கற்பு
கற்பு
பரமேஸ்வரனிடம் கற்பு என்றால் என்ன வென்று கேள்வி கேட்டாள் பார்வதி தேவி .... அதற்கு, ஈசன் முழுவதும் எண்ணெய் நிரம்பிய கிண்ணம் ஒன்றை, தேவியின் கையில் கொடுத்து, இதிலிருப்பது சிந்தாமல், சிதறாமல் இமயம் முதல் குமரி வரை நடந்து போய் வா என்று சொன்னாராம்.
அவளும் அப்படியே செய்தாள். பிறகு, பரமசிவன் நீ எண்ணெய் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் போது, வழியில் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு அவள் எனக்கொன்றும் தெரியாது என்றாள். மீண்டும் எண்ணெய் இல்லாமல் நடந்து சென்று பார்.
அங்கே நடப்பவைகளை வந்து சொல்லு என்று அனுப்பி வைத்தார்.அன்னையும் அவரது கட்டளைப்படி சென்று, பார்த்து வந்து, ஐயனே வழியில் திருவிழாக்கள் நடந்தன. சண்டைகள் நடந்தன. சந்தைகளும் நடந்தன. இறப்பு-பிறப்பு, திருமணம், என்று நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன என்று பதில் சொன்னாள்.
இப்போது பரமசிவன் நீ முதலில் எண்ணெய் கிண்ணத்தோடு சென்ற போதும் அவைகள் நடந்தன. ஆனால், அப்போது அவைகள் எதுவும் உன் கண்களில் தென்படவில்லை. உன் கவனம் முழுவதும் கிண்ணத்தில் இருக்கின்ற எண்ணெய் கீழே கொட்டாமல் இருப்பதில் தான் இருந்தது. கற்பு என்பதும் அதைப் போன்றது தான்.
உலக காரியங்கள் அனைத்தையும் செய்து கொண்டே இருந்தாலும், அன்பான பெண்ணின் எண்ணம் முழுவதும் கணவனின் மீதே இருக்கும். உறங்கும் போதும், குழந்தைகளை சீராட்டும்போதும், மரணமடையும் தருவாயில் கூட, கணவனை பற்றியே நினைத்து கொண்டிருப்பது தான் கற்பு. அது தவிர, கற்புக்கு என்று தனி உறுப்புகள் கிடையாது என்று பரமசிவன் பார்வதி தேவிக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
