பத்தாங்கிளாஸ் ஃபெயில்.....
பத்தாங்கிளாஸ் ஃபெயில்.....


கவிதாவின் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஏன் பேசவில்லை?? தவித்துப் போனாள். திருமணமானது முதல் பத்து வருடங்களாக இன்று வரை அன்பை அருவி போல் கொட்டிய பாசக்காரக் கணவன் ஏன் இன்று பாரா முகம் காட்டுகிறான்?? என்னவாக இருக்கும்?? வேலைப்பளு வா??? அதீத உடல் உழைப்பால் வந்த களைப்பா?? வேறு யாரும் அவர் மனதில் இடம் பிடித்து விட்டார்களா?? நினைக்கவே நெஞ்சம் பதறியது. முகத்தை என் பக்கமாக வலுக்கட்டாயமாகத் திருப்பினாலும் வெடுக்கெனத்திருப்பிக் கொள்கிறாரே??
நல்ல வேலை. போதுமான சம்பளம். வேறென்ன இருக்கும்??
அன்று முழுவதும் மனதைக் குடைந்து தள்ளியது துக்கம். பகலில் போடும் குட்டித் தூக்கமும் வரவில்லை. ஏன்?ஏன்? ஏன்?
ஆபீசுக்குப் போன் செய்யலாமா??
செய்யும் தொழிலே தெய்வம் என்பவராயிற்றே . திட்டுவாரே...என்ன செய்யலாம்?? யோசித்து யோசித்து எப்படியோ எப்போதோ கண்ணயர்ந்தாள்.
காலிங் பெல் சத்தம் கேட்டு வாரிச் சுருட்டி எழுந்து பாய்ந்து வந்து கதவைத் திறந்தாள்.
கணவருடன் வேலை பார்க்கும் நெருங்கிய நண்பர் தனசேகர் தான் வந்திருந்தார். குணாவுக்கு கொஞ்சம் வேலை இருக்காம். முடிச்சிட்டு வர்ரானாம். பத்திரமா கதவைப்பூட்டிக்கம்மா....
என்றார்.
சரி அண்ணே!
இவருக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்குமே! கேட்கலாமா??
தயங்கித் தயங்கிக் கேட்டே விட்டாள்.
அட..என்ன பொண்ணுமா நீ?? உனக்கு விஷயமே தெரியாதா??
குழம்பினாள் கவிதா.
என்னதுண்ணே?? சீக்கிரம் சொல்லுங்க...நெஞ்சு படபடன்னு அடிச்சிக்குது....
சிரித்துக் கொண்டே நண்பர் உன் புருஷன் இந்த முறையும் பத்தாங்கிளாஸ் பெயில். இந்தமுறை பாசாலேன்னா வச்சு செஞ்சுருவேன்னு மிரட்டினியாமே அதான்... உம்மூஞ்சில எப்படி முழிக்கிறதுன்னு ரொம்ப சங்கடப்படறான். எங்கிட்ட ஐடியா கேட்டான். நான் சொல்லிட்டேன். பாசோ பெயிலோ சொல்லிடு அதான் நலலதுன்னு. வரேன்மா என்றுவிட்டுப் போனார்.
கவிதாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. வரட்டும் இன்று. அன்பைக் கொட்டி அடுத்தமுறை பாசமாக வைக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள்.