சனந்தனர்
சனந்தனர்
பத்மபாதருடைய இயற்பெயர் சனந்தனர் ஆகும்.
சனந்தனருடைய குரு பக்தியின் மகிமையை எடுத்துக் காட்டும் இக்கதை, எனக்கு மிகவும் பிடித்தது.
ஒரு நாள், சங்கரர் காசியில் தங்கியிருந்த போது, அவரும் அவருடைய சிஷ்யர் சனந்தனரும் கங்கையின் எதிர் கரைகளில் இருக்க நேர்ந்தது. சிஷ்யர் குருவின் ஆடைகளை உலர்த்திக் கொண்டிருந்தார். சங்கரர் தன் பக்தியை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினார். அவர் நதியில் நீராடிய பிறகு, ஈர ஆடையுடன் சிஷ்யரை அழைத்துத் தமக்கு உலர்ந்த ஆடை எடுத்து வருமாறு கூறினார்.
சனந்தனர் தம் அதீத குரு பக்தியால், “நம் குரு நமக்கு ஏதாவது கட்டைளையிட்டால் நாம் அதனை உடனடியாகச் செய்ய வேண்டும்” என்று தமக்குத் தாமே கூறிக் கொண்டார். குரு ஈர ஆடையில் இருப்பது அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் இப்பொழுது குரு பக்தியாலும், அன்பாலும் ஆட்கொள்ளப்பட்டவராய்த் திகழ்ந்தார்; சரிவர யோசிக்க நேரமில்லை.
நதியைக் கடந்து அடுத்த கரைக்குச் செல்லப் படகில் செல்லலாம் என்று கூட அவருக்கு ஒரு எண்ணம் வரவில்லை. கங்கையின் கொந்தளிப்பு கூட அவர் கண்களுக்குப் புலப்படவில்லை. “குரு நம்மை ஆடை எடுத்து வரச் சொன்னார்” என்ற ஒரே எண்ணம் தான் மனதில் இருந்தது.
அதனால், சாதாரண நிலத்தில் நடப்பது போல் அவர் நடக்கத் துவங்கினார்! தாம் நதியில் மூழ்கிவிடுவோமோ? அல்லது குருவின் ஆடை மீண்டும் நனைந்து விடுமோ? என்ற எண்ணங்களெல்லாம் சிறிதளவும் இல்லாமல், நதியில் அவர் நடந்தார்.
சிஷ்யரிடம் இப்படிப்பட்ட பக்தி இருக்கும் பொழுது, குரு அவரை தகுந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டாரா?
என்ன ஒரு அற்புதம்! சனந்தனர் பாதம் பதித்த இடங்களிலெல்லாம், அவர் நடப்பதற்கு சாதகமாக அழகிய தாமரை மலர்கள் தோன்றியன. அவர் ஒவ்வொரு அடி வைக்கும் பொழுதும், ஒரு தாமரை மலர்ந்தது. அவருக்கு தாமரைகளின் மீது நடக்கும் உணர்வு கூட இல்லை.
சனந்தனரின் குரு பக்தியைக் கண்ட மக்கள் அனைவரும் இந்த அதிசயத்தைக் கண்டு திகைத்து நின்றனர். அவர் குருவிற்கு ஆடையைக் கொண்டு வந்து கொடுத்தார்.
சங்கரர் ஏதும் அறியாதவர் போல், “நீ எப்படி இந்த கங்கையைக் கடந்தாய் குழந்தாய்?” என்று வினவினார். அதற்கு சனந்தனர், “தங்களை நினைத்தாலே மிகப் பெரிய இந்த சம்சார சாகரமே முட்டியளவு இறங்கிவிடுகிறது. அப்படியிருக்கத் தங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்குக் கங்கையைக் கடப்பது ஒரு பொருட்டல்ல குருவே” என்று கூறினார்.
பின்னர் சங்கரர் அவருக்கு நதியில் மலர்ந்தத் தாமரை மலர்களைக் காண்பித்தார். அவை சனந்தனருடைய பாதம் பட்டு மலர்ந்ததனால், அவரைப் “பத்மபாதர்” என்று அழைத்தார்.
நீதி: எவன் ஒருவன் தன் குருவிடம் திட நம்பிக்கையோடு, அவர் பாதங்களில் பரிபூரண சரணாகதி அடைகிறானோ, அவனுடைய தேவைகளை குரு கவனித்துக் கொள்கிறார்.
