கோணல் மனிதர்கள்
கோணல் மனிதர்கள்


அன்று கடைவீதிக்கு சென்று திரும்பும் வழியில் பேய் மழை அடித்தது. காற்றும் பலமாய் வீசியது. அவர்கள் சென்ற சந்து தெரு முழுக்க சேறும், சகதியுமாய், நடப்பதற்குள்ளாக மூச்சு முட்டியது வனஜாவுக்கு. ஏதோ ஒரு வீட்டை தேடி பிடித்து அதன் அடியில் தன் மகள் வீணாவுடன் ஒதுங்கினாள், வனஜா.
"ச்சை, ஒரு குடை கொண்டு வந்தேனில்லை..." அழுத்துக் கொண்டாள் வனஜா. "இந்த மழை வேணுங்குற நேரம் பெய்யாது. இப்படி நேரம் காலம் இல்லாம வந்து தொலைக்கும்..."
ஒரு ஆட்டோவாவது வருகிறதா என்று அவள் கண்கள் சுற்றுமுற்றும் நோட்டமிட்ட பொழுது தான் வனஜா அவளை பார்த்தாள். அவள் இவர்களையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள். கண்கள் அவளது முகத்திற்கு மிகவும் பெரிதாய் இருந்தது.
பத்து வயது மதிக்கலாம். கன்னம் ஓட்டிப் போய், மெலிந்து இருந்தாள். வீசும் காற்றில் பறந்து விடுவாள் போல். ஒரு ஒழுகும் குடையும், கையில் ஒரு பையும் வைத்திருந்தாள்.
"அம்மா, அவ நம்மையே பாத்துட்டு இருக்காமா.என் பொம்மையை தான் பார்க்குறா, அம்மா." வீணா தன் பொம்மையை இன்னும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள்.
"இவங்ககிட்ட எல்லாம் உஷாரா இருக்கணும், கண்ணும்மா. அவங்க எப்போ எதை திருடலாம்னு நேரம் பார்த்துட்டு இருப்பாங்க. பணம் இல்லாட்டி இப்படித்தான்... தெருவில் வாழ்க்கை, திருட்டு புத்தினு மாறிடும் மனசு..." தன் எரிச்சலை அந்த சிறுமியின் பக்கம் திருப்பினாள் வனஜா. அவளின் குரலில் ஒரு ஏளனம் இருந்தது.
"எதுனாச்சும் ஆட்டோ வருதா பாரு." தன் மகளிடம் சொல்லிவிட்டு திரும்பினாள், அந்த பெண் இவர்கள் பக்கம் நின்றுக்கொண்டிருந்தாள்.
"இது வேற... நேரம் காலம் புரியாம..." முணுமுணுத்தவாறே தன் விலை உயர்ந்த கைப்பையை திறந்து அதிலிருந்து ஒரு இரண்டு ரூபாயை எடுத்து அந்த சிறுமியிடம் கொடுத்தாள். "தூரப்போ..." ஏதோ நாயை விரட்டுவது போல் இருந்தது வனஜாவின் குரல். அந்த சிறுமியின் முகம் தொங்கிப் போனது.
திரும்ப தன் பழைய இடத்தில் சென்று நின்றுக்கொண்டாள், அவள்.
"அம்மா, அம்மா, ஆட்டோ."
"ஏம்ப்பா, ஆட்டோ வருமா?" வனஜா அவனிடம் கேட்க அவன் தலையை சொரிந்தான்.
"எங்க போவணும்?"
இவள் இடத்தை சொல்ல அவன் முகம் சுளித்தான். "இல்லாம்மா, இந்த மழையில அவ்ளோ தூரம் வராது." அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
"ஏம்ப்பா? கூட வேணும்னா போட்டு தர்ரேனே?" வனஜாவுக்கு ஒரே பதட்டம். எங்கே முடியாதென்று விடுவானோ என்று. இந்த மழையில், இந்த இடுக்கு சந்தில் எங்கேன்னு போய் ஆட்டோவை தேடுவது என்னும் பதட்டம்.
"அதெல்லாம் வேணா, இப்போ வர முடியாது." அவன் கடுப்பை காட்டினான். "இந்தா, ஒத்திக்கோ." அவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் வீடுதான் போல!
அந்த சிறுமி மறுபடி இவர்களை நோக்கி வந்தாள்.
"என்ன வேணும்? ஆன்?" வனஜா கோபமாய் கேட்க அந்த பெண் மௌனமாய் தலையசைத்தாள். "இங்க என்ன வந்த? அதான் அப்போவே காசு தந்தேனே?" மறுபடியும் அவள் மௌனமாய் தலைசாய்த்தாள். "என்னான்னு சொல்லி தொலையேன்.ஊமையா என்ன?"
அவள் இவர்களை தாண்டி அந்த ஆட்டோக்காரன் நுழைந்த வீட்டுக் கதவை தட்டினாள்.
"அய்யாண்ணே..."
"ஏய், பாப்பி, நீ இங்க என்னா செய்யுறே?"
இவள் வனஜாவை கை காட்டினாள்.
"பாவம்னே, ஒரு மணி நேரமா இங்கேதான் நிக்குறா. அந்த பொண்ணுக்கு குளிருது பாரு. வீட்டுக்கு போய் உடுண்ணே. இந்த மழையில வேற எங்க போயி அவ ஆட்டோ தேடுவா?"
"பாப்பி, உனக்கு இந்த பணக்காரங்கள பத்தி தெரியாது. அதுங்களுக்கு தேவைன்னா பல்ல இளிச்சிட்டு வருவாங்க.இல்லேன்னா நம்மள ஏதோ நாயை போல கேவலமா பாக்குறது. ஒரு நாள் படட்டும், புத்தி வரும்." அய்யங்கன் எரிச்சலாய் சொன்னான்.
"அய்யாண்ணே, அந்த குழந்தைக்கு நம்ம நீணு குட்டி வயசுத்தான இருக்கும். பாவண்ணே. போய் விட்டுட்டு வா." நீணு, அய்யங்கன்னின் செல்ல மகள். அவளது பெயர் கேட்டதும் அவன் முகம் இளகியது.
"செரி, நீ சொல்றானால செய்யுறேன்." அவன் தன காக்கி மேல் சட்டையை எடுத்துக் கொண்டு இறங்கினான். "அவகிட்ட சொல்லுறேன். உன்னால தான் வர்றேன்னு. ஏதாது தருவா அந்த அம்மா." இவன் சொல்ல அவள் மெல்ல தலையசைத்தாள்.
"உதவின்னது காசு பணத்துக்கு ஆச பட்டு செய்யக் கூடாதுண்ணே. உதவி செய்யும் போது அடுத்தவங்க மனசு கோணாம, அவங்கள அவமானப் படுத்தாம பண்ணணும்ணே. இப்போ போய் நீ அங்கன நா செஞ்சதை சொன்னேனா நா ஏதோ அவங்க பணத்துக்காக பன்னேனு ஆயிடாது?" அவள் பெரிய கண்களில் ஒரு பெருந்தன்மை. தீட்சன்யம்.
" நீயும்,உன் கொள்கையும்!" அவன் செல்லமாய் சளித்துக் கொண்டான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வனஜாவின் கன்னங்கள் சிவந்து சூடேறிப் போயிருந்தது. குற்ற குறுகுறுப்புடன், அவளது உள்ளுணர்வே அவளை கடிந்தது. என்னவெல்லாம் பேசி விட்டாள் இந்த சிறுமியை பார்த்து... எதனால்?
அவள் பாவாடை கசங்கியிருப்பதாலும், அவள் முடி கலைந்திருப்பதாலும், அவள் குடை ஓட்டையாய் இருப்பதாலும் தானே! என்ன ஒரு கோணல் மனது.
"வாம்மா. போலாம்."
வனஜா அந்த சிறுமியை பார்த்தாள்.
அவளோ இவர்களை திரும்பி பார்க்காமல், தெருவில் தேங்கியிருக்கும் மழை நீரில் குதித்து சென்றாள், ஓட்டை குடையுள் ஒழுகும் மழையை சட்டை செய்யாமல்!
அவள் முகம் புன்னகையில் விரிந்திருந்தது!
~~~