய்.

   “ என்னுடைய தீர்ப்பை வாசிக்கும் முன், குற்றம்  சாட்டப்பட்டுள்ள கிருபாகரனுக்குத் தன் தரப்பு கருத்து ஏதும் இருந்தால், இந்த நீதிமன்றத்தில் சொல்லலாம்..” என  வாய்ப்பொன்றை வழங்கினார் நீதியரசர்.

      அதனைப் பதிவு செய்யுமாறு சுருக்கெழுத்தருக்கு உத்தரவிட , அவரும் தயாரானார் .

       “ மாண்பமை நீதிபதிக்கும்,  இந்தப் புனிதமான அறையில் கூடியுள்ள அனைவருக்கும் வணக்கம். என்னுடைய இரண்டு நிமிட கருத்தைப் பதிவு செய்ய, தயவுசெய்து அனுமதி தாருங்கள்..” என கிருபாகரன் வேண்ட,

       “ ம்.,சொல்லுங்க..” என நீதியரசர் அனுமதி தந்தார்.

       “ நான் பெரிய பதவியில் இருந்த அரசு அதிகாரி. பதவியும், பணமும் செல்வாக்கும் என்றுமே நிரந்தரம்னு தவறா நம்பி ஏராளமான சொத்துக்களை முறைகேடா சேர்த்து,  குறுகிய காலத்திலேயே நிறைய வசதிகளை அடைந்தவன். இப்படித் தவறா சம்பாதிச்சு, இப்ப எல்லோர் முன்னாடியும் குற்றவாளியாக நிற்கிறேன்.

         என்னுடைய இன்றைய வாழ்க்கையில, என் கூட, இப்ப யாருமே இல்லை. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வரை,  நல்லாயிருந்த என் ஒரே மகன், இப்ப பைக் விபத்தில, மருத்துவமனையில் நினைவில்லாமக் கிடக்கான். அவனுக்கு யாரையுமே அடையாளம் தெரியலை. என் மருமகளுக்கும் ஏழாம் மாசத்தில கருச்சிதைவாகி ரொம்ப பரிதாபமா இருக்கா. இதுக்கு நடுவுல,  எனக்கு ஓய்வூதியம் மட்டுந்தான் வருது. மற்ற ஓய்வூதியப்  பணமெல்லாம் அரசாங்கத்து கையில. வர்ற ஓய்வூதியமும், வயோதிககால வியாதிகளுக்கு மருத்துவம் பார்க்கவே பத்த மாட்டேங்குது. அநியாயமா லஞ்சம் வாங்கி,  வசதியாக வாழ்ந்தவனோட நிலைமை இப்படி பரிதாபமா மாறிடுச்சு..” மேலே பேச முடியாது தொண்டை அடைத்துப் போய் இருமத் தொடங்கினார் கிருபா.

        “ அவருக்குக் குடிக்க தண்ணி கொடுங்க..” என நீதியரசர் அனுமதி வழங்கவே, 

          டம்ளர் தண்ணியைச் சப்பியவரின் கண்களில் குளமாய்க் கண்ணீர்.

         “ ரொம்ப, ரொம்ப நன்றி.” நீதியரசரைப் பார்த்துக் கும்பிட்ட கிருபாகரன், மேற்கொண்டு தொடர்ந்தார்.

      “  எனக்கு, இப்ப  ஒரு கைதி நிலை. என் பாவங்கள் எனக்குத் தண்டனைகள் தர, எனக்கு முன்னாடி தயாராக நிற்குது. எத்தனையோ இலட்சங்களை , லஞ்சமாக சம்பாதிச்சேன். மனசாட்சியில்லாம கொள்ளையடிச்சவன் இந்த பாவி. நான் இப்ப அனாதை. என் மனைவி எவ்வளவோ நல்ல புத்தி சொல்லியும், நான் கேட்காததினால, அந்த அன்புத் தெய்வம்  என்னை விட்டுட்டுப் போயிட்டா..” என்றவாறே எதிர்பக்கம் நின்ற தன் மனைவியைச் சுட்டிக்காட்டி,

      “ ஆமா. என் மனைவியே , எனக்கு எதிரா இந்த வழக்கிலஅப்ரூவரா மாறிட்டா. இதுதான் என் வாழ்க்கையில , எனக்கு ஆண்டவன் கொடுத்த பெரிய தண்டனை. என் நண்பன் பல தடவைச் சொன்னான். 

          “லஞ்சம் தவிர் ; நெஞ்சம் நிமிர் .”

      அப்பெல்லாம் அவனைப் பிழைக்கத் தெரியாதவன்னு பலமுறை கேலி செஞ்சிருக்கேன் . அதுக்காக, அவன்கிட்ட  நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” எனத் தலையில் அடித்தவாறே,கிருபாகரன் கதற, ஒரு நிமிடம் நீதிமன்ற அறையே அதிர்ந்துப் போனது.

      கண்களை மறைத்த கண்ணீருடன், கையெடுத்துக் கும்பிட்டவாறே நீதிமன்ற அறையைச் சுற்றிப் பார்த்தார் கிருபாகரன்.

     அவசர, அவசரமாய் முகத்தைக் கையால் மறைத்தபடி வெளியேறும் நண்பன் சத்யன் , கிருபாவின்  பார்வையில் தெரிய,

      “சத்யா , உன்னுடைய சத்தியம் தான் உயர்ந்தது. எனக்கு இப்பத்தான் புரியுது. உன்னையக் கேலி பண்ணினதுக்குத் தயவுசெய்து என்னை மன்னிச்சுடு...” எனக் குரல் உடைந்து கூண்டில் அப்படியே சரிந்த கிருபாகரன்,

        தன் அப்பாவைப் பெயர் சொல்லி அழைத்ததும், கண் கொட்டாமல் வியப்பாய் பார்த்த நீதிபதி ராஜா,

       கிருபாகரனின் தண்டனைக்கான தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

       மனதுக்குள் தன் அப்பா சத்யனின் நேர்மை பாலாய்ப் பொங்க, அவரது தீர்ப்பில் அதன் வீரியம் ‘அற்புதமாய்’ வெளிப்பட்டது.

                                                0-0-0




இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Classics