Kalai arasi

Abstract

5.0  

Kalai arasi

Abstract

மாற்றம் மலரும்

மாற்றம் மலரும்

4 mins
187"பெண் குழந்தை" என்று ஏதோ ஒரு குரல் கேட்டதும் அறுவை சிகிச்சை முடிந்து அரை மயக்கத்தில் இருந்த அந்த விழிகளின் விளிம்பில் ஓர் கண்ணீர் துளி வழிந்தோடியது. தான் தாயாகி விட்டோம் என்ற முழுமையும், அதுவும் பெண் குழந்தைக்கு என்ற பெருமையும் அந்த பார்வையில் இருந்தது. "என் குழந்தையை பாக்கணும் டாக்டர்" என்று மெல்லிய குரலில் கேட்டாள் தென்றல். தன் கனவு தேவதையின் நிஜமுகம் காண நெஞ்சம் தவித்தது. கண் மூடிய நிலையில் தன் நினைவுகள் எங்கேயோ சென்று கொண்டிருப்பதை உணர்ந்தாள்.  


நிகழ்வு ஒன்று : "ஐயோ, மீண்டும் பெண் குழந்தையா?, வம்சத்திற்கு வாரிசு இல்லாம போய்டும் போல. ஆபரேஷன் பண்ண வேணாம் டாக்டர், மூணாவது முறையாவது கடவுள் கண்ண திறக்கணும். 

 "கண்ண திறக்க வேண்டியது கடவுள் இல்ல ஆண்ட்டி, மனச திறக்க வேண்டியது நீங்க தான்" ஏதோ ஒரு மருத்துவமனையில் யாரிடமோ இதை கூறிய போது தென்றலுக்கு வயது பதிநான்கு.


நிகழ்வு இரண்டு: "தென்றல் வா போகலாம் , உன் தோழி மாலாவின் தங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா. அவங்க அம்மா இன்வைட் பண்ணி இருக்காங்க. சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா". 

"அம்மா அவங்களுக்கு தான் புரிய மாட்டேங்குதுன்னா, உங்களுக்குமா? இந்த மாதிரி பங்ஷன் எல்லாம் எனக்கு ரொம்ப அபத்தமா தெரியுது”. கண்களில் எரிச்சல் கொப்பளிக்க வார்த்தைகளை கொட்டினாள். "நான் வரல நீங்க வேணும்னா போயிட்டு வாங்க". இது சில வருடங்களுக்கு முன்பு.


 நிகழ்வு மூன்று: "இங்க பாரு கீதா, நீ கோவிலுக்கு வர கூடாது, உனக்கு பீரியட்ஸ் . ஒரு ஓரமா அமைதியா உக்காந்துட்டு இரு. நீ சடங்கு சம்பிரதாயத்தில் எல்லாம் கலந்துக்க கூடாது. தப்பு" என்று கட்டளையிட்டு விட்டு தென்றலை நோக்கினாள் தன் தூரத்து சொந்தமான விமலா அத்தை. "என்ன பாக்குற , நீ போய் உன் வேலைய பாரு" என்று அதட்டினாள் . 

"ஏன் அத்தை ..ஏன் கீதா அக்கா வர கூடாது ?" . "அதெல்லாம் அப்படி தான். பொண்ணுங்க அந்த சமயத்தில் கோவிலுக்கு வர கூடாது, தீட்டு. பெரியவங்க எதையும் ஒரு காரணம் இல்லாம சொல்ல மாட்டாங்க". " அந்த காரணத்தை தான் தெளிவா சொல்லுங்கன்னு கேக்கிறேன்" இது தென்றல். அவள் கேட்டதை சற்றும் சட்டை செய்யமால் , "எனக்கு டைம் ஆகுது நான் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு கீதாவுக்கு பார்வையிலே மறுபடியும் கட்டளையிட்டு விட்டு மறைந்தாள் விமலா அத்தை. அன்று இரவு தென்றலுக்கு தூக்கமே வர வில்லை. யோசித்தாள்..விடிய விடிய யோசித்தாள்.


நிகழ்வு நான்கு:  அலுவலகத்தில் பணி புரியும் சக தோழியருடன் காபி பிரேக்  உரையாடல். மேக்கப் ,பேஷன், லேட்டஸ்ட் டிவி ரியாலிட்டி ஷோ, சினிமா, எல்லாம் முடிந்து , அடுத்த டாபிக்ஐ தேடி கொண்டிருக்கையில், சத்தம் சற்றே அடங்கியது. ராஜியின் விசும்பல் கேட்டது. "என்னாச்சு?". கோரஸாக ஒலித்தன ஐந்து குரல்கள், தென்றலின் குரல் மட்டும் சற்றே கணீரென. "எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆக போகுது". "கங்கிராஜுலேஷன்ஸ், இதுக்கு ஏன் அழற?". 


"இல்ல , கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக கூடாதுன்னு சொல்றாங்க பையன் வீட்ல, ஆனா எனக்கு வேலைய விட வேணாம்" இப்பொழுது அழுதாள் ராஜி . " அப்போ , வேணாம்னு உன்னோட முடிவை சொல்ல வேண்டியது தானே" என்று குறுக்கிட்டாள் தென்றல். "பையன் ரொம்ப நல்ல இடம் , வசதியான இடம், இந்த சின்ன விஷயத்துக்காக மறுக்க வேணாம்னு சொல்றாங்க அப்பா அம்மா ". "போடி பைத்தியக்காரி , இது சின்ன விஷயமா? நீ என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமையை மற்றவர்களுக்கு , அதுவும் உன் மீது உரிமை ஏற்படுவதற்கு முன்பே தருவாயா ? என்னமோ பண்ணு என்று சீறி விட்டு அங்கிருந்த நாற்காலியை சற்று வேகமாக நகர்த்தி விட்டு நகர்ந்தாள். தென்றல் புயலென மாறும் சில தருணங்களில் அது ஒன்றாக இருந்தது.

 

நிகழ்வு ஐந்து : "மதன்... குழந்தையை அம்மா தானே கவனிக்கனும், இதெல்லாம் லேடீஸ் வேலை, சாப்பாடு ஊற்றது, டயாபர் மாத்தறது , இதெல்லாம் நம்ம பண்ணிட்டு இருக்க முடியுமா ?.... நான் ஆபீஸ் லேர்ந்து வீட்டுக்கு போன உடனே எப்போ சாப்பிட்டு எப்போ தூங்குவோம்னு இருக்கு, இதுல எனக்கு ஹெல்ப் பண்ண கூடாதானு என் மனைவி கேட்டா கோவம் வராதா?" தன் நண்பனிடம் நியாயம் கேட்டு கொண்டிருந்தான் ரவி. ஆபீஸ் டீம் அவுட்டிங் போது நடந்து கொண்டிருந்த இந்த உரையாடலை பிடித்தும் பிடிக்காமல் கேட்டு கொண்டிருந்தாள் தென்றல். "ஏன் ரவி , உங்க மனைவியும் ஆபீஸ் போறவங்க தானே, அதே அலுப்பும் சலிப்பும் அவங்களுக்கும் இருக்கும் தானே?, அவங்க உங்க கிட்ட உதவி கேட்பது என்ன தவறு? " என்றாள்.


இது போல் தன் வாழ்வின் பல நிகழ்வுகள் , இச்சமுதாயம் தன்னையும் அறியாமல் ஒரு பெண்ணை ஒடுங்க செய்கிறது என்பதை உறுதியாக உணர்த்தியது தென்றலுக்கு . இதை எவ்வாறு சரி செய்ய இயலும் ? இயல்பான, தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழும் ஒரு சூழலை ஏன் சுற்றமும் சமுதாயமும் பெண்ணுக்கு அளிக்க மறுக்கிறது? பெண்ணுரிமை , ஆண் பெண் சமத்துவம் வாய் கிழிய பேசும் யாரும் அதை தங்கள் வீட்டில் நடைமுறை படுத்துவதில்லை. தனக்கு நிகராக தன் மனைவியையோ, தன் மகனுக்கு நிகராக தன் மகளையோ நடத்துவதில்லை. அடிப்படையில் அந்த மாற்றம் நிகழ்ந்தால் எல்லாம் மாறும் என்பது அவளது நம்பிக்கையாக இருந்தது. அதை மனதார நம்புவதற்கான காரணங்களும் அவளிடம் இருந்தன.


ஒரு பெண்ணை ஏன் வாரிசாக ஏற்று கொள்ள கூடாது? அரசாங்கமும் சட்டமும் எத்தனை திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வந்தாலும் கூட, என் மாமா வீட்டிலும், சித்தப்பா வீட்டிலும் எதுவும் மாறவில்லையே? மாற வேண்டும், மாற்றம் வேண்டும். "மலர்".


ஒரு பெண் பருவமடைந்தால் என்ன ? அந்த இயற்கை மாற்றத்தை ஆடம்பரமாக கொண்டாடுவதன் காரணத்தை கூட புரிந்து கொள்ள முடியாத சிறுமியை ஒரு கொலு பொம்மையை போல் நடத்துவதும், தனக்கு ஏதோ பயங்கரமாக நிகழ்ந்து விட்டது, இனி எந்நேரமும் அவள் இந்திய எல்லையில் நிற்கும் நம் ராணுவ வீரர்கள் போல் அலெர்ட்டாக இருக்க வேண்டும் என்று பயமுறுத்துவதும் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை குறைக்கும் செயல்கள் அல்லவா ? ஏன் அவளை ஒதுக்க வேண்டும், ஏன் அவள் இறை சார்ந்த எந்த விழாக்களிலும் பங்கேற்க கூடாது ? ஓர் பெண் உடலில் நிகழும் இயற்கையான மாற்றமும் இறைவனது படைப்புகளில் முக்கியமான ஒன்றல்லவா ? அப்படைப்பு இப்புவியின் ஆதாரமல்லவா ? ஓர் உயிரை பிடித்து நிறுத்தி உரு கொடுத்து பூமிக்கு கொண்டு வரும் அற்புத சக்தியை அசுத்தம் என்பதா? அதை காரணம் கொண்டு ஒரு பெண்ணை ஒதுக்குவதும் , ஒதுங்க சொல்வதும் தான் பெரிய பாவமல்லவா? அது என் பெருமை, என் சிறப்பு, என் பெண்மையின் அடையாளம். மாற வேண்டும், மாற்றம் வேண்டும். "மலர்".


 பெண்ணுக்கென்று தனி ஒரு லட்சியமோ, குறிக்கோளோ இருப்பது தவறா? திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்க வேண்டுமே அன்றி சிறுவயதில் இருந்து சுமந்த கனவுகள் நினைவாகும் தருணத்தில் களைந்து போக செய்யும் விபத்தாக அமைய கூடாது. திருமணத்தின் முன் நிபந்தனைகள் விதிக்க படுவது , ஒரு  வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒப்பந்த பத்திரத்தில் இரு பங்கு தாரர்கள் கை எழுத்திடும் செயலுக்கு நிகரானதாகும். மாற வேண்டும், மாற்றம் வேண்டும். "மலர்".


குழந்தை என்பது பெற்றோர் இருவரது பொறுப்பாகும். குழந்தை வளர்ப்புக்கென்று தனி ஒரு பயிற்சியை எந்த பெண்ணும் எடுத்து கொள்வதில்லை. குழந்தை பெற்ற அத்தருணத்திலிருந்து அது இயல்பாக வரும் கலை, தோன்றும் உணர்வு. இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒரு பெண்ணால் தான் அது முடியும், ஆண்களால் முடியாது என்று சமுதாயம் சொல்லி தந்த சொகுசான காரண படுக்கையில் படுத்து கொள்வது இன்னும் எத்தனை காலம் நிகழ போகிறது? மாற வேண்டும், மாற்றம் வேண்டும். "மலர்".


பெண் என்ற காரணத்தால் எங்கெல்லாம் இந்த சமுதாயம் என்னை அடக்கவும் முடக்கவும் முயன்றதோ. அந்த கட்டமைப்புகளை எதிர்த்து வாழும் துணிவோடு ஒரு பெண்ணை நான் வளர்க்க வேண்டும். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும். மாற்றம் என் வீட்டில் நிகழும். 


என்றோ தனக்குள் எடுத்து கொண்ட உறுதியில் தன் நினைவு வந்து நிற்க."குழந்தை பாக்க அப்படியே உன் வீட்டுக்காரர் மாதிரி இருக்கு" என்ற அம்மாவின் குரல் தன்னை இந்நிலைக்கு கொண்டு வந்தது. தன்னை சுற்றி பெற்றோரும் மற்றோரும் அடுத்த கட்ட நிகழ்வுகளை பற்றி ஆனந்தமாக பேசி கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது.


"குழந்தை பொறந்த நேரத்தை கரெக்டா டாக்டரை கேக்கணும். ஜோசியர் கிட்ட காட்டி ராசி, நட்ஷத்திரம், ராசி எழுத்தெல்லாம் குறிச்சிட்டு வரணும். சீக்கிரம் பேர் வெக்கணும்ல " 


"நான் முடிவு செய்தாகி விட்டது" திண்ணமாக கூறினாள் தென்றல். "என்ன ?? முடிவு பண்ணிட்டியா ? என்ன பேரு?"


“மலர்”


   

        -முற்றும்
Rate this content
Log in

Similar tamil story from Abstract