ANURADHA CHANDRASEKHAR

Abstract

5.0  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

நிழற் பயணம்

நிழற் பயணம்

7 mins
471


மழையின் சடசடவென்ற ஒலி கைகொட்டிச் சிரித்து என் இயலாமையை பரிகசிப்பதாகத் தோன்றியது. இருக்கலாம். இயற்கைக்குள்ளே எத்தனையோ சக்தி! என்னை, என் எண்ணங்களைப் புரிந்து கொண்டிருக்கும். முன்புகூட சில சமயங்களில் அப்படித் தோன்றியதும் உண்டு. யாரிடமும் காட்ட முடியாத கோபத்தை என் சின்னஞ்சிறு பிஞ்சிடம் காட்டி அதை அடித்தபோது என்னைத் தடுக்கத் தெரியாமல் படபடவென்று பொரிந்துகொட்டித் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டதும் இதே மழைதான். தோட்டத்தைச் சரணடைந்து கைகளில் கன்னத்தை ஏந்தி ஏதும் செய்ய இயலாமல் வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருக்கும் மனதைப் பிசையும் அந்தத் தருணங்களில் சிலீரென்ற சாரலாய் என்னை வருடி இதமாய் அரவணைப்பதும் இதே மழைதானே! 

மழைக்கு மட்டுமே என்னைப் புரிந்துகொள்ளும் சக்தி இருப்பதாய் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்ததுபோல் தவறு என்று எனக்கு உணர்த்துவதற்காகவே காற்று சில நேரங்களில் என் முகத்தில் அறைந்ததும் உண்டு, காகம் தலையில் அடித்துவிட்டுப் போகுமே அந்த மாதிரி. எப்படி இந்த இயற்கை என்னைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது என்பது ஒரு புரியாத இனிய புதிர். எனக்கு நண்பனாய் நின்று எத்தனையோ தருணங்களில் எனக்குத் தோள்கொடுத்து என்னை வழி நடத்திச் செல்லும்.

"அப்பா, படி இங்க இருக்கு. எதுக்கு அந்தப் பக்கம் போற? எங்கயாவது விழுந்து வக்கவா?" ச்யாமா சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை அப்பா லட்சியம் செய்யவில்லை. அப்பா பல நேரங்களில் எங்கள் அக்கறையைப் புறக்கணிப்பது இப்போது அதிகமாகிவிட்டது. அது அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிகிறது. இதுதான் கொஞ்ச நாட்களாகவே என், இல்லை எங்களின் இயலாமையாகி விட்டது.  

"ஏம்ப்பா, சொல்றா இல்ல? எதுக்கு அந்தப் பக்கம் போற? விழுந்து வக்கப் போறேன்னுதானே சொல்றா?" முடிந்தவரை அமைதியாகத்தான் கேட்டேன். இப்போதெல்லாம் அவருக்குக் கோபமும் அதிகமாகவே வருகிறது. "மழைவேற பெய்ய ஆரம்பிச்சிட்டதே."

"சும்மா இந்தப் பக்கம் என்ன வச்சிருக்காங்கன்னு பார்த்தேன். அவ்வளோதான்." பேசாமல் திரும்பினார். முகத்தில் மட்டும் கரைகாணாத ஏமாற்றம். மழை பெய்வதை வேடிக்கை பார்க்க வந்திருக்கலாம். முடியாமல் போன ஏமாற்றமாய் இருக்கலாம். ஏன் என்னால் உடனே புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று? ஏன் சின்ன ரசனைகளைக் கூட மறுக்கும் மூர்க்கத்தனம்? அக்கறை என்ற போர்வையா?

ச்யாமா மட்டுமில்லை, என் மனைவி கூட இந்த மூர்க்கத்தனத்தில் குளிர் காய்பவள்தான். அவர்களுக்கு பயம் மட்டுமே எல்லாவற்றுக்கும் கவசம். ஆனால் அம்மாகூட? 

"ம்ஹூம். இல்லடா. அப்பாவால எங்கேயும் வரமுடியாது. நீங்கமட்டும் போய்ட்டு வாங்க." வீட்டுச் சிறையாகிப் போன வாழ்க்கைக்கு யாரைக் காரணமென்று காட்ட முடியும்? 

க்றிஸ்டோபரும், லூசியும்....

ஏன் திடீரென்று இப்போது நினைவுக்கு வந்தார்கள்?

வாழ்க்கை ஓரிடத்தில் நின்றுவிடுவதில்லை. ஓரிரு உறவுகளுடன் முடிந்துவிடுவதும் இல்லை. இடங்களை, மனிதர்களைப் புதுப்பித்துக் கொள்ளாவிட்டால் வாழ்க்கை தேங்கித்தான் போய்விடுகிறது. 

க்றிஸ்டோபர் இதேமாதிரி ஒருமழைநாளில்தான் என் வாழ்க்கைக்குள்ளும் நுழைந்தார். இங்கே பெய்யும் மழை இந்த ஊரைக் கழுவித் துடைத்து அழகாக்கிவிடுவதை மழை முடிந்து தெருவில் பயணிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். இங்கு மலமும் அழுக்கும் அதிகம், அதுதான் இப்படி என்று நினைப்பேன். என்றால் அந்நிய தேசத்திலும் இதே கதைதானோ என்றே தோன்றுகிறது. அங்கே மனிதன் புறம்தள்ளும் மலங்கள் - அகற்றப் படாத ப்ளாஸ்டிக் குப்பைகள், சிமெண்ட் இடிபாடுகள் உட்பட - எதுவும் கண்ணில் படாவிட்டால்கூட மழை விட்டபிறகு ஒரு நிர்மலம் தோன்றுவதேன்? மனித நடமாட்டமில்லாத தெருக்கள் மிகவும் தூய்மையுடன் காட்சி அளிக்கின்றவோ? இயற்கையின் முன்னே மனிதனே மலம்தானோ? ஓக்லஹோமாவில் சுழற்காற்றும் சூறாவளி மழையும் மனிதனைமட்டுமல்ல அவன் அலங்காரமாக எழுப்பியிருக்கும் அடுக்கு மாளிகைகளையும் குப்பையாய் வீசி எறிந்துவிடுகின்றன.  

நகரத்தைவிட்டு சற்றே நகர்ந்து வந்தால் மண்ணும் புழுதியும் அழுக்காகத் தெரிவதில்லை, அழகாகவே தெரிகின்றன. அவற்றை மழையும் காற்றும் ஒன்றும் செய்வதும் இல்லை. இயற்கை குறி வைப்பது பெரும்பாலும் மனிதனையும் அவனது படைப்புகளையும்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மைதானா? 

க்றிஸ்டோபர் ஓக்லஹோமாவாசிதான். இயற்கை இன்னும் அவர்களை தேவையில்லாத குப்பை என்று தூக்கி எறியவில்லைபோலும். அவர்களது அந்நியோன்னியத்தில் தன்னை இனம் கண்டதுதான் காரணமோ? அந்த அந்நியோன்னியத்தை மழையுடன் சேர்ந்து நானும் ரசித்துக் கொண்டிருந்தபோது எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. 

ஒரு வசந்தத்தின் வாசலில் ட்யுலிப் மலர்கள் அவசர அவசரமாகத் தங்களை உயிர்ப்பித்துக் கொண்டு கூட்டம்கூட்டமாக மக்களைக் கூவி அழைத்து கொண்டிருக்கும் காட்சியைக் காண மொத்த நகரமுமே அந்தப் பூங்காவில் குவிந்துவிடுவது அந்த தேசத்தில் எல்லா இடங்களிலும் நிகழும் சம்பிரதாயம். மழையெல்லாம் அந்தக் கூட்டத்துக்கு என்றுமே தடையாயிருந்ததில்லை. மழை எத்தனை மணிக்கு ஆரம்பிக்கும், எத்தனை மணிநேரம் பெய்யும் என்றெல்லாம் இணையத்தில் ஆராய்ந்துவிட்டு வெளியே கிளம்பும் கூட்டம். வாரக் கடைசியை வீணாக்க விரும்புவுதில்லை அவர்கள். மழை பெய்யும்போது கூடாரத்துக்குள் அடைந்துவிட்டு மழைவிட்டதும் வெளியேறி அவரவர் வேலையை கவனிக்கும் மனிதர்கள். க்றிஸ்டோபரும் அவசர அவசரமாகத் தன் மனைவியை கூடத்துக்குள் கொண்டுவிட்டுத் திரும்பும்போது யதேச்சையாக என்னைப் பார்த்தார். அவர்கள் மற்றவர்களை சிலவிநாடிகளுக்குமேல் ஊன்றி கவனிப்பதை அநாகரிகமாக நினைப்பவர்கள். நான் என் பிள்ளைகளை மணல்விளையாட்டிலிருந்து கிளப்ப முடியாமல் தவிப்பதைப் பார்த்து என்ன புரிந்து கொண்டாரோ தெரியவில்லை, என்னைப் பார்த்து, "டூ யூ நீட் ஹெல்ப்?" என்றார்.

அவர்களது மொழி எனக்குப் பரிச்சயமானதுதான் என்றாலும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு பதில் சொல்ல எனக்கு ஏறக்குறைய நாலைந்து மாதங்களாவது பயிற்சி தேவையாயிருந்தது. 

நான் பதில் சொல்லாவிட்டால்கூட நிலைமையை புரிந்துகொண்டு வேகவேகமாக விளையாட்டு சாமான்களைப் பொறுக்கிக் கூடையில் போட்டு ஒரு பையனைக் கையில் பிடித்துக் கொண்டு கூடாரத்தை நோக்கி வேகமாக நடந்தார். நானும் மற்றொரு பிள்ளையுடன் மௌனமாகத் தொடர்ந்தேன். 

அந்தக் கூடாரத்துக்குள் இருந்த சிலபல நிமிடங்களில் நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.

மனிதர்கள் பலவிதம் என்பதில்தான் வாழ்க்கையின் சுவாரசியம் மட்டுமின்றி வெற்றியும் அடங்கி இருக்கிறது. அவர் முரடர் இல்லை ஆனால் ஹிட்லர் என்ற பெயர் மட்டும் அவருடன் எப்படியோ தங்கிவிட்டது. ஹிட்லர் நல்லவனா இல்லையா என்பதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் தீர்ந்ததில்லை. தனக்குத் தானே நியாயம் கற்பித்துக் கொண்டு அந்த நியாயத்தை நிலைநிறுத்தியவன். பெரும்பான்மையோர் வாழ்க்கையில் நடப்பதுதான். ஆனால் அவனது நியாயம் எண்ணிலடங்காத மனிதர்களைச் சிதைத்தது கொடுமையாகிவிட்டது. லூசிக்கு க்றிஸ்டோபர் ஹிட்லரானது அவர்கள் இருவருக்கு மட்டுமே நிகழ்ந்த நியாயம் அல்லது அநியாயம். ஆனால் அவர்களுக்குள்ளேயும் அன்பு ஊடுருவிக் கொண்டுதான் இருந்தது. 

அங்கிருந்த சில நிமிடங்களிலேயே என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் தன் மனைவியிடம் தனக்கிருந்த ஆளுமையைக் காட்டத் தவறவில்லை. இந்த மாதிரி ஒரு நடத்தையை நான் வெளிநாட்டவரிடம் அவ்வளவாகக் கண்டதில்லை. வெளி இடங்களில் நம்மவர்களைப் போல அவர்கள் குரலை உயர்த்தக்கூட மாட்டார்கள்.அடக்கி வாசிக்க சிறுவயதிலிருந்தே பயிற்சி பெற்றவர்கள். இவர் விதிவிலக்கு போலும். 

சின்ன சின்ன விஷயங்களில்கூட நேர்த்தியை எதிர்பார்த்து அதிருப்தியை வெளிக்காட்டினார் என்பது எனக்கே நெருடலாக இருந்தது. பிறர் எதிரில் தவிர்த்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன்.

எப்படி அந்த அளவு நெருக்கமானோம் என்று இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போவதும் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதும் நாங்கள் அங்கிருந்தவரை அடிக்கடி நிகழ்ந்தது எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான். 

இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும். லூசி எல்லா இடங்களுக்குப் போய்வந்ததும், ஏன் வீட்டிலே நடமாடியதும்கூட சக்கரவண்டியில்தான். ஆனாலும் தன் மனைவியுடன் பேசுகையில் அவரிடமிருந்து இதமான வார்த்தைகளைவிடக் கடுமையான வார்த்தைகளே அதிகம் வெளிப்பட்டன. அவளைப் பற்றிய கவலையும் பயமும் தான் அந்தக் கடுமைக்குக் காரணமோ என்று நினைக்கத் தோன்றியது. பயம் தோன்றும்போது மனம் இறுகிவிடுகிறதா? சில சமயங்களில் சலிப்பும் வெறுப்பும்கூட ஒருவிதக் கடுமையைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் இவரிடம் நான் சலிப்பைக் காணவில்லை. அவளுக்குப் பணிவிடை செய்யும் நேரங்களில் அவர் முகத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும்தான் தெரிந்தன. அக்கறையின் வெளிப்பாடுதான் அந்தக் கடுமை என்பது பலநாட்களுக்குப் பிறகுதான் எனக்கே புரிந்தது.

தன் உடைமை என்ற ஆளுமையே அன்பின் வெளிப்பாடு என்ற புரிதலில்தான் அந்தக் கவலையும் பயமும் பிறக்கின்றன. இதைப் புரிந்துகொள்ளும் தருணங்களில் லூசி கணவனின் கத்தலுக்கு அடங்கி விடுகிறாள். கத்தலின் வெளித்தோற்றம் காதலின் உள்ளுணர்வை அழுத்தி அடக்கிவிட்டு மனதைக் காயப்படுத்தும் வேளைகளில் வெகுண்டெழுகிறாள். க்றிஸ்டோபர் அப்போது அடங்கிவிடுகிறார். இதுதான் அவர்கள் தாம்பத்ய ரகசியம்.  

ம்..ம்..அவர்கள் ஏன் இப்போது நினைவுக்கு வந்தார்கள் என்பது புரிந்துவிட்டது. க்றிஸ்டோபர் தன் மனைவியை தன் அன்பென்னும் சிறைக்குள் அடைத்துப் பூட்டவில்லை என்பது என் மூளையின் எங்கோ ஒரு மூலையில் ஒலிக்க ஆரம்பித்தது. 

"அப்பாவும் வர ஆசைப்படறார்னு தோணுதுங்க. நான் வேணா ஒருகை குடுக்கவா? ரெண்டு பேருமா சேர்ந்து வண்டில உக்காத்தி வச்சுடலாமே" ட்ரைவர் ஓரிரு நாட்கள் கேட்டிருக்கிறான்.

"வண்டிலருந்து இறக்கினதுக்கப்பறம் யார்டா பிடிச்சு கூட்டிட்டுப் போறது?" என் பதிலில் தெரியும் எரிச்சல் அவனை அடக்கிவிடும். 

க்றிஸ்டோபரின் பொறுமை என்னிடம், எங்கள் யாரிடமுமே இல்லை.

மழையின் சீற்றம் குறைந்து சன்னத் தூறல்களாய் மாறி விட்டிருந்தது. தோட்டத்தில் போய் நின்றுகொண்டு தூறலை அனுபவிக்க ஆனந்தமாகத்தான் இருக்கிறது. உள்ளே அப்பா ஹாலிலிருந்து வெளியே ஏக்கத்துடன் பார்ப்பது தெரிகிறது.

மழையின் நட்பை எனக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொண்டு அவருக்கு மறுதலிக்கும் உரிமையை எனக்கு யார் அல்லது எது தந்தது?

"வேண்டாம். வெராண்டால மழைக்குளிரும், ஊதக்காத்தும் அவருக்கு உடம்புக்கு ஒத்துக்காது. நாளைக்கு ஜுரம்னு படுத்தா என்னால முடியாது" சன்னமான அழுத்தமான அம்மாவின் குரல் அவள் அங்கே இல்லாமல் போனால்கூட ரிமோட் கண்ட்ரோலாய் எங்களைக் கட்டிப் போட்டுவிடும். 

அம்மாவும் ஒர் பொம்பள ஹிட்லர்தான். மென்மையான வெளியே தெரியாத ஹிட்லர். அப்பாவை அடக்கி ஆள எடுத்த அவதாரம் என்றுதான் நினைக்கிறேன். எதற்காக? அப்பாவின் தைரியம் மீண்டும் தலையெடுத்துவிட்டால் பிறகு தன்னுடைய ஆளுமைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயமா? ஆனால் பயம் மட்டுமே காரணி என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. பயம் ஒருவனை எவ்வளவு முரடனாக்க முடியும் என்பதை என் வாழ்நாளில் எவ்வளவோ பேரிடம் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். ஹிட்லரைக் கூட அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அம்மாவிடம் பயத்தையும் தாண்டி ஒரு காரணத்தைத் தேடுகிறேன். அம்மாவுக்குத் தன் தனித்தன்மையை வெளிக்காட்ட இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறாளா? இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

அப்பா உடல்நலத்துடன் இருந்த நாட்களில் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு அவருக்குத்தான் ஹிட்லர் என்று பெயர். அதுவும் அம்மா வைத்ததுதான். இப்போது அது அம்மாவுக்கே திரும்பிவிட்டது என்று அம்மாவுக்கே தெரியுமா? அப்பாவுக்குக்கூடத் தெரியாது என்றுதான் நினைக்கிறேன். 

அப்பா அந்த நாளில் ஹிட்லராயிருந்ததற்கு எந்த பயம் காரணமாயிருக்க முடியும்? எனக்கென்னவோ அது ஆணவமாகத்தான் தோன்றுகிறது. ஆணவத்திமிர்கூட தன் இருத்தலை மற்றவர்கள் கண்டுகொள்ள மறுத்துவிடுவார்களோ என்ற பயத்தின் வெளிப்பாடுதானோ? தன் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயமோ? ஆனால் அந்த பயம் இப்போது காணாமல் போகக் காரணம்? இல்லை, பயம் அப்படியே நீறுபூத்த நெருப்பாய் உள்ளேயே கனன்று கொண்டுதான் இருக்கும். திமிர்மட்டும் அணைந்துவிட்டிருக்கும். உடல்வலிமை குன்றியதுதான் அதற்குக் காரணம். மற்றபடி வலிமை வந்தால் தன்னால் திமிர் திரும்பிவிடும். ஆணுக்கு ஆணவம்தானே அணிகலன்! 

அப்பாவுக்குத் தன்னம்பிக்கையை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கிறமாதிரித் தெரியவில்லை. முதுமையின் சாபமா? நோயின் பக்கவிளைவா? வாழ்வின் எல்லைதானே என்ற அலட்சியமா? இதுவரை போராடி என்ன சாதித்தோம் என்ற சலிப்பா? 

என் அத்தை ஒருவர் சிலவருடங்களுக்கு முன்னர்தான் தன் தொண்ணூத்தி இரண்டாவது வயது முடியும் தறுவாயில் இறந்து போனார். ஏழைதான். ஆனால் வாழ்க்கையில், வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குறைவில்லாதவர். எண்பத்தைந்து வயதுக்குப் பின் மூன்றுமுறை கீழே விழுந்து இடுப்பில் எலும்பு உடைந்து படுக்கையில் விழுந்து கிடந்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறை எழும்போதும் ஃபீனிக்ஸ் பறவைதான். ஒருவாரத்துக்குமேல் அவரது மகன் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று நான் பார்த்ததில்லை. மகனின் கையைத் தள்ளிவிட்டுத் தானே நடக்க ஆரம்பிப்பார். 

"அம்மா கீழே விழுந்துடப் போற." என்று மகன் அலற, "போடா எனக்குத் தெரியும்" என்று நடப்பார்.

"எப்படி அத்தை உங்களால இப்படி முடியுது" என் நான் ஆச்சரியப்பட்டுக் கேட்கும்போது, "இங்க பாரு, இந்தமாதிரி தினம் ரெண்டு யோகா பண்ணினா சரியாப் போகுது" என்று தன் இடுப்பை லேசாகச் சுழற்றிக் காட்டுவார். எனக்கு சிரிப்பாக வரும். ஆனால் சரியாத்தான் போகும். வறுமையின் காரணமோ என்னவோ எங்கள் வீட்டு விருந்துகளில் அவர் வளைத்துக் கட்டுவதைப் பார்த்து திகைத்திருக்கிறேன். இந்தவயதில் இப்படி சாப்பிடுகிறாரே, ஒன்றும் ஆகாதா என்று என்மனைவி வாயைத் திறந்தே கேட்டுவிடுவாள்.

"நீ வாங்கி வந்த வரம் அப்படி. அவரைப் பாத்து கண் போடாத." என்று அதட்டி வைத்தாலும் என் மனதுக்குள்ளும் அந்த ஆச்சரியம் எட்டிப் பார்க்காமல் இருந்ததே இல்லை. 

அத்தையின் தொண்ணூத்திரெண்டு வயதைப் பார்த்த எனக்கு என் தொண்ணூத்திரெண்டை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் தொண்ணூறைத் தாண்டும் ஆசை எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாருக்குத்தான் இல்லை? ஏன் என் அப்பாவிற்கு இல்லையா? எதிர்வீட்டில் படுத்த படுக்கையாய் கிழித்துப் போட்ட நாராய்க் கிடக்கிறாரே அந்தக் கிழவருக்கு இல்லையா? அவரால் வாய்திறந்து சொல்ல முடியவில்லை. கண்ணில் தெரியும் வேதனையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கையைத் தொடர முடியாத இயலாமையா அல்லது சாவை சந்திக்க பயமா? இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதானா? இத்தனை துன்பத்திலும் அந்த வாழ்க்கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் பேராசைதான் அந்தக் கண்களில் தெரிகிறது. நடக்கவே முடியாமல் வாழ்க்கைப் பயணத்தில் நடந்து கொண்டிருக்கிறார். 

எதிர்வீட்டுக் கிழவியின் மனதில் என்ன இருக்கும்? இவர் மரணம் சீக்கிரம் நிகழ்ந்துவிட்டால் பரவாயில்லையே என்றா? பலபேர் அந்த மனநிலைக்கு வந்துவிடுவது கண்கூடு. அவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. அவர் இருந்து எல்லோரும் அனுபவிக்கும் துன்பம் நரகமா அல்லது அவரை இழந்த தனிமைதான் நரகமா என்று கேட்டால் என் நிலைமை எப்படியோ போகட்டும், அவருக்கு நிம்மதி கிடைத்தால் போதும் என்ற பதில்தான் பெரும்பாலும் கிடைக்கும். கிழவர் மனதிலும் வாழும் ஆசை இருக்கக் கூடும் என்பது மற்றவருக்குப் புரிய நியாயம் இல்லை. அந்த ஆசையை வெளிக்காட்டும் வழி அவரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நல்லவேளை அப்பாவுக்கு இன்னும் அந்த நிலைமை வரவில்லை. ஆனால் அந்த நிலைமையை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறோமோ என்ற பயம் வருகிறது.

மறுபடியும் க்றிஸ்டோபர் மனக்கண்முன் தோன்றி நிற்கிறார். ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அவருக்கு மனைவியை மட்டுமல்ல, அவளது அன்பை இழப்பதுகூட கொடுமையான தனிமைதான். அவருக்கு வேறு யாரும் இல்லை என்பது மட்டும்தான் காரணமா? இந்நாள்வரை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதும் ஒரு காரணமோ? அது லூசிக்கு இப்போது ஆதாயமாகி விட்டது என்று நினைக்கும்போது எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 

"மழை நின்னுபோச்சுன்னு தோணுது. கெளம்பலாமா?" 

ஒன்றரை மாதகாலத்துக்கு அவர்களை தங்கையின் வீட்டில் விட்டுவிட்டுப் போயிருந்தேன். அது ஒன்றுமட்டும் அப்பாவின் வாழ்க்கையில் நிகழும் மாறுதல். பெண் தங்களை முகம் கோணாமல் பார்த்துக் கொள்கிறாள் என்பது அம்மாவின் இடையறாத பாராட்டு. அப்படியும் நான் திரும்பிய மறுகணம் கிளம்பி விடுவாள்.

"பெரிய ஐயா, சின்ன ஐயா.... எங்க இருக்கீங்க? வீட்டுக்குக் கெளம்பலாமா?"

உள்ளே ச்யாமாவின் பெண் வர்ஷாவை நாற்காலியில் உட்காரவைத்து என் இரண்டு புத்திரர்களும் தள்ளிக் கொண்டிருக்க, "என்னடா இது?"

"வீல்சேர் விளையாட்டுப்பா"

என்னைக் கண்டதும் சேரைவிட்டுவிட்டு மூவரும் தாத்தாவிடம் ஓடினார்கள்.

"தாத்தா, அப்படியே உக்காருங்க. நாங்க உங்களை வாசலுக்குக் கூட்டிட்டுப் போறோம்" மூவரும் அப்பா அமர்ந்திருந்த நாற்காலியை நகர்த்த ஆரம்பித்தார்கள்.

"என்னடா விளையாட்டு இது?" அவர்களை மெதுவாக அங்கிருந்து நகர்த்திவிட்டு அப்பாவை கைத்தாங்கலாகப் பிடித்து கார்வரை அழைத்துச் செல்கையில் இந்த மாதத்துக்குள் ஒருசக்கர நாற்காலி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


Rate this content
Log in

More tamil story from ANURADHA CHANDRASEKHAR

Similar tamil story from Abstract