சொற் பேச்சு கேட்டிலர்
சொற் பேச்சு கேட்டிலர்
கற்றவர் கேள்வி ஞானத்தால் கலந்தனரேல் ஓதிய கல்வி உரம் பெறும்.இது தான் இயற்கை தந்த இனிய வழி. இந்த தர்மத்தை மறந்து தூய தமது அனுஷ்டானத்தைத் துறந்து வெறும் கேள்வி அளவில் விளங்கி, அவலை நினைத்து உரலை இடிப்பவர் போல், எம் சமயம் ஏற்றம், மற்றவர் சமயம் மட்டம் என்று வாய் வாதத்தையே, பிற் காலத்தவர் வளர்த்தனர். தம் கொள்கைளைத் தழுவாதவர்க்கு தலை வேதனை பல தந்தனர்., வாலறுத்த நரித் தந்திரங்கள் வளர்ந்தன.
அறிவு பெருகிய ஆதி சமணம், வளர்ந்து, ஒரு காலத்தில் வாழ்ந்தது. மற்றவரையும் வாழ வைத்தது. இது ஒரு காலம். அச்சமய சார்பு கொண்ட பிற்கால மக்கள், மா பெரும் தம் தர்மத்தை மறந்தனர். எம் சமயமே ஏற்றது என்று கொள்ளித் தேள் போலக் குதித்தனர். எவரையும் தம் சமயத்திற்குள் ஈர்க்க சூழ்ச்சி யந்திரத்தைச் சுழற்றினர். விஞ்ஞானத்தை விருத்தி செய்தனர்.
பல இடங்களைப் பழுது படுத்தினர். பாண்டி நாட்டில் புகுந்தனர். மந்திர தந்திர மரபுகளால் அறிவில் இருளைப் பரப்பினர். தரம் குறைந்தோர் பலர் அவர் சமயத்தைத் தழுவினர். நீறிட்டார் கெட்டார், வீபூதி இடார் வாழ்ந்தார் என்பது அவர்கள் உபதேசம். சைவரைக் கண்டால் பாவம், அவர்கள் குரலைக் கேட்டது தோஷம், இதற்கு கண்டு முட்டு கேட்டு முட்டு என்று பெயர். இப்படி எல்லாம் ஏய்த்து நாளும் சாகஸ நாடகம் ஆடினர். அரசர் பாண்டியரும் அவர்கள் வலையில் அகப்பட்டார்.
மகாராணி மங்கையர்க்கரசியார் இந்நிலை கண்டு மனம் வருந்தார். அமைச்சரோடு ஆலோசித்து ஆளுடை பிள்ளையாரை(திருஞான சம்பந்தர்) மதுரைக்கு அழைத்தார். பிள்ளையார் மதுரைக்கு வந்தார். பழைய சமயப் பொலிவு பாண்டியில் இல்லை. நீறற்ற நெற்றி, கோவணம் இல்லாதார் சிலர். தம்மையும் தம்மைச் சார்ந்தாரையும் கண்டு, கண்டு முட்டு கேட்டு முட்டு என்று படபடத்து ஓடுகின்றனர் பலர். ஏன் இங்கு வந்தாய் என்று எதிர்ப்பை எழுப்பினர்.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
என்று வருந்திப் பாடினார். அதன் பின் அமணர்கள் அவர் தங்கி இருந்த மடத்தை எரிக என்று நெருப்பை இட்டனர். அது கண்டு,
செய்யனே, திரு ஆலவாய் மேவிய ஐயனே
அஞ்சல் என்று அருள் செய் எனை
பொய்யராம் அவுணர் கொளுவுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்க்காகவே
என்று பதிகம் பாடினார் பிள்ளையார்.
அத்தீயின் வெம்மை பாண்டியரைச் சுரநோயாகப் பற்றியது.அந்தச் சுரத்தை தீர்க்க முயன்று அமணர்கள் தோற்றனர். மங்கயர்க்கரசியார் விரைந்தார் பிள்ளையாரைப் பணிந்தார். சுவாமீ,
மன் காதலில் உய்வது இவ்வையம் எல்லாம்
மலையாள் முலையால் அமுதுண்டவனே
எம் காதலன் எம்பெருமான் அவனுக்கு இதுவோ தகவு
என்று வேந்தர் சுரநோயைத் தணிக்க விண்ணப்பித்தார்.
அஞ்ச வேண்டா, நிமலன் கரத்தில் நெருப்புண்டு அதை அணைக்க நீரையும் திருமுடியில் தாங்கியுள்ளான். கனல் எங்கள் கனல், புனல் எங்கள் புனல் என்று பின் நிகழ்வுள நிகழ்வையும் பிள்ளையார் குறிப்பாக முன்னே கூறினார். அதன் பின் அரசரை அணுகினார். நோக்கினார். நீறிட்டு ஆர் கெட்டார் ? விபூதியிடாது ஆர் வாழ்ந்தார்? என்றார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருவாலவாயன் திருநீறே
என்று பதிகம் பாடி நீறு பூசி அரசருக்கிருந்த சுரத்தை அகற்றினார். அதனுடன் உடன் பிறப்பான கூனும் ஒழிந்தது. நின்ற சீர் நெடுமாறர் எனும் அரியதோரு பெயரையும் அரசருக்கு பிள்ளையார் அளித்தார்.
மனம் பொறாத அமணர்கள் வாதத் தீயை வளர்த்தனர்.
போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம் பெருமான் மேயது நள்ளாறே
என்று பாடியிருந்த பழைய ஏட்டை எடுத்தார்.
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலை மகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணையவை குலவலின்
நளிர் இள வளர் ஒளி மருவு நள்ளாறர் தம் நாமமே
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுதிலை மெய்ம்மையே
( இதன் பொருள் – இளந்தளிர் போன்று பெருகி வரும் அருளில் எழில் திகழும் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற நள்ளாற்று நாதரின் திருநாமம் தாங்கிய போகமார்த்த எனத் துவங்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஓலையை எரியில் இட்டால் பழுது இல்லாது காக்கும் என்பது மெய்ம்மையே ) என்று பாடி எரியும் நெருப்பில் ஏட்டை இட்டார். அஸ்தி நாஸ்தி என்ற மந்திரம் எழுதிய ஏட்டை அமணர் தீயில் இட்டனர். பிர்ளையார் ஏடு பசுமை மிகுந்து பளபளத்தது. அமணர்கள் ஏடு எரிந்து கரிந்தது.
அதன் பின் வாத வெள்ளம் வளர்ந்தது
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே
என்று அருளி திருஞான சம்பந்தர் இட்ட ஏடு வைகை வெள்ளத்தில் எதிரேறிச் சென்று திருஏடகப்பதியில் கரை ஏறியது. அமணர்கள் இட்ட ஏடு வெள்ளத்தின் வழியே விரைந்து மா பெரும் கடலுள் புகுந்து மறைந்தது.
அது கண்ட சமணர்கள் மண் மேல் விழுந்து எழுந்தனர். மானம் போனது என்றனர். ஏராளமான கழு மரங்களை நட்டனர். என்ன வேதனையான வரலாறு.
இவர் சொற் பேச்சு கேட்டிலர். சுய அறிவை இழந்தனர்.
இத்தகையர் வரலாறு என்றும் இப்படித்தான் ஆகுமோ என்னவோ …
