Lakshminarasimhan Subbarao

Abstract Drama

4.7  

Lakshminarasimhan Subbarao

Abstract Drama

என் மகன் சுப்பு

என் மகன் சுப்பு

1 min
300



வகுப்பில் நான் வாங்கிய மதிப்பெண்ணை வாசித்தார் ஆசிரியை. பத்தாம் வகுப்பின்  தொடக்கப் பரீட்சையில்எனக்கு பின்னடைவு. எப்போதும் முதல் மதிப்பெண் வாங்கி பழக்கப்பட்ட எனக்கு அது புதியதாக இருந்தது. 

நாளை அப்பாவை அழைத்து வர வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிய ஆசிரியை

 “நீ எப்படி ஒன்பதாவதுல முதல்மதிப்பெண் வாங்கினே? உன் விடைத்தாளைப் பார்த்தா அப்படி எதுவும் தோணலையே” என்றார். 


வகுப்பில் உள்ள அனைவரும் என்னைப் பார்க்க கூனிக்குருகி நின்றேன். கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்க்கஅமர்ந்தேன். 

எனக்கு அருகில் உட்கார்ந்த என் நண்பனோ “விடுடா பார்த்துக்கலாம். ஆமாம் மேப்வாங்கிட்டியா? நான் சாப்பிடற டைம்ல வாங்கப்போறேன் “ என்றான்.

காதில் விழுந்தும் விழாதவனாய் என் மனம் விடைத்தாளை நோக்கிப் பாய்ந்தது. 


என்னுடைய அப்ரைசல் முடிந்து நான் என் மடிக்கணிணியை உற்று நோக்க என் தோழி கீதா வந்தாள்.

“ என்னடா எப்படி போச்சு? உனக்கென்ன  நீதான் ரொம்ப நல்லவனாச்சே. எப்படியும் நல்லாதான் ரேட்டிங் வாங்கிருப்பே “ என்று என்னை பேண்டரி ஏரியாவுக்கு காபி சாப்பிட அழைத்தாள். 


நான் மனம் லயிக்காமல் என் கணிணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  இந்த வருடம் எனக்கு பிரமோஷன் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். மற்றொரு வருடம் கடக்க வேண்டும். நன்றாகத்தானே பணியாற்றினேன். இன்னும் என்ன செய்ய வேண்டும். விடை தெரியாத கேள்விகள் தான் எத்தனை. இதை வைத்து செய்த ப்ளான்ஸ்எவ்வளவு. 


வலியின் இடையே ஞாபகம் வந்தது சுப்ரமணியின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் இருந்தது. மாலை மூன்று மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்று மனைவி சொன்னது மனதை வேகப்படுத்தி கால்களைக்யூபிகளில் இருந்து நகர வைத்தது.


பள்ளியில் நுழையும் போதே எக்கச்சக்க வாகன நெரிசல். ஆட்டோவில் இருந்த என் மனம் பற்பல உயரியசொகுசு உந்திகளில் வந்து இறங்கிய பெற்றோர் மீது பதிந்தது. உயரிய பள்ளியில் படிக்க வைக்கிறேன் என்று மனதில் சிறிய கர்வம் தோன்றிட சுப்ரமணியைத் தேடினேன்.


அப்பா என்று குரல் கேட்டுத் திரும்பினேன். சுப்ரமணி இன்னும் சில சிறார்களுடன் நின்று கொண்டிருந்தான்.


“அப்பா இன்னிக்கு ஆசிரியர் கணிதத்தில் நான் வாங்கிய மதிப்பெண் பற்றி கட்டாயமாக பேசுவார். டென்ஷன்ஆகாதே. அடுத்த தடவை கண்டிப்பா நல்லா வாங்கிடுவேன்.” சொல்லிக் கொண்டே மைதானத்தை நோக்கி ஓடினான் என் சுப்பு. 


ஆசிரியர் முன் பவ்யமாக உட்கார்ந்தேன். அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்கள். சுப்புவிடமா இத்தனைபரிணாமங்கள்? எல்லா குற்றச்சாட்டுக்கும் “சாரி சர். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன்” என்றுசொன்னதையே  திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன்.


வீட்டிற்கு வந்தவுடன் தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு விதசோகம் தொற்றிக் கொண்டது. காலையில் அப்ரைசல் மாலையில் சுப்புவின் ஆசிரியர் அறிவுரை என்றுஅனைத்தும் மனதில் வந்து சென்றது. 


அலைப்பேசியில் என் அலுவலக நண்பர் அழைக்க, இருவரும் அலுவலக அரசியல் பற்றியும் மேலாளரின்ஒரு தலைப்பட்சமான முடிவுகளையும், அலுவலக நிர்வாகத்தின் ஓட்டைகளையும் விரிவாக அலசினோம்.


உறங்கச் செல்லும் நேரத்தில் இன்னொரு வருடத்திற்கான போராட்டங்களை நினைக்கும் போது மனம்இன்னும் வலிக்கத் தொடங்கியது. இன்றைய சூழலில் ஒரு மனிதனுக்கு எத்தனை வலிகள். வெளியில் சொல்லமுடியாமல், நிதானமாக கேட்பதற்கு எவரும் இல்லாமல், ஒரு விதமான துறவற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆம் எதனிலும் முழு நாட்டம் இன்றி எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.


கவலையுடன் படுக்கை அறை சென்றேன். சுப்பு ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். இன்னும் தூங்கவில்லையோ என்ற கவலை மேலிட “என்னடா பண்ற? இன்னும் தூங்கலையா? “ என்று  கேட்டேன்.


“இல்லப்பா .. ஒரு போட்டி நாளைக்கு. தமிழ் ஆசிரியர் நீ சிறுகதை எழுதுன்னு சொன்னார். அதான் எழுத ட்ரை பண்ணிட்டிருக்கேன். “ என்று ஒரு காகித த்தை நீட்டினான்.


தமிழின் எழுத்துக்களைப் பார்த்து எத்தனைக் காலம் ஆயிற்று. தினசரி கணிணியிலோ அலைப்பேசியிலோநாளிதழ்களின் செயலியில் பார்ப்பதுண்டு. 


பரவாயில்லை சுப்புவின் கையெழுத்து அழகாக இருந்தது. ஓரிரு இடங்களில் இடையின ரகரம் வல்லினமாகவும்லகரம் ளகரமாகவும் மாறியிருந்தது. சின்னப்பபிள்ளை தானே போகப்போகத் தேறி விடுவான் என்றெண்ணிவாசிக்கத் தொடங்கினேன். 


கதை வகுப்பறையில் ஆரம்பிக்கிறது.  மதிப்பெண் வாசிக்கத் தொடங்குகிறார் ஆசிரியர். வகுப்பு ஐந்தாக இருந்தது. 


“என்னப்பா இது உன்னோட கதை தான். நீதானே சொன்ன நாம் எழுதும் ஒவ்வொன்றும் நல்ல கருத்தைச்சொல்ல வேண்டும் “  என்று உரைத்துக் கொண்டே அலைபேசியில் பாடல் ஒன்றை ஓட விட்டான் சுப்பு.

“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.” என்று ஒலிக்கத் தொடங்கியது. 


“கதை முடிவு இப்படி வைத்துக்கொள் சுப்பு. அந்த மாணவனை ஆசிரியர் அழைத்து அவனுக்குச் சிறப்பு வகுப்பு எடுப்பதாக க் கூறுகிறார். அதைக் கொண்டு மாணவன் நல்ல மதிப்பெண் வாங்கி பெரிய நிலையை அடைகிறான். “


என்று நான் முடிக்க என் கண்களின் ஓரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது. 

“உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” என்று அலைபேசி பாட நானும் சேர்ந்துபாடினேன் கவியரசர் வரிகளை.. அல்ல வாழ்க்கை நெறிகளை...


இது லட்சுமிநரசிம்மனின் கதை...


Rate this content
Log in

More tamil story from Lakshminarasimhan Subbarao

Similar tamil story from Abstract