சகல பித்ரு தோஷங்களும்
சகல பித்ரு தோஷங்களும்


பித்ரு தோஷம் போக்கி அருளும் திருக்குளம்பியநாதர்
வ்யதீ பாதம் எனும் யோகத்திற்கு உரிய வழிபாட்டுத் தலம். ஒவ்வொரு மாதமும் வ்யதீபாத தினத்தன்று இத்தலத்து மூலவரை வழிபாடு செய்தால், சகல பித்ரு தோஷங்களும் நீங்கப்பெற்று, அனைத்து நலன்களும் ஏற்படும்.நாகை மாவட்டம், பாலையூர் அருகே அமைந்திருக்கிறது குளம்பிய நாதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கோகணேஸ்வர் ஆலயம். இந்தத் தலத்தில், அம்பிகை வடிவுடை நாயகி எனும் பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இந்தத் தலத்தில், சிவபெருமான் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியிருக்கிறார். சிவபெருமானை அம்பிகை தன் சாப நிவர்த்திக்காகப் பசு உருவில் பூஜித்த அற்புதத் தலம் இது. பசு பூஜித்தபோது ஏற்பட்ட குளம்புச் சுவட்டை லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம். அதனாலேயே மூலவருக்கு குளம்பிய நாதர் என்ற திருநாமமும் ஏற்பட்டது.
பிரம்மன், வித்யாதரன் ஆகியோர் வழிபட்ட தலம் இது. அகத்தியர், போகர் முதலான சித்தர்கள் அரூப வடிவில் இன்றும் மூலவரை வழிபடுவதாக ஐதிகம்.
காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தத் தலம், அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். தல விருட்சமாக மல்லிகையும் வில்வமும் இருக்கின்றன.சிவபெருமானின் முடியைக் கண்டதாக பிரம்மன் பொய் சொன்னதால் ஏற்பட்ட சாபத்தைப் போக்க தவமிருந்த தலம் இது. எனவே, குளம்பிய நாதரை தரிசித்தால் பொய் சொன்னதால் ஏற்பட்ட மனத்துயர் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஆலயத்துக்கு எதிரே உள்ள திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்டது என்கிறது தல புராணம். இந்தப் பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் யாவும் விலகியோடும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இந்த தீர்த்தக் குளத்தில் மூழ்கி, ஒருமுறை திருக்குளம்பியநாதரை வழிபட்டால் போதும், இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் யாவும் விலகியோடும். இங்கு வழிபட்டால் போதும், பசுவளம் பெருகும். பசுக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் நொடிகள் தீரும் என்கிறார்கள். மிகச்சிறந்த பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.வ்யதீ பாதம்' எனும் யோகத்திற்கு உரிய வழிபாட்டுத் தலம் இது. ஒவ்வொரு மாதமும் வ்யதீபாத தினத்தன்று இத்தலத்து மூலவரை வழிபாடு செய்தால், சகல பித்ரு தோஷங்களும் நீங்கப்பெற்று, அனைத்து நலன்களும் ஏற்படும்.