anuradha nazeer

Classics Fantasy Inspirational

4.5  

anuradha nazeer

Classics Fantasy Inspirational

பீஷ்மர் PART 2

பீஷ்மர் PART 2

2 mins
264


கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக,

போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள்.

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள்.

பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரண தேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.

வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லாமே.. வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன்.

தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கிறேன் பிதாமகரே. உம்மோடு களம்புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவறவிட்டுவிட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா.. என்றார் பீஷ்மர்.

நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார்.

மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.

விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன்.


Rate this content
Log in

Similar tamil story from Classics