ganesan mani

Abstract

4  

ganesan mani

Abstract

கடவுளின் விசும்பல்

கடவுளின் விசும்பல்

6 mins
870


கடவுளுக்கு இந்தமுறை ஒரு விபரீத ஆசை தோன்றியது.பண்டிகைக் காலமாதலால் ஏதேனும் ஒரு வீட்டில் நன்கு வயிறாறச் சாப்பிட்டு எந்நாளும் துன்பத்தில் உழலும் மக்களுக்கு கேட்கும் வரங்களனைத்தையும் வாரித் தந்துதவ வேண்டுமெனும் தயாளக் குணத்துடன் பூமியில் தோன்ற உத்தேசித்தார்.அப்போது அவரது அந்த உடனடி எண்ணத்தைத் தன் உள்ளத்தால் அறிந்துணர்ந்த சற்றும் அயர நேரமில்லாத மாதர்தம் குலவிளக்கு,அவரின் ஏகப்பத்தினி மனம் கேட்காமல் அவ்வாசைக்கு முட்டுக்கட்டைப் போட நினைத்தாள்.

“இது வேண்டாத வேலை உங்களுக்கு.ஏற்கெனவே நான் பட்டது போதும்.”

வழக்கம்போல் பெண்பேச்சு காற்றில் பறந்தது.அவளது கரிசனமொழியை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவரது புறப்பாடு முன்னைவிட மேலும் தீவிரமடைந்திருந்தது. நெஞ்சில் நெருஞ்சியாய்த் தைத்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டு கணவன் மீது கொண்ட தீராக்காதல் அவளைச் சும்மாயிருக்க விடவில்லை.புழுவாகத் தவித்தாள்.எவ்வளவு சொன்னாலும் உதாசீனப்படுத்தும் ஆண் புத்தியை என்னதான் செய்வதெனக் கையாலாகாதவளாகப் புலம்பித் துடித்தாள்.முகமெங்கிலும் வேர்வை முத்துகள்.மைத்தீட்டப்பட்ட விழிகளில் உயிருக்குப் போராடும் படபடப்பு.எளிதில் துடைத்தெறிய முடியாத ஆற்றாமை ஆழிப்பேரலையாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.ஆனாலும் பொறுமை அடர;த்தியாய் அவளை எழும்பவிடாமல் அமுக்கியபடியிருக்க-

“நான் சொல்லும் இந்த ஒரு சொல்லையாவது நீங்கள் கேட்கக்கூடாதா?”

நா தழுதழுத்தது.தன் உயிருக்குயிரான கணவருக்கு நேரவிருக்கும் இழிவைத் தாங்கிக் கொள்ள அவளால் முடியவில்லை.தவிர,அவளது உடல் ஏற்கெனவே பழுதிலிருந்தது.கடும் வயிற்றுவலியோடு இந்தமுறையும் உதிரப்போக்கு காட்டாறாகக் கேட்க நாதியில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.அதற்கு அவரிடமிருந்து ஒட்டுமில்லை,ஒணக்கையுமில்லை.பதிலுக்கு நீ என்னதான் தெய்வப்பிறவியோ? என்ற சலிப்பை ஒவ்வொருமுறையும் அவரிடமிருந்து கேட்கும்போது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுதல் என்பார்களே அதைத்தான் அவள் உணருவாள்.பெண்ணுக்குள் எப்போதும் ஈரம் மிகுதி.ஈரத்திலேயே அவள் கிடந்து உழல்வதால் என்னவோ? அவளுக்கே விளங்கவில்லை.

பெண்புத்தியென்பது பின்புத்தியோ முன்புத்தியோ ஆனால் ஆண்புத்தியென்பது மட்டும் அவசரபுத்தியென்பதை அவர் ஆணியடித்தாற்போல் உணர்த்திக் கொண்டிருந்தார்.அவளது முயற்சியனைத்தும் வங்கக்கடலில் வீணாகக் கலக்கும் காவிரியானது.

அவளால் அங்கு நடப்பதற்கு ஒன்றுமில்லை இனி.பட்டுத் தெரி(ளி)ய இருப்பவரை விட்டுத்தான் பிடிக்கவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.கூடவே ஏதும் அவருக்கு நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் கடவுள் என்பதை மறந்து வேறுபல தெய்வங்களை நினைந்து பக்தியுடன் மன்றாடி வேண்டிக்கொண்டாள்.புத்தம் புது ஆளாகக் காட்சியளித்தவரின் புதுக்கோலத்தைக் கண்டு வியந்தபோதிலும் அவள் மனம் பதறத்தான் செய்தது.

“பூவுலகிற்குச் செல்லும்போது இப்படியா போவது?”

“ஆடை ஆபரணங்கள் ஆயுதங்கள் இத்யாதி இத்யாதியெனப் பகட்டாகத் தோற்றமளித்தல் எரிச்சலாகவும் சுமையாகவும் உள்ளது.”

“அதற்காக இங்கிருப்பது போல நினைத்த நேரத்தில் எழும்புவது,குளிப்பது,உண்பது,உறங்குவது,எதையாவது உடுத்துவது என அங்கும் இருக்க முடியுமா?”

“என் சோதனை முயற்சிக்கு நீ ஆதரவு தராவிட்டாலும் அணைக்கட்டுவது முறையா?”

“நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் நான் சகித்துக் கொள்வது என் விதி.அதை மாற்ற முடியாது.அதையே எல்லோரிடமும் எதிர்பார்ப்பதென்பது என்ன நீதி?”

“முடிவாக என்னதான் சொல்ல வருகிறாய்?”

“கடவுள் நீங்கள்.கடவுளாகவே பூலோகம் செல்லுங்கள்.அதுதான் உங்களுக்கும் நல்லது.நம் எல்லோருக்கும் நல்லது.உங்கள் திருவிளையாடல் இப்போது அங்குச் செல்லுபடியாகாது என்பதைத் தாங்கள் உணர்ந்தால் சரி.”

“என் முடிவில் எந்தமாற்றமுமில்லை.பெண்ணென்பவள் எங்கேயும் எப்போதும் அழகுப் பதுமையாகத்தான் இருக்க வேண்டும்.நீ அதை மீறினாய்.அதனால் விளைந்த வேதனையை அனுபவிக்கின்றாய்.ஆனால் நான் அப்படியல்ல.எப்படிப் போனாலும் பக்தர்கள் என்னை மெச்சவே செய்வர்.புரியுதா?”

“மெச்சுவதும் மொத்துவதும் அங்குப் போய்தான் உங்களுக்குப் புரியப்போகிறது.உங்கள் தலையெழுத்தை மாற்ற புதுக்கடவுள் ஒருவர்தான் அவதாரம் எடுத்து வரவேண்டும்.”

“என்ன அங்கே முனகல்?”

“ஆங்…ஒன்றுமில்லை.நீங்கள் நல்ல நேரத்தில் இங்கிருந்து புறப்படுங்கள் சாமி.அதுதான் நம்மிருவருக்குமே நல்லது.மறுபடி மறுபடிச் சாம்பலாக என்னால் முடியாது.காற்று எப்போதும் ஒரே திசையில் மட்டும் வீசாது.அது உறுதி.” 

“இப்போது சொன்னாயே இதுதான் மிகச் சரி.” 

மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரளப் புவியை நோக்கிக் கிளம்பி நின்றார் கடவுள்.பசி மறந்து.

“காலைச் சாப்பாடு?”

“வேண்டாம்.செத்துக்கிடக்கும் நாக்கிற்கு எம் பக்தர்கள் உயிரூட்டுவர்.அதுவரை உன் சமையலை நீயே தின்னுத் தொலை.”

கட்டுண்டுக் கிடந்தாலும் ஆனந்தத்தில் பூரித்து சட்டென மாயமாக மறைந்து போன கணவன் நல்லபடியாக வீடு திரும்ப நோன்பிருக்கலானாள் உலகிற்கே படியளக்கும் அன்னை.மிகுந்த மன வலியோடு.பின்,உடல் பெரும்பாட்டால் நசநசத்துப் போன உடைகளையும் அதிகாலையில் ஊர்மெச்ச பூண்டிருந்த ஒப்பனைகளையும் களைந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள மெல்ல ஒருவர் கண்ணிலும் தட்டுப்படாதவாறு உட்புகுந்தாள்.

ஓவ்வொரு வீடும் விழாக்கோலம் கொண்டிருந்தது.அவரவர் தகுதிக்கேற்ப பண்டிகைக்கால பலகாரங்களை ஆக்கிப் படையலிட்டு வழிபட மும்முரமாக இருந்தனர் மக்கள்.அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் எல்லாம் உள்தாழிட்டபடிக் கிடந்தன.காற்று நுழைவதற்கே மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது.அதுவுமில்லாமல் ஆளரவம் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமலிருந்தது.பாதிப்பேர் மயக்கத்திலும் ஏனையோர் முயக்கத்திலும் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தது கடவுளுக்குக் கொஞ்சங்கூட பிடிக்கவில்லை.கேட்பாரற்று சில்லிட்டுக் கிடந்த உணவுவகைகள் மெல்ல கெட ஆரம்பித்தன.பசி வயிற்றைக் கிள்ள ஏமாற்றத்துடன் வெளியேறினார் கடவுள்.

ஏறுவெய்யில் மண்டையைப் பிளந்தது.நாக்கு வறளத் தொடங்கியது.அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்.வெண்மேகங்கள் ஒன்றையொன்று துரத்தியோடிக் கொண்டிருந்தன.அதன் நடுவே களைந்த கூந்தலுடன் அவரது உத்தமி இருகைகளையும் அகலவிரித்துக் கூப்பிடுவது போலிருந்தது.நாணத்தால் கடவுள் தலைகவிழ்ந்தார்.தன்நிலை கண்டு தானே நொந்து போனார்.அவருடைய மனக்குமுறலை அருகிலிருந்த மூங்கில் காட்டில் குடிகொண்டிருந்த குயிலொன்று சோக கீதமிசைத்தது.கால்கடுக்க நடந்து கொண்டிருந்தார்…

தெளித்துவிட்டாற்போல மண்டிக்கிடந்த குடிசைகளுக்குள் கால்பதிக்க அவருக்கு மனம் வரவில்லை.மேலும்,அங்கிருந்த பட்டினிப் பட்டாளங்களைக் காணச் சகிக்கவில்லை அவருக்கு.தவிர,வீடு முழுவதும் நிறைந்து கிடந்தது வறுமை.கண்ணீர் முட்டியது.தம்மைக் கடவுள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட்டார் அவர். முதன்முறையாக.தலைப்பிசுக்குடன் வெறும் ஜட்டியோடு அம்மாவின் நைந்துக் கிழிந்தப் பழையத் துண்டுப்புடவையைக் கைக்குவந்தபடி சுற்றிக்கொண்டு கையில் முறிந்த புங்கங்குச்சியுடன் விளையாடிய சிறுமி டீச்சரை எதிர் கொண்டவருக்கு ஒரே ஆச்சர்யம்.

“ஆரு?”

“நான்…”திக்கினார்.

“பசிச்சுதா?இந்தா” பரிதாபத்துடன் அவள் கையில் கடித்து மீதியிருந்த தின்பண்டத்தை வேகமாக நீட்டியதும் கடவுளால் தாங்கமுடியவில்லை.கண்ணீர் பொலபொலவென்று அருவியாய்க் கொட்டியது.அவர் அழுவதைக் கண்டு அவளும் அவளது அம்மாவைக் கூப்பிட்டபடி அழத் தொடங்கினாள்.அதற்குள் அங்குக் கூட்டம் கூடிவிட்டது.கடவுளுக்கு என்னச் சொல்வதென்று புரியவில்லை.கும்பலைக் கண்டு அலங்க மலங்க விழித்தார்.

“இன்னா புள்ளக் கடத்த வந்தவன் மாட்டிக்கிட்ட மாறி முழிக்கிற.ஆரு நீ? இன்னா வூரு?”

கேள்வி அம்புகள் சரமாரியாகப் பாய்ந்தன.கடவுள் திக்குமுக்காடிப் போனார்.பேச்சு வர மிகவும் சிரமப்பட்டது.

“ஆளைப் பாத்தா நல்லாளு மாறித்தான் தோணுது.புள்ளப் புடிக்கிறவன் மாறித் தோணல.”

“ஆமாமா.நீ சொல்றது கரெக்கிட்டுதான்.”

“இன்னா பசியா?துட்டு வேணுமா?” 

வேண்டும் என்பதுபோலவும் வேண்டாம் என்பதுபோலவும் இருவிதமாகத் தலையாட்டினார் கடவுள்.வேகவேகமாக.கண்களில் உருவான மிரட்சி இன்னும் மறையவில்லை.உச்சியில் தகித்தது சூரியன்.வறட்சியில் வாடிய தொண்டைக்குள் நாலாபுறமும் கூட்டித் திரண்ட சிறு எச்சிலைக் கொக்கு தன் தலையை முன்னும்பின்னும் ஆட்டியசைத்து மீனை விழுங்குவது மாதிரி உள்ளனுப்பினார்.

“எங்களுக்கே இங்க வழியக் காணோம்.இதுல நீ வேறயா?”

“அட வுடுப்பா.நம்மக் கஷ்டத்த அவர்ட்ட சொல்லிட்டு.இங்க நீ தேட்றது எதுவும் கெடைக்காது.எங்களுக்கே புழுத்த ரேஷன் அரிசிதான்.அதுவுமிப்போ மாசக் கடேசி வேற.ஒரு வேளைக் கஞ்சிக்கே பெரும் திண்டாட்டமாயிருக்கு.அதுவுமில்லாம இங்கிருக்கிற எல்லாம் சோத்துப்பட்டாளம்.கொஞ்ச நேரம் போச்சுதுனா பசிதாங்காம இவுனுங்க ஒன்ன பிச்சுத்தின்னாலும் தின்னுருவாங்க.ஆளு வேற மா நிறமா இருந்தாலும் சோக்காயிருக்க.பொண்ணுப்பிள்ளைங்க நெறைஞ்சிருக்கற எடம் இது.ஒன்ன மாறி ஆளுங்கள வேற நம்பமுடியாது.அதுனால மொதல்ல எடத்தக் காலிபண்ணு.”

அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டவராகச் செய்வதறியாது கால்போன போக்கில் நடையைக் கட்டியவரைப் பார்த்து அச்சிறுமியின் விதவைத்தாய்க் கூறினாள்.கழிவிரக்கத்துடன்.

“ஐயோ,பாவம்.” 

கடவுள் தனியே நடக்க ஆரம்பித்தார்.மிக சோர்வுடன்.பசி காதை அடைத்தது.ஆனாலும்,பக்தர்கள் மீதான தன் நம்பிக்கையை அவர் இன்னும் கைவிடவில்லை.போகப்போக அவருடைய நடை தள்ளாடியது.சூரியன் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தான்.கடவுளை இனியும் வாட்டுவது முறையல்ல என்று கருதி ஒவ்வொரு மேகக்கூட்டத்திலும் ஒளிந்து ஒளிந்து.சாலைப் பள்ளத்தில் கால்வைத்துத் தடுமாறி விழப்போனவரைத் தாங்கிப் பிடித்தது ஒரு கை.

“என்னய்யா நீ கண்ணப் பொறடியில வச்சுட்டு நடக்கிற.ஒழுங்கா நடந்தாலே ஆள அடிச்சுக் காலிபண்ணிட்டு சிட்டா பறந்துர்றான்.நீ என்னடான்னா…”

கடவுள் தன்னை நன்கு இப்போது சுதாரித்துக்கொண்டார்.எஞ்சியிருந்த உடல் வலுவனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து.அத் திருநங்கை கூறியதுபோலவே சாலையில் இயங்கிக்கொண்டிருந்த பல்வேறு வாகனங்கள சர்புர்ரென காதைப்பிளக்கும் சத்தத்தடன் புகையினைக் கக்கிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன.சற்று முன்னர் அடிபட்ட நாயொன்று சக்கைச்சக்கையாய் ஆகிக்கொண்டிருந்தது. செல்பேசி மனிதர்கள் சுற்றுப்புறத்தை மறந்து காது எரிய குழாவிச் செல்வதை வியப்போடு அவர் பார்த்தார்.தனக்கும் இப்படியொரு கருவி கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மனத்திற்குள் நினைத்துக்கொண்டார்.அப்போதுதானே உடன் தன் மனைவியைத் தொடர்புகொண்டு ஒரு மன்னிப்பு கேட்கமுடியும்.

“அவன்அவன் குடிச்சுட்டு பகல்லேயே மெதக்குறான்னா நீ சரக்குப் போடாமயே கனவுல மெதக்குற.நீ சரிபட்டு வரமாட்டே.எனக்குத் தலைக்குமேல வேலை கெடக்கு.இந்தாயிருக்குப் பாதை.பார்த்து ஓரமாப் போ.நா வர்றேன்.”

கட்டைக்குரலில் பற்றியிழுத்து வந்த கையை வெடுக்கென்று உதறி நடையில் நளினத்தைப் பெருக்கி விரைய முற்படுபவளைத் தடுக்க மனமில்லை அவருக்கு.போகட்டும் என்று விட்டுவிட்டார்.அவள் தோள் மற்றும் கை நிறைய அழகிய கைவேலைப்பாடுகள் நிறைந்த வண்ணவண்ண ஒயர்கூடைகள் விற்பதற்காகத் தொங்கிக்கொண்டிருந்தன.அததற்குரிய விலையுடன்.கடவுள் விரக்தியுடன் தனக்குத்தானே ஒரு குறுஞ்சிரிப்பை வெளிக்காட்டிக்கொண்டார்.அவரைப் பிடுங்கித் தின்னக் கோரப்பசி கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப்போகத் தொடங்கியது.அப்போது எங்கிருந்தோ வந்த கோடைத் தென்றல் அவருடைய உடம்பு முழுவதையும் வருடிச் சென்றது.ஆழ்ந்து மூச்சை இழுத்துக் கொண்டார்.களைத்துப் போயிருந்த உடலில் ஒரு பெரும் புத்துணர்ச்சி கூடியது போலிருந்தது.நிமிர்ந்து நேராகக் கையினை இருமருங்கிலும் வேகமாக வீசி நடக்க முற்பட்டார்.அப்போது காததூரத் தொலைவிலிருந்த ஒரு தனி மாடிவீடு பண்டிகைக் களை கொண்டு நிரம்பியிருந்தது.

அதுபோக,பலகார வாசம் மூக்கைத் துளைத்தது.காய்ந்து வெடித்திருந்த நிலத்தில் இப்போது திடீர் இடிமழை.உள்நாக்கு ஈரம் இனித்தது.மட்டுமல்லாமல் அடங்கிப் போன ஆர்வத்தை மேலும் தீவிரப்படுத்தியது.மயிர்க்கால்களெல்லாம் ஆனந்தத்தில் சிலிர்த்துக் கிடந்தன.

வீடே அல்லோலகல்லோலப்பட்டாலும் அங்கு அவரை வரவேற்க ஒரு நாதியும் எழவில்லை.ஆனாலும் அவர் ஓர் அழையா விருந்தாளியாய் அங்குக் காட்சித் தந்தார்.யானைப் பசியுடன்.கதவு திறந்துக் கிடந்தது.புழக்கத்தில் ஒருவருமில்லை.எல்லோரும் பூஜையறையில் சாமிக் கும்பிடுவதில் மும்முரமாக இருந்திருப்பார்கள் போலும்! 

“ஐயா…அம்மா…” குரல் மிகவும் பலவீனம் அடைந்திருந்தது.ஒருத்தரும் எட்டிப் பார்க்கவில்லை.இந்த முறை அதையே சற்று வேகமாகக் கூவினார்.பூஜை சத்தத்திற்கிடையே ஒரு சுட்டி வெளியே வந்ததும் அவருக்குள் இனம்புரியாத ஒரு பெருநிம்மதி.முகத்தில் வெளிச்ச நிலவுகள் ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன.

“யாருடீ?”

“யாருன்னு தெரியல’மா.யாரோ புது அங்கிளா இருக்கார்.”

“வளவளன்னு பேசாம யாருன்னு சுருக்கா கேட்டனுப்பிட்டு சட்டுனு உள்ளவா.சாமி கும்பிட்டுட்டு சாப்புடணும்.”கடவுள் தன்னால் முடிந்தமட்டிலும் அவ்வீட்டினுள் எட்டிப்பார்த்தார்.ஒருவரும் தட்டுப்படவில்லை.ஆனால் குரல் மட்டும் அச்சிறுமியை இயக்கிக்கொண்டிருந்தது.அதுதவிர,வீடே பலகாரப் பட்சண வாசனையால் ஆளைச் சுண்டியிழுத்தது.அவ்வீட்டிற்குள் யாரும் எளிதில் நுழைய முடியாதபடி பெரிய கிரில் கேட் ஒன்று இழுத்து மூடப்பட்டு உள்பூட்டுப் போடப்பட்டிருந்தது அவருக்குப் பெரும் இடையூறாக இருந்தது.வாசற் கேட்டில் சுவர்ப் பல்லியாக அவர் ஒட்டிக்கிடந்தார்.பாவமாக.

“யாரு வேணும்?”அதட்டலான குரல்.அவருக்குச் சப்பென்று போனது.இதற்கு என்ன பதில் கூறுவதென்று அவருக்கு விளங்கவில்லை.ஒருவழியாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு வேறு உபாயமின்றிப் பேசலானார்.

“நாந்தான் உங்கள் கடவுள் வந்திருக்கேன்னு சொல்லும்மா.”

“நீங்க எங்க கடவுளா…”

திடீரென வெடிச்சிரிப்பு சிரித்தாள் அச்சிறுமி.பூமி அதிர்வதைப் போலிருந்தது.கடவுள் துடித்துப் போய்விட்டார்.எப்படி அதை அவளிடம் மெய்ப்பிப்பது என்று புரியாது குழம்பினார்.ஒருசில வினாடிகளுக்குள் அவரது மண்டைக் காய ஆரம்பித்தது.உடன் திரண்ட கண்ணீர் இருகண்களையும் முட்டிக்கொண்டு நிற்க­-

“நீ கும்புடுற சாமி சத்தியம்.நான் கடவுள்”அழுதேவிட்டார்.

“கடவுள்னா ஒன்னமாறி இப்படியிருக்காது.போட்டோவுலயும் கோவில்லயும் ச்சும்மா ஜம்முன்னு இருக்கும்.நீ புளுவுற.ஒன்னப்பாத்தா புள்ளப்புடிக்குறவன் மாறியிருக்கு.”அதற்குள் பொறுமையிழந்து போன அவளுடைய தாய் அங்கு வந்துவிட்டாள்.தலை சிலும்பிக்கிடந்தது.முகமெங்கிலும் வியர்வைத் துளிகள்.தொப்பலாக.ஒரே பரபரப்பு.

“என்னடீ அங்க ஒரே வெட்டிப் பேச்சு?”

“கடவுள்னு சொல்றாரும்மா!”

“அவருக்குத்தான் புத்தியில்ல.ஒனக்குமா?”

“இல்லமா நெசமாத்தான் சொல்றேன்.”

“போய்யா.போயி ஓஞ்சோலியப் பாரு.எங்களுக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் வேலைக்கிடக்கு.சும்மா கடவுள் கிடவுள்னு பச்சப்புள்ளக்கிட்ட புளுவுனதுமாறி வேற எங்கினயும் புளுவிடாத.அப்பறம் முதுகு புண்ணாப்போய்டும்.ஜாக்ரதை.”மறுபேச்சு எதையும் கேட்க விரும்பாதவளாகத் தன் சுட்டிப்பெண்ணின் தோளைக் கெட்டியாகப் பிடித்துத் திருப்பித் துரிதமாக மாட்டை ஓட்டுவதுபோல வீட்டினுள் ஓட்டிச் சென்றவள் நிலைப் படியில் நின்று பின் திரும்பிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

அவரிடம் ஒரு அசைவுமில்லை.பிடித்துவைத்த பிள்ளையார் மாதிரி அவர் காணப்பட்டார்.அவரைப் பார்க்கவே சகிக்கவில்லை.மிகப் பாவமாக இருந்தது.அதுபற்றி அவளுக்கு எந்தக் கவலையும் இருந்ததாக ஒரு அறிகுறியுமில்லை.மாறாக அவள் மிகவும் எரிச்சலுற்றாள்.

“ம்ம்…கௌம்புக் கௌம்பு…”

“நா…”

“நீ ஒண்ணும் சொல்லவேணாம்.போறீயா இல்ல போலீஸ கூப்பிடட்டுமா?”

அவரது கடைசி நம்பிக்கை தூள்தூளானது.வேறுவழியில்லாமல் திரும்ப தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வதே நல்லதென முடிவெடுத்து அங்கிருந்து அவரது கால்கள் தரையைத் தடுமாறித் தடுமாறி அளவிட்டன.அப்போது விண்ணிலிருந்து தூரல் விழத் தொடங்கியது.அந்நிய ஆள் ஒருவரிடமிருந்து தப்பிய மகிழ்ச்சியில் அவளோ இவ்வாறு அங்கலாய்த்துக் கொண்டாள்.

“சாமிப் பேரச் சொல்லிக் கொஞ்சங்கூட எரக்கமில்லாம இந்த மனுஷங்க வரவர எப்படியெல்லாம் ஏமாத்தக் கிளம்பிட்டாங்க.”


Rate this content
Log in

Similar tamil story from Abstract