Priya Badri

Abstract Drama

3.6  

Priya Badri

Abstract Drama

மரணித்த பயம்

மரணித்த பயம்

8 mins
709


"மாம்பழம் கிலோவுக்கு கொஞ்சம் கொறையுதே மேடம்? இன்னொன்னு எடுத்தார்ரீங்களா??"


சுள்ளென்று கோபம் வந்தது ஸ்மிதாவிற்கு.... "இருக்கறதப் போடும்மா" என கடுகடுப்பாய் பதில் சொன்னாள்....


தான் ஏன் இப்படி ஆகி விட்டோம் என தன்னைப் பற்றியே கழிவிறக்கம் மிகுந்தது. காலையில் அலுவலகம் கிளம்பும் முன் கூட இப்படித்தான்....


"தயிர் தோய்ச்சிட்டியோனோ ஸ்மிதா?" என ஒருமுறைக்கு மூன்று முறை மாமியார் கேட்க, எதிர்பார்க்காமல் அந்த கோபம் தலை தூக்கியது....


"திரும்ப திரும்ப கேக்கணுமா உங்களுக்கு? எத்தன வாட்டி பதில் சொல்லணும்?" என காட்டமாய் கேட்க, சும்மாவே அவளை வம்பிழுக்கும் மாமியாருக்கு வாகாய் அவளே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விட்டாள்.


"இத்தன வாய் கூடாது" என ஆரம்பித்து, தான் கட்டும் செட்டுமாய் அடக்கமாய் குடித்தனம் நடத்திய கதையைச் சொல்லி (தனிக் குடித்தனம் - ஊர் ஊராய்), தன் பெண் எத்தனை கஷ்டப் பட்டு வாழ்க்கை நடத்துகிறாள் எனப் புலம்பி, தனக்கு மரியாதையே இல்லை என ஓலமிட்டு ரகளை செய்து விட்டாள். 


இத்தனை நடந்தும், வாசு இரவு நேரம் கழித்து அலுவலில் இருந்து வந்தவன், system இல் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, வெறுமனே ஒரு தடவை தலை நிமிர்த்திப் பார்த்தோடு சரி. என்ன ஏது என்று ஒன்றும் கேட்கவில்லை. அவனுக்கு ஸ்மிதாவையும் தெரியும், அவன் அம்மா சுபாவமும் புரியும்.


ஸ்மிதாவிற்கு மாமியார் கத்தல் புதிதல்ல. சாதுர்யமாய் ignore செய்துவிட்டு போய் விடுபவள், இன்று react செய்யப் போய் வந்த ப்ரச்சினை. வீட்டில் மட்டும் இல்லை. அந்த இனம் புரியாத எரிச்சல் சமீப காலமாய் அவளை எப்போது பார்த்தாலும் ஆட்கொண்டு படுத்திக் கொண்டிருக்கிறது.


எல்லாம் அவனால் தான் என்று தோன்றியது. பத்து வருடம் கழித்து மறுபடி தன் வாழ்வில் , தன்னொடு ஒன்றாக ஒரே office இல், அவனை அவள் நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை.


2005ம் வருடம். கல்லூரி முடித்து campusஇல் தேர்வாகி, அந்த மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கையில், வாழ்க்கை ரம்யமாய் தோன்றியது. ஸ்மிதா அதுவரை, பெண்கள் பள்ளி, கல்லூரி என படித்து வளர்ந்ததால், ஆண் நண்பர்களோடு பழக நேர்ந்த முதல் சூழல்.


அப்போது, அவளோடு ஒன்றாக பணிக்குச் சேர்ந்து, பயிற்சிப் பிரிவில் நுழைந்தவன் தான் ராஜேஷ். நன்றாகப் பேசிப் பழகி வந்தவன் பயிற்சி முடிந்ததும் ஹைதரபாத் பிரிவில் ஒரு projectக்கு அனுப்பப் பட்டான். ஸ்மிதாவிற்கு சென்னை பிரிவிலேயே பணி கிடைத்தது. ஒரு வருட முடிவில், அவரவர் பணியில், மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி, மதிப்பாராய்தலில் உச்சபட்ச மதிப்பீடு பெற்று, பணி நிரந்தர உறுதியையும், இருவருமே பெற்றிருந்தனர். கூடவே ராஜேஷ் சென்னை பிரிவிற்கு மாற்றப் பட்டிருந்தான்.


வந்த அன்றே ஸ்மிதாவைத் தேடி வந்தவன், அவள் வாழ்க்கையையே வேறு விதமாய் மாற்றினான்.


தினந்தோறும் அவன் அனுப்பும் குறுந்தகவல்கள், இரவு நேரம் உணராது நீளும் அலைபேசி உரையாடல்கள், பணிக்கு இடையே coffee break க்கு வந்தே ஆக வேண்டும் என அவன் படுத்தல்கள், வேண்டுமென்றே அவளைச் சீண்டி விளையாடி அலைக் கழிப்பது, ஒவ்வொரு அசைவையும், முக மாற்றத்தையும் உணர்வது, அவள் சொல் உதிர்ப்பில் செயல்படத் துடிப்பது என அவளது வாழ்வின் இன்றியமையாத நண்பனாய் மாறியே போனான் அவன்.


பணியில் இரவு நேரமானால், அவளை வீடுவரை காரில் அழைத்துச் சென்று drop செய்வது அவன் தான். "வாடா வீட்டிற்குள்" என அறிமுகம் செய்ய அழைத்தால் மட்டும் எங்கிருந்தோ ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும் அவனிடம். வரவே மாட்டான். பிறகு சில நாட்களில், அப்பா ஆபிஸிற்கு அழைத்து வருகையில், எப்படியாவது அவனை அறிமுகப் படுத்தி விட வேண்டும் என காத்திருந்த பொழுதெல்லாம், ஏமாற்றமே மிஞ்சியது ஸ்மிதாவிற்கு. அவன் தெரிந்தே நேரம் கழித்து தான் வருவான்.


நாட்கள் செல்லச் செல்ல, அவனை நண்பனாக மட்டுமே பார்த்து வந்த ஸ்மிதாவிற்கு, அவனது பிடிவாதமும், தன் மீது வளர்ந்து கொண்டே போகும் உடைமைத் தனமும் புரியாமல் போனது. சில நேரங்களில், அவளது நேரத்தைப் பிறரோடு பங்கு போட விரும்பாமல் அவன் சண்டை போட்ட போது கூட, குழந்தைத் தனமாய் அவன் எப்போதும் போல் விளையாடுகிறான் என எடுத்துக் கொண்டாளே அன்றி, தங்கள் நட்பை அடுத்த நிலைக்கு அவன் நகர்த்த விருப்பப்படுவதை அவள் உணரத் தவறித்தான்போனாள்.


ஒரு மாலை நேரம், வழக்கம்போல coffee க்கு வா என அவன் அழைக்க, தன் இன்னொரு நண்பனோடு வேலை மும்முரத்தில் மூழ்கிய அவள் போக முடியாது போக, இரவு அலைபேசியில் அவனை அழைத்த போது, அவன் குரல் உடைந்திருந்தது. "நான் முக்கியமா நெனக்கறவங்க சிலர், எனக்கு அந்த முக்கியத்தை வாழ்க்கைல கொடுக்கறதே இல்ல....ஸ்மிதா , நான் இரண்டு நாள்ல Australia கெளம்பறேன். ஒண்ணரை மாச project. அப்றம் send-off க்கு ப்ளீஸ் நீ வராதே" என மழுப்பலாகப் பட்டும் படாமல் பேசி வைத்தான்.


வராதே எனச் சொன்னதில், படு கோபம் வந்தாலும், தன் நண்பனது முதல் onsite பயணத்திற்குத் தான் போய் பார்த்து வழியனுப்பியே ஆக வேண்டும் என ஸ்மிதாவிற்குப் பட, Airport சென்றவளோடு முகம் கொடுத்துச் சரியாக கூட பேசவில்லை ராஜேஷ். முதன் முதலாய் அவன் புறக்கணிப்பில், மனம் வெதும்பிப் போனாள்.

அவனில்லாத அந்த ஒண்ணரை மாத காலமும், நரகமாய் நகர்ந்தது ஸ்மிதாவிற்கு. வேலையில் மனம் லயிக்கவில்லை. எதிலும் பிடித்தம் இல்லை. எங்கும் எதிலும் அவனே தெரிந்தான். போன் செய்தால் hi-hello-how are you என சம்பிரதாயமாய் பேசிவிட்டு ஐந்தே நிமிடத்தில் cut செய்து விடுவான். அவனோடு நேரம் செலவிட, உரையாட-சீண்டி விளையாட மனம் ஏங்கியது.


தன்னையே அறியாது, தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், இயக்கத்திலும் அவன் இரண்டறக் கலந்திருந்தது புரிந்தது. அவனோடு இணைந்து நடந்தால், வாழ்க்கை இனிக்கும் எனத் தோன்றியது. சேர்ந்து இருந்த தருணங்கள் உணர்த்தாத காதலை, அந்த ஒண்ணரை மாதப் பிரிவு, ஸ்மிதாவிற்கு உணர்த்தியது. 


ஆனால், சாஸ்திர சம்பிரதாயத்தில் ஊறிப் போனத் தன் அப்பாஅம்மாவை மீறி, அவனைத் திருமணம் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை. தங்கள் பிரிவைச் சேராத அவனை, அவர்கள் எப்படி ஏற்பார்கள் என மனது புலம்பியது. தனது மன சஞ்சலத்தை அவர்களிடம் தெரிவிப்பதே முறை எனத் தோன்ற, அந்த வாரக் கடைசியில் அவர்களிடம் பேசினாள்.


"நான் செஞ்சது தான் சரின்னு சொல்ல வரல.... ஆனா என் மனசுல குழப்பம் இருக்கு.... நீங்க எனக்கு வரன் பாக்க ஆரம்பிச்சுட்டேள்னு தெரியும்.... So, இதை உங்க கிட்ட மறைக்கறது நியாயமில்லைனு தோணித்து.... என் கூட வேலை பாக்கற ராஜேஷை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பா.... அவனே life partnerஆ அமைஞ்சா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்" என அவள் சொல்ல.... கனத்த மௌனம் வீட்டில்....


அவள் நினைத்தது போல் பெற்றோர் கோபம் கொள்ளவில்லை. அவள் பேசியதைக் கேட்டு நெற்றி சுருக்கிய அப்பா ஒன்றே ஒன்று கேட்டார் - "அந்த பையன் உன்னைப் பிடிச்சிருக்கறதா எப்பம்மா சொன்னான்?"....


சொரேல் என்றது ஸ்மிதாவிற்கு...."ஆமாம் ! அவன் இதுவரை என்னைப் பிடித்திருக்கிறது என்று எப்போதுமே சொல்லவில்லையே? அவன் நடந்து கொள்ளும் விதத்தையும், தன் மீது காட்டும் அக்கறையையுமே வைத்து தானே தப்பாய் முடிவு எடுத்து விட்டோமா?? இல்லை, நமக்கு அவன் மீது பிடித்தம் இருப்பதால் அவனுக்கும் நம்மைப் பிடிக்கும் என நாமே நினைத்துக் கொண்டோமா?"


ஆனால், ஊரில் இருந்து திரும்பி வந்தவனின் ஒண்ணரை மாத தாடியும், கண்ணில் நிலையாய் தேங்கி நின்ற சோகமும், தன்னைப் கண்டாலே பதறி, விலகி ஓடி ஒதுங்கும் அவன் நிலையும், அவளுக்கு அவன் காதலைத் தான் மீண்டும் மீண்டும் உணர்த்தின. அவனோடு பழகிய நாட்களில், அவனைப் பற்றி புரிந்து கொண்டவள் என்ற முறையில், காதலைச் சொல்ல முடியாமல் அவன் தவித்து வேதனைப் படுவதாகவே அவளுக்குத் தோன்றியது.


அப்போதும், அங்கே, காதலையும் மீறி, தன்னால் வேதனைப் படும் நண்பனைக் காணச் சகிக்காமல், தானே இறங்கிச் சென்று அவனிடம் தன் மன ஓட்டங்களைச் சொல்லி விடலாமா என நினைத்தாள். நண்பனுக்காய் மருகினாள். 


"அட முட்டாளே ! உன்னை மிகவும் நெருங்கி அருகில் வரத் தான் நானும் முயற்சி செய்கிறேன் என்று புரியாமல் உன்னை நீயே வதைத்துக் கொண்டு என்னையும் வதைக்கிறாயே" என வேதனையாய் சிரித்துக் கொண்டாள். 


"இருக்காதா பின்னே? அப்பா அம்மாவை மதிக்காது காதல் திருமணம் தன்னிஷ்டத்துக்கு பண்ணிக் கொள்வது போல் ஒரு சுயநலம் வேறேதும் இல்லை" என்றெல்லாம் பல தடவை அவன் காதலுக்குப் பரிந்து பேசுகையில்,அவனோடு விவாதம் செய்தது நினைவில் வந்து சென்றது.


அப்பாவைத் தவிர வேறு ஆண்களை பார்த்துப் பழகி அறிந்திராத அந்தப் பெண்ணிற்கு, அவனது ஈகோ புரியவில்லை. தான் காதலிப்பதை தைரியமாய் வெளிப்படுத்தக் கூட அவன் யோசிப்பதும், பழகிய ஆறு மாத காலத்துக்குள், தான் விரும்பும் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, ஒரு நண்பனாகக் கூட அவள் பெற்றோரிடம் பேசுவதை அவன் எதற்காகவோ தவிர்ப்பதையும், ஒருவேளை காதலைச் சொல்லப் போய், அவள் தன்னை நிராகரிப்பதை விட, தானே அவளை நிராகரித்தாய் இருக்கட்டும் என அவன் நினைப்பதையும் உணரவே இயலாதவளாய், தன் தோழனிடம் தாழ்ந்து இறங்கிப் போவதில் எந்தத் தவறும் இல்லை என நினைத்துத் தவித்துத் - திணறி- அவனிடம் எப்படியோ காதலை வெளிப்படுத்திய தருணத்தில், அவன் காதல் மட்டுமல்லாது நட்பையும் மறந்து, அவளைத் தாண்டி வெகு தூரம் கடந்து போய் விட்டிருந்தான்.


"எனக்கு உன் பால் அப்படி எந்த ஈர்ப்பும் இல்லை" என்ற அவன் சொல்லில், மொத்த ரத்தமும் உறிஞ்சப்பட்டு உடல் சக்கையாகி விழுந்தது போல் உணர்ந்தாள் ஸ்மிதா. வெடித்துக் கிளம்பிய கேவலை, இதழ் அழுத்திக் கடித்து, "ஓ..... பரவாயில்லை டா, ஆனா என்னை ஏன் இப்படி avoid பண்ணறே? காதல் இல்லாம போனா என்ன? நாம basically friends தானே.... அப்படி என்னைத் தூக்கி எறிஞ்சுட்டுப் போற அளவுக்கு என்னடா ப்ரச்சினை நமக்குள்ள?" என்ற கேள்விக்கு எல்லாம் நக்கலாய் பதில் சொன்னான் அவன்.


"உனக்கு நான் கொடுத்த importance எப்பயோ முடிஞ்சு போச்சு. என் life ல வேற friends வந்துட்டாங்க....You better learn to move on" எனச் சிக்கனமாய் முடித்து விட்டு கிளம்பியவன், தனது பொது நண்பர்களிடத்தில் அவளாக வந்து propose செய்ததையும், அவன் அவளை நிராகரித்ததையும் சொல்லிச் சொல்லிச் சிரித்ததைத் தாங்க மாட்டாது அவளது தோழி அவளிடத்தில் சொல்லி வருத்தப்பட, விக்கித்துப் போய் நின்று விட்டிருந்தாள் ஸ்மிதா.


பிறகு திடீரென, அவர்களது அலுவலகத்தின் London பிரிவிற்கு, திறமை வாய்ந்த ஒரு தலைமை தேவைப்பட்டதும், சூழ்நிலையை மறக்க, அதை ஒப்புக் கொண்டு அவள் London சென்றதும், 1.5 வருடம் கழித்துதிரும்பி வந்தவளுக்கு, பெற்றோர் வாசுவை மணமுடித்ததும், வாசுவோடான இனிய வாழ்வில் அகில் பிறந்ததும், அவள் ராஜேஷையும் அவனோடு நடந்த நிகழ்வுகளையும் சுத்தமாக மறந்தே போனதும் வெகு இயல்பாக நடந்தேறின. இன்று ஸ்மிதா வேறொரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில், தன் கீழே 4-5 project களை நிர்வகிக்கும் Senior Project Manager.


சலனமில்லாது நிம்மதியாய் போய் கொண்டிருந்த வாழ்வில், தேவையற்ற திருப்பமாய், பத்து வருடம் கழித்து ராஜேஷைச் சந்திக்க நேர்ந்தது. அதுவும் அவளது ஆபிஸில் அவளுக்கு இணையான பதவியில். 


கசப்பை எல்லாம் மறந்து, ஒரே ஆபிஸில் ஒன்றாக வேலை செய்ய வேண்டி பாராமுகமாய் இருக்க முடியாதே என்று, இன்முகமாய் இயல்பாய் இருக்கத் தான் ஸ்மிதா முயன்றாள். ஆனாலும், ராஜேஷின் குரூரமும், நக்கலும் சற்றும் மாறி இருக்கவில்லை.


எப்போதும் இடக்கு மடக்காக பேசினான். பொதுவான விஷயங்களைப் பேசி உரையாடுகையில், தேவையே இல்லாது அவளை சாடுவது போல் எதிர் கருத்து தெரிவித்தான். அவளை மட்டம் தட்டுவதே குறி எனக் கொண்டிருந்தான். ஜாடை மாடையாய் அவன் செய்யும் ஏளனம், மற்றவருக்கு புரியாவிட்டாலும், ஸ்மிதாவிற்கு நன்றாகவே புரிந்தது. என்ன மாதிரி ஆள் இவன் என எரிச்சல் வந்தது.


இரண்டு நாள் முன் தான் உச்ச கட்டம். அவளது முயற்சியால், புது Project ஒன்று ஒப்பந்தமாகிட, அதைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறிய பார்ட்டி நடந்தது. அவளைப் பாராட்டிப் பேசிய Delivery Head, பெண்களின் முன்னேற்றத்துக்கும், ஆற்றலுக்கும், மன உறுதிக்கும், அயராத உழைப்பிற்கும் ஸ்மிதா போன்றோரே எடுத்துக் காட்டு எனப் பேசினார்.


ராஜேஷ் அட்டகாசமாக அவளது டேபிளுக்கு வந்து வாழ்த்தி விட்டு, அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக "இதுல மட்டுமா பொண்ணுங்க முன்னேறி இருக்காங்க? பையனுங்க பின்னாடி சுத்தறதுலயும், கூச்சமே இல்லாம் propose பண்றதுலயும், அப்புறம் ஒண்ணுமே நடக்காத மாதிரி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தறதுலயும் கூட பொண்ணுங்களுக்கு மகா திறமை தான். ஒரு நாள் அந்தக் குடும்பத்துக்கு உண்மை தெரிஞ்சா, அதுக்கப்பறம் தைரியமா வேலைக்கு அனுப்பவா போறாங்க? அப்றம் என்னத்த பெருசா சாதிக்க?" என comment அடிக்க, ஸ்மிதா கூனிக் குறுகிப் போனாள்.


"இவன் மிரட்டுகிறானோ? வாசுவை இவனுக்கு தெரியாது என்றாலும் ஏதாவது சொல்லி விடுவானோ? வாசு இதை எப்படி எடுத்துக் கொள்வார்?" என என்னென்னவோ குழப்பம் ஸ்மிதாவிற்கு. ஆபிஸில் நிலை கொள்ளவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் ஒரே திண்டாட்டம். இவள் பதறுவது தெரிந்து அவன் மேலும் நையாண்டி தான் செய்தான். ஏண்டா ஆபிஸிற்குப் போகிறோம் என ஆனது ஸ்மிதாவிற்கு. இதன் தொடர்ச்சி தான் அந்த எரிச்சலும், கோபமும்.


இதோ வீடு வந்து விட்டது. அகிலுக்காய் வாங்கிய மாம்பழத்தை அவனுக்கு தருவதற்காய் அவனைத் தேடினாள். உள்ளறையில், வாசுவிடம் அவன் சிணுங்கிக் கொண்டிருந்தான்.


"ஒரு வாட்டி மேத்ஸ் டெஸ்ட்ல தெரியாம புக்கைப் பார்த்து ஆன்ஸர் எழுதினேன் பா.... இதை அந்த விமல் பாத்துட்டான்...காபி அடிக்க கூடாதுனு அம்மா சொல்லிக் குடுத்துருக்கறதால, அது தப்பு - பண்ணக் கூடாதுன்னு அந்த ஆன்ஸரை நானே அழிச்சுட்டேன் பா.....அதுலேர்ந்து சும்மா அந்த விமல் எல்லாத்துக்கும் - உன்ன மிஸ் கிட்ட மாட்டி விட்டுடுவேன்னு மெரட்டிண்டே இருக்கான் பா" மெதுவாய் விம்மினான் குழந்தை.


"Its Ok ma அகில். அடுத்த வாட்டி விமல் உன்ன மெரட்டினான்னா, தைரியமா போய் மிஸ் கிட்ட சொல்லிக்கோடானு சொல்லிடு. அப்பாக்கும் அம்மாக்கும் உன்னப் பத்தி நன்னா தெரியும். நீ அழாதே. நீ பயப்பட பயப்பட தான் அவன் உன்ன இன்னும் மெரட்டுவான்" 


குழந்தையை அணைத்தபடி ஆதுரமாய் பேசிக் கொண்டிருந்தான் வாசு. பளீரென்று கண்திறந்தது போல் உணர்ந்தாள் ஸ்மிதா. ஆம் ! இவர் என்னவர். இவருக்குப் புரியும் என்னைப் பற்றி!! அப்படி இருக்க நான் ஏன் கண்டவனுக்கும் பயந்து கொண்டு"? தெளிந்தது மனது.


மறுநாள் காலை,ஆபிஸ் சென்றதும் நேராக ராஜேஷின் கேபினுக்குப் போனாள். "உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள். இந்த மாற்றத்தை எதிர் பார்க்காத ராஜேஷ் திகைத்தான்.


"ராஜேஷ், என் கடந்த கால வாழ்க்கையை பத்தி, உங்களுக்கு ஏதோ தெரியும் போலருக்கு. அதை என் வீட்டுக்குத் தெரியப் படுத்த நெனக்கறீங்களோ என்னவோ.... அதான்.... நானே என் husband போன் நம்பர் குடுத்து உங்கள பேச சொல்லலாம்னு பாக்கறேன்.... by the way, அவருக்கு உங்கள நல்லாவே தெரியும்..., டயல் பண்ணித் தரேன் பேசறீங்களா? எனவும் எதிரே ராஜேஷ் மிரள்வது தெரிந்தது.


"ஏ... ஏ.... ஏய்.... என்ன உளற்ற" என்றான்.


"அட உங்களுக்கு ஏன் trouble? இருங்க நானே டயல் பண்ணறேன் என மேசை மேல் இருந்த landline ஐ சுழற்றி வாசுவைக் கூப்பிட்டாள். "வாசு, என் கூட work பண்ணற கொலிக் ராஜேஷ் - அவர்க்கு உங்கள்ட என்ன பத்தி ஏதோ சொல்லணுமாம்" என receiver ஐ ராஜேஷிடம் நீட்ட, படாரென்று பாய்ந்து line ஐ கட் செய்தான் ராஜேஷ். ஏசியை மீறி வியர்த்திருந்தான். "என்ன பண்ணற நீ? Get out of my cabin" எனக் கத்தினான்.


"ராஜேஷ் உங்களுக்கு நட்பு தான் தெரியாதுன்னு நெனச்சேன். நாகரிகம் னா என்னன்னு கூட தெரியல. மொதல்ல அதக் கத்துக்கோங்க. வாழ்க்கையில இன்னும் மேல வரலாம். இனிமே இந்த நக்கல், நையாண்டி பேச்செல்லாம் உங்க கேபின் லயே விட்டுட்டு வெளிய வந்து என் கிட்ட பேசுங்க" என்று விட்டு, கதவை அறைந்து மூடி வெளியேறினாள்.


சுவர் கடிகாரத்தின் கீழ் விவேகானந்தரின் வாசகங்கள் கண்ணில் பட்டன.


"Do the thing you fear and death of fear is certain"



Rate this content
Log in

Similar tamil story from Abstract