mariappan velayutham

Romance Classics

3  

mariappan velayutham

Romance Classics

புதிய சாகுந்தலம்

புதிய சாகுந்தலம்

8 mins
570


பெளர்ணமிக் கற்றையொளி அடர்ந்த காடு; இரவின் யெளவனம் காட்டின் அழகை மெருகூட்டியது. மனிதர்களின் பாதங்கள் மிதிபடாத பாதைகள் நீண்டு நீண்டு ஒரு பர்ணசாலைக்கு இட்டுச் சென்றன.


மான்களும் பூக்களும் தரைவரை படர்ந்த மரங்களின் கிளைகளும், செடிகளும் சுற்றிவளர்ந்த தவசாலையிலிருந்து அந்த அழகிய மங்கை சிரித்துக்கொண்டு ஓடிவர, பின்னாடி அவளது தோழிகள் துரத்திக் கொண்டுவர, காடு மோகனத் தீவாகத் தெரிந்தது. மோகமூட்டும் நிலவின் முத்துச் சிதறலில் அவளின் தேகம் பிரமன் வரைந்த தேவதை ஓவியமாக ஒளிர்ந்தது.


இடையில் மேகலை, இளமை ததும்பும் இனிய மார்புகளை மறைத்த கச்சை, பால்போன்ற பாதங்கள் ஒலிக்கும் சலங்கைக் கீதங்கள், கைகளில் பூட்டிவைத்ததால் வசீகர வனப்பு கூடிய வளைகள், சங்குக் கழுத்தில் சங்கமித்து ஆடும் சந்தனநிறத்துப் பொன்மணி ஆபரணங்கள், சாமந்திப் பூக்கள் அணிந்து சரிந்துக்கிடக்கும் கூந்தல்…. மற்ற யுவதிகள் மத்தியில் அவளொரு தனித்தீவாய்த் தெரிந்தாள்.


அவள் சாகுந்தலா; காளிதாசன் காவியத்தில் பாடிய கதாநாயகி; கண்வ மகரிஷியின் வாத்சல்யத்தில் வளர்ந்த வண்ணக்கொடிப் பேரழகு மகள்.

“ஏய், நில்லு, நில்லு, சாகுந்தலா,” என்று தோழிகள் கூக்குரல் எழுப்பிப் பின்னாடியே ஓடிவர, தென்றலில் மிதக்கும் தேன்மலர் போல, மேகங்கள் துரத்தும் மோகநிலாப் போல, சாகுந்தலா ஓடிக்கொண்டே இருந்தாள்.


நேரமும் ஓடிக்கொண்டிருந்தது. திசை தப்பிய மானைப்போல மருட்சிகொண்ட கண்களில் மண்டிக்கிடக்கும் அச்சத்துடன் சாகுந்தலா உடனே நின்றாள்; பின்னால் திரும்பிப் பார்த்தாள். யாருமில்லை. சற்று தொலைவில் அருவி ஆர்ப்பரிக்கும் ஆரவாரம் சன்னமாய்க் கேட்டது.

”ஐயகோ, வெகுதொலைவில் வந்துவிட்டோமே!,” என்று அச்சத்தால் அழகிய மார்புகள் ஏறியிறங்க, கண்கள் கலங்க ஆரம்பித்தன. திரும்பி நடந்தாள். பாதத்தில் திடீரென்று ஒரு முள் குத்த, அதை எடுக்கத் தலைகுனிந்தவள், ஏதொவொரு உருவத்தின் நிழல் பட, துணுக்குற்றாள். சற்றுத் தூக்கிய நிலையில் அந்தரத்தில் நின்ற அவளின் பாதத்தில், ஓர் ஆண் முள்ளை எடுத்துக் கொண்டிருந்தான். வெடுக்கென்று அவனது கையைக் குனிந்து தட்டிவிட்டு கோபம் பொங்கிய கண்களோடு பேசினாள்.


சினத்தில் துடிதுடித்த, வியர்வை அரும்பிய அவளின் உதடுகள் அசைந்து ஏதோ பேச முற்பட்டதும், அவள் கண்களே உதடுகளைத் தடுத்தன. வந்திருப்பவன் காந்தர்வன் போல இருந்தான். அவன் கண்கள் சிரித்தன. தலையில் மணிமகுடம்; தோளில் அம்பறாத்தூணி; நீட்டிக் கொண்டிருக்கும் அம்புகள்; கவசத்தை மீறி கர்வத்துடன் விம்மிய மார்புகள்; கைகளிலும் காதுகளிலும் மின்னிய பொன்னாபரணங்கள்; தடித்த உதடுகளில் வெடித்த புன்னகை; ராஜகுமாரனைப் போன்று அணிந்திருந்த ரம்மியமான ஆடைகள். யார் இவன்; தேரில்லாத மன்னனா? நாகரிகம் தேராத நரனா?

அவள் தட்டிவிட்டதைப் பொருட்படுத்தாமல் அவள் கால்களில் குத்திய முள்ளைத் தட்டிவிட்டான் அவன்.


பின் எழுந்து நின்றவனைப் பார்த்ததும் சாகுந்தலா பேசினாள். “ஐயா! ஆடவன் நீர். ஆண்வாசனை அற்ற ஒரு சின்னஞ்சிறுப் பெண்ணிடம் இப்படியா நடந்துகொள்வது?”

கடகடவென இடியென சிரித்துவிட்டு, “ஆண்வாசனையற்ற ஒருத்திக்கு, பெண் வாசனை அற்ற ஒருவன்தானே பொருத்தம்; ஏனடி பெண்ணே! இதில் உனக்கென்ன வருத்தம்?”

“ஆ! என்னவொரு துணிச்சல்! நான் யாரென்று தெரியுமா?”

“நான் யாரென்று தெரியுமா?”

“நீர் என்ன மன்மதனின் தூதுவரா? இல்லை காமன் பாட்டுகளை ஓதுபவரா?”

“அழகாய்ப் பேசுகிறாய் பெண்ணே! நான் ஒரு மானைத் தேடிவந்தேன். இறுதியில் இங்கே உன்னைச் சந்தித்தேன்.”

”பெண்மான் ஒன்றிற்காக பெருமான் பொன்மானைத் தேடித் தன்மானம் இழந்து நின்ற கதை உமக்குத் தெரியாதா?”

“தெரியும். அது பொன்மான்; மாயமான்; புன்மை செய்யவந்த மான். ஆனால் இதோ நான் அடைந்த மான் பிரமன் படைத்த சித்திரம். ஒரேவொரு தடவை பிரம்மா தம்வேலையை மிக நேரத்தியாகச் செய்திருக்கிறார். பிரம்மாதம்!”


அவனது சொல்லழகைப் பார்த்து சொக்கிப் போன கண்களுடன் ஏறிட்டுப் பார்த்தாள் சாகுந்தலா. உதடுகளைச் சுழித்து, “நன்றாகத்தான் பேசுகிறீர்,” என்று சொல்லிவிட்டு கண்களைத் தாழ்த்தி தரையில் பாதத்தால் ஓவியம் வரைந்தாள் ஓவியம் நிகர்த்த உயிரோவியம்.


“பெண்ணே! நான் துஷ்யந்தன். இந்நாட்டு மன்னன். மணம் புரியாதவன். மணம்புரிய மனமில்லாமல்தான் இருந்தேன், இந்தக் கணம் வரை,” என்று சொல்லி நிறுத்தி, புன்னகை விகசித்த பூவையின் பொன்முகத்தைப் பார்த்தான். உட்பொருள் உள்ளத்தில் தைக்க, தையல் விழிகள் தரைநோக்கி படர்ந்தன.


மெளனம் நிரம்பிவழிந்த அந்தக் கணம் உறைந்தது. காலம் திக்பிரமை அடைந்து நகர மறந்தது; நகர மறந்தனர் நலங்கிளர் பேதையும், நல்ல மன்னனும்.

நான்கு விழிகள் ஒரே கோணத்தில் நேருக்குநேராய்ச் சந்தித்தன. அவன் கண்களுக்குள் ஏதோவொரு மாயாஜாலம் நிகழ்வது போன்று தெரிந்தது. இரவுமழை முடிந்தபின்னும் இலைகளிருந்து சொட்டும் நீர்த்துளிகள் போல அவள் கண்கள் கொட்டிக் கொண்டிருந்தன, உச்சரிக்காத வார்த்தைகளை; பதிலுக்கு அவன் இமைகள் அந்த வார்த்தைகளை எடுத்து புதிய கவிதையை வார்த்தெடுத்து வைத்துக் கொண்டன. இரண்டு இதயங்கள் காலத்தின் ஊடாக பயணித்து கனவுப்போதையுடன் சுற்றிச் சுற்றி வந்து அண்டவெளி கொண்ட ஒளிக்குள் மண்டிக்கிடந்தன.


மல்லிகை, முல்லை, சாமந்திப் பூக்களால் கட்டிய அணைமீது அவர்கள் அமர்ந்தனர். நிலாவின் கலாப்பூர்வமான நிர்மல ஜோதி பாதி மேகங்களில் மறைந்து, மீதி மட்டும் அவர்களை வந்தடைந்தது; பாதி இருள், பாதி ஒளி மேவிய அந்தப் மலர்மெத்தைமீது ஆளுக்கொரு பாதியை தங்களுக்குள் பந்திவைத்தனர்; நாளைக்கு என்று மீதிவைக்க விரும்பாத விருந்து அல்லவா அது!

நிலவின் சாட்சியில், நித்திய அழகுகொண்ட காட்டின் சாட்சியில், மான்களின் சாட்சியில், மதுமலர்க் கொடிகளின் சாட்சியில், திகட்டாத அமிர்தம் அருந்திய தேவர்களின் சாட்சியில் அரங்கேறியது காலத்தை வென்ற காந்தர்வமணம்.


நெஞ்சு முழுவதும் துஷ்யந்தனை எடுத்துப் பரப்பிக்கொண்ட எழில்மிகு ஏந்திழை சாகுந்தலா மன்னனின் மணிமார்பில் தன்னைப் பன்னீராய்த் தெளித்துக் கொண்டாள். மயங்கிக் கிடந்தாள் இப்போது, முதலில் தயங்கி நின்றவள். முடிந்தது உறவு; விடிந்தது இரவு. கணையாழியைப் பரிசாகக் கொடுத்துவிட்டு தன்னை அரசவையில் வந்து பார்க்கும்படி சொன்னான் மன்னவன்.அரவமின்றி நிகழ்ந்த இரவு உறவில் இதயத்தில் நிறைந்தவன் பிரிகின்றான் எனும்போது அரவம் தீண்டியது போல அரற்றினாள் சாயாத அழகுடைய சாகுந்தலா.


முடிவில் பிரிந்தான் முடிமன்னன்; மடுவில் விழுந்த நீராய்ச் சரிந்தாள் முனிவன் திருமகள்.

காலம் ஓடியது, யாருக்கும் காத்திருக்காமல். காத்திருந்தாள் சாகுந்தலா, காதல்மன்னன் வருவான் என்று; காலம் கனியும் என்று. பெற்றெடுத்தாள் ஒரு பிள்ளை, இதற்கிடையில். 

ஒருநாள் தன்னை அழைத்த துர்வாச முனிவரின் குரலைக் கேட்காமல் பேசா மடந்தையாக சாகுந்தலா இருந்ததால், யாரைப் பற்றிய ஞாபகங்களின் அலைகளில் அவள்மனம் பயணித்துக் கொண்டிருந்ததோ அவன் இவளை மறக்கக்கடவது என்று முனிவர் சாபமிட்டார்.


தன் மழலைச் செல்வத்தை, பால்மணம் மாறாத தன் பாலகனை அழைத்துக் கொண்டு ஒருநாள் சாகுந்தலா ராஜ சபைக்குச் சென்றாள். கலைந்த கேசமும், கண்ணீர் காயப்படுத்திய கண்களும் அவளின் அழகைக் குலைத்துவிட, சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த துஷ்யந்தனின் முன்னால் நின்றுகொண்டு, அவள் சொன்னாள்: “ஐயன்மீர்! நான் உமது மனையாட்டி. இவன் தங்கள் குழந்தை.”


துர்வாசரின் துர்ச்சாபத்தினால் அனைத்தையும் மறந்திருந்த துஷ்யந்தன் சொன்னான்: “பெண்ணே! நீ யாரென்றே எனக்குத் தெரியாது. இவன் எப்படி என் குழந்தை ஆவான்?”

சாகச் சொல்லும் அந்த வார்த்தைகளில் சாகுந்தலா நாகம் தீண்டியது போல அதிர்ந்தாள்.

என்னவாயிற்று துஷ்யந்தனுக்கு? மோகம் கொண்ட ஒரு மோகன இரவில் தாகத்தோடு வந்து தன்னைத் துய்த்த இந்த துஷ்யந்தன் காதலை மறந்தான்; கன்னியைக் காந்தர்வ மணம் புரிந்ததை மறைத்தான்.

என்னவாயிற்று?

ஐயோ! கானலாகிப் போனதா காதல்? நாணம் கெட்டு நானும் இந்த ராஜசபையில் வந்து நின்றேனே!

கண்ணீர்ப் பெருக்கெடுக்கக் காலத்தில் உறைந்து நின்றாள் சாகுந்தலா.

துஷ்யந்தா!

என்ன உன் பிரச்சினை?

ஒன்றுமில்லை.

ஜஸ்ட் அம்னீசியா.

             

சடாரென்று விழித்துப் பரக்கப் பரக்கப் பார்த்தாள் வத்சலா. விடி லைட்டின் சன்னமான வெளிச்சத்தில் கடிகாரத்தைப் பார்த்தாள். அதிகாலை மணி நான்கு.

உடல்முழுக்க வேர்த்துக் கொட்டியது. ஃபேன் கிர்கிர் என்று ஓடும் சத்தம் வழக்கத்தைவிட அதிகமாகவே ஒலித்தது.


துஷ்யந்தனுக்கு அம்னீசியாவா? என்று உதடுகள் முணுமுணுத்தன. ஏனிந்த கனவு இந்நேரம்? அலையலையாய் அடித்த நெஞ்சுக்குள் ஏதொவொரு கனத்த பொருள் இறங்கி அவளைப் படபடக்க வைத்தது. வழக்கம்போல இந்தக் கனவும் பலித்து விடுமோ?

ஜெயதேவ்தான் ஒருவேளை துஷ்யந்தனோ?

காட்டில் ஒரு மான் துரத்த தான் வேர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டிருப்பது போலவும், திரும்பிப் பார்க்கையில் அது புலியாக மாறுவது போலவும், ஒரு கணநேரத்து அமானுஷ்யக் காட்சி கண்களுக்குள் படபடக்க உடல்முழுவதும் குலுங்கித் தூக்கியடித்தது.


ஜெயதேவ்! அன்புக் காதலனே! இந்நேரம் நீ என்ன செய்துகொண்டிருப்பாய்? நான் அங்கே உனக்குள் எப்படி இருக்கிறேன்?

இதழின் ஓரத்தில் சிறுபுன்னகை மலர, எழுந்தாள்.

இந்த வருடம் வரும் மேமாதத்தோடு அவளது எம்எஸ்சி மைக்ரோபையாலஜி படிப்பு முடிகிறது. படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் பண்ணிக் கொள்வதாகச் சொல்லியிருந்தான் ஜெயதேவ். மூன்றுவருடக் காதல் இதோ சில மாதங்களில் முடியப் போகிறது.


வகுப்பு முடிந்து அண்ணாப் பல்கலைக்கழகத்தில் வாசலில் அவள் காத்திருக்க, திருவான்மியூர் டைடல் பார்க்கில் வேலைசெய்யும் ஜெயதேவ், ஹீரோ ஹோண்டாவில் விர்ரென்று வந்து பிக்கப் செய்ய, அவனது தோளோடு தோள் உரசி, ஸ்பீடு பிரேக்கரில் அவன் பிரேக்கை அழுத்திப் பிடிக்க, அவன் பிடறியில் அவளது முகம் குலுங்கி அழுத்த, சந்தடிச் சாக்கில் அதில் ஒரு பறவையின் லேசான அலகு ஸ்பரிசம் போல முத்தம் கொடுக்க, கனத்த ட்ராஃபிக்கிலும் ஒரு கிளுகிளுப்பு உணர்வு உடலுக்குள் மின்னலைப் போல ஊடுருவ…. இறுதியில் மாயா ஜால் திரையரங்கிலோ, அல்லது கோவளம் பீச்சிலோ நாளின் இறுதிப் பொழுதைக் கழிக்க, மைலாப்பூரில் அவளது வீட்டுக்குச் சில வீதிகளுக்கு முன்பாகவே அவளை இறக்கிவிட்டு, பாதியிருட்டு பாதிவெளிச்ச வீதியில் அவளது உதடுகளில் சன்னமாய் ராத்திரி மழைச் சாரலைப் போல முத்தமிட்டு ‘பை’ சொல்லி அவன் விர்ரேன்று விரைந்து போய்விட, பின் அந்த ராத்திரியில் மாலைநேரத்து காதல் வைபவத்தை ரீவொய்ண்ட் பண்ணிப் பண்ணி ரசித்து ரசித்துச் சுவைக்க, திருமணத்திற்குப் பின் இப்படியான நிகழ்வுகள், திருட்டுத்தனமும், கிளுகிளுப்பும் நிரம்பிவழியும் நேரங்கள் கிடைக்குமா?

ஜெயதேவ், ஐ லவ்யூடா செல்லம் என்ற முணுமுணுப்போடு அவள் எழுந்து அன்றைய தேர்வுக்கான புத்தகங்களை கட்டிலின் பின்புறமிருந்த ராக்கிலிருந்து எடுத்து விரித்து வைத்தாள்.


”டெலோமியர் இஸ் எ காம்பவுண்ட் ஸ்ட்ரக்சர் அட் த எண்ட் ஆஃப் க்ரோமோசோம்”

எழுத்துக்களின் ஊடாக கண்கள் பயணிக்கும் போது, துஷ்யந்தனும் சாகுந்தலாவும் கட்டிப்பிடித்து நடனமாடினர் மைக்ரோபையாலாஜி பாடத்தில்.

“நீ யாரென்று எனக்குத் தெரியவில்லை”

அதிர்ச்சியோடு வத்சலா ஏறிட்டுப் பார்த்தாள். ஜெயதேவ் கவசம் அணிந்து, கிரீடம் அணிந்து, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறான்; எதிரில் சாகுந்தலா கண்ணீரோடும் விசும்பலோடும். இல்லை. அது நான்; அது நான்.


“என்னடி நான் நான்னு முணுமுணுக்கற. புத்தகத்தில் அப்படியா எழுதியிருக்கு?” என்று கேட்டபடியே அறையிலிருந்து வெளியே வந்தாள் அம்மா.

நாக்கைக் கடித்துக் கொண்டு தலையைத் தொங்கப் போட்டாள் வத்சலா.

பதிலுக்குக் காத்திராமல் சமையலறைக்குள் சென்றாள் அம்மா. காலையிலும், மத்தியானமும் வத்சலாவுக்குப் பரீட்சை. புளியோதரையோ தயிர்ச்சாதமோ ஏதொவொன்று தயார்செய்து சம்படத்தில் கொடுத்தனுப்ப வேண்டும்.


வத்சலாவின் அப்பா ஏ-ஜி ஆபிஸில் வேலைசெய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் போய்விட்டார். அப்போது வத்சலா பிளஸ்-டூ. புருஷனின் பென்சன் பணத்திலும், அவர் விட்டுச் சென்ற இந்த ஆதிகாலத்துச் சொந்த வீட்டிலும் காலம்கழித்துக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு வத்சலாதான் வாழ்க்கை; அவளது வாழ்கைதான் கனவு.

மறுபடியும் மனது வலிப்பது போலிருந்தது வத்சலாவுக்கு. புத்தகப் பக்கங்களில் எல்லாம் ஜெயதேவ் கிரீடத்தோடும், வாளோடும் வந்து சாகுந்தலாவை, இல்லை இல்லை, வத்சலாவை, ‘யார் நீ’ என்று சாட்டையடி கொடுக்கிறான்.


சீ! என்ன இது? ஒருவேளை அதிகாலை பலித்துவிடுமோ? பிளஸ்-டூ படிக்கும்போது அவள் ஒருநாள் இரவு கனவு கண்டாள், அப்பா இறந்துவிடுவது போல. மறுநாள் காலையில் அப்பா வாசலில் மாலைகளோடு உறங்குவது போல கிடத்திவைக்கப் பட்டிருந்தார். முன்பு ஒரு முறை அவள் அம்மாவிடம் சொன்னாள்: “அம்மா, நேத்து ராத்திரி திருச்சி சித்தி செத்துப் போவதுமாதிரி கனவு கண்டேன் மா”.

அன்று மாலையிலேயே தந்திவந்தது. கனவு பலித்தது. அம்மா வத்சலாவை ஒருமாதிரிப் பார்த்தாள். “கருநாக்கு” என்று சொல்வது போல இருந்தது அந்தப் பார்வை.

அதே போல ஜெயதேவ் விசயமும் ஆகிவிடுமோ? தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டு அந்த எண்ணத்தை அடித்து விரட்டினாள். போன வாரம், மியூசிக் அகாடமியில் சாகுந்தலா நாடகம் பார்த்த ஞாபகத்தின் விளைவு இது என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

                        

”பெங்களூரில் இருக்கிறேன்; அப்பாவுக்கு உடம்புச் சரியில்லை; வர நான்கு நாளாகும்,” என்று வாட்ஸ் அப்பில் வந்த ஜெயதேவ்வின் மெசெஜைப் பார்த்ததும், தேர்வறைக்குள் செல்வதற்கு மனம்வரவில்லை. ஆனாலும் எழுதியே ஆகவேண்டும். முக்கியமான தேர்வு.

ஜெயதேவ்வின் பெற்றோர்க்கு அவன் ஒரேமகன். அப்பா ரிட்டயர்டு ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர். அம்மா பெங்களூர் பள்ளியில் கன்னட ஆசிரியை.


சென்னையில் கடந்த மூன்று வருடங்களாக டைடல் பார்க்கில் வேலை செய்யும் ஜெயதேவ் வத்சலாவை ஒரு நண்பனின் திருமணத்தின் போது பார்த்தான். அவனது மெல்லிய பேச்சு, சிரிக்கும் போது உதடுகள் பிரியாமல் சிரிக்கும் அழகு அவளை அவனிடம் கட்டிப் போட்டன. நீலநிற ஜீன்ஸ் பேண்ட்டிலும், சிகப்பு டி சர்ட்டிலும் அவன் அரவிந்த்சாமியைப் போலத் தெரிந்தான்; செக்கச்சிவந்த வானம் அரவிந்த்சாமியல்ல; ரோஜாப் படத்து அரவிந்த்சாமி.

அவளது தோழியின் திருமணம் அப்போது. அகஸ்மாத்தான முதல் அறிமுகம், எச்எம்எஸ், வாட்ஸ்அப், போன் கால்கள் ஆகியவற்றின் ஊடாக ஒரு நட்பாக மலர்ந்து பின் காதலாகிப் போனது.


இன்று மாலை வெறுமையான பொழுதுதான்; தேர்வு முடிந்து 5பி பிடித்து நேராக வீடு போய்ச் சேரவேண்டியதுதான். பரீட்சைமுடிந்து பல்கலைக்கழக வாயிலுக்கு வந்த போது ஏதொவொரு ஹீரோகோண்டா விர்ரென்று வந்து நின்றது. ஒருகணம் துணுக்குற்ற வத்சலாவின் மனம் ஜெயதேவ் என்று நினைத்து துள்ளிக் குதித்தது.

ஆனால் அவளுக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஒருபெண் நேராய் வண்டியருகில் சென்று அவனின் முதுகில் தட்டிவிட்டு, ஏறிச்சென்றாள்.


மனம் துவண்டது. வாழ்க்கையே ஒருகணம் வெறுமையாக, அர்த்தங்களை எல்லாம் களைந்துவிட்டு நிர்வாணமாக நின்றது; நிர்வாணமாக! ஆம்; அவள் முதன்முதலில் நின்றதுபோல. ஜனவரி ஆரம்பத்தில் அவன் ரொம்ப கட்டாயப்படுத்தியதால், காலேஜ் டூர் என்று அம்மாவிடம் பொய்சொல்லிவிட்டு, கொடைக்கானலுக்கு அவனுடன் சென்று, ஓர் அந்தரங்க அறையில், அவன் ஆசைப்பட்டு கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டதால் தன்னை வெட்டவெளியாக்கிக் கொண்ட, மறக்கமுடியாத அந்த இரவு அவளது மார்புகளில் அந்த இரவு ஒளிந்து கொண்டு மனம் தீப்பற்றி எரியும் போதெல்லாம் மேலும் நெய்வார்த்தது.

ஆயிற்று; நான்கு நாட்கள் தாண்டி, ஒரு வாரமாகி, ஒரு மாதம் ஆயிற்று. ஜெயதேவ்வின் செல்போன் ஏதோ ஒரு கல்லறைக்குள் போய்ப் படுத்துக் கொண்டது போல.

அழைப்புகளுக்கும் பதில் இல்லை; செய்திகளுக்கும் பதில் இல்லை; பதிலாக எதிர்முனையில் ஒரு கனத்த மெளனம்; சுவாசம் அற்றுப்போன தேகம் போல;

என்னவாயிற்று அவனுக்கு. துஷ்யந்தன் கனவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ?

                    

பல்கலைக் கழகத்து காண்டீனில் டீ குடித்துக் கொண்டிருந்தபோதுதான், ஏதோ முன்பின் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் சேதி வந்தது: “ஜெயதேவ் மலர் மருத்துவமனையில்.”

மேலும் எந்த விவரமும் இல்லை. அப்படியென்றால் ஜெயதேவ் சென்னைக்கு வந்து நாளாகிவிட்டதா? ஏன் அவன் வந்து என்னைப் பார்க்கவில்லை? என்னவாயிற்று அவனுக்கு?

ஆட்டோ பிடித்தாள். மத்திய கைலாஸ் சிக்னலில் தெரிந்த சிகப்பு வெளிச்சம் கண்ணை உறுத்தியது. “யார் நீ பெண்ணே?” “யார் நீ?” “உன்னை நான் பார்த்ததில்லையே.” துஷ்யந்தன் கண்கள் சிகப்பாக மின்னின.


வத்சலா துப்பட்டாவால் கண்களை மூடிக் கொண்டு தலைகுனிந்து இருந்தபோது, “மேடம், மலர் ஆஸ்பிட்டல்,” என்று டிரைவரின் குரல்கேட்டு இறங்கி ஆட்டோவை கட் பண்ணிவிட்டு உள்ளே விரைந்தாள். ரிசப்ஷனில் விசாரித்து அரக்கப்பரக்க படிகளில் ஏறி ஓடினாள். பதற்றத்தில் அவளுக்கு லிப்டைப் பயன்படுத்தத் தோன்றவில்லை.

அந்த அறைக்குள் நுழைந்தவுடன் படுக்கையில் மல்லாக்கக் கிடந்தான் ஜெயதேவ். அவனைப் பார்த்ததும் கண்களில் நீர் பொங்கிவர மெல்ல அடியெடுத்து நடந்து அவனருகே சென்றாள்.


சாகுந்தலாவின் முகத்தில் ஏக்கமும், எதிர்பார்ப்பும் குமிழியிட கைகளைக் கூப்பி அரச சபையில் கலைந்த தலையும், உடையுமாய் நின்றிருக்கிறாள்.

தலையை ஆட்டியவாறு குனிந்து ஜெயதேவ் முகத்தையே உற்றுப் பார்த்தாள்; தூங்கிக் கொண்டிருந்தான். நோயின் தடமே தெரியவில்லை; வழக்கமான ட்ரிப்ஸ் கருவிகள், இசிஜி எந்திரம் என்று ஏதுமில்லை; அறை காலியாகவே இருந்தது.

அவளின் கண்ணிலிருந்து கொட்டிய நீர்த்துளிகளில் ஒன்று தப்பி அவன் முகத்தில் விழுந்தது. அவன் கண் திறந்தான். மலங்க மலங்க விழித்தான்.


தலையைத் தூக்கி அவளை ஏறிட்டுப் பார்த்தான். ஏதொவொரு அந்நியனின் பார்வையாகத் தெரிந்தது. அவளைப் பார்த்ததும் அவனது கன்னங்கள் குழிவிழ, கண்களில் மின்னலடிக்க, உதடுகளில் சுழிப்பெடுத்து வீழ்த்திவிடும் அந்தப் புன்னகை அவனிடம் இப்போது இல்லை. ஒரு வெறுமை இருந்தது; தெருவிலோ, சினிமா தியேட்டரிலோ, ரயில்வே ஸ்டேசனிலோ அகஸ்மாத்தாகக் கண்கள் ஒருகணம் பார்த்து அர்த்தமற்று திரும்பும் ஏதொவொரு வழிப்போக்கனின் பார்வை அது.

”ஜெயதேவ், ஜெயதேவ்,” என்று சன்னமாக முணுமுணுத்தாள்.

அவள் முகத்தையே சற்றுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அவன் சொன்னான்:

“யாரு மேடம் நீங்க?”

                 

கறுப்புநிற ஹோண்டாய் கார் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

ஸ்டீயரிங் வீலை கையில் பற்றியபடியே, அருகில் உட்கார்ந்திருந்தவளின் தொடையில் கைவைத்துப் புன்னகைத்தான் ஜெயதேவ்.

“ஹலோ, மிஸ்டர். திஸ் இஸ் நாட் யுவர் கியர். அம்னீசியா போல வேசம் போட்டது இன்னும் தொடருதா?”

“தெரியும், கோடீஸ்வர நாயகி, தேவகி! என் வருங்கால மனைவியே. தாங்ஸ். நல்ல ஐடியா கொடுத்த. ”


Rate this content
Log in

Similar tamil story from Romance