Srisairam Rajasekar

Abstract Drama

4.0  

Srisairam Rajasekar

Abstract Drama

ஒரு நாள்

ஒரு நாள்

5 mins
386


காலை ஐந்து மணி

“ஹலோ! அக்கா நான் அருள் பேசறன்”

“சொல்லு அருள், என்ன இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க??”

“அக்கா, கொஞ்சம் காவேரி ஆஸ்பத்திரிக்கு வாங்க-கா”

“என்ன ஆச்சு? என்ன விஷயம்”

“அண்ணனுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட், பயப்பட்ற மாறி ஒன்னும் இல்ல, நீங்க வாங்க அக்கா”

பதட்டமான குரலில், “லட்சுமணனுக்கு என்ன ஆச்சு??”

“ஒன்னும் இல்ல அக்கா பயப்படாதிங்க, நான் இங்க இருக்கன், நீங்க வாங்க”

லட்சுமி விரைவாக மருத்துவமனைக்கு தன் தாய் தேவகியையும் அழைத்து சென்றாள்.

வாயிலிலேயே அருள் நின்றுக்கொண்டிருந்தான்.

“அருள் என்ன ஆச்சு? நீ எப்படி இங்க இருக்க?”

அவர்களை உள்ளே அழைத்து சென்றபடியே, “நான் ஷிஃப்ட் முடிச்சுட்டு வந்துட்டு இருக்கப்ப தான் அண்ணனை ஆம்புலன்ஸ்ல ஏத்துறது பார்த்தான். ஜிப்பாவ வச்சே தெரிஞ்சுட்டு அது அண்ணண் தான்னு, மினி வேன் குறுக்க வந்ததுல அண்ணண் மோதி விழுந்துட்டாங்க, நானும் பைக் அங்கேயே போட்டுட்டு ஆம்புலன்ஸ்ல ஏறி வந்துட்டேன்”. இதற்குள் அறுவை சிகிச்சை அறைக்கு வந்துவிட்டனர்.

“ஒன்னும் இல்லன்னு சொன்ன?” பயம் கலந்த கோபத்துடன் வினாவினாள் லட்சுமி.

அமைதியாக இருந்தான் அருள்.

“அவன் ஏதும் பேசுனானா?” கலக்கத்துடன் அம்மா விசாரித்தாங்க

“இல்லம்மா, அண்ணண் மயக்கத்துல இருந்தாங்க…” என்று அருள் சொல்லி முடிப்பதற்குள் தேவகியின் கண்ணீர் தரையைத்தொட்டது.

நடுநடுவில் சில மருத்துவர்களும் செவிலியர்களும் பேசிவிட்டு சென்றனர்.

இரண்டு மணி நேரம் கழித்து பெரிய மருத்துவர் மதியம் தாண்டினால் உயிருக்கு ஆபத்தில்லை ஆண்டவன் கையில் தான் இனி எல்லாம் இருக்கிறது, நல்லதே நடக்கும் என்று சொல்லிவிட்டு சென்றார்.

தாய்க்கு என்ன செய்வது என்று புரியாமல் நேரே கோயிலுக்கு புறப்பட்டார். லட்சுமி அங்கேயே இருந்து பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டாள்.

மனதிற்குள் தம்பி பிறந்த தினத்திலிருந்து நேற்று வரை நடந்த நிகழ்வுகள் படமாக ஓடியது. இவ்வளவு காலத்தில் எவ்வளவு மாற்றம் அவனுக்குள்.

நேற்று தான், குடும்பத்துடன் எல்லோரும் காலையிலேயே நல்ல படம் பார்த்துவிட்டு, மதியம் பெரிய உணவகத்தில் சாப்பிட்டு, மாலை துணிமணி நகை எல்லாம் வாங்கி மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டான். அது வழக்கமான லட்சுமணன் இல்லை. எந்நேரமும் காசிலேயே குறி ஆக இருக்கும் இவன் எப்படி திடீர் என இப்படி இருக்கிறான் என்று நேற்றே எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

கந்து வட்டிக்கு காசு விட்டு சம்பாதிப்பது அவன் தொழில். காசு விஷயத்தில் கருணை காட்டாதவன். பாவத்தை இப்படி சம்பாதிக்கிறானே என அம்மா புலம்பாத நாள் இல்லை.

ஒரு காலத்தில் பெரிய வீடு, பணம், நகை என வாழ்ந்த குடும்பம். சூழ்ச்சியாலும், துரோகத்தாலும் எல்லாம் போய் கடன் பட்டு லட்சுமணன் படிப்பை விட்டு சிறு சிறு வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சம்பாதித்து இன்று திருப்திபடும் அளவில் வாழ்வதற்கு லட்சுமணன் தான் காரணம். கடந்த கால பாதிப்பு அவன் மனதை கல் ஆக்கியது. பாவ புண்ணியம் எல்லாம் செத்துப்போச்சு , இன்னிக்கு பணம் தான் எல்லாம் என்பான்.

“தம்பி, உனக்கு என்ன ஆச்சு” என்று லட்சுமி நேற்று இரவு கேட்ட பொழுது லட்சுமணன் கண்களில் கண்ணீர். “நீ என்னைய தம்பின்னு கூப்பிட்டு ரொம்ப வருஷம் ஆச்சுக்கா” என்றதும் அவன் கை பிடித்து தடவி கொடுத்தாள்.

“அப்படி எல்லாம் இல்லப்பா…”, என்றவளை நிறுத்தி, “நான் சரியா பேசுனா தான நீ கூப்பிடுவ” என்று அவனே பதில் சொன்னான். “சும்மா, ரொம்ப நாள் ஆச்சு நாம எல்லாம் வெளில போய், பேசி சிரிச்சு நாள் ஆச்சு, அதான்…” என்று இழுத்தான்.

அதன் பின் எல்லோரும் ஒன்றாக தான் தூங்க சென்றனர். என்ன தான் லட்சுமணன் கல் நெஞ்சம் படைத்தவன் போல் மாறினாலும், எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு தான் செல்வான். ஆனால் இன்று காலை எப்போது, எங்கே, ஏன் கிளம்பினான் என ஒரு விவரமும் தெரியவில்லை.

திங்கட்கிழமையிலிருந்து அவன் சரியில்லை. பகலில் ஏதோ வேலை பார்ப்பதும், இரவு ஆன உடன் காய்ச்சலில் படுப்பதும் என வித்தியாசமாக தான் இருந்தான். சனி, ஞாயிறு இரண்டு நாளும் கடும் ஜுரம். அதும் ஞாயிறு இரவிலிருந்து தூங்கும் பொழுது பயம் கலந்த கெஞ்சல் தொணியில் ஏதோ முணுமுணுத்தான். லட்சுமி அருகில் சென்று கேட்டாள். அந்த முணுமுணுப்பு:

ஒரு நாள்… ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்..

அது அவள் மனதில் பீதி அடைய வைத்தது. காலையில் கேட்டுக்கொள்ளலாம். பாவம் தூங்கட்டும் என விட்டுவிட்டாள்.

திங்கட்கிழமை காலை எழுந்த உடனே டைரி எழுத ஆரம்பித்து விட்டான். ரொம்ப வருடம் கழித்து டைரி எழுதுகிறானே என்று ஆச்சரியப்பட்டாள் லட்சுமி. அதன் பின் அவசர அவசரமாக குளித்து சாப்பிட கூட செய்யாமல் வெளியில் கிளம்பினான். அதன்பின் வீட்டுக்கு வருவது போவது என அலைந்துக்கொண்டே இருந்தான். காய்ச்சல் விட்டதும் அலைகிறானே, சொன்னாலும் கேட்கமாட்டானே என்று கவலைப்பட்டாள். இரவு வரை அலைந்து மீண்டும் காய்ச்சலுடன் திரும்பினான். அன்றிரவும் அதே முணுமுணுப்பு:

ஒரு நாள்… ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்..

செவ்வாய் காலை காய்ச்சல் விட்டிருந்தது. அதிகாலையே எழுந்தான். குளித்தான். கிளம்பினான். ஒரே ஒரு வித்தியாசம் இம்முறை வீட்டுக்கு கோப்புகளுடன் அவ்வப்போது வந்து போகவில்லை. காலையில் போனவன் இரவு தான் திரும்பினான். காய்ச்சலுடன்! இரவு அவன் வரும் முன் அருள் கொஞ்சம் பணத்துடன் வந்தான். “அண்ணன் வீட்டுக்கு வந்தாங்கக்கா, என்னன்னு தெரியல நீ வாங்கின கடனுக்கு இது வர கட்டினது போதும்னு சொன்னாங்க, அவங்க அப்படி சொல்லலாம் ஆனா அன்னிக்கு அம்மாக்கு உடம்பு சரியில்லாதப்ப கொடுத்தாங்க, அதுக்கு நான் குடுத்த வட்டியும் சேத்தா கூட அசல்ல கால் வாசி வராது. இந்த மாச காசு இது. மீதியும் கொஞ்ச கொஞ்சமா குடுத்துடுறன்.” என்றான். அது வேண்டாம் அம்மாவ பாத்துக்கன்னு சொல்லி பேசி அனுப்பிட்டு சில நிமிஷம் கழிச்சு தான் லட்சுமணன் வந்தான். அன்றிரவும் அதே முணுமுணுப்பு:

ஒரு நாள்… ஒரு நாள்.. இன்னும் ஒரே ஒரு நாள்..

அடுத்த நாளான நேற்று தான் காலையில் எழுந்ததும் குளித்து வழக்கம் போல் அல்லாமல் சேர்ந்து சாப்பிட்டு, அப்படி சாப்பிடும் பொழுது தான் வெளியில் போகலாம் என்று சொல்லி அழைத்து சென்றான். நேற்றிரவு ஒன்றாக படுத்தாலும் அசதியில் தாம் சீக்கிரம் தூங்கிவிட்டதை இப்போது தான் உணர்ந்தாள் லட்சுமி.

“டீயாவது சாப்பிடுங்கக்கா” என்று டீயை நீட்டினான் அருள்.

“நீ இங்க பாத்துக்கோ, நான் வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறன்” என்றாள் லட்சுமி.

“ஏன்க்கா? என்ன ஆச்சு? எதும் எடுத்து வரனும்னா சொல்லுங்க நான் போய்ட்டு வரன்”

“இல்லப்பா நீ இங்க பாத்துக்கோ, அம்மா வந்தா சொல்லிடு” என்றபடி கிளம்பினாள் லட்சுமி. ஒன்றும் புரியாமல் அமைதியாக அருள் இருக்கையில் கை ஊன்றி உட்கார்ந்தான்.

வீட்டுக்கு சென்றதும் லட்சுமணனின் டைரியை எடுத்து பார்த்தாள் லட்சுமி.

“2 நாளா ஆரோக்கியவான் என்னைய படுத்தி வச்சான். “உன் சாவு நெருங்கிடுச்சு நீ என்னோட ஆத்திரத்தால தான் சாகப்போறன்”னு சொன்னான்.

நான் கெஞ்சுனன். என்னைய விட சொல்லி. அவன் விட்டுககொடுக்கல. நான் திடிர்னு செத்துட்டா குடும்பம் என்ன ஏது-னு புரியாம கஷ்டபடும்னு கெஞ்சுனன். விடல. ஒரு நாளாவது கொடு, என் வேலைய முடிச்சு வச்சுட்டா குடும்பம் கஷ்ட படாதுன்னு, ஒரு நாள்… ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்..னு பல தடவ நான் கெஞ்சி முடிவுல அவன் சிரிச்சுட்டே, “அன்னைக்கு நானும் இதே போல தான் உன் கடன் அடைக்க ஒரு நாள் கேட்டன். அது முடியாம தான் நான் செத்து வந்த பணத்துல உன் கடன் அடைஞ்சுச்சு. இனிக்கு உனக்கும் ஒரு நாள் தரன்”-னு சம்மதிச்சான்.

இத நீங்க படிச்சா நான் உயிரோட இல்லன்னு அர்த்தம். நான் உங்கள கஷ்ட படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுக்கங்க. கீழ நான் முதலீடு பண்ணது, கொடுக்கல் வாங்கல் எழுதியிருக்கன். இன்னிக்குள்ள எல்லா ஃபைலும் வீட்ல வச்சுருவன். எப்பவும் உங்கள நேசிக்கும். லட்சுமணன்.

பத்து பக்கங்களுக்கு மேல் கொடுக்கல் வாங்கல் எழுதியிருந்தது. அதன் முடிவில்:

ஆரோக்கியவானுக்கு நான் கொடுத்தத விட வட்டியாட சேர்த்து இரண்டு நாள் அதிகமாவே நான் கேட்க கேட்க கொடுத்துட்டான்.

இரண்டாவது நாள் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவங்க கிட்ட லாம் தேடி தேடி கேட்டன். யாரையும் கடன் திருப்பி தர வேணாம்-னு சொல்லிட்டன். சில பேர் நான் கேட்ட மன்னிப்ப மதிக்க கூட இல்ல.. பாவம், நான் அவ்வளவு கஷ்டம் கொடுத்துட்டன் போல.. வருத்தமா இருக்கு.

இவ்ளோ நாள் பணம் பணன்னு ஓடி குடும்பத்துக்காக சேர்தது கடைசியா குடும்பத்துக்கூட சேர்ந்து இல்லையேன்னு அவங்க கூட வெளில போனன். என் அம்மா அக்கா முகத்தில பார்த்த சந்தோஷம், நிறைய தொலைச்சுட்டனேனு மனச உறுத்துச்சு. ரொம்ப வருசம் கழிச்சு அக்கா என்னைய தம்பின்னு சொன்னாங்க. இன்னும் சில நாள் வாழ ஆசையா இருக்கு ஆனா இதுக்கு மேல நேரம் கேட்க முடியாது.

நான் எனக்காக எதுமே இது வர செஞ்சது இல்ல. எனக்காக இன்னும் ஒரே ஒரு நாள் வாழ ஆசையா இருக்கு. பரவால்ல, இதுக்கு மேலயும் வட்டி வேணாம். எனக்கு பைக்ல நடு ராத்திரி முகத்துல பனி அடிக்க வேகமா ஆளே இல்லாத ரோட்டுல போக ஆசை. என் கடைசி ஆசையா இப்போ அது ஆகிட்டுன்னு நினைக்கறன். கிளம்புறன்.

டைரியின் தாள் கண்ணீரால் ஊறியது.

அழுதுக்கொண்டு மருத்துவமனைக்கு மீண்டும் சென்றாள் லட்சுமி. மருத்துவர் கொடுத்த மதியக்கெடு முடிந்தது. தம்பி, போய்விடாதே என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஓடினாள். அம்மா, அருள் இருவரும் மருத்துவர் முன் நின்றார்கள்.

“இப்போ நல்லா மூச்சு விடுறாரு, இப்போதைக்கு பிரச்சனை இல்ல, இன்னும் ஒரு நாள் இப்படியே இருந்தா ஆயுள் கெட்டி தான்” என்றார் மருத்துவர்.

கவலையில் காதடைத்து போயிருந்த லட்சுமி வினாவினாள், “எவ்ளோ நேரம் சொன்னீங்க டாக்டர்?”


ஒரு நாள்.Rate this content
Log in

More tamil story from Srisairam Rajasekar

Similar tamil story from Abstract