anuradha nazeer

Classics

4.6  

anuradha nazeer

Classics

பிட்டுக்கு மண்சுமந்த கதை

பிட்டுக்கு மண்சுமந்த கதை

2 mins
148


எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைதான் இது. மதுரையம்பதியை அரிமர்த்தன பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி செய்தபோது, அவரிடம் வாதவூரார் என்கிற மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்துள்ளார். அப்போது, தங்கள் படைக்குப் புரவிகள் வாங்குவதற்காக, ஏராளமான பொன்னும் மாணிக்கக்கற்களும் பொக்கிஷதாரரிடமிருந்து பெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கிப் பயணப்படுகிறார் மாணிக்கவாசகர். திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோவில் செல்லும்போது, குருவாக சிவபெருமானையே சந்திக்கிறார். சிவஞானபோத தீட்சையைப் பெற்று, அமைச்சர் சிவனடியார் ஆகிறார். குதிரை வாங்கப்போன அமைச்சர், சிவனடியாராகி, கோயில்கள் கட்டும் பணியில் செல்வத்தை எல்லாம் கரைப்பதை ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாசகரைச் சிறைபிடிக்கிறான்.


ஆவணி மூலத்தன்று குதிரைகளோடு வருவதாக சிவபெருமான் மாணிக்கவாசகரைச் சொல்லச் சொல்லுகிறார். அமைச்சரும் சொல்லிவிட்டுக் காத்திருக்கிறார். ஆவணி மூலம் வந்தது. குதிரைகள் வரவில்லை. மாணிக்கவாசகர் சிறையேகுகிறார். அன்று சிவகணங்களைக் குதிரையேற்றக்காரர்களாக்கி, நரிகளைப் பரிகளாக்கி, மதுரைக்குள் வருகிறார் சிவபெருமான். மன்னன் மகிழ்கிறான். ஆனால், இரவு பரிகள் எல்லாம் நரிகளாகி, இருக்கிற குதிரைகளையும் கொன்றொழித்து, காட்டுக்குள் ஓடிவிட்டன. மன்னரை ஏமாற்றிய குற்றத்திற்காக, வைகையாற்றின் சுடுமணலில் நிற்க வைக்கப்படுகிறார் மாணிக்கவாசகர்.

அந்தக் காலத்தில், வைகையாற்றின் கரையிலே, சாதாரண வணிகர்களில் சிலர் பிட்டு அவித்து விற்று, தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். அவர்களுள் ஒரு மூதாட்டி வந்தியம்மை. சிறந்த சிவபக்தை. தினமும், தான் சுடும் முதல் பிட்டை சிவனுக்குப் படைத்து, அதைச் சிவனடியார் யாருக்கேனும் உண்ணக் கொடுத்தபின், தன் பிழைப்பைப் பார்க்கும் பெண்.


பிட்டு விற்கும் வந்தியம்மைக்குக் கடைத்தேற்றம் கொடுக்கவும், மாணிக்கவாசகரைத் தடுத்தாட்கொள்ளவும், மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு போரைவிட சமாதானமே சிறந்தது என்ற புத்தி புகட்டவும் என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க நினைத்தார் சிவபெருமான்.

வைகையில் வெள்ளம் கரை புரண்டோடியது. வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடாமல் இருக்க, மன்னன் ஆணையில், வீட்டுக்கு ஒருவர் வைகைக் கரையை உயர்த்த, மண்வெட்டிப் போடும்படி அழைக்கப்பட்டனர். வயதான மூதாட்டி வந்தியம்மை எப்படி மண் சுமக்க முடியும்?

கூலிக்கு மண் வெட்டும் கூலியாளாக சிவன் திருவிளையாடலை ஆரம்பிக்கிறார். வந்தியம்மையிடம், உதிர்கிற பிட்டை மட்டும் கூலியாகத் தரும்படி சொல்லிவிட்டு, மண்வெட்டிப் போடுவதாகக் கொஞ்ச நேரம் போக்குக் காட்டிவிட்டு, உதிர்ந்துபோன எல்லாப் பிட்டையும் தின்றுவிட்டு உறங்கிப்போகிறார். வந்தியம்மைக்குக் கொடுக்கப்பட்ட கரைப்பகுதி மட்டும் அரைகுறையாக நிற்பதைப் பார்த்த மன்னர் அரிமர்த்தன பாண்டியன், தூங்கிக் கொண்டிருக்கும் கூலியாளைப் பொன் பிரம்பால் அடிக்கிறார். சிவனின் முதுகில் பட்ட பிரம்படி மன்னன் உட்பட அனைத்து ஜீவராசிகள் மீதும் சுளீரெனப் பட்டது. மன்னனுக்கு உண்மை விளங்குகிறது. வந்தியம்மை கதிமோட்சம் பெறுகிறாள். மாணிக்கவாசகர் விடுதலை பெற்று, தில்லையம்பதி நோக்கிப் பயணிக்கிறார்.


இப்படியாக, நரியைப் பரியாக்கிய திருவிளையாடல், பிட்டுக்கு மண்சுமந்த கதை என ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவில் இந்தக் கதைகள் இன்றும் மக்களிடையே நடித்துக் காட்டப்படுகின்றன.

சிவனின் இந்த லீலைகளில் பல நாம் கேட்டதும் படித்ததும், தமிழ்த் திரைப்படங்களில் பார்த்ததும்கூட. ஆனால், இன்றும் வருடாவருடம், ஆவணிமூலத்திருநாளில், இக்கதைகள் மீண்டும் மீண்டும் மக்களிடையே நடித்துக் காட்டப்படுகின்றன என்பதும், ஒரு நீள் வரலாற்றின் சாட்சியாக பிட்டுமண்டபம் இன்றும் நம்மோடு இருக்கிறது என்பதும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய செய்தி.


இந்த ஆவணி மூலத்திருவிழாவுக்கு, சொக்கநாதரும் பிரியாவிடையும் மீனாட்சியம்மையும் ஆரப்பாளைத்தில் இருக்கும் புட்டு மண்டபத்திற்கு வந்துவிடுவார்கள். அன்று மீனாட்சி அம்மன் கோயிலில் நடை சாத்தப்படும். வெளியூரில் இருந்து வரும் மக்கள் வடக்குப்புற வாசல் வழியாகக் கோயிலுக்குள் செல்லும் ஏற்பாடு இப்போது நடைமுறையில் இருக்கிறது. திருப்பரங்குன்றத்திலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமானும் தந்தையின் திருவிளையாடலைக் காண வந்துவிடுகிறார். திருவாதவூரிலிருந்து மாட்டு வண்டியில் மாணிக்கவாசகப் பெருமானும் வந்துவிடுகிறார். ஆவணி மூலத்திருவிழா, ஆரப்பாளையம் புட்டுத்தோப்புப் பகுதியில் பலவிதப் புட்டு வகைகளின் விற்பனையோடு களைகட்டும். உள்ளூர் விடுமுறை தினமான அன்று, திருவிழா பார்க்க வரும் பக்தர்களுக்குப் புட்டுதான் பிரசாதமாகவும் வழங்கப்படும்.

இன்றும் புட்டுத்திருவிழாவில், மண் வெட்டி ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் காட்சிக்குக் குளம் போல் வெட்டி அதற்கு வேலி போடுபவர்கள் இஸ்லாமியப் பெருமக்கள்தான். பரம்பரை பரம்பரையாக இதனை மகிழ்வோடு செய்துவருகிறார்கள். மக்களின் மதம் கடந்த உறவுகளுக்கு இதுபோல் ஏராளமான சான்றுகள் மதுரையின் திருவிழாக்களில் புதைந்து கிடைக்கின்றன என்பது மதம் கடந்து மனிதம் நேசிக்கும் மதுரை மக்களுக்குத் தெரியும்.



Rate this content
Log in

Similar tamil story from Classics