Mohan Ramakrishnan

Abstract Drama

4  

Mohan Ramakrishnan

Abstract Drama

கல்விக் கண்

கல்விக் கண்

13 mins
708


கல்விக்குக் கலவி என்று அச்சடித்திருந்த அந்தப் பக்கத்தைத் திருப்பியபடி அச்சாளரைத் தாறு மாறாக அதட்டிக் கொண்டிருந்தார் அம்பலவாணன். பெயருக்கேற்றாற்போல் அம்பலத்தில் ஏறி அமர்ந்திருக்கும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிதித்துறை அமைச்சர். அச்சத்தின் உச்சத்திலிருந்த அச்சாளர் சிரமப்பட்டு வாங்கிய இந்த வியாபார ஒப்பந்தத்தை சுமூகமாகப் பேசி முடித்தார். இறுதிப் பிரதியில் அச்சுப்பிழைகள். அம்பலத்திற்குத் தங்க முலாம் பூசினால் மட்டுமே அது மிளிரும். அம்பலம் மிளிர்ந்தது, அச்சாளர் அளித்த லஞ்சம் என்னும் முலாமால். இங்கே அம்பலம் மங்கியது. முலாம் பூசிய கைகளில் கரை படிந்திருந்தது.


அம்பலவாணன் மங்கிய கண்களைக் கசக்கியபடி தன் மூக்குக்கண்ணாடியை மேல்நோக்கி தள்ளினார். தனது பச்சை மைப்பேனாவின் மூடியை சுழற்றியபடி தனது உதவியாளரை அழைத்தார். “இத ஐயா மேசைக்கு அனுப்பிரும்” என்று அதில் கையொப்பம் இட்டபடி நீட்டினார். 


இலவச கல்வி, இலவச மதிய உணவுத் திட்ட அறிக்கை – முதல் பிரதி முதல்வரின் மேசையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது. 


ஏ! இப்பிடியாச்சும் பயலுவ படிக்க வரமாட்டனுவளா! ஏ அதுக்குத்தாம்லே இந்தத் திட்டம். கல்வித்தரத்த உயர்த்துரோம்னு மார்தட்டுனா மட்டும் போதாதுவே, உருப்படியா எதாவது செய்யனும்வே, இந்தத் திட்டம் வெல்லும்ங்குறேன்” என்று 1962-ஆம் ஆண்டு கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கூறியபடி அறிக்கையை புரட்டினார் முதல்வர். கல்வியின் லகரத்தின் மேல் அச்சடித்தாற் போல் கருப்பு மையினால் வரையப்பட்டிருந்த புள்ளியின் தன்முதன்மையை, பாவம்! முதல்வரின் மங்கிய கண்பார்வை கவனிக்கத் தவறியது. தன் நெற்றியில் வடிந்த வியர்வைப் புள்ளியைச் சுண்டிவிட்டார் பரபரப்பிலிருந்த அம்பலவாணன்.தான் பிடித்த மீன் உயிர் துடித்ததினால் சிந்திய அந்த ஒற்றைச் சொட்டு நீர் பாண்டியின் நெற்றியில் தொற்றியது. எட்டு வயதிற்கே உரித்தான அந்த அழகிய 24 பற்கள் மினுமினுக்க, ஆனந்தக் களிப்பின் உச்சத்தில் அந்த கெளுத்தியை தூக்கி வந்தான். தூரத்தில் தங்கம்மாள் ஓடி வந்தாள். 


ஆத்தா இதப் பாத்தியா ! உன் மவன் எம்மான்பெரிய மீன புடிச்சிருக்கேன் பாத்தியா?”. அந்தக் கெளுத்தி நெளிந்தது. அந்தக் கண்மாயில் எவரும் பிடித்திடாத அவ்வகை மீனைப் பிடித்ததற்குத் தன் தாய் தோள் தட்டி கொடுப்பாள் என்றெண்ணிய பாண்டியின் கருப்புத் தோலே சிவக்கும் அளவுக்கு கன்னங்கள் சிவந்தன. 


உன்னைய எத்தினி முற சொல்லியிருக்கேன் கம்மாயிக்கு போகாத போகாதனு, தவறி விழுந்தா கேக்க நாதி இல்ல, உம்ம அப்பன் அங்க சலவை செய்யப் போனா, நீரிங்க மீன் பின்னால திரியிரீகளோ ! வீட்டுக்கு வா பேசிக்கிடுறேன்” என்று கூறியபடி அவனைத் தரத்தரவென இழுத்துச் சென்றாள்.


நீரில் நெளிய வேண்டிய கெளுத்தி, மண்ணில் மன்றாடி வந்தது. தூரத்தில் அதன் உயிர் வேறு கூட்டைத் தேடித் திரிந்தது.


சர்க்கார் மதியம் சோறு போட்டு, உடுக்க துணி குடுத்து படிக்க அனுப்ப சொல்லி கேக்கறது! என்ன வலிக்குதுமோய் உமக்கு ? நீர் சம்பாதிக்குற சம்பாத்தியம் உமக்கே சரியா போயிரும் அப்புறம் என்னத்த சாப்புட்டு என்னத்த சேமிக்கப் போற ?” அரசாங்கம் ஏழை மக்களுக்கு மூளைச்சலவை செய்ய நியமிக்கப்பட்ட தூதுவன் வெங்கடேச ஐயங்கார் தும்பை ஊர் மக்களிடையே அமர்ந்து தன் சொற்பொழிவை ஆற்றிக் கொண்டிருக்கையில், ஊரிலுள்ள அனைத்து தாய்மார்களும் அவரவர் பிள்ளைகளை அடித்து துவைத்து அழைத்து வந்து சலவை நடந்து கொண்டிருந்த இடத்தில் ஒன்று கூடினர்.


அரசின் புதிய கல்வி திட்டத்தைச் செயல்முறைப் படுத்த ஒவ்வோர் ஊருக்கும் ஒருவர் என தூது சென்றனர். . 


இசக்கி எழும்பினான், “ஏன் ஐயா எங்களுக்கு என்னத்துக்குங்க படிப்பு?, இப்போவே அம்சமா தானங்க இருக்குறோம்! அதுவும் இல்லாம எங்கப் புள்ளைங்க எங்க கூட வேல பண்ணிடிச்சுங்கனா எங்களுக்கும் ஒத்தாசையா இருக்குதுல, அதுங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டா எப்புடிங்கையா ?” என்று வண்ணானுக்கு என்று மேன்மக்கள் விதியிட்ட வித்திட்ட பணிவுடன் குனிந்து நின்று வினவினான்.


வேதங்களை விட மக்களின் உணர்வுகளை அதிகம் படித்தவர் என்பதனால் கல்விக்குத் துணை போன நாடோடி தான் இந்த வெங்கடேச ஐயங்கார். ஊர் ஊராக திரிந்து தும்பைச் சிற்றூருக்கு வந்தாலும் அனைத்து ஊர் மக்களின் இந்த கேள்வி மாறவே இல்லை. அவரின் பதிலும் தான். ஒரு கேள்வியையே பதிலாக முன் வைத்தார். 


உம்ம எல்லாருக்கும் ஒரு நிலையான வருமானம் உண்டா, சொல்லுமோய் ?

ஊருக்கு வருகையிலேயே அந்த ஊரின் சார்பாளன் பெயரை இசக்கி என்று அறிந்துகொண்ட ஐயங்கார் கூட்டத்தில் முன் நின்ற இசக்கியைப் பார்த்து “இசக்கி நீர் சொல்லுமோய் உமக்கு நிலையான வருமானம் உண்டா ?


தன் பெயரையும் கூட அறிந்திருக்கிறாரே என்ற ஒருவித பெருமிதத்துடன் மேல் எழும்பினான் இசக்கி. ஐயங்காரின் யுக்தி பலித்தது. இசக்கி ஐயங்காரின் பக்கம் செவி சாய்த்தான். அவன் மனமும் தான்.செவி சாய்த்த அம்பலவாணன் முன்னேறி தன் இருக்கையின் நுனிக்கு வந்தார். முதல் தர காஞ்சிப் பட்டின் மினுக்கில் மின்னிய சட்டை-வேட்டியில், கழுத்தில் எட்டு முக உருத்திராட்சம் பின்னப்பட்ட சுமார் 2௦ சவரன் தங்க சங்கிலியுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தவர் அம்பலவாணன் முன் தான் கையில் வைத்திருந்த கருப்பு நிறப் பெட்டியின் கட்டவிழ்த்தார். அம்பலவாணனின் விருந்தினர் மாளிகையின் முகப்பே ஆச்சரியத்தில் மூழ்கியது. 


சுடச்சுட இருந்த அந்த மதிப்புக் கூட்டப்பட்ட காகிதங்களின் மனம் அம்பலவாணனின் நுகரும் தன்மையைக் கூட்டின. ஈத்தர காட்டில் அதன் உணவு தேடி அலையும் பன்றிக்கும் அவரின் முகத்திற்கும் அவ்வளவு ஒற்றுமை.


சொன்னத செஞ்சவே, அதுக்குத்தாம்லே இந்த முன்பணம், நம்ம பயலுவளுக்கு மட்டும் அந்த ஆணைய தந்துபுடு, இதே மாறி எட்டுப் பொட்டிய எறக்குறேன் அம்பலம்”, என்று தோள் தட்டிக் கொடுத்து, உடன் வந்திருந்தவர்களிடம், “கெட்டிக்காரன்லே நம்ம பய, சொன்னத செஞ்சிப்புட்டான்”.


எல்லாம் உங்க தயவு தான் அண்ணாச்சி, உங்களுக்காக என்ன வேணாலும் செய்ய தயார்!”, என்று வழிமொழிந்தார் அம்பலவாணன், ஒரு ஏவலனைப் போல.என்ன வேணாலும் செய்யத் தயார்ங்க, எங்க வீட்டுப் பொண்னோட கொணதுக்கு ஏத்தாப்ல தங்க சீர்வரிசை செஞ்சிடுறோம், என்ன சம்மதம் தானே?”, என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் சொன்னவாறுபெண்ணின் தந்தை ராமசாமிக்கு ‘நான் பாத்துக்குறேன்’ என்பது போல் சைகை காண்பித்தார் தலையின் முன்மயிர்களை இழந்து முன் வரிசையில் அமர்ந்திருந்த, சோடா புட்டி முருகேசன். 


சிறிது நேரத்தில் வீட்டின் அளிந்தம் முன்னிருந்த அனைத்துக் காலணிகளும் ஒவ்வொன்றாக மறைய மறைய பெண் பார்க்கும் படலத்திற்குத் தயாரான பெண்ணின் அலங்காரம் ஒவ்வொன்றாக கலைந்தது. திண்ணையில் முருகேசனும் ராமசாமியும் ஆயிரங்காலத்துப் பயிர் பற்றி அலசிக்கொண்டிருந்தனர். அதிலும் தன் வீட்டுப் பயிர் என்பதால் ராமசாமி கொஞ்சம் தீவிரம் காண்பித்தார். 


என்ன அண்ணே நீய பாட்டுக்குச் சீர்வரிசை செய்யுறோம்னு சொல்லடீய ! அந்த அளவுக்கு எனக்கு திராணி இல்லணே, ஏற்கனவே கடன் தலைக்கு மேல கெடக்கு இதுல தங்கம் சீர்வரிசைலாம் எப்புடிணே !” என்று விம்மித்தார் ராமசாமி. தன் நிலத்தில் பயிர் வளர்ந்த அளவிற்கு வங்கிக்கடனும் வளர்ந்து நின்றது அவர் முகக்களைப்பு காண்பித்தது. 


என்ன ராமசாமி நீயி, மவ கண்ணாலத்த விட என்னய்யா பெருசா இருக்கு உனக்கு ? பாத்தியில எம்புட்டு பெரிய எடம்னு, அவுக உன் வீட்ல சம்மந்தம் பேச வந்ததே எம்புட்டு பெரிய சமாசாரம் ! போற எடத்துல பொண்ணு நல்லா வாழனும்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும்யா...” ஊரில் தரகர் என்ற பெயர் மட்டும் இல்லாமல் தரக வேலை பார்த்து வந்த முருகேசன் மூச்சிரைக்கப் பேசினார்.

...ஊருக்குள்ள பெரிய மளிகை கடை, இது போதாதுன்னு மாப்பிள்ள பய வேற அரசாங்கப் பள்ளிக்கூடதுக்குலாம் மதிய சோறு போடத் தேவையான அரிசி பருப்புனு மொத்த மளிகை சாமானும் கொடுக்கறதுக்கான ஒப்பந்தத்தை வாங்கிருக்காப்படி...இத விட என்ன வேணும் ?


என்னணே சொல்றீக ? அரசாங்கத்துல இன்னும் ஒப்பந்தத்துக்கு ஆணையே போடலியே அதுக்குள்ளே எப்படி மாப்பிள ஒப்பந்தமாகிட்டாருங்குறீக ?” நாட்டுநடப்புகளை நன்று அறிந்தவர் ராமசாமி.


தன்னிலை அறியாமல் உளறியதை உணர்ந்த முருகேசன் தயங்கிக்கொண்டே, “ராமசாமி...அது...அது...அதெல்லாம் பெரிய இடம்யா, பெரிய ஆளுக தான் ஒப்பந்தம் போட முடியும்...அட அத விடு, பெரிய இடம், கடன் ஒடன வாங்கி சீக்கிரம் நல்ல சேதி சொல்லுயா, வீட்டுல என் பொண்சாதி தேடுவா, நான் புறப்படுறேன்”, என்றவாறு, ‘நான் பாத்துக்குறேன்’ என்று சைகை காட்டிய கைகளை கூப்பி கும்பிட்டுவிட்டு நடையைக் கட்டினார் முருகேசன்.


புரட்சியின் மூலம் திருமணங்களுக்குப் புதிய வரையறை அமைத்த பகுத்தறிவு மேதையின் பெயர் தனக்குச் சூட்டப்பட்டதாலோ என்னவோ, இந்தச் சம்மந்தத்தில் அவ்வளவு நாட்டமில்லை ராமசாமிக்கு. யோசித்தவாறே திண்ணையில் சாய்ந்தபோது, உள்ளே உற்றார் உறவினருடன் இருந்த தன் மகளின் பேச்சொலிகள் காதுகளில் பயணித்தன.


மாப்பிள்ள நல்லா கலையாத்தான் இருக்காக’, ‘உனக்கேத்த சோடித் தான் புள்ள’, கல கலவென பல குரல்கள் கேட்டன.


இடையே ‘என்ன புள்ள மாப்பிள்ள பத்தி எதுவுமே பேச மாட்டேங்குற ?’ என்றொலித்த குரலுக்கு, “எனக்கும் அவுகள புடிச்சிருக்குத்தான்” வெட்கம் கலந்த புன்னகையுடன் தெரிவித்தாள் ராமசாமியின் மகள்.


அந்தக் குரல்கள் அனைத்தும் உண்மை தான் என்று விளங்கியது. கடன் சுமையை விட தன் ஒரே மகளின் இன்-மண வாழ்க்கையே தனக்கு முதன்மைத்துவம் வாய்ந்தது என்று உணர்ந்த ராமசாமி, “அஞ்சுகம்...” என்று தன் மனைவியை அழைத்தவாறு, “...செட்டியார் வீடு வரை போயாரேன்” என்று படையெடுத்தார் வேட்டியைச் சரி செய்து, துண்டை தோள் மீது போட்டுக்கொண்டு.தன் இடுப்பிலிருந்த துண்டு தோளின் மேலே ஏறியதைக் கண்டதும் இசக்கியின் கண்களில் வெள்ளம் கரைபுரண்டது. 


கல்வியின் கடைமுடிவையும் தரத்தையும் இசக்கிக்கு மிகவும் எளிமையாக தெளிய வைத்தார் ஐயங்கார்.


படிச்சா நீர் தாமோய் முதலாளி, யாருக்காக நீங்க எல்லாம் இடுப்புல துண்ட கட்டிண்டு இருக்கேள் ?, நான் படிச்சவன் நீங்கலாம் படிக்காதவா அப்பிடிங்குறதுனால தானே ?, நமக்குள்ள என்ன ஒய் பேதம்?, படிச்சாத்தான் இந்த வேற்றுமைய அழிக்க முடியும், எல்லாரும் சமமா வாழ முடியும் !”, சலவைக்காரர்களைச் சலவை செய்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது ஐயங்காருக்கு.


அனைவரும் யோசிக்க ஆரம்பித்த நொடியில், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணபங்களைத் தயார் செய்தனர் அவருடன் வந்திருந்த எடுபடிகள்.


பாண்டியை இழுத்து வந்த தங்கம்மா, இசக்கியையும் உடன் இழுத்துக்கொண்டு ஐயங்காரை நோக்கி நகர்ந்தாள். 


சாமி எங்க புள்ளைய சேர்க்க நாங்க தயார்” என்று அவர் கையில் பாண்டியை ஒப்படைத்தாள். 


தயங்கிய இசக்கியைப் பார்த்து கண் சிமிட்டியவாறு பல் கடித்தாள் தங்கம்மா. இதுவரை வாங்கிய அடி உதைகள் அவன் கண் முன் மிளிர்ந்தன. அதன் விளைவாக, பாண்டியின் கை மீது தன் கையை வைத்து சம்மதம் தெரிவித்தான் இசக்கி, தன் மகனும் ஒரு நாள் முதலாளி ஆவான் என்ற நம்பிக்கையுடன்.


நம்ம புள்ள ஒரு வேளையாச்சும் நல்ல சோறு திங்கட்டும், நல்ல உடை உடுத்தட்டும், படிப்பு அதுவா வரட்டும்’ என்று பல எண்ண அலைகள் காற்றில் மிதந்தன.


எண்ணங்களும் விண்ணப்பப் படிவங்களும் உடன் பிறந்தவை போலும். இரண்டும் நம் நாட்டில் அதிகரித்துக்கொண்டே மிதக்கின்றன.


தும்பை மக்களும் மிதந்தனர் தங்கள் மக்கட்பேறு பெறப்போகும் உணவு-உடையை எண்ணி.


ஐயங்காரின் வெற்றிப் பெருமூச்சு அந்த விண்ணப்பங்களின் இடையே பயணித்தது.அச்சாளரின் நிம்மதிப் பெருமூச்சு அச்சடித்துக் கொடுத்த அறிக்கைகளுக்கான ரொக்கச் சீட்டின் மேல் பயணித்தது, இன்று எப்படியும் அதற்கான தொகையைத் தீர்வு செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அம்பலவாணனின் அலுவலகத்தின் வரவேற்பறையில் அவரைச் சந்திக்க முன்அனுமதி பெற்றுக் காத்திருந்தார்.


முன்அனுமதிகளெல்லாம் முச்சந்தி வரை தான். முன்நின்றவர்களை முண்டியடித்துக்கொண்டு முன்னேறி வந்த படை ஒன்று, கையில் பெட்டிகளுடன் அமைச்சரின் அறைக்குள் சென்றதை அச்சாளரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.


அந்தப் படையின் பின்னால் வெளியே அமர்ந்திருந்த அமைச்சரின் உதவியாளரும் உள்ளே சென்றார்.


சில நொடிகளில் உள்ளே எட்டுப் பெட்டிகளுடன் வந்த கைகள் மட்டும் வெளியேறின. ஆனால் முன் சென்ற மூத்த கை மட்டும் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்தது போலும். அச்சாளரின் பொறுமை எல்லை தாண்டியது. கதவினைத் தன் காதுகளால் முத்தமிட்டார். 


அம்பலம்...சொன்ன வாக்கு மாற மாட்டோம்லே ! மாசா மாசம் ஒப்பந்தம் எடுத்தவைங்க நேரா கொண்டாந்து குடுத்துடுவாங்க, என்னலே சரி தானே ?’ என்று அந்தக் கையின் குரல் கேட்டது.


அட என்ன அண்ணாச்சி, நீங்க இல்லனா இந்த நாற்காலியில நான் இல்லங்க, உங்களுக்காக இத கூட செய்யலனே எப்படி ! இன்னும் என்ன வேணாலும் கேளுங்க அண்ணாச்சி செஞ்சிடலாம்’, அம்பலவாணனின் குட்டு அம்பலமானது.


சரிலே, சாமத்துல ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கு, மறவாம வந்துடுலே, அப்போ நான் பொறப்படுதேன், வரட்டுமா


சரிங்க அண்ணாச்சி, வந்துடுதேன்


முத்தத்திற்கான கால அவகாசம் முடிந்ததை உணர்ந்த அச்சாளர் காதுகளைக் கதவுகளிடமிருந்து பிரித்தார். தன் முதுகினை நாற்காலியின் உடலின் மேல் பதித்தார். 


சிறிது நேரத்தில் உள்ளே செல்ல அழைப்பு வந்ததையடுத்து, சீட்டினைப் பையிலிருந்து வெளியே எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.


எட்டுப் பெட்டிகள் உள்ளே சென்றதற்கான அறிகுறியே இல்லாமல் சலனமாகக் காணப்பட்டது அந்த அறை.


என்னய்யா உனக்கு ? கஜினி முஹம்மது மாறி படை எடுதுட்டே இருக்க ?”, அம்பலவாணன் வசைப்பாங்குரைத்தார்.


நான் வரர்து பதினெட்டாவது முறைங்க ஐயா”, அச்சாளர் பதிலளித்தார்.


அட பாருயா, கணக்கெடுப்புலாம் அசலா சொல்லுதான்”, என்று உதவியாளரிடம் அம்பலவாணன் நகைத்தார்.


ஐயா இது ரொக்கச் சீட்டுங்க, கணக்குப் பாத்துட்டு முடிச்சுக் குடுக்கறதா சொன்னீங்க !”


அப்படியா ! எங்கலே சீட்ட குடு பாப்போம்” என்றபடி சீட்டினை வாங்கினார் அம்பலம்.


பிழை பிழையா அச்சடிச்சுக் குடுத்துப்புட்டு என்னய்யா இம்புட்டு விலை போட்டிருக்க ? இத கட்சி செலவுலேயே ஐயா செய்யச் சொன்னதுனால தான் உன்னாண்ட அச்சடிக்கக் குடுத்தோம், இம்புட்டு விலைனு ஐயாக்குத் தெரிஞ்சுதுனா என்னையப் போட்டு வஞ்சிடுவாரு , ஏதோ பாத்துப் போட்டு தாரேன், வாங்கிட்டுப் போ என்ன சரிதானே, பின்னால அடுத்த பதிப்புக்கு பாத்துக்குடுவோம்” என்று உதவியாளரை அந்தக் கணக்கை முடிக்க ஏவினார்.


வரவேற்பறையில் இருந்த தொலைபேசி அமைச்சரைப் போலவே வசை பாடியது.


அதை நிறுத்திய உதவியாளர், அச்சாளரிடம் சீட்டில் குறிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தார், பதினெட்டாவது முறையிலாவது தன் பணம் கொஞ்சமாவது வந்து சேர்ந்தால் போதும் என்று வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு வெளியேறினார் அச்சாளர். அரசியல் என்பதால் எதிர்ப்பேச்சு பேச முடியாத இயலாமையை எண்ணி அவரின் வயிறு அந்த அலுவலகத்தின் முன்னே வசை பாடிவிட்டு விலகியது.


ஆனால் முதல்வர் உண்மையானவர், நாணயமானவர் என்பதை அறிந்த அச்சாளர் அவரிடம் முறையிட முதல்வரின் அலுவலகம் நோக்கிச் சென்றார்.


அங்கே கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தின் இடையே உள்ளே செல்ல முயன்றார். அமைச்சர்கள் ஒவ்வொருவராக குழுமத் தொடங்கினர். அவரவர் உதவியாளர்களும் பின்தொடர்ந்தனர்.


அம்பலவாணன் அலங்காரத் தோரணையோடு தனது சிற்றுந்தில் வந்திறங்கினார். உடனே அங்கிருந்த அனைத்து நிழற்படக்கருவிகளும் அரவத் தொடங்கின.


முதல்வரின் உதவியாளர் அம்பலவாணனின் உதவியாளரை அழைத்துப் பேசினார். 


என்னய்யா அந்த பிரஸ் ஆளுக்கு கணக்க முடிச்சிட்டீங்களா இல்லையா?


அட அத ஏன் கேக்குறீங்க ! ஒருவழியா முடிச்சாச்சு, அந்த சீட்டக் கூட கட்சி அலுவலகத்துக்கு அனுப்பியாச்சே, பணத்த பட்டுவாடா செய்யுங்க சீக்கிரம்”  


சரி சரி, நம்ம பங்கு எவ்ளோ ?”, என்று கண்ணடித்தார் மு.உ


சீட்டுல ரெண்டு பங்கு, அம்பலம் ஐயாவா பாத்துத் தருவாப்ல அப்போ வாங்கித்தரேன்”, என்று கூச்சமில்லாமல் கூவினார் அ.உ


அச்சம், அவமானம், அலைக்கழிப்பு இத்தனையும் தாண்டிய அச்சளாரை துரோகம், ஏமாற்றம் என்னும் புதுவரவுகள் தாக்கின.


முதல்வர் அடுக்கி வைத்திருந்த ஒலிவாங்கிகள் முன்னே வந்து நின்றார்.


மேசையின் மேலே தான் அச்சடித்துக் கொடுத்த அறிக்கையை எடுத்துத் திறந்த முதல்வர் உரையாற்றத் தொடங்கினார்.


அனைவருக்கும் வணக்கம், இன்று நாம் கூடியிருக்கும் இந்நன்னாளில் தமிழகத்தின் கல்வியையும் தமிழக மக்களின் எழுத்தறிவு விகிதத்தினை உயர்த்தும் ஒரு திறன்மிகு உன்னதத் திட்டத்தினை உங்கள் முன் வைக்கிறேன்...” என்று தான் அச்சடித்ததை முதல்வரின் உதடுகள் படிப்பதைப் பார்த்ததும் பெருமிதம் கொண்டார் அச்சாளர்.


...14 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசக்கல்வி, இலவச சீருடை, இலவச மதிய உணவு திட்டத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் எமது அரசு பெருமிதம் கொள்கிறது, இதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒப்பந்த விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன, சிறந்த விலையை முன்வைக்கும் நபர்களுக்கும் நிறுவனத்தார்க்கும் அரசு ஒப்பந்தத்தை அளிக்கும், இதன் முதன்மை நிர்வாகத்தை அமைச்சரவையிலுள்ள திரு. அம்பலவாணன் கவனித்துக் கொள்வார். நன்றி” 


தற்போது அதிர்ச்சி எனும் புது புதுவரவு குத்தியது அச்சாளரை.


தீமையின் மொத்த உருவங்களையும் கண்டு பொருமிய அச்சாளர் வீடு வந்து சேர்ந்தார்.


தன் சட்டையைக் கழற்றித் துவைக்க ஊற வைத்தார். ஊற வைத்த உடைகளை ஆற்றங்கரைக்குத் தூக்கிச் சென்றான் இசக்கி. பாண்டியின் பள்ளிச் சீருடைகளை ஆற்றில் முக்கி எடுத்த இசக்கியின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. மேன்மக்களின் உடைகளை மட்டுமே சலவை செய்த வந்த தும்பை ஊர் மக்களின் முகங்கள் தத்தம் குழந்தைகளின் பள்ளிச் சீருடைகளைக் கண்டதும் மலர்ந்தன.மாதாமாதம் வந்து சேர்ந்த பெட்டிகளை எண்ணி அடுக்கி வைத்த அம்பலவாணனின் முகம் பூரித்தது, அடுத்து என்ன திட்டம் வரப்போகிறது என்பதை எண்ணி.அரசாங்க ஒப்பந்தத்தை விலைக்கு வாங்கிய மாப்பிளைக்குத் தன் மகளைக் கட்டிக்கொடுத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார் ராமசாமி. அந்த ஆனந்தக் கண்ணீருக்குப் பின்னால் கடனை அடைக்க வேண்டிய சோகக் கண்ணீர் மறைந்திருந்ததை அவர் மட்டுமே அறிந்தார். அந்த அறிக்கையில் ‘இலவசக் கல்வித் திட்டம்’ என்று அச்சடித்ததற்குப் பதிலாக ‘இலவசக் களவுத் திட்டம்’ என்றச்சடித்திருக்க வேண்டும் என்றெண்ணி வருந்திக்கொண்டு கண்களின் ஓரம் வந்த நீரினைத் துடைத்துக்கொண்டு அடுத்த நாள் வேலைக்குத் தயாரானார் அச்சாளர்.

 

கல்விக்குக் கண்களிருந்தால், அதற்கும் தேவை கண் சிகிச்சை


Rate this content
Log in

More tamil story from Mohan Ramakrishnan

Similar tamil story from Abstract