மன உறுதியுடன் போராடி
மன உறுதியுடன் போராடி


வறுமையில் வாடிய போதிலும் மன உறுதியுடன் போராடி கேரளாவின் முதல் பழங்குடி இன உதவி கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார், ஸ்ரீதன்யா.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பொழுதனா பஞ்சாயத்தைச் சேர்ந்த தம்பதியர் சுரேஷ்-கமலா. குரிசியா என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இவர்கள் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் தினக்கூலிகளாக வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் சுஷிதா, ஒட்டப்பாலம் நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறார். மகன் ஸ்ரீராக், பாலிடெக்னிக் படித்து வருகிறார். இரண்டாவது மகளான ஸ்ரீதன்யா உயிரியல் பாடத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஸ்ரீதன்யாவுக்குக் காவல்துறை, ஹாஸ்டல் வார்டன் போன்ற வேலைகள் கிடைத்தன. அதில் அவருக்கு ஈடுபாடு இல்லாததால் பணியில் இருந்து விலகினார். பின்னர், கேரள அரசின் பழங்குடியின மேம்பாட்டுத் துறையில் அவருக்கு கிளார்க் வேலை கிடைத்தது.
ஸ்ரீதன்யா ஐ.ஏ.எஸ்அதில் வேலை செய்தபோது, சப்-கலெக்டராக இருந்த சீரம் சாம்பசிவ ராவ் அவருக்கு உந்துதலாக இருந்தார். சப்-கலெக்டருக்குக் கிடைக்கும் மரியாதை, அந்தப் பதவிக்கான பொறுப்புகளும் கடமைகளும் அவரைப் பிரமிக்க வைத்தன. அதனால் தானும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படிக்கத் தொடங்கினார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அவர், வயநாடு மாவட்டத்திலிருந்து தேர்வாகும் முதல் ஐ.ஏ.எஸ் என்ற பெருமை பெற்றார். நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்குக்கூட நண்பர்களின் உதவியைப் பெற்றே சென்றார். பின்னர், உத்ரகாண்ட் ம
ாநிலம் முசோரியில் உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்றுத் தேர்வானார்.
கோழிக்கோடு உதவி கலெக்டர் ஸ்ரீதன்யாஸ்ரீதன்யாவுக்குத் தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் உதவி கலெக்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து கோழிக்கோடு மாவட்ட உதவி கலெக்டராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீதன்யா தன் வாழ்க்கையில் யாரை ரோல் மாடலாகக் கொண்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தாயாரானாரோ அதே, சீரம் சாம்பசிவ ராவ், தற்போது கோழிக்கோடு மாவட்ட கலெக்டராக இருக்கிறார். அவருக்குக்கீழ் உதவி கலெக்டராகப் பணியில் சேர்ந்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நான் பொறுப்பேற்று இருப்பதன் மூலம் எனக்குக் கூடுதல் கடமைகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சூழலில் பணியாற்றுவதன் மூலம் நிர்வாகம் குறித்து அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.
கோழிக்கோடு மாவட்டம் எனக்கு இரண்டாவது தாய் வீடு போன்றது. இங்கிருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல திருப்பங்கள் இங்கிருந்தே தொடங்கியிருக்கின்றன. அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பொறுப்பில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.
உதவி கலெக்டர் ஸ்ரீதன்யாஎன் கண் முன்பாக நிறைய கடமைகள் காத்துக்கிடப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் நான் என் பணிகளில் மிகவும் அக்கறையுடன் செயல்படுவேன்” என்றார்.
கேரளாவின் முதல் பழங்குடியினப் பெண் கலெக்டர் என்ற பெருமை பெற்றுள்ள ஸ்ரீதன்யாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.